search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல் கருத்துக்கு திருமாவளவன், முத்தரசன் ஆதரவு
    X

    கமல் கருத்துக்கு திருமாவளவன், முத்தரசன் ஆதரவு

    மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி என்று கமல் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு திருமாவளவன், முத்தரசன் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    கமல்ஹாசன் கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன்:-

    மகாத்மா காந்தி இந்து மதத்தினரை மட்டுமல்ல எல்லா மதத்தவரையும் அரவணைத்து சென்றார். பிரார்த்தனையில் கூட பகவத் கீதையுடன் திருக்குர்ரானையும் சேர்த்து படிக்க வேண்டும் என்று கூறினார்.

    மத சார்பற்ற கொள்கையில் உறுதியுடன் இருந்தார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த பா.ஜ.க. வினர் தலையில் தூக்கி கொண்டாடுகின்றது. கமல் கூறிய கருத்தில் பெரிய தவறு இல்லை. அதனை பா.ஜ.க.வினர் அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள். கோட்சேவை தேச பக்தன் என்றும் அவர் செய்தது சரிதான் என்றும் கூறுகின்றனர்.

    பா.ஜ.க. வேட்பாளரே கோட்சே தேச பக்தன் என்று கூறுகிறார். அதற்காக வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி அவரை வேட்பாளரில் இருந்து நீக்கவில்லை.

    மோடியும், அமித்ஷாவும் நாடகம் ஆடுகிறார்கள். ஜனநாயக நாட்டில் கருத்துக்கள் கூற உரிமை உண்டு. அதனை மறுப்பதற்கு எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. அதை தவிர்த்து செருப்பு, முட்டைகளை வீசி வன்முறையில் ஈடுபடுகிறார்கள். இதை மோடி கண்டிக்கவில்லை.

    பா.ஜ.க.வை பொறுத்த வரை கோட்சே தேச பக்தர். காந்தி தேச துரோகி. வரலாற்று உண்மையை சொன்ன கமலை தனிமைப்படுத்த முயற்சிக்கிறார்கள். அவரை தனிமைப்படுத்த முடியாது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-

    பெரியார், அம்பேத்கார் கடந்த காலங்களில் இந்து மதத்தை பற்றி என்ன கருத்துக்களை கூறினார்களோ அதைதான் கமல் ஹாசன் பிரதிபலிக்கிறார். இந்து என்ற பெயரில் ஒரு மதம் இல்லவே இல்லை.

    மதங்களுக்கு இடையில் மோதல்-வன்முறை அவ்வப்போது நடந்து கொண்டே இருந்தது. இந்தியா என்கிற ஒரு தேசத்தையும் இந்து என்கிற மதத்தையும் ஆங்கிலேயர்களின் ஆட்சிதான் உருவாக்கியது. எனவே கமல் சொல்வது ஒரு வரலாற்று உண்மைதான்.


    அதை இன்று அரசியல் ஆதாயத்திற்கு வசதியாக பயன்படுத்தி கொள்கிறார்கள். இந்து என்கிற உணர்வை தூண்டி பெரும்பான்மை மக்களின் வாக்குகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வதுதான் அவர்களின் உண்மையான நோக்கம். அரசியல் ஆதாயம் தேடுவதே அவர்களின் ஒரே இலக்கு.

    கமலின் கருத்து உண்மையானதும், நியாயமானதும் ஆகும். அவரை அச்சுறுத்தும் போக்கை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×