search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி பாராளுமன்ற தொகுதியில் 2 வாக்குச்சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு
    X

    தேனி பாராளுமன்ற தொகுதியில் 2 வாக்குச்சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    தேனி:

    தமிழகத்தில் கடந்த மாதம் 18-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியகுளம் அருகே வடுகபட்டியில் உள்ள வாக்குச்சாவடி எண் 197-ல் மாதிரி வாக்குப்பதிவு முடிந்த பின்னர் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் விவி பேட் கருவியில் இருந்து ஒப்புகை சீட்டை அகற்றாமல் தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்தது.

    இது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த மையத்தில் 1405 வாக்குகள் உள்ளன. இதில் ஆண்கள் 702 பேரும், பெண்கள் 703 பேரும் வாக்காளர்களாக உள்ளனர். இதில் ஆண்கள் 450 பேர், பெண்கள் 454 பேர் என 904 பேர் வாக்களித்திருந்தனர்.

    இதே போல ஆண்டிப்பட்டி அருகே பாலசமுத்திரம் வாக்குச்சாவடி எண் 67-ல் மாதிரி வாக்குப்பதிவு அழிக்காமலும், ஒப்புகை சீட்டை அகற்றாமலும் வாக்குப்பதிவு நடந்தது. இந்த மையத்தில் 644 ஆண்கள், 611 பெண்கள் என 1255 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இதில் 523 ஆண்கள், 500 பெண்கள் என மொத்தம் 1023 பேர் வாக்களித்திருந்தனர். இதனால் இந்த இரண்டு வாக்குச்சாவடிகளிலும் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    இதற்காக 2 வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளார்கள். தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் இன்று மாலையே வாக்குச்சாவடிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவி பேட் எந்திரம் அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான பல்லவி பல்தேவ் வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    Next Story
    ×