search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    23-ந் தேதிக்கு பிறகு தி.மு.க. இரண்டாக உடையும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
    X

    23-ந் தேதிக்கு பிறகு தி.மு.க. இரண்டாக உடையும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    “வருகிற 23-ந் தேதிக்கு பிறகு தி.மு.க. இரண்டாக உடையும்” என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரத்தில் பிரசாரத்தின்போது, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஓட்டப்பிடாரம் தொகுதியில் இன்று (நேற்று) பிரசாரம் முடிவடைகிறது. ஆனால் எடப்பாடியாரின் சாதனைகள் தொடரும். சாதகமான கருத்துக்களை தெரிவிப்பவர்களை மட்டுமே டி.டி.வி.தினகரனுக்கு பிடிக்கும்.

    அவர் பித்தலாட்ட அரசியல் செய்கிறார். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவரை கடுமையாக விமர்சித்து உள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து அவர் விலக்கி வைக்கப்பட்டார். இன்று ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்றும், அ.தி.மு.க.வை முடக்க வேண்டும் என்றும் சொல்கிறார். இதுதான் அவருடைய வாடிக்கை. தி.மு.க. செய்கிற வேலையைத்தான் தினகரன் செய்கிறார்.

    தினகரனுக்கும், அ.தி.மு.க.வுக்கும் சம்பந்தம் கிடையாது. ஜெயலலிதா பெயரை சொல்லும் அருகதை தினகரனுக்கு கிடையாது.

    மக்கள் நீதிமய்யம் சார்பில் என் மீது போடப்பட்டு உள்ள வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறேன். எம்.ஜி.ஆர் பக்தர், ஜெயலலிதா தொண்டர்கள், எடப்பாடியாரின் தம்பிகள் வழக்கை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

    வருகிற 23-ந் தேதிக்கு பிறகு மாற்றம் வரும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சியினர் பேசி வருகின்றனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் எளிமையான ஆட்சி தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலிலும், 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் இரட்டை இலைக்கு ஓட்டு போட மக்கள் ரோட்டில் வந்து நிற்கிறார்கள். அ.தி.மு.க.வின் பின்னால் மக்கள் இயக்கம் உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கும் விதமாக மக்கள் தீர்ப்பு அமையும்.

    தி.மு.க. இதுவரை நேர்மையான முறையில் ஆட்சியை கைப்பற்றவில்லை. அ.தி.மு.க.வுக்கு பிரச்சினை வரும் போதெல்லாம் குறுக்கு வழியில் ஆட்சி பிடித்தனர். மக்கள் நேர்மையான ஆட்சியை விரும்புகின்றனர். வருகிற 23-ந் தேதிக்கு பிறகு தி.மு.க. இரண்டாக உடையப்போகிறது.

    காங்கிரஸ் கட்சி உடைந்தது போன்று, தி.மு.க.வும், முன்னாள் தலைவர் கருணாநிதி காலத்தில் இருந்த 70 வயதை நெருங்கும் தலைவர் ஒரு அணியாகவும், உதயநிதி ஸ்டாலின் பின்னால் இருக்க கூடியவர்கள் மற்றொரு அணியாகவும் பிரிய போகிறார்கள். தி.மு.க.வில் உள்ள நல்ல மனிதர்கள் வந்து விடுவார்கள். அல்லது மாற்று அணி உருவாக்குவார்கள். இதுதான் தி.மு.க.வின் நிலை.

    ஆட்சியை கைப்பற்றுவதற்காக மு.க.ஸ்டாலின் வசனம் எழுதி பேசிக் கொண்டு இருக்கிறார். இது சினிமா படத்துக்கு பொருந்தும். நிஜத்தில் நடப்பது இல்லை. எடப்பாடியார் ஆட்சி நிம்மதியாக கம்பீரமாக நடைபெறும். எனவே, எடப்பாடியார் ஆட்சி நிலையான ஆட்சியாக இருக்கும்.

    இவ்வாறு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.
    Next Story
    ×