search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்களவை தேர்தலில் 12,915 தபால் வாக்குகள் நிராகரிப்பு- தேர்தல் ஆணையம்
    X

    மக்களவை தேர்தலில் 12,915 தபால் வாக்குகள் நிராகரிப்பு- தேர்தல் ஆணையம்

    மக்களவை தேர்தலில் 12,915 தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டன என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தேர்தல் பணிகளில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தபால் ஓட்டு விண்ணப்பங்கள் குறித்து விரிவான அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தேர்தல் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு தபால் வாக்களிப்பதற்கான படிவம் முறையாக வழங்கப்படவில்லை என்றும், இதனால் ஒரு லட்சம் பேர், தபால் வாக்குகளை செலுத்தவில்லை எனவும் செய்தி வெளியாகியிருந்தது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்பட்டுள்ளதாகவும், தபால் வாக்களிக்க முடியாமல் போன அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டுக்கான விண்ணப்பப் படிவங்களை வழங்க உத்தரவிடுமாறு, சென்னையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் சாந்தகுமார் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.


    ஒவ்வொரு வாக்காளரின் வாக்கும் முக்கியமானது எனக்கூறிய நீதிபதிகள், தேர்தல் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு தபால் ஓட்டுக்களுக்காக எத்தனை விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டன, எத்தனை தபால் வாக்குகள் பதிவாகின என்பது போன்ற விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

    அதன்படி இன்று தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில் “தபால் வாக்குகள் அளிக்க 4 லட்சத்து 35 ஆயிரத்து மூன்று பேருக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. அதில் 4 லட்சத்து 10 ஆயிரத்து 200 பேர் வாக்களித்தனர்.

    12915 பேரின் வாக்குகள் விண்ணப்பங்களை முறையாக பூர்த்தி செய்யாததாலும், அவர்களுடைய பிறந்த நாள் உள்ளிட்ட சில தகவல்கள் எங்களிடம் உள்ள ஆவணங்களுடன் ஒத்துப்போகாததாலும் நிராகரிக்கப்பட்டன. 39, 7291 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன” என்று குறிப்பிட்டிருந்தது.

    அதன்பின் தபால் வாக்குகள் தொடர்பாக குழப்பம் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.
    Next Story
    ×