என் மலர்tooltip icon

    வேலூர்

    தமிழகத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலின் போது முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், வேலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அப்போது அவருக்கு நெருங்கிய நண்பர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியதில் புத்தம் புதிய பணம் கட்டுக்கட்டாக, பெட்டி பெட்டியாக கோடிக்கணக்கில் கைப்பற்றப்பட்டது.

    இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளை ஆய்வு செய்த தலைமை தேர்தல் ஆணையம், வேலூர் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்தது.

    வேலூர் பாராளுமன்ற தொகுதி

    இந்நிலையில், வேலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-
     
    வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவோர், வேட்பு மனுக்களை ஜூலை 11-ம் தேதி முதல், 18-ம் தேதி வரை தாக்கல் செய்யலாம். ஜூலை 19-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை திரும்ப பெற ஜூலை 22ம் தேதி கடைசி நாள் ஆகும்.

    அதன்பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஆகஸ்ட் 9-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.

    இந்த தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு எந்திரங்களுடன், ஒப்புகைச் சீட்டு வழங்கும் விவிபாட் எந்திரங்களும் பயன்படுத்தப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

    இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
    பள்ளிகொண்டா அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர், சி.ஆர்.பி.எப், இன்ஸ்பெக்டர் வீடுகளில் 54 பவுன் நகை, பணம் கொள்ளை போனது.

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரி, காலபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் தினகரன் (62). மத்திய ரிசர்வ் படையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள அவரது மகன் வீட்டுக்கு மனைவியுடன் சென்றார்.

    இதனை பயன்படுத்தி கொண்ட மர்ம கும்பல் வீட்டின் இரும்பு கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டிலிருந்த 4 பீரோக்களை உடைத்தனர். அதிலிருந்த தங்க செயின், வளையல், மோதிரம் உள்ளிட்ட 21 பவுன் தங்க நகை மற்றும் தினகரன் பென்சன் வாங்கி வைத்திருந்த ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

    தினகரனின் எதிர்வீட்டில் வசிப்பவர் ராஜாராம் (67), முன்னாள் ராணுவ வீரர். இவரது மகன்கள் சென்னையில் என்ஜீனியர்களாக உள்ளனர்.

    ராஜாராம் கடந்த 25 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு சென்றிருந்தார்.

    தினகரனின் வீட்டில் கொள்ளையடித்த கும்பல் ராஜாராம் வீட்டின் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த 33 பவுன் தங்க நகைகள் ரூ.55 ஆயிரம் பணத்தை அள்ளி சென்றுவிட்டனர்.

    திருட்டு கும்பல் வெளியேறும் போது 2 வீடுகளின் கதவுகளை அடைத்துவிட்டு சென்று விட்டனர். இதனால் அந்த தெருவில் இருந்தவர்களுக்கு கொள்ளை நடந்தது தெரியவில்லை.

    நேற்று மாலை அந்த பகுதியில் பலத்த காற்று வீசியது. அப்போது ராணுவ வீரர் ராஜாராம் வீட்டின் கதவு திறந்து பயங்கர சத்தத்துடன் அடித்தது. அப்போதுதான் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கொள்ளை நடந்ததை அறிந்தனர்.

    இதுபற்றி இருவருக்கும் தகவல் தெரிவித்தனர். மகன்களுடன் ராஜாராம், தினகரன் சென்னையில் இருந்து புறப்பட்டு வந்தனர். இதுபற்றி பள்ளிகொண்டா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த கொள்ளையில் வடமாநில கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திருட்டு சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    அரக்கோணம் அருகே பைக்கில் வைத்து மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்று வந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் கலால் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையில் நேற்று இரவு போலீசார் சோளிங்கர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் பைக்கை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றார். போலீசார் பைக்கை சோதனை செய்த போது அதில் 105 லிட்டர் சாராயம் கேனில் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதனை போலீசார் கைப்பற்றினர்.

    பின்னர் நெமிலி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் பைக்கில் வைத்து மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்று கொண்டிருந்தார்.

    அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் அரக்கோணத்தை சேர்ந்த சுரேஷ் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த 40 மது பாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.

    மேலும் சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை ரெயிலில் பயணிகளை மிரட்டி பணம் பறித்த போலி டிக்கெட் பரிசோதகர் கைது


    சென்னை ரெயிலில் பயணிகளை மிரட்டி பணம் பறித்த போலி டிக்கெட் பரிசோதகரை போலீசார் கைது செய்தனர்.
    ஜோலார்பேட்டை:

    பெங்களூரில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக கடந்த 28-ந் தேதி சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது. ஜோலார்பேட்டையில் ரெயில் நின்றபோது பொது பெட்டியில் டிக்கெட் பரிசோதகர் சீருடை அணிந்த வாலிபர் ஒருவர் ஏறினார். அவர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களை மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபட்டார்.

    ரெயில் அதிகாலை 3.20 மணிக்கு பெரம்பூர் ரெயில் நிலையத்தில் நின்றது. அப்போது அந்த வாலிபர் இறங்கி சென்றுவிட்டார். இதனால் பயணிகளுக்கு அவர் மீது சந்தேகம் வந்தது.

    அந்த வாலிபரை செல்போனில் படம் பிடித்த பயணி ஒருவர், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்ததும் ரெயில்வே அதிகாரிகளிடம் அந்த படத்தை காட்டினார்.

    அதைத் பார்த்த அதிகாரிகள், இதுபோன்ற டிக்கெட் பரிசோதகர் யாரும் பணியில் இல்லை என்றனர். தொடர்ந்து, இது குறித்து போலீசில் புகார் செய்தனர். போலி டிக்கெட் பரிசோதகரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், போலி டிக்கெட் பரிசோதகரை சென்னையில் கைவரிசை காட்டியபோது, ரெயில்வே போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    விசாரணையில், அவர் சேலத்தை சேர்ந்த அல்ஜிலானி (42) என்பதும், டிக்கெட் பரிசோதகர் சீருடையுடன் ரெயில் பணிகளை மிரட்டி பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.

    அவர், ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் டிக்கெட் பரிசோதகர் போன்று சீருடை அணிந்து, ஆலப்புழாவிலிருந்து தன்பாத்வரை செல்லும் தன்பாத் எக்ஸ்பிரசில் பயணிகளிடம் பணம் வசூல் செய்தபோது கையும்களவுமாக சிக்கி சிறை சென்றவர் என்பதும் தெரியவந்தது.


    வேலூர் அருகே அண்டா தண்ணீரில் மூழ்கடித்து 7 மாத குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    வேலூர் அருகே அண்டா தண்ணீரில் மூழ்கடித்து 7 மாத குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    வேலூர்:

    வேலூர் அப்துல்லாபுரம் அருகே உள்ள சத்தியமங்கலம் கொல்லைமேடு பகுதியை சேர்ந்த ரவி மகள் பவித்ரா (வயது 21). இவருக்கும் ஆற்காடு மேலகுப்பத்தை சேர்ந்த மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் சுரேசுக்கும் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. சுரேஷ் உத்தர பிரதேசத்தில் பணியாற்றி வருகிறார்.

    கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பவித்ரா பிரசவத்திற்காக சத்தியமங்கலத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார். அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு விஷ்வா என பெயரிட்டனர். 7 மாத கை குழந்தையான விஷ்வாவை பவித்ரா பாசத்துடன் வளர்த்து வந்தார்.

    உத்தரபிரதேசத்தில் இருந்த கணவருடன் போனில் பேசி வந்தார். அவரும் குழந்தையின் மழலை சத்தத்தை போனில் கேட்டு மகிழ்ச்சியில் இருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுரேஷ் விடுமுறையில் ஊருக்கு வந்தார்.

    தாய் வீட்டில் இருந்த மனைவி, குழந்தைகளை பார்க்க சென்றார். அப்போது கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனால் மன உளைச்சலில் இருந்த பவித்ரா வாழ்வதை விட சாவதே மேல் என கருதினார். வீட்டில் இருந்த அண்டாவில் இருந்த தண்ணீரில் குழந்தையை மூழ்கடித்தார். மூச்சு திணறிய குழந்தை துடிதுடித்து பரிதாபமாக இறந்தது. பின்னர் பவித்ரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பவித்ரா மற்றும் குழந்தை வீட்டில் பிணமாக கிடந்ததை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமணமாகி 1½ ஆண்டே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    வேலூர் காவலர் பயிற்சி பள்ளியில் பெண் போலீஸ் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    வேலூர்:

    வேலூர் கோட்டையில் காவலர் பயிற்சி பள்ளி உள்ளது. இதில் கடந்த டிசம்பர் மாதம் முதல் 196 பெண் போலீசார் பயிற்சி பெற்று வருகின்றனர். அவ்வாறு பயிற்சி பெருபவர்களுக்கு 1 அறையில் 3 பேர் வீதம் தங்கி உள்ளனர்.

    இந்நிலையில் மதுரையை சேர்ந்த பிரீத்தி என்ற பெண் போலீஸ் தங்கி உள்ள அறையில் சக போலீசாருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சக போலீசார் ஒன்று சேர்ந்து பிரீத்தியை தாக்கியதாக கூறபடுகிறது.

    இது குறித்து பிரீத்தி பயிற்சி பள்ளி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். ஆனால் அதன் மீது நடவடிக்கை எடுக்கபடவில்லை.

    இதனால் பிரீத்தி இன்று பயிற்சி பள்ளி வளாகத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். இது குறித்து தகவலறிந்த பயிற்சி பள்ளி உயர் அதிகாரிகள் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதையடுத்து தர்ணா போராட்டத்தை கைவிட்டார்.

    பெண் போலீஸ் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரி டாக்டர் தனது வீட்டின் கார்செட்டில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்து, அந்த தண்ணீரை சுத்திகரிப்பு செய்து குடிநீராகவும் பயன்படுத்தி வருகிறார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் வெயில் அதிகமாக பதிவாகிறது. மேலும் மழை மறைவு பகுதியாகவும் உள்ளதால் வேலூரில் மழையின் அளவும் குறைவாக உள்ளது.

    இதனால் தண்ணீர் தட்டுப்பாடு கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் மழைநீரை சேகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் 4500 இடங்களில் உறைகிணறுகள் அமைத்துள்ளனர். இதன் மூலம் மழை நீர் சேகரிக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனை பிரதமர் நரேந்திரமோடி பாராட்டியுள்ளார்.

    இந்த நிலையில் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரி டாக்டர் தனது வீட்டின் கார்செட்டில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்து அசத்தியுள்ளார்.

    வேலூர் பாகாயம் அடுத்த துத்திப்பட்டில் வசிப்பவர் டாக்டர் கந்தசாமி சுப்பிரமணி. சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றுகிறார்.

    கார் செட்டில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டி

    இவரது மனைவி சத்யா சி.எம்.சி. மருத்துவ கல்லூரி பேராசிரியர். இவர்களது வீட்டில் கார் நிறுத்தும் இடத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்துள்ளார்கள்.

    60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த தொட்டியில் மொட்டைமாடி, கார்செட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குழாய்களை இணைத்துள்ளனர்.

    மழை பெய்யும்போது மழைநீர் நேராக தொட்டிக்கு செல்கிறது. அந்த தண்ணீரை சமையல் செய்யவும், குளிக்கவும் பயன்படுத்துகின்றனர். மேலும் மழைநீரை சுத்திகரிப்பு செய்து குடிநீராகவும் உபயோகிக்கின்றனர்.

    இதுபற்றி டாக்டர் கந்தசாமி சுப்பிரமணி கூறியதாவது:-

    கடந்த 2015ம் ஆண்டு மழைநீரை சேகரிக்க முடிவு செய்தோம். இதற்காக வீட்டில் கார்கள் நிறுத்தும் இடத்தை தேர்வு செய்து அதில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி கட்டினோம். அதில் குழாய்களை இணைத்து மழைநீரை சேகரித்து வருகிறோம். எங்கள் வீட்டில் 4 பேர் உள்ளனர். சமையல், குடிநீர், குளிக்க இந்த தண்ணீரை மோட்டார் மூலம் எடுத்து பயன்படுத்துகிறோம்.

    இந்த தண்ணீர் எங்களுக்கு 8 மாதங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது என்றார். மேலும் இவரது வீட்டில் உள்ள செடிகளுக்கு அடியிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைத்துள்ளார். மொட்டை மாடியில் சோலார்பவர் சிஸ்டம் அமைத்துள்ளார்.

    டாக்டரின் மழைநீர் சேகரிப்பை மற்றவர்களும் பின்பற்றினால் தண்ணீர் பஞ்சம் என்பது இல்லாமல் போய்விடும்.




    ஜோலார்பேட்டையில் குழாய் பதிக்கும் பணி இன்று தொடங்கியது. இப்பணி முடிவடைந்ததும் 10-ந் தேதி காவிரி குடிநீர் ரெயில் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படும்.
    வேலூர்:

    சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பஞ்சத்தால் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இதையடுத்து பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதன்படி, வேலூர் மாவட்டம் வரை செயல்படுத்தப்பட்டுள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டுவருவது என முடிவானது.

    ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயில்வே வேகன் மூலம் குடிநீர் எடுத்துச்செல்வது என்றும், தினமும் 2.5 மில்லியன் என 4 தவணைகளில் 10 மில்லியன் குடிநீரை ரெயில்வே வேகனில் அனுப்பி வைப்பது எனவும் முடிவானது. இத்திட்டத்துக்காக ரூ.65 கோடி நிதி ஒதுக்கி, போர்க்கால அடிப்படையில் பணிகளை முடிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    ரெயிலில் குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த 17 என்ஜினீயர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் சென்னைக்கு விரைந்து தண்ணீர் கொண்டுவருவதற்கான பணிகளில் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

    மேலும் 6 மாதங்கள் தினமும் ரெயிலில் கொண்டு வர தேவையான அனைத்து வசதிகளும் உள்ளது. ரெயில்வே துறையில் தண்ணீர் கொண்டு வருவதற்கான வேகன்கள் தயாராக உள்ளன. அவற்றை வெந்நீர் மற்றும் நீராவி கொண்டு சுத்தம் செய்தால் தான் குடிநீர் கொண்டுவர முடியும்.

    அதற்கான முழு செலவையும் சென்னை மெட்ரோ நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். வில்லிவாக்கத்தில் தண்ணீர் இறக்க சில வசதிகளை விரிவுபடுத்த வேண்டியுள்ளது.

    மேலும் ஜோலார்பேட்டையில் தண்டவாளத்துக்கு அடியில் ராட்சத குழாய் பதிக்க வேண்டும். அதற்கான செலவையும் ஏற்க வேண்டும் என ரெயில்வே நிர்வாகம் நிபந்தனை விதித்துள்ளது.

    இதனை மெட்ரோ அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.

    அதைத் தொடர்ந்து தென்னக ரெயில்வே அதிகாரிகள் சென்னை மெட்ரோ மற்றும் வேலூர் குடிநீர் வடிகால் வாரியம் இணைந்து ஜோலார்பேட்டையில் மூன்று கட்ட ஆய்வு நடத்தினர்.

    இதில் மேட்டுசக்கர குப்பத்தில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் 5.05 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் தேக்கத் தொட்டியில் இருந்து பார்சம்பேட்டை ரெயில்வே கேட் அருகே வரை புதிய பைப் லைன் அமைத்து ரெயில்வே வேகனில் குடிநீர் நிரப்பபட உள்ளது.

    அதற்காக ஆந்திர மாநிலம் காளஹஸ்தியிலிருந்து லாரிகளில் ராட்சத குடிநீர் குழாய்கள் வந்தன. மேலும் லாரிகளில் குழாய்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    15 அடி நீளமுள்ள 600 ராட்சத குழாய்கள் 3½ கிலோ மீட்டர் தூரத்திற்கு பூமியில் புதைக்கப்பட்டு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

    அந்த குழாயை மேட்டு சக்கரகுப்பத்தில் தொடங்கி ஆஞ்சநேயர் கோவில், புதூர், சுண்ணாம்பு காளை வழியாக புதைக்கப்பட்டு இறுதியில் ரெயில்வே உயர்நிலை பள்ளி பின்புறம் வரை சென்று முடிவுறும்.

    பார்சம்பேட்டை ரெயில்வே கேட்டில் தண்டவாளத்துக்கு அடியில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி இன்று தொடங்கியது.

    குழாய் பதிக்கும் பணிகளை 7 நாட்களுக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

    ரெயில் மூலம் குடிநீர் கொண்டுவரப்படும் காட்சி (கோப்பு படம்)

    10-ந் தேதி ரெயிலில் குடிநீர் வில்லிவாக்கம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    இதுபற்றி காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட ரெயில் நிலைய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. தினமும் 4 முறை கொண்டு சென்னைக்கு ரெயிலில் குடிநீர் செல்வதால் பயணிகளுக்கு எந்த இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஜோலார்பேட்டையில் இருந்து வில்லிவாக்கம் ரெயில் நிலையத்துக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. ரெயிலில் இருந்து தண்ணீரை இறக்குவதற்காக வில்லிவாக்கத்தில் விரிவாக்க பணிகள் செய்யப்படுகிறது.

    அங்கிருந்து கீழ்பாக்கத்தில் உள்ள மெட்ரோ குடிநீர் பம்பிங் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    அங்கு தண்ணீர் நிரப்பப்பட்டு குழாய் மற்றும் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்ய முடிவு செய்துள்ளனர்.

    10-ந் தேதி காவிரி குடிநீர் வந்த பிறகு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    நாட்டறம்பள்ளி அருகே வெளிமாநிலத்திற்கு ரெயிலில் கடத்திய ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

    நாட்டறம்பள்ளி:

    வெளிமாநிலத்திற்கு ரெயிலில் ரேசன் அரிசி கடத்தபடுவதாக நாட்டறம்பள்ளி தாசில்தார் உமாரம்யாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தலைமையிலான வருவாய் துறையினர் சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்

    அப்போது ரெயில் நிலையம் அருகே முள்புதற்களில் சுமார் 70 மூட்டைகளில் 800 கிலோ ரேசன் பதுக்கி வைக்கபட்டிருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து ரேசன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    பின்னர் பறிமுதல் செய்த ரேசன் அரிசியை திருப்பத்தூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

    வேலூரில் கடந்த 3 நாட்களாக பெய்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தண்ணீர் குறைவாக இருந்த கிணறு போர்வெல்களில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மாலை நேரத்தில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வேலூரில் நேற்று மதியம் 98.1 டிகிரி வெயில் சுட்டெரித்தது.

    இந்த நிலையில் மாலை 4 மணியளவில் கருமேகங்கள் சூழ்ந்து சிறிது நேரம் மழை பெய்தது. தொடர்ந்து விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஓடியது.

    காட்பாடி, ஆற்காடு, காவேரிப்பாக்கம், வாலாஜா, அம்முண்டி பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.



    3 நாட்கள் பெய்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தண்ணீர் குறைவாக இருந்த கிணறு போர்வெல்களில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வேலூர்:

    வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி டிரைவர் வெங்கடேசன் (வயது 36). இவர் மருத்துவ கல்லூரி முதல்வர் கார் மற்றும் ஆஸ்பத்திரி வாகனங்களை ஓட்டி வந்தார்.

    மருத்துவகல்லூரி எதிரே உள்ள ஊழியர்கள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வீட்டில் தூங்கி கொண்டிருந்த வெங்கடேசனை இன்று அதிகாலை காணவில்லை.

    அவரது மனைவி லெட்சுமி பல இடங்களில் தேடினார். இவர்களது வீட்டின் அருகே காலியாக கிடந்த வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது வெங்கடேசன் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதனைக் கண்டு அதிர்ந்து போன லெட்சுமி கதறி அழுது கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி சென்றனர். வெங்கடேசன் உயிரோடு இருக்கலாம் என நினைத்து தூக்கு கயிற்றை அறுத்து கீழே இறக்கினர்.

    அப்போது அவர் இறந்தது தெரியவந்தது. இதுபற்றி வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த வெங்கடேசனுக்கு கிருத்திகா (10) என்ற மகள், ஜவகர் (7) என்ற மகன் உள்ளனர். இவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

    போலீஸ் விசாரணையில் வெங்கடேசன் அதிக கடன் வாங்கியது தெரியவந்துள்ளது. கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து ராணுவ வீரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆற்காடு:

    திமிரி அடுத்த பல்லகுடிசை கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 39). ராணுவ வீரர், அவரது மனைவி விஜி (29). இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகளும் 8 மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளனர்.

    மனோகரன் பஞ்சாபில் உள்ள பட்டேலா என்ற பகுதியில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். விடுமுறையில் மனோகரன் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    இந்நிலையில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேர்க்கடலை பயிரிட கள வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த மின்கம்பத்தில் கையை வைத்தார்.

    திடீரென மின்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததால் மனோகரன் அங்கிருந்து தூக்கி வீசப்பட்டார்.

    இதனை கண்ட அவரது மனைவி கதறி அழுதார். அருகில் இருந்தவர்கள் மனோகரனை மீட்டு ஆற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திமிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×