search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பார்சம்பேட்டை ரெயில்வே கேட் அருகே குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி தொடங்கியது
    X
    பார்சம்பேட்டை ரெயில்வே கேட் அருகே குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி தொடங்கியது

    சென்னைக்கு ரெயில் தண்ணீர் 10ந்தேதி வருகிறது - ஜோலார்பேட்டையில் குழாய் பதிக்கும் பணி தொடங்கியது

    ஜோலார்பேட்டையில் குழாய் பதிக்கும் பணி இன்று தொடங்கியது. இப்பணி முடிவடைந்ததும் 10-ந் தேதி காவிரி குடிநீர் ரெயில் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படும்.
    வேலூர்:

    சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பஞ்சத்தால் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இதையடுத்து பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதன்படி, வேலூர் மாவட்டம் வரை செயல்படுத்தப்பட்டுள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டுவருவது என முடிவானது.

    ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயில்வே வேகன் மூலம் குடிநீர் எடுத்துச்செல்வது என்றும், தினமும் 2.5 மில்லியன் என 4 தவணைகளில் 10 மில்லியன் குடிநீரை ரெயில்வே வேகனில் அனுப்பி வைப்பது எனவும் முடிவானது. இத்திட்டத்துக்காக ரூ.65 கோடி நிதி ஒதுக்கி, போர்க்கால அடிப்படையில் பணிகளை முடிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    ரெயிலில் குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த 17 என்ஜினீயர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் சென்னைக்கு விரைந்து தண்ணீர் கொண்டுவருவதற்கான பணிகளில் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

    மேலும் 6 மாதங்கள் தினமும் ரெயிலில் கொண்டு வர தேவையான அனைத்து வசதிகளும் உள்ளது. ரெயில்வே துறையில் தண்ணீர் கொண்டு வருவதற்கான வேகன்கள் தயாராக உள்ளன. அவற்றை வெந்நீர் மற்றும் நீராவி கொண்டு சுத்தம் செய்தால் தான் குடிநீர் கொண்டுவர முடியும்.

    அதற்கான முழு செலவையும் சென்னை மெட்ரோ நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். வில்லிவாக்கத்தில் தண்ணீர் இறக்க சில வசதிகளை விரிவுபடுத்த வேண்டியுள்ளது.

    மேலும் ஜோலார்பேட்டையில் தண்டவாளத்துக்கு அடியில் ராட்சத குழாய் பதிக்க வேண்டும். அதற்கான செலவையும் ஏற்க வேண்டும் என ரெயில்வே நிர்வாகம் நிபந்தனை விதித்துள்ளது.

    இதனை மெட்ரோ அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.

    அதைத் தொடர்ந்து தென்னக ரெயில்வே அதிகாரிகள் சென்னை மெட்ரோ மற்றும் வேலூர் குடிநீர் வடிகால் வாரியம் இணைந்து ஜோலார்பேட்டையில் மூன்று கட்ட ஆய்வு நடத்தினர்.

    இதில் மேட்டுசக்கர குப்பத்தில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் 5.05 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் தேக்கத் தொட்டியில் இருந்து பார்சம்பேட்டை ரெயில்வே கேட் அருகே வரை புதிய பைப் லைன் அமைத்து ரெயில்வே வேகனில் குடிநீர் நிரப்பபட உள்ளது.

    அதற்காக ஆந்திர மாநிலம் காளஹஸ்தியிலிருந்து லாரிகளில் ராட்சத குடிநீர் குழாய்கள் வந்தன. மேலும் லாரிகளில் குழாய்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    15 அடி நீளமுள்ள 600 ராட்சத குழாய்கள் 3½ கிலோ மீட்டர் தூரத்திற்கு பூமியில் புதைக்கப்பட்டு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

    அந்த குழாயை மேட்டு சக்கரகுப்பத்தில் தொடங்கி ஆஞ்சநேயர் கோவில், புதூர், சுண்ணாம்பு காளை வழியாக புதைக்கப்பட்டு இறுதியில் ரெயில்வே உயர்நிலை பள்ளி பின்புறம் வரை சென்று முடிவுறும்.

    பார்சம்பேட்டை ரெயில்வே கேட்டில் தண்டவாளத்துக்கு அடியில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி இன்று தொடங்கியது.

    குழாய் பதிக்கும் பணிகளை 7 நாட்களுக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

    ரெயில் மூலம் குடிநீர் கொண்டுவரப்படும் காட்சி (கோப்பு படம்)

    10-ந் தேதி ரெயிலில் குடிநீர் வில்லிவாக்கம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    இதுபற்றி காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட ரெயில் நிலைய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. தினமும் 4 முறை கொண்டு சென்னைக்கு ரெயிலில் குடிநீர் செல்வதால் பயணிகளுக்கு எந்த இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஜோலார்பேட்டையில் இருந்து வில்லிவாக்கம் ரெயில் நிலையத்துக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. ரெயிலில் இருந்து தண்ணீரை இறக்குவதற்காக வில்லிவாக்கத்தில் விரிவாக்க பணிகள் செய்யப்படுகிறது.

    அங்கிருந்து கீழ்பாக்கத்தில் உள்ள மெட்ரோ குடிநீர் பம்பிங் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    அங்கு தண்ணீர் நிரப்பப்பட்டு குழாய் மற்றும் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்ய முடிவு செய்துள்ளனர்.

    10-ந் தேதி காவிரி குடிநீர் வந்த பிறகு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×