search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலூர் மழை"

    • சம்பத் நகர், திடீர் நகர் பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் மேயர் சுஜாதா, மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • பொக்லைன் எந்திரம் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகளை துரிதப்படுத்தினர்.

    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் நேற்று இரவு இடியுடன் கூடிய மழை பெய்தது. அதிகபட்சமாக வேலூர் வேலப்பாடி பகுதியில் 80 மில்லி மீட்டர் மழை பதிவானது. காட்பாடி பொன்னை வேலூர் மாநகரப் பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை கொட்டியது.

    வேலூர் மாநகரப் பகுதியில் கனமழை காரணமாக நிக்கல்சன் கால்வாயில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதன் காரணமாக கோட்டை பின்புறம் நிக்கல்சன் கால்வாய் ஒட்டி அமைந்துள்ள சம்பத் நகர், திடீர் நகர், கன்சால் பேட்டை, இந்திராநகர் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இங்குள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. அங்கிருந்த பொதுமக்கள் இரவு முழுவதும் தூங்காமல் தவித்தனர். கால்வாய் ஒட்டி அமைந்துள்ள மாங்காய் மண்டி வளாகத்தில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கி குளம் போல காட்சி அளித்தது. வேலூர் கோட்டை மைதானங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல காட்சி அளிக்கின்றன.

    சம்பத் நகர், திடீர் நகர் பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் மேயர் சுஜாதா, மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பொக்லைன் எந்திரம் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகளை துரிதப்படுத்தினர்.

    கால்வாயில் நீர்வரத்து குறையாததால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் மெதுவாகவே வடியத் தொடங்கியது.

    மேலும் இரவு மழை பெய்த போது திருப்பதி தேவஸ்தான சந்திப்பு, தெற்கு போலீஸ் நிலையம் வேலூர் புதிய பஸ் நிலையம் பகுதிகளில் சாலைகளில் ஆற்று வெள்ளம் போல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதி அடைந்தனர்.

    பருவமழைக்கு முன்பே வேலூரில் மழை வெள்ள பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கி விட்டது.

    லேசான மழை பெய்த உடனே சாலைகளில் மழை வெள்ளம் தேங்கி சாக்கடையுடன் கலந்து ஓடுகிறது. இதனை தடுக்க பருவமழைக்கும் முன்பாக கால்வாய் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சோளிங்கரில் அதிகரிக்கமாக 142 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதே போல் வாலாஜாவில் 109.7 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    இந்த பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. காவேரிப்பாக்கம் ஆற்காடு அம்மூர் கலவை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அரக்கோணத்தில் லேசான சாரல் மழை பெய்தது.

    இதனால் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் அதிக அளவு மழை தண்ணீர் தேங்கியுள்ளது. ஏற்கனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் போதுமான அளவு நீர் இருப்பு உள்ளது.

    மேலும் மழை காரணமாக அதிகரித்துள்ளதால் ஏரிகள் விரைவில் நிரம்பி வருகிறது. விவசாய பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், திருப்பத்தூர் நகர பகுதியில் பரவலாக மழை பெய்தது. மற்ற இடங்களில் மழை பெய்யவில்லை.

    வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    வேலூர்-28.7, குடியாத்தம்-9.2, காட்பாடி-37, மேல்ஆலத்தூர்-13.2, பொன்னை-41.6, திருவலம்-18.1, ஆற்காடு-73.2, அரக்கோணம்-16.6, காவேரிப்பாக்கம்-77, சோளிங்கர்-142, வாலாஜா-109.7,கலவை-40.2, அம்மூர்-39, ஆம்பூர்-27.4, திருப்பத்தூர்-32.

    ×