என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் சார்ப்பனா மேட்டில் ஆட்டோ டிரைவர் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர்:

    வேலூர் சார்ப்பனாமேடு கலாஸ் பாககுண்டா தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 37). ஆட்டோ டிரைவர். இவரது வீட்டில் உள்ள ஒரு அறையில் இருந்து இன்று காலை 11 மணிக்கு புகை வெளியானது. சிறிது நேரத்தில் தீ அறையின் முழுவதும் பரவியது.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆனந்தன் வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து போராடி தீயை அணைத்தனர்.

    இதனால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    ஜோலார்பேட்டை:

    ஏலகிரி மலை கொட்டையூரை சேர்ந்தவர் நிவேதா (வயது 23). இவரும் சின்னபொன்னேரியை சேர்ந்த பனிபிரியன் (26) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் கடந்த 2-ந்தேதி பெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில், பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி இன்று ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் இருவரது பெற்றோர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.

    ஆற்காடு அருகே உடல்நிலை பாதிப்பால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த வரகூர் பிராமண தெருவை சேர்ந்தவர் சுதர்‌ஷன். இவரது மகள் விஜயலட்சுமி (வயது 19). இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

    இதனால் மனமுடைந்த விஜயலட்சுமி இன்று அதிகாலை வீட்டில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே விஜயலட்சுமி இறந்தார்.

    திமிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ரத்து செய்யப்பட்ட வேலூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தலில் திமுக சார்பில் கதிர் ஆனந்த் மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலின்போது முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், வேலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிட்டார். ஆனால், பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

    திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு நெருங்கிய நண்பர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியதில் புத்தம் புதிய பணம் கட்டுக்கட்டாக, பெட்டி பெட்டியாக கோடிக்கணக்கில் கைப்பற்றப்பட்டிருந்தது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளை ஆய்வு செய்த தலைமை தேர்தல் ஆணையம், வேலூர் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்திருந்தது.

    வேலூர் தொகுதி


    இந்நிலையில், தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 11ம் தேதி தொடங்க உள்ள நிலையில், வேலூர் தொகுதியில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என இன்று அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் திமுகவும் தனது வேட்பாளரை அறிவித்தது. ஏற்கனவே போட்டியிட்ட கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். எனவே, இந்த தேர்தலில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக கட்சிகளின் வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவும்.
    சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் பணிக்காக ஜோலார்பேட்டையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஜோலார்பேட்டை:

    தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை போக்கும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னைக்கு வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து டேங்கர் ரெயில் மூலம் குடிநீர் கொண்டு வரப்படும் என அறிவித்தார். அதற்காக முதற்கட்டமாக ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.

    சென்னைக்கு குடிநீர் எடுத்து செல்வதற்கான ஆய்வு பணிகளை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், மெட்ரோ அதிகாரிகள் மேற்கொண்டனர். காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் மேட்டுசக்கரகுப்பம் பகுதியில் அமைந்துள்ள தரைமட்ட குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் இருந்து பார்ச்சம்பேட்டை ரெயில்வே கேட் அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு கொண்டு செல்லும் வகையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீ காளஹஸ்தியில் இருந்து பெரிய குழாய்கள் வரவழைக்கப்பட்டன. இதனை அமைக்கும் பணிகள் இரவு, பகலாக நடந்து வருகிறது. இதில் 80 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டது.

    இன்று காலை சென்னை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை வாரிய இயக்குனர் மகேஸ்வரன் ஜோலார்பேட்டைக்கு வருகிறார். இவருடன் உயர் அதிகாரிகள், மெட்ரோ அதிகாரிகள் பார்வையிட உள்ளனர்.

    ஜோலார்பேட்டையில் ரெயில் தண்டவாளங்களுக்கு அடியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி

    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் கொண்டு செல்லும் வகையில் குழாய் இணைப்பு இணைக்க இன்று மாலை முதல் நாளை பகல் முழுவதும் திருப்பத்தூர்- வாணியம்பாடி செல்லும் சாலையில் பணிகள் நடக்கிறது. இதற்காக மேட்டுசக்கரகுப்பம் அருகே சாலையை தோண்டி அடியில் குழாய்கள் பொருத்தும் பணி நடக்கிறது. இதையடுத்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இதனால் ஜோலார்பேட்டை ஜங்‌ஷன் பஸ் நிறுத்தத்தில் இருந்து புது ஓட்டல் தெரு, பார்ச்சம்பேட்டை, ஆஞ்சநேயர் கோவில் வழியாக வாணியம்பாடி நோக்கி செல்ல வேண்டும். அதேபோல் வாணியம்பாடியில் இருந்து வாகனங்கள் ஆஞ்சநேயர் கோவில் வழியாக, புதுஓட்டல், ஜங்‌ஷன் வழியாக திருப்பத்தூர் நோக்கி செல்ல வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பணிகள் நிறைவடைந்ததும் வருகிற 10-ந்தேதி சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பொறி வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
    நாட்டறம்பள்ளி:

    கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் லட்சுமணன். பொறி வியாபாரி. இவர் வியாபாரத்திற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பாக வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளிக்கு வந்தார்.

    வியாபாரத்தை முடித்து விட்டு இரவு ஓய்வு எடுப்பதற்காக நாட்டறம்பள்ளி அடுத்த லட்சுமிபுரத்தில் கிருஷ்ணகிரி-வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள டீ கடை அருகே படுத்திருந்தார். இரவு தூங்கி கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் லட்சுமணன் மீது ஏறியது.

    இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை லட்சுமணன் இறந்தார். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காட்பாடியில் இன்று காலை சப்-இன்ஸபெக்டர் மனைவியிடம் 7 பவுன் செயினை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காட்பாடி:

    வேலூர் அரியூரை சேர்ந்தவர் சுப்பிரமணி ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவரது மனைவி கலாராணி (52).

    இன்று காலை காட்பாடி பவானி நகரில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மெயின் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். இதை கண்காணித்த 2 கொள்ளையர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக்கில் கலாராணியை பின் தொடர்ந்தனர். திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் செயினை பறித்தனர். இதனால் பதற்றம் அடைந்த கலாராணி கத்தி கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் ஓடிவருவதற்குள் கொள்ளையர்கள் அங்கிருந்து பைக்கில் வேகமாக தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து கலாராணி காட்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காட்பாடியில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
    ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் பணிகள் 50 சதவீதம் முடிவடைந்தது.
    ஜோலார்பேட்டை:

    சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. தினமும் ரெயிலில் 4 தடவை 50 வேகன்களில் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக ரூ.60 கோடி ஒதுக்கி பணிகள் நடந்து வருகிறது.

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகில் உள்ள மேட்டு சக்கரகுப்பம் காவிரி கூட்டுக்குடிநீர் தொட்டியில் இருந்து 3½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பார்சம்பேட்டை ரெயில்வே கேட் பகுதிக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ரெயில் வேகன்களில் நிரப்பப்படுகிறது.

    இதற்கான பணிகள் ஜோலார்பேட்டையில் வேகமாக நடந்து வருகிறது. குடிநீர் வடிகால் வாரியம், மெட்ரோ குடிநீர் வாரியம், மாநில நெடுஞ்சாலை துறை, மின்வாரியம், தென்னக ரெயில்வே துறை அதிகாரிகள் ஆகிய 4 துறை பணியாளர்கள் ஒன்றிணைந்து வேலையில் திவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    மேட்டு சக்கரகுப்பத்தில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் தரைமட்ட தொட்டியில் பம்பிங் மெஷின் பொருத்துவதற்கான அளவீடு நடைபெற்று வருகிறது. அதேபோல், ஏற்கனவே உள்ள பழைய பம்பிங் மெஷினில் இருந்து தண்ணீர் எடுத்துச்செல்ல தனி மீட்டர் போர்டு அமைக்கவும் ஆலோசனை நடந்து வருகிறது.

    பார்சம்பேட்டை அருகேயுள்ள கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட 'ஹரிசாண்டல்' எந்திரம் மூலம் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கால்வாய் வழியாக ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடந்தது. இந்த பணிகளை, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அதேபோல் தண்டவாள பகுதியில் குடிநீர் குழாய்களை எடுத்துச்செல்ல தனித்தனியாக இரும்பு சட்டங்கள் (ஆங்கிள்கள்) பொருத்தப்பட உள்ளன. இப்பணிகள், அனைத்தும் 8-ந் தேதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னைக்கு ரெயில் மூலம் குடிநீர் எடுத்துச்செல்லும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நவீன உபகரணங்களை கொண்டு ராட்சத குழாய்கள் புதைக்கும் பணி, பம்பிங் மெஷின் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

    கடந்த 5 நாட்களில் 50 சதவீதம் பணிகள் முடிவு பெற்றுள்ளன என்றார்.

    இந்த நிலையில் ஜோலார்பேட்டையில் நடந்து வரும் பணிகளை குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் மகேஷ்வரன் நேற்று ஆய்வு செய்ய வருவதாக இருந்தது. அவர் வரவில்லை இன்று அவர் நேரில் வந்து பணிகளை ஆய்வு செய்கிறார்.


    வேலூர் தொகுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு ஆகஸ்ட் 5-ந்தேதி தேர்தல் நடை பெற உள்ளது.

    இதையொட்டி அந்த தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முதல் உடனடியாக அமலுக்கு வந்தன.

    வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பாணை முறையாக அரசிதழில் வருகிற 11-ந்தேதி (வியாழக்கிழமை) வெளியிடப்படும். அன்றைய தினமே வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. 18-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

    வேட்புமனுக்கள் 19-ந்தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான இறுதிநாள் 22-ந்தேதியாகும். அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

    ஆகஸ்டு 5-ந்தேதி வாக்குப் பதிவும், 9-ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. 11-ந்தேதி தேர்வு நடத்தை விதிகள் முடிவுக்கு வரும்.

    இந்த நிலையில் வேலூர் தொகுதியில் நடந்து வரும் தேர்தல் பணிகள் குறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    வேலூர் பாராளுமன்ற தொகுதி வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு மற்றும் வேலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.

    கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி வேலூர் பாராளுமன்ற தொகுதியில் மூன்றாம் பாலினத்தவர் 102 பேர் உள்பட 14 லட்சத்து 26 ஆயிரத்து 991 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள்.

    தேர்தலில் வாக்களிக்க 690 வாக்குச்சாவடி மையங்களில் 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. அதில் 133 வாக்குச்சாவடி பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. அங்கு 133 நுண்பார்வையாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.

    தேர்தல் பணியில் 3,200 மத்திய, மாநில அரசு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தலில் 1,880 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் வி.வி. பேட்டுகளும் பயன்படுத்தப்படும்.

     

    வேலூர் தொகுதி

    தேர்தல் நன்னடத்தை விதிகளை அமல்படுத்தவும் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் 18 பறக்கும்படை குழுக்கள், 18 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் கட்டுப்பாட்டு அறை இன்று முதல் செயல்படும்.

    வேலூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது. அடுத்த மாதம் 11-ந்தேதி வரை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மனு நீதி நாள் முகாம், அம்மா திட்ட முகாம், விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம், அரசு விழாக்கள் நடைபெறாது. மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற அலுவலகங்களும் தேர்தல் விதிமுறைக்காக பூட்டி சீல் வைக்கப்படும்.

    ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் டெபாசிட் தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்க ஏற்பாடு செய்யப்படும். தேர்தலை அமைதியாக நடத்திட பொது மக்கள், அரசியல் கட்சியினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரத்து செய்யப்பட்ட வேலூர் தொகுதி தேர்தலில் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன், கதிர்ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், அ.ம.மு.க. சார்பில் பாண்டுரங்கன், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி, மக்கள் நீதி மய்யம் சார்பில் சுரேஷ் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த முறையும் மீண்டும் அவர்களே களம் இறங்க அதிக வாய்ப்புள்ளது.

    ஏற்கனவே பணப்பட்டுவாடா பிரச்சினை காரணமாகத்தான் வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்தது. எனவே மீண்டும் பணப்பட்டுவாடா நடந்து விடக்கூடாது என்பதற்காக வேலூர் தொகுதியில் இந்த முறை பறக்கும் படை சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

    வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இக்குழுக்கள் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் பட்டுவாடா செய்வதைதடுக்கவும், இதற்காக வாகனங்களில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை கண்காணித்து தடுக்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். மாவட்டம் முழுவதும் போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    இதற்காக வேலூர் மாவட்டத்தை ஒட்டிய தமிழகஆந்திர எல்லைகளில் உள்ள கிறிஸ்டியான்பேட்டை, பரதராமி, பொன்னை, சேர்க்காடு, ஆர்.கே.பேட்டை, குடியாத்தம் தன கொண்டப்பல்லி, பேரணாம்பட்டு பத்தலப்பல்லி, பச்சூர் உட்பட 13 சோதனை சாவடிகளிலும் போலீசாருடன், பறக்கும் படை குழுக்களும் வாகன தணிக்கையை தொடங்கியுள்ளனர். பணப்பட்டுவாடாவை தடுக்க அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததால் மாவட்ட அளவிலான அதிகாரிகள் கூட்டம் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் இன்று நடக்கிறது. இதில் தேர்தல் தொடர்பான ஆலோசனைகள் அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது.

    சித்தூரில் ஆசைக்கு இணங்க மறுத்ததால் கள்ளக்காதலியை சாலையில் இழுத்துச் சென்று அடித்து கொலை செய்து உடலை ஏரியில் வீசிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    சித்தூர்:

    சித்தூர்-வேலூர் நெடுஞ்சாலையில் கங்கனேரு ஏரியில் ஒரு பெண் பிணம் கிடப்பதாக சித்தூர்-1 டவுன் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிணத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக சித்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் ஏரியில் பிணமாக கிடந்த பெண் சித்தூர் அம்பேத்கர்நகர் பகுதியை சேர்ந்த கரீம் என்பவருடைய மனைவி கவுசத் (35) என்பது தெரியவந்தது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சித்தூரில் 12-ம் வகுப்பிலும் 2 வது மகள் 10-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். கரீம் கடந்த மாதம் ஒரு விபத்தில் இறந்து விட்டார்.

    கவுசத்துக்கும் சித்தூர் டெலிபோன் காலனியை சேர்ந்த கறிகடை தொழிலாளி காதர்பாட்ஷா (45) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இவர் கவுசத்தின் வீட்டிற்கு அடிக்கடி சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார். திடீரென கவுசத், காதர்பாட்ஷாவை வீட்டிற்கு வர வேண்டாம் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் குடிபோதையில் காதர் பாட்ஷா கவுசத் வீட்டிற்கு வந்துள்ளார். ஆசைக்கு இணங்குமாறு கவுசத்தை வலியுறுத்தியுள்ளார். அவர் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த காதர் பாட்ஷா கள்ளக்காதலியான கவுசத்தை பலமாக தாக்கி சாலையில் தரதரவென இழுத்து சென்றார். இந்த சம்வபத்தை அப்பகுதி மக்கள் வேடிக்கை பார்த்துள்ளனர். இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதால் யாரும் முன்வந்து தட்டிகேட்கவில்லை.

    இதற்கிடையே வெளியே சென்றிருந்த இரு மகள்களும் வீட்டுக்கு வந்து பார்த்தனர். வீட்டில் தாய் இல்லாததை கண்டு அக்கம் பக்கத்தில் விசாரித்துள்ளனர். அப்போது காதர்பாட்ஷா, கவுசத்தை பலமாக தாக்கி இழுத்து சென்றதாக தெரியவந்தது. இதை கேட்ட உடன் இருமகள்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    இந்நிலையில் கவுசத் ஏரியில் பிணமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீசாருக்கு காதர் பாட்ஷா மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் நேற்று முன்தினம் தன்னுடைய ஆசைக்கு இணங்க மறுத்ததால் கவுசத்தை அடித்து கொன்று, பிணத்தை ஏரியில் வீசியதாக ஒப்புக்கொண்டார்.

    இது குறித்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் பழ மண்டிக்கு மாம்பழங்களின் வரத்து கடந்தாண்டைவிட வெகுவாக சரிந்துள்ளதால், இந்த ஆண்டில் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.
    வேலூர்:

    வேலூர் பழ மண்டிக்கு குடியாத்தம், பேர்ணாம்பட்டு, லத்தேரி, பனமடங்கி, மாதனூர், ஒடுகத்தூர், திருப்பத்தூர் பகுதியில் இருந்தும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்தும் மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், பிற நகரங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

    கடந்தாண்டு பருவ மழை பொய்த்ததால் வேலூர் மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.

    இதனால், மாமரங்களுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காததால் இந்த ஆண்டு மாம்பூக்கள் பெருமளவில் கருகி உதிர்ந்ததுடன், காய்களும் தரமற்றதாக உருவாகியுள்ளன. பல இடங்களில் வறட்சியைத் தாங்காமல் 30 சதவீத மாமரங்கள் கருகிவிட்டதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    இப்பாதிப்பு காரணமாக வேலூர் பழ மண்டிக்கு ஜூன், ஜூலை சீசனில் மாங்கனி வரத்து கடந்தாண்டைவிட வெகுவாக சரிந்துள்ளது.

    வேலூர் பழ மண்டிக்கு ஜூன், ஜூலை மாத சீசனில் நீலம், பெங்களூரா ரக மாம்பழங்கள் 40 டன் முதல் 50 டன் அளவுக்கு விற்பனைக்கு வரக்கூடும். நடப்பாண்டு 5 டன் முதல் 15 டன் அளவுக்கு வரத்து சரிந்துள்ளது.

    இதனால், மாம்பழங்களின் விலையும் மிகக்கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு கிலோ ரூ. 6 முதல் ரூ. 10 விற்பனை செய்யப்பட்ட நீலம், பெங்களூரா மாம்பழங்கள் இந்தாண்டு கிலோ ரூ. 15 முதல் ரூ. 25 வரை விற்பனையாகிறது என்றனர்.

    கடந்தாண்டு விளைச்சல் அதிகமாக இருந்ததால் கிருஷ்ணகிரி, ஆந்திர மாநில மாம்பழக்கூழ் தொழிற்சாலைகளில் வேலூர் மாவட்ட மாம்பழங்கள் கொள்முதல் செய்யப்படவில்லை.

    இதனால், மாம்பழங்களைப் பறிக்காமல் விவசாயிகள் அப்படியே மரத்தில் விட்டுவிட்டனர். இந்தாண்டு வறட்சியால் மா விளைச்சல் சரிந்துள்ளது. அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளாகவே வேலூர் மாவட்ட மா விவசாயிகள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வேலூர் ஜெயிலில் கைதி தப்பி ஓடியதையடுத்து பணியில் இருந்த 4 சிறைக்காவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த அருணகிரி மங்கலத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் இளம்பெண் கடத்தல், கற்பழிப்பு வழக்கில் கைது செய்யபட்டு 12 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 2017-ம் ஆண்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    வேலூர் ஜெயிலில் நன்னடத்தை கைதிகள் சிலர் ஜெயிலுக்கு வெளியில் உள்ள தோட்டத்தில் விவசாயம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் நேற்று ஜெயிலுக்கு வெளியே உள்ள தோட்டத்தில் ரமேஷ் உள்பட நன்னடத்தை கைதிகள் சிலர் குழுக்களாக பிரிந்து வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களை சிறைக்காவலர்கள் கண்காணித்து கொண்டிருந்தனர். பகல் 12.30 மணிக்கு அனைவரும் மதிய உணவுக்காக மீண்டும் சிறைக்கு சென்றனர். அப்போது வெளியே சென்ற அனைத்து கைதிகளும் வந்துவிட்டார்களா என்று சிறை காவலர்கள் பார்த்தபோது கற்பழிப்பு வழக்கில் கைதான ரமேஷை மட்டும் காணவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த சிறைக்காவலர்கள் விவசாய தோட்டத்திற்கு சென்று பார்த்தனர். அங்கும் அவரை காணவில்லை. அவர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது ஜெயில் கைதிகளுக்கும், சிறை காவலர்களுக்கும் தெரியாமல் தப்பி ஓடியது தெரியவந்தது.

    உடனடியாக இதுபற்றி சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களுடைய உத்தரவின் பேரில் பாகாயம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தப்பி ஓடிய கைதியின் வீட்டுக்கும் சென்று தேடி பார்த்தனர். அவர் அங்கும் செல்லவில்லை. தொடர்ந்து அவரது கிராமத்தில் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    ஜெயில் கைதி தப்பி ஓடியபோது பணியில் இருந்த 4 சிறைக்காவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    வேலூர் ஜெயிலில் கடந்த ஆண்டும் இதுபோன்று கைதி ஒருவர் ஜெயிலின் மதில் சுவரில் உள்ள கம்பியில் வேட்டியை கட்டி அதன் வழியாக தப்பி ஓடினார். தற்போது மேலும் ஒரு கைதி தப்பி ஓடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×