என் மலர்tooltip icon

    வேலூர்

    ஆம்பூர் அருகே போலீஸ்காரர் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே கீழ்முருங்கை கிராமத்தை சேர்ந்தவர் ஹேமநாதன். இவர் காட்பாடி அருகே சேவூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வனிதா (40).

    இவர் கடந்த 6-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டு மறுநாள் இரவு வீட்டிற்கு வந்தார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 12 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து வனிதா ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் திருட்டு நடந்த வீட்டிற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
    வாலாஜா அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    வாலாஜா:

    வாலாஜா லாலாபேட்டை அருகே உள்ள ஏகாம்பரநல்லூரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 6 மாதங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் லாலாபேட்டை- பொன்னை செல்லும் சாலையில் இன்று மறியிலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது எங்கள் பகுதியில் குடிநீர் வராததால் நாங்கள் நீண்ட தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்துவருகிறோம். எனவே எங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர் சத்துவாச்சாரியில் கார் மோதி பெண் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரத்தை சேர்ந்தவர் ஏழுமலை மனைவி சாந்தி (49). சத்துவாச்சாரி போலீஸ் நிலையம் அருகே சிறிய ஓட்டல் நடத்தி வருகின்றனர்.

    இன்று அதிகாலை ஓட்டலுக்கு செல்வதற்காக சாந்தி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது சென்னையில் இருந்து வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சாந்தி சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தார்.

    சத்துவாச்சாரி போலீசார் உடலை கைபற்றி அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம் அருகே புதுப்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை
    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    அரக்கோணம் அடுத்த முருங்கை பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 30). கூலி தொழிலாளி. இவரது மனைவி தமிழரசி (24). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்களாகிறது. தம்பதி இடையே கருத்துவேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.

    இதனால் மனமுடைந்த தமிழரசி சம்பவத்தன்று வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்ட உறவினர்கள் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தமிழரசி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தக்கோலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாணியம்பாடி தொழிலதிபர் வீட்டில் 50 பவுன் நகை, ரூ.25 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி நியூ டவுன் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் வாணியம்பாடி டவுனில் ஜவுளிகடை நடத்தி வருகிறார். நேற்று இரவு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். இதனை பயன்படுத்தி கொண்ட மர்ம கும்பல் வீட்டின் ஐன்னலை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    அங்கு பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ.25 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். வீட்டு முன்பு நிறுத்தியிருந்து பைக்கையும் ஓட்டி சென்று விட்டனர். இன்று காலை வீடு திரும்பிய வடிவேல் குடும்பத்தினர் வீட்டில் கொள்ளை போனது கண்டு திடுக்கிட்டனர்.

    இதுபற்றிய புகாரின் பேரில் வாணியம்பாடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் சீமான் அறிவித்துள்ளார்.
    சென்னை:

    பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதி நடைபெறுகிறது.

    இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 11-ந்தேதி தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய 18-ந்தேதி கடைசி நாள் ஆகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 19-ந்தேதி நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ்பெற 22-ந்தேதி கடைசிநாள் ஆகும். ஆகஸ்டு 5-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டு 9-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    இந்த தேர்தலில் ஏற்கனவே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தி.மு.க. வேட்பாளராக துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. வேட்பாளராக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளராக தீபலட்சுமி போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை அக்கட்சித் தலைவர் சீமான் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    வேலூர் தேர்தல் ரத்தாவதற்கு முன்பு நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தீபலட்சுமிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் யார் போட்டியிடுவார் என்பதை கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஓரிரு நாளில் அறிவிக்க உள்ளார். இங்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சுரேஸ் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அமமுக போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.


    வெளியூர்காரர்கள் வருகையையொட்டி வேலூர் தேர்தல் பிரசாரம் களை கட்ட தொடங்கியுள்ளது.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு ஆகஸ்ட் 5-ந்தேதி தேர்தல் நடக்கிறது. 9-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. வருகிற 11-ந்தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. 18-ந்தேதி வேட்பு மனுதாக்கல் கடைசி நாளாகும். 22-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

    அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளராக ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளராக கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக தீபலட்சுமி மீண்டும் களம் இறங்குகின்றனர்.

    கடந்த முறை அ.ம.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக சுரேஷ் போட்டியிட்டனர். கடந்த முறை 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு, வேலூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதி வாரியாக சென்று கட்சி பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்களை சந்தித்து ஓட்டு கேட்டு வருகின்றனர்.

    தேர்தல் பிரசாரத்துக்கு பிரதமர் மோடியை அழைத்துள்ளோம். அவர் கட்டாயம் வருவார் என்று ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அமமுக போட்டியில்லை என்று அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வேலூரில் தேர்தல் பிரசார பணிக்காக அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்களும், அதேபோல் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்களும் வெளியூரில் இருந்து வரத் தொடங்கியுள்ளனர்.

    இதனால் வேலூரில் தேர்தல் திருவிழா போல் களைகட்ட தொடங்கியுள்ளது. வெளியூர்காரர்கள் தங்குவதற்காக ஓட்டல், லாட்ஜ், விடுதிகளில் புக்கிங் செய்ய தொடங்கி விட்டனர். விடுதிகளில் அறைகள் கிடைப்பதில் இப்போதே கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

    இதனால் மாத வாடகைக்கு வீடுகளை தேடி பிடிக்கின்றனர். வெளியூர்காரர்கள் தினமும் ஏராளமானோர் வரத் தொடங்கியுள்ளனர். இதனால் வேலூரில் தேர்தல் பிரசாரம் களைகட்ட தொடங்கியுள்ளது.

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டசபை தொகுதியிலும் 24 மணி நேரம் செயல்படும் வகையில் சுழற்சி முறையில் 3 குழுக்கள் வீதம் 18 பறக்கும் படை, 18 நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவில் தாசில்தார் நிலையில் அதிகாரி ஒருவரும், உதவி ஆய்வாளர், 2 போலீசார், வீடியோகிராபர், டிரைவர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தொகுதி முழுவதும் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    பறக்கும் படையினர், தேர்தல் நன்னடத்தை விதிமீறல்கள், சமூக விரோதிகளின் நடமாட்டம், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வினியோகித்தல், தேர்தல் செலவினம் குறித்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லா அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணிகளை வீடியோ மூலமாக முழுவதும் பதிவு செய்ய வேண்டும்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் “சிவிஜில்” என்ற ஆப் மூலமாக புகார்கள் பதிவு செய்யும் வசதியும் உள்ளது. இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இவை குறித்து கண்டறியப்பட்டால் வாகனத்துடன் கைப்பற்றி வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

    சோதனையின் போது ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் பணம் அல்லது 10 ஆயிரத்துக்கும் மேல் தேர்தல் தொடர்பான போஸ்டர்கள், பரிசு பொருட்கள், மதுபானம், போதைப் பொருட்கள் ஆகியவற்றை வாகனத்தில் வேட்பாளரோ அல்லது முகவர்களோ கொண்டு சென்றால் பறிமுதல் செய்ய வேண்டும்.

    எல்லா நிகழ்வுகளையும் முழுமையாக வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். நட்சத்திர பேச்சாளர் தனது சொந்த பயன்பாட்டுக்காக ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் கொண்டு செல்லக் கூடாது. அதே நேரத்தில் கட்சியின் பொருளாளர் சான்றுடன் பணம் கொண்டு செல்லப்பட்டால் அதற்கான சான்றின் நகலை காண்பிக்க வேண்டும்.

    குறிப்பாக சோதனையின்போது வாகனத்தில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் தொகை இருந்து, இதில் வேட்பாளருக்கு தொடர்பு இருக்கும் என சந்தேகிக்கப்பட்டால் உடனடியாக தகவல் அளிக்க வேண்டும். இது தொடர்பாக வருமான வரி சட்டத்தின் கீழ் மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பறக்கும் படை குழுவினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.




    குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு செல்லும் சோதனை ஓட்டம் தொடங்கியது.

    வேலூர்:

    சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

    தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக ரூ.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வந்தது.

    மேட்டு சக்கரகுப்பத்தில் உள்ள 5.05 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட காவிரி கூட்டு குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து 3½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பார்சம்பேட்டை ரெயில்வே கேட் பகுதிக்கு குழாயில் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அங்கிருந்து ரெயில் வேகன்களில் தண்ணீர் நிரப்பப்படுகிறது.

    இதற்காக குடிநீர் வாரியம், ரெயில்வே துறை, மின்சார வாரியம் சார்பில் இரவு பகலாக நடந்து வந்த வேலைகள் முடிவுக்கு வந்தது.

    பார்சம்பேட்டையில் ரெயில் வேகன்களில் தண்ணீர் பிடிப்பதற்காக 50 குடிநீர் பைப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தையும் குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குனர் மகேஸ்வரன், தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

    சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் பணிகள் அனைத்தும் சிறப்பாக முடிவடைந்துள்ளது. மேட்டு சக்கரகுப்பத்தில் இருந்து பார்சம்பேட்டை வரை 3½ கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு இன்று சோதனை செய்யப்பட்டது.

    இதில் எங்கேயாவது தண்ணீர் கசிகிறதா? குழாய்கள் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்யப்பட்டது.

    நாளை மறுதினம் புதன்கிழமை காலையில் சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு செல்லும் பணி தொடங்குகிறது. இதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    தினமும் ரெயிலில் 4 முறை தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. ஒரு முறை 25 லட்சம் லிட்டர் குடிநீர் என்று மொத்தம் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

    சென்னை வில்லிவாக்கம் ரெயில் நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சென்னை மாநகர பகுதிக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது.

    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு யார் காரணம் என்று மக்களுக்கு தெரியும் என புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.
    அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூரில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி வேலூர் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் 10 நாட்களுக்கு முன்பாகவே முடிவடைகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் சந்தித்து பிரசாரத்துக்கு வரும்படி அழைப்பு விடுக்க உள்ளோம்.

    மத்திய அரசின் பட்ஜெட், தொலைதூர காலத்தை கருத்தில்கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள சிறந்த பட்ஜெட்டாகும். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த 37 பேர் வெற்றி பெற்று எம்.பி.க்களாகியுள்ளனர். அவர்கள் பொய் பிரசாரத்தின் மூலம் மக்களை திசை திருப்பி வென்றனர்.

    ஆனால் இந்த தேர்தல் தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வரும், அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். மக்கள் சிந்தித்து நல்ல தீர்ப்பு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் எதற்காக நிறுத்தப்பட்டது? தற்போது தி.மு.க. சார்பில் யார் போட்டியிடுகிறார்? என்பதை மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிப்பார்கள்.
    துரைமுருகன்

    மத்தியில் நடைபெறும் மோடி அரசுக்கும், மாநிலத்தில் நடைபெறும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கும் எதிராக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என நம்புகிறேன் என்றார்.

    இவ்வாறு துரைமுருகன் பேட்டிக்கு ஏ.சி.சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார்.
    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நின்றுபோனதற்கு நாங்கள் காரணமல்ல என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

    வேலூர்:

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வேலூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    எங்களால் வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நின்றுபோனது என்று கூறுவது சரியல்ல. எங்கள் மீது எந்த தவறும் இல்லை. எங்கள் வீட்டிலும், கல்லூரியிலும் சோதனையிட்டு எதுவும் பிடிபடவில்லை என்று வருமான வரித்துறையினர் எழுதி கொடுத்து சென்றனர். எங்களுக்கும், வருமான வரித்துறையினருக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை. தமிழ்நாட்டில் தற்காலிகமான ஆட்சிதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

    தமிழ்நாட்டில் குடிநீர் பிரச்சினை, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, லஞ்ச லாவண்யம், அதிகமாக உள்ளது. இவற்றை முன்னிறுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோம். தமிழகத்தில் எந்த தொழிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. பெரிய தொழில் நிறுவனங்கள் ஆந்திராவுக்கு சென்று விட்டன.

    மத்திய பட்ஜெட் குறித்து நன்கு படித்த அறிஞர்கள், பொருளாதார நிபுணர்கள் உள்பட அனைவரும் மத்திய பட்ஜெட்டால் எந்த பயனும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு உதவுவது போன்றுதான் உள்ளது. பட்ஜெட்டை பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    சிறு வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் கொடுப்பதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். அவர்கள் சொல்வதை எல்லாம் செய்து விடுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தி.மு.க. சார்பில் போட்டியிடும் எனது மகன் கதிர் ஆனந்த் வருகிற 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    வேலூர் ஜெயிலில் இருந்து தப்பி ஓடிய கைதி செங்கம் புதுப்பாளையத்தில் பதுங்கி இருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த அருணகிரி மங்கலத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் இளம்பெண் கடத்தல், கற்பழிப்பு வழக்கில் கைது செய்யபட்டு 12 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 2017-ம் ஆண்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெயிலுக்கு வெளியே உள்ள தோட்டத்தில் ரமேஷ் உள்பட நன்னடத்தை கைதிகள் சிலர் குழுக்களாக பிரிந்து வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களை சிறை காவலர்கள் கண்காணித்து கொண்டிருந்தனர். தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது ஜெயில் கைதிகளுக்கும், சிறை காவலர்களுக்கும் தெரியாமல் ரமேஷ் தப்பி ஓடிவிட்டார்.

    இது தொடர்பாக பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஜெயில் கைதி தப்பி ஓடியபோது பணியில் இருந்த சிறைக்காவலர்களிடம் ஜெயில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    முதன்மை சிறைக்காவலர் குமரவேல், தலைமை சிறைக்காவலர் திருமலை ஆகியோரின் கவன குறைவால் கைதி தப்பி ஒடியது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் சஸ்பெண்டு செய்து சிறைதுறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி உத்தரவிட்டார்.

    இதற்கிடையில், செங்கம் புதுப்பாளையத்தில் ரமேஷ் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, திருவண்ணாமலை கிளை சிறை வார்டர்கள் இமானுவேல் சந்திரசேகர், கார்த்திக் ஆகியோர் புதுப்பாளையம் பஸ் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, அங்கு பதுங்கி இருந்த ரமேஷை நேற்று பிற்பகல் கைது செய்தனர். பின்னர், அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    வேலூர் வணிகவியல் குற்ற புலனாய்வுதுறை இன்ஸ்பெக்டர்க்கு சொந்தமான இடங்களில் டி.எஸ்.பி. தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
    வேலூர்:

    வேலூர் வணிகவியல் குற்ற புலனாய்வுதுறை இன்ஸ்பெக்டர் ரமேஷ் ராஜ். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கடந்த மாதம் 28-ந் தேதி வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்நிலையில் இன்று ரமேஷ்ராஜ்கு சொந்தமான இடையன்சாத்து மண்டபம் சாலையில் உள்ள வீடு மற்றும் தெள்ளூர்பாளையத்தில் உள்ள வீடுகளில் டி.எஸ்.பி. தேவநாதன் தலைமையில் 2 குழுக்களாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    காலை 11 மணிக்கு தொடங்கிய சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்போது வீட்டில் இருந்தவர்கள் தவிர வேறு யாரும் உள்ளேயும் வெளியேயும் அனுமதிக்கபடவில்லை. வீட்டின் அறைகள் மற்றும் பீரோக்களில் இருந்து பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைபற்ற பட்டதாக கூறப்படுகிறது.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    ×