என் மலர்
வேலூர்
அரக்கோணம்:
அரக்கோணம் சோளிங்கர் சாலையில் உள்ள சின்னகைனூர் கிராமத்தை சேர்ந்த ஜெகதல பிரதாபன் மனைவி நிர்மலா (வயது 45). டெய்லர் கடை வைத்துள்ளார். கணவர் இறந்துவிட்டதால் தாய் படவேட்டம்மாளுடன் வசித்து வந்தார். நேற்றுஇரவு நிர்மலா அவரது தாயாரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் நள்ளிரவு வீடு புகுந்த மர்ம நபர்கள் நிர்மலாவை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனை தடுக்க முயன்ற படவேட்டம்மாளை கைகளால் தாக்கி கீழே தள்ளியதில் அவர் மயக்கம் அடைந்துள்ளார். பின்னர் அம்மிக்கல்லை நிர்மலாவின் தலையில் தூக்கி போட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே நிர்மலா இறந்தார். இதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இன்று காலை வீடு திறந்து கிடந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் நிர்மலா இறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர்.
இது குறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி. விஜயகுமார், இன்ஸ்பெக்டர்கள் முத்து ராமலிங்கம், அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நிர்மலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மயங்கி கிடந்த அவரது தாயாரை அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சிகிச்சை அளித்தனர். சம்பவம் நடந்த வீட்டில் கைரேகைகள் சேகரிக்கபட்டன. மேலும் மோப்பநாய் ஷிம்பா கொண்டு சோதனை செய்யபட்டது.
நிர்மலா வீட்டின் கதவு திறந்து மர்ம நபர் உள்ளே வந்துள்ளார். இதனால் அவருக்கு தெரிந்தவர் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற படவேட்டம்மாள் கண்விழித்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் மற்றும் தொரப்பாடி மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்.
பாகாயம், சித்தேரி, இடையன்சாத்து விருபாட்சி புரம், பலவன்சாத்து, சாமிநகர், சாய்நாதபுரம், எழில்நகர், சாஸ்திரி நகர், காந்திநகர், புதிய பஸ் நிலையம், பைபாஸ் ரோடு, தோட்டபாளையம், பழைய பஸ் நிலையம், வேலூர் டவுன், பஜார், சலவன்பேட்டை, ஆபீசர்ஸ் லைன், கஸ்பா, ஊசூர், விரிஞ்சிபுரம், செதுவாலை, கொணவட்டம், சேண்பாக்கம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின் பொறியாளர் நடராஜன் தெரிவித்து உள்ளார்.
ஆற்காடு மற்றும் கத்தியவாடி மின் நிலையங்களில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் 5 மணி வரை அவுசிங் போர்டு, வேப்பூர், விஷாரம், நந்தியாலம், தாழனூர், ராமநாதபுரம், கூராம்பாடி, உப்புப் பேட்டை, கிருஷ்ணாவரம், தாஜ்புரா, லப்பப்பேட்டை, முப்பதுவெட்டி,
தக்கான் குளம், களர், கத்தியவாடி, கீழ்குப்பம், ஆயிலம், அருங்குன்றம், ஆயிலம் புதூர், ராமாபுரம், ரத்தினகிரி, கன்னிகாபுரம், சானார்பன்டை, மேல குப்பம், மேல்செங்கநாத்தம், கீழ்செங்கநாத்தம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின் பொறியாளர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
வேலூர், திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் (ஆவின்) சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது.
இங்கு வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த பாலில் இருந்து நெய், மோர், ஐஸ்கிரீம், பால்கோவா போன்ற பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பால் சென்னை உள்பட பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இதன் பொது மேலாளராக கோதண்டராமன் பணியாற்றி வந்தார். இவர் பணியில் சேர்ந்த பின்னர் 2 லட்சம் லிட்டர் பால் முறைகேடு தொடர்பாக 5 அதிகாரிகளை அதிரடியாக சஸ்பெண்டு செய்தார். இந்த நிலையில் நேற்று இவர் திடீரென சஸ்பெண்டு செய்யப்பட்டார். ஆவின் நிறுவன தலைமையகத்தில் இருந்து இதற்கான நகல் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வேலூர் ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவருக்கு பதிலாக திருவண்ணாலை ஆவின் உதவி பொது மேலாளர் கணேசன் கூடுதலாக ஆவின் பொது மேலாளர் பொறுப்பை கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்டு 5-ந் தேதி நடக்கிறது.
இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. மனுத்தாக்கல் செய்ய 18-ந் தேதி கடைசி நாளாகும். 19-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 22-ந் தேதி வரை மனுக்கள் வாபஸ் பெறலாம். இதையடுத்து அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
அ.தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சி வேட்பாளராக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த முறை போட்டியிட்ட அ.ம.மு.க., இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க. இடையேதான் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் நாளை வியாழக்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். தி.மு.க. சார்பில் போட்டியிடும் கதிர்ஆனந்த் 12-ந் தேதி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனுக்களை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரத்திடம் தாக்கல் செய்யலாம். காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மனுத்தாக்கல் செய்ய நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்யும் வேட்பாளர் வைப்புத் தொகை ரூ.25 ஆயிரம் பணமாக செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவர்கள் டெபாசிட் தொகை ரூ.12,500-ஐ செலுத்த வேண்டும்.
வேட்பு மனுத்தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுடன் 3 கார்கள் மட்டுமே கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படும்.
மனுத்தாக்கல் செய்யும் போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில் முக்கிய கட்சிகள் வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளதால் எஸ்.பி. தலைமையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வேலூர்:
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக ஆங்கிலேய படையில் பணியாற்றிய இந்திய வீரர்கள், கடந்த 1806-ம் ஆண்டு இதே நாளில் (ஜூலை 10-ந் தேதி) வேலூர் கோட்டையில் சிப்பாய் புரட்சி நடத்தினர். இது, முதல் இந்திய சுதந்திர போர் என்ற வரலாற்று சிறப்பை பெற்றது.
சிப்பாய் புரட்சியில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு ஆண்டு தோறும் நினைவு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, 213-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
வேலூர் கோட்டை எதிரே மக்கான் சந்திப்பில் உள்ள வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தூண் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி காலை 8 மணிக்கு நடந்தது.
கலெக்டர் சண்முகசுந்தரம், போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள், பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், லெப்டினன்ட் ராமகிருஷ்ணன், முன்னாள் படை வீரர் நலன் உதவி இயக்குனர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட முன்னாள் முப்படை அதிகாரிகள், பள்ளி, கல்லூரியை சேர்ந்த தேசிய மாணவர் படையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஜோலார்பேட்டை:
சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில்வே வேகன் மூலம் சென்னைக்கு காவிரி கூட்டு குடிநீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.
அந்த பணிகளுக்காக தமிழக அரசு ரூ.65 கோடி நிதி ஒதுக்கியது. அதைத் தொடர்ந்து பணிகள் வேகமாக தொடங்கின.
ஜோலார்பேட்டை அருகே மேட்டு சக்கரகுப்பம் வழியாக வேலூர் நோக்கி செல்லும் காவிரி கூட்டுக் குடிநீரின் ராட்சத குடிநீர் பைப்லைனில் இருந்து தண்ணீர் பிரித்து மேட்டு சக்கரகுப்பத்தில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் சேமிக்கப்படும்.
அங்கிருந்து பார்சம்பேட்டை ரெயில்வே உயர் நிலைப்பள்ளி பின்புறம் வரை 3.5 கி.மீட்டருக்கு அமைக்கப்பட்ட புதிய பைப்லைன் மூலம் குடிநீர் அனுப்பப்பட்டு அங்கிருந்து 60-க்கும் மேற்பட்ட சிறிய பைப் பொருத்தப்பட்டு அதிலிருந்து நேரடியாக ரெயில்வே வேகனுக்கு தண்ணீர் நிரப்பப்படுகிறது.
ரெயில் மூலம் சென்னைக்கு காவிரி கூட்டு குடிநீர் கொண்டு செல்வதற்காக 55 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ரெயில்வே வேகன்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சுத்தம் செய்யப்பட்டு 100 வேகன்கள் நேற்று ஜோலார்பேட்டைக்கு வந்தன.
அதில் ஒருமுறை 50 வேகன்கள் என அடுத்தடுத்து 2 ரெயில்களில் குடிநீர் நிரப்பி சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதிக திறன் கொண்ட நீர் உறிஞ்சும் நீர்மூழ்கி மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளதால் 50 வேகன்களில் 2.5 மில்லியன் லிட்டர் குடிநீர் 1½ மணி நேரத்துக்குள் நிரப்பி விடும்.
அதன் அடிப்படையில் காலையில் 2 முறை, மாலையில் 2 முறை என 100 வேகன்களில் 10 மில்லியன் லிட்டர் காவிரி கூட்டு குடிநீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும்.
2 ரெயில்களில் 100 வேகன்களில் 10 மில்லியன் லிட்டர் குடிநீரை நிரப்புவதற்கு முன்பு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் பேரா மீட்டர் மூலம் தண்ணீரின் தரத்தை தீவிர சோதனை செய்த பின்னரே வேகனில் நிரப்புகின்றனர்.
அதற்காக ரெயில்வே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் குடிநீரை சோதனை செய்வதற்காக தனி அறை அமைக்கப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டையில் கடந்த 12-ந்தேதி பணிகள் தொடங்கியது. இந்த பணிக்காக 18 என்ஜினீயர்கள் 3 குழுவாக பிரிக்கப்பட்டு 250 ஊழியர்கள் என இரவு பகலாக ஈடுபட்டனர். இதனால் இந்த பணி 15 நாட்களில் நிறைவடைந்தது.
மேட்டு சக்கரகுப்பம் வழியாக வேலூர் செல்லும் ராட்சத குடிநீர் பைப்லைனில் இருந்து பிரிக்கப்பட்டு அருகே உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் 5.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
மேட்டு சக்கரகுப்பத்தில் இருந்து பார்சம்பேட்டை ரெயில்வே யார்டு வரை சோதனை ஓட்டம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
அப்போது பார்சம் பேட்டை ரெயில்வே கேட் அருகே உள்ள சுண்ணாம்பு காளை பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தில் பைப் லைன் அமைக்கப்பட்டுள்ளது என இளையராஜா என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் 10 மீட்டர் தூரத்திற்கு பதிக்கப்பட்ட குழாய்கள் தோண்டப்பட்டு மாற்று வழியாக பதிக்கும் பணி நடந்தது.
இதனால் நேற்று நடைபெற இருந்த சோதனை ஓட்டம் அறிவித்தப்படி நடைபெறவில்லை. இன்று மீண்டும் நடைபெறும் என அறிவித்தனர்.
இன்று சோதனை ஓட்டம் நடத்துவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தால் இன்று மாலையே தண்ணீர் கொண்டு செல்வதற்கான பணிகள் தொடங்கப்படும்.
சோதனை ஓட்டத்தில் தொய்வு ஏற்பட்டால் நாளை அல்லது 12-ந்தேதிக்குள் தண்ணீர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
மேட்டு சக்கரகுப்பம், சுண்ணாம்புக்காளை ரெயில்வே யார்டு ஆகிய 3 பகுதியில் இன்னும் பணிகள் முழுமையடையாமல் உள்ளது.
இந்த பணிகள் இன்று முடிவடையும். அதன் பிறகு மேட்டு சக்கரகுப்பத்தில் இருந்து ரெயில்வே யார்டு வரை முதற்கட்ட சோதனை ஓட்டம் நடைபெறும்.
அதை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வுக்கு பின்பு யார்டில் இருந்து ரெயில் வேகனுக்கு தண்ணீர் ஏற்றும் பணி நடைபெறும்.
அதிகாரிகள் அனுமதி கிடைத்ததும் வருகிற 12-ந்தேதி முதல் முறைப்படி சென்னைக்கு ரெயில்வே குடிநீர் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.
இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘வாட்டர் வேகன்’ நேற்று முன்தினம் காலை ராஜஸ்தானில் இருந்து புறப்பட்டு நேற்று காலை 6 மணிக்கு ஜோலார்பேட்டை சரக்கு ரெயில் நிற்கும் 5-வது யார்டை வந்தடைந்தது. ஒவ்வொரு வேகனிலும் 54 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் நிரப்ப முடியும். இந்த ரெயிலில் மொத்தம் 50 வேகன்கள் உள்ளன.
நேற்று மாலை சோதனை ஓட்டம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து சென்னை நகர மக்களுக்கு இன்று (புதன்கிழமை) முதல் தினசரி 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் சோதனை ஓட்டத்தின் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து உள்ளது. குழாய்கள் அனைத்தையும் சுத்தம் செய்தபின்னர் சென்னை மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜோலார்பேட்டை மேட்டுசக்கரகுப்பம் பகுதியில் இருந்து குழாய் மூலம் பார்சம்பேட்டை ரெயில்வே கேட் அருகில் உள்ள ரெயில்வே வேகனுக்கு குடிநீர் எடுத்து செல்லும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மேட்டுசக்கரகுப்பம் பகுதியை சேர்ந்த சிலர் தங்களது நிலத்தின் வழியாக தண்ணீர் எடுத்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் நந்தன் மற்றும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பிறகு மாற்றுப்பாதையில் குடிநீர் பதிக்கும் பணி நடைபெற்றது. இதனால் 6 மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது. குறிப்பிட்டபடி சோதனை ஓட்டம் நடைபெற்ற பிறகு வேகனில் நீரேற்றப்படும். இதனால் சென்னை மக்களுக்கு குடிநீர் கிடைக்க காலதாமதம் ஏற்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரராவ் (வயது 48). கூலி தொழிலாளி. நேற்று வேலை முடிந்து இரவு 7.30 மணியளவில் வளையாம்பட்டு பகுதி நிலத்தின் வழியாக தனது கிராமத்திற்கு நடந்து சென்றார்.
அப்போது நிலை தடுமாறி அங்குள்ள சுமார் 50 அடி ஆழ பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்தார். கிணற்றில் விழுந்த அவர் அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் ஓடி வந்து அவரை மீட்க முயன்றனர்.
ஆனால் சிறிதளவு தண்ணீர் அதிக சேறு இருந்ததால் அதில் சிக்கிய ராமச்சந்திரராவை கிராம மக்களால் மீட்க முடியவில்லை.
இதுகுறித்து வாணியம்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் இரவு 8 மணி முதல் அவரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
சுமார் 7 மணி நேரம் போராடி இன்று அதிகாலை 2 மணியளவில் ராமச்சந்திரராவை பிணமாக மீட்டனர்.
வாணியம்பாடி தாலுகா இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் அங்கு வந்து, தொழிலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 48). மின் ஊழியர். இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வாணியம்பாடிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். கோடியூர் அருகே சென்ற போது எதிரே வந்த மினிவேன் பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் மல்லிகை தோப்பு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. கூலி தொழிலாளி. இவரது மனைவி பத்மாவதி. மகள் திவ்யக்கரசி (வயது 7). அங்குள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று காலை திவ்யக்கரசியை குளிக்கவைத்து, சாப்பாடு ஊட்டி, சீருடை அணிவித்து அவரது பெற்றோர் பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு கையசைத்தபடி சிறுமி புறப்பட்டு சென்றார்.
ஆட்டோவில் சீட்டின் ஓரத்தில் சிறுமி அமர்ந்துள்ளார். அங்குள்ள சாலையில் குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டி மூடப்பட்டுள்ளது. மேடு, பள்ளத்தில் ஆட்டோ இறங்கி ஏறியது.
அப்போது ஆட்டோவில் இருந்த சிறுமி கீழே தவறி விழுந்தார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திவ்யக்கரசி பரிதாபமாக இறந்தார்.
சிறுமியின் பெற்றோர் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இது தொடர்பாக ஆம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் துத்திபட்டை சேர்ந்த கார்த்தி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில ஆட்டோக்கள் அதிகளவு பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது.
அதிகாரிகள் ஆட்டோக்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். அதிகளவு மாணவர்களை ஏற்றி செல்லும் ஆட்டோக்களை பெற்றோர்கள் புறக்கணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வேலூர்:
சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு காவிரி கூட்டு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
ஜோலார்பேட்டை மேட்டு சக்கரகுப்பத்தில் உள்ள 5.05 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட காவிரி கூட்டு குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து 3½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பார்சம்பேட்டை ரெயில்வே கேட் பகுதிக்கு குழாயில் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து ரெயில் வேகன்களில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. இந்த பணிகள் அனைத்தும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், மாநில நெடுஞ்சாலைத் துறையினர், மின்வாரியம், ரெயில்வே நிர்வாகம் என பல துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முயற்சியால் தண்ணீர் கொண்டு செல்லும் பணிகள் சிறப்பாக முடிவடைந்துள்ளன.
மேட்டுசக்கர குப்பம் பகுதியில் இருந்து பார்சம்பேட்டை வரை குழாய் பதிக்கும் பணிகள் முடிந்து சாலைகள் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
அதேபோல் மேட்டு சக்கரகுப்பம் பகுதியில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீரை ஏற்ற அங்கு பைப்லைன்கள் மற்றும் வால்வுகள் அமைக்கும் பணிகளும் முடிவடைந்துள்ளன.
இதைத் தொடர்ந்து மேட்டூரில் இருந்து கொண்டு வரப்படும் காவிரி கூட்டு குடிநீரை மேட்டு சக்கரகுப்பம் பகுதியில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் பம்பிங் செய்து சேமித்து வைத்து நேற்று வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.
இந்த தண்ணீர் இன்று காலை பார்சம்பேட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து 5-வது பிளாட்பாரத்தில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு கொண்டு சென்று அங்கு பொருத்தப்பட்டுள்ள குழாய்கள் மூலம் ரெயில்வே வேகன்களில் நிரப்பப்படும். இதற்கான சோதனை ஓட்டம் இன்று நடந்து வருகிறது.
சோதனை ஓட்டம் திருப்திகரமாக இருந்ததால் திட்டமிட்டபடி நாளை புதன்கிழமை முதல் சென்னைக்கு ரெயில் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படும்.
இப்பணிகளில் 8 பொறியாளர்கள் தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. 50 வேகன்களில் 1 முறை 25 லட்சம் லிட்டர் தண்ணீர் என்று மொத்தம் 4 முறை தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
இதற்கு ஒரு தடவைக்கு ரூ8.6 லட்சம் ரூபாய் ரெயில்வே துறைக்கு தமிழக அரசு கட்டணமாக செலுத்துகிறது. சராசரியாக ஒரு லிட்டருக்கு 34 பைசா செலுத்தப்படுகிறது. ஒருதடவை தண்ணீர் கொண்டு செல்லும் போது 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை தண்ணீர் கசிந்து வீணாகி விடும்.
50 வேகன்களில் ஒரு வேகன் 55 ஆயிரம் லிட்டர் சுமக்கும் திறன் கொண்டது. ஜோலார்பேட்டையில் நீர் ஏற்றும் இடமான பார்சம்பேட்டையில் இருந்து வில்லிவாக்கத்தில் உள்ள வடக்கு ஜகநாத் வரை சுமார் 204 கி.மீட்டர் தூரம் செல்ல வேண்டும்.
இந்த தூரத்தை கடக்க 5 மணி நேரம் முதல் 7 மணி நேரம் வரை ஆகலாம் என்பதால் ஒருநாளைக்கு 3 தடவையே சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லக்கூடிய நிலை உள்ளது. அவ்வாறு ஒரு நாளைக்கு 3 முறை இயக்கப்பட்டால் 7.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கொண்டு செல்லப்படும்.
ஆரம்பத்தில் 6 மாத காலத்திற்கு ரெயிலில் தண்ணீர் கொண்டுவர முன்மொழியப்பட்டது. நிலத்தடி நீர் மட்டம் மேம்பட்டவுடன் சேவையை குறுகியதாக நிறுத்த வாய்ப்புள்ளது.
30 நாட்களுக்கு 3 முறை ரெயிலில் தண்ணீர் கொண்டு சென்றால் தமிழக அரசு ரெயில்வே துறைக்கு சுமார் 7.74 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்.
வேலூர் நுகர்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் நேற்று இரவு வாலாஜா டோல்கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது சென்னையில் இருந்து வேலூர் மார்க்கமாக வந்த லாரியை மறித்தனர். ஆனால் லாரி நிற்காமல் சென்றது. போலீசார் ஜீப்பில் லாரியை பின் தொடர்ந்து விரட்டி சென்றனர். தனியார் கல்லூரி அருகே லாரியை மடக்கி சோதனையிட்டனர். அதில் 50 கிலோ எடையில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி கடத்தப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. சுமார் 7 டன் எடையுள்ள ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தது.
போலீசார் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் வாணியம்பாடியை சேர்ந்த குமார் (வயது 35) என்பதும் சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ரேசன் அரிசியை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து குமாரை கைது செய்து 7 டன் ரேசன் அரிசியுடன் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல், 7 டன் ரேசன் அரிசி மூட்டைகளை கடத்த முடியாது. ஆந்திராவுக்கு ரெயில்கள், பஸ்கள் மூலம் கடத்தி செல்வது அதிகரித்து வருகிறது. ரேசன் அரிசி கடத்தலை தடுக்க முடியவில்லை.
குறிப்பாக, ஆந்திராவுக்கு கடத்தப்படும் ரேசன் அரிசி, அங்கு பாலிஷ் போட்டு புதுரக அரிசியாக விற்கப்படுகிறது.
எனவே, ரேசன் அரிசி கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






