என் மலர்
வேலூர்
வேலூர்:
டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கட்சி பாராளுமன்ற தேர்தலில் மிக குறைவான வாக்குகள் மட்டுமே வாங்கியது. இதையடுத்து அந்த கட்சியின் நிர்வாகிகள் அ.தி.மு.க.விலும், தி.மு.க.விலும் ஐக்கியமாகி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தலுக்கு முன்பே தி.மு.க.வில் சேர்ந்தார். தங்க தமிழ்செல்வன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்தார்.
அ.ம.மு.க.வில் இருந்த வேலூரை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. நீலகண்டன் தி.மு.க.வில் இணைந்தார்.
இந்த நிலையில வேலூர் தொகுதியில் 4 முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த ஞானசேகரன், மு.க.ஸ்டாலினை சந்தித்து இன்று தி.மு.க.வில் சேர்ந்தார்.
ஞானசேகரன் 1991 முதல் 2011 வரை தொடர்ந்து 20 ஆண்டுகள் அதாவது 4 தடவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர். ஜி.கே.வாசன் ஆதரவாளராக இருந்த அவர் ஜி.கே.வாசன் தனிக்கட்சி தொடங்கியதும் த.மா.கா.வில் சேர்ந்தார். 2011 சட்டமன்ற தேர்தலில் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இதனையடுத்து ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். ஜெயலலிதா இறந்த பிறகு தினகரன் தனிக்கட்சி தொடங்கியதும் அவரது கட்சியான அ.ம.மு.க.வில் சேர்ந்தார். அவருக்கு மாநில அமைப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. தற்போது அவர் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் சேர்ந்துள்ளார்.

டி.டி.வி. தினகரன் கட்சி தொடங்கிய போது முன்னாள் எம்.பி., சி.கோபால் அவரது மகன் என்.ஜி.பார்த்திபன், ஆம்பூர் பாலசுப்பிரமணி, ஜெயந்தி பத்மநாபன், அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சிவசங்கரன், எல்.கே.எம்.பி. வாசு, நீலகண்டன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஞானசேகரன், கலையரசு, பாண்டுரங்கன் மற்றும் அப்புபால் பாலாஜி, என பெரிய நிர்வாகிகள் பட்டாளமே கட்சியில் இருந்தனர்.
தற்போது முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஞானசேகரன், நீலகண்டன் ஆகியோர் தி.மு.க.விலும், சிவசங்கரன் அ.தி.மு.க.விலும் சேர்ந்துள்ளனர். வேலூர் மாநகரில் அ.ம.மு.க. நிர்வாகிகள் அதிகம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆம்பூர்:
பெங்களூர் கண்டோன் மெண்ட் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி உமாதேவி (வயது 50). சென்னை வந்த அவர் நேற்று இரவு மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு சென்றார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கண்ணடிகுப்பம் அருகே இரவு 12.30 மணிக்கு ரெயிலில் சென்று கொண்டிருந்தது.
அப்போது அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த உமாதேவி கழிவறைக்கு செல்ல எழுந்தார். தூக்க கலக்கத்தில் இருந்த அவர் ரெயிலில் கழிவறைக்கு சென்றார். அப்போது கழிவறை கதவு என நினைத்து வாசல் கதவை திறந்துவிட்டார்.
இதில் கால் தடுமாறிய அவர் வாசலில் இருந்து தவறி கீழே விழுந்தார். முதுகு, கால்களில் படுகாயம் அடைந்த அவர் தண்டவாளத்தின் அருகில் எழுந்திருக்க முடியாமல் கிடந்தார். காப்பாற்றுமாறு கூச்சலிட்டு கொண்டே இருந்தார்.
இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உமாதேவி படுகாயமடைந்து கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர். இதுபற்றி ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் 108 ஆம்புலன்சு மூலம் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுபற்றி அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆம்பூர் வந்தனர். உமாதேவியை வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உமாதேவி அதிகம் நகை அணிந்திருந்தார். நள்ளிரவு 12.30 மணிமுதல் காலை வரை தண்டவாளத்தின் அருகில் கிடந்தாலும் அவரது நகை பத்திரமாக இருந்தன.
காயமடைந்து மயங்கி கிடந்த பெண்ணை நகைகளுடன் பத்திரமாக மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்த பொதுமக்களுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
வேலூர்:
வேலூர் அலமேலு மங்காபுரம் அடுத்த புதுவசூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 50). ரியல் எஸ்டேட் செய்து வருகிறார். தி.மு.க. பிரமுகரான வசூர் நடராஜனின் சகோதரர் ஆவார். ஏழுமலையும் தி.மு.க.வில் உறுப்பினராக உள்ளார்.
இந்நிலையில், வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் என 10 பேர் கொண்ட குழுவினர், ஏழுமலை வீட்டுக்கு நேற்று மதியம் திடீரென காரில் வந்து இறங்கினர். இதைப் பார்த்த ஏழுமலை மற்றும் குடும்பத்தினர், வீட்டில் வைத்திருந்த கட்டைப்பை ஒன்றை வேகவேகமாக ஓடிச்சென்று தூக்கி வீட்டின் பின்பக்கம் வீசினார்.
இதை கவனித்த வருமான வரித்துறையினர், அந்த பையை பறிமுதல் செய்து சோதனையிட்டனர். அப்போது, அதில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. அதில் ரூ.27 லட்சத்து 74 ஆயிரம் இருந்தது. தொடர்ந்து, வருமானவரித்துறையினர் அந்த வீட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், வீட்டில் தீவிரமாக சோதனை நடத்தினர். அதில், சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.

தொடர்ந்து, பறிமுதல் செய்த பணம் குறித்து ஏழுமலையிடம் வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தினர்.
தேர்தலில் ஓட்டு போட வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக என அவரிடம் அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர், அது தன்னுடைய பணம் தான் என்று கூறினார்.
ரியல் எஸ்டேட் தொழிலில் வீடு விற்பது மற்றும் வாங்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் கிடைத்த பணத்தை வீட்டில் உள்ளவர்களிடம் கொடுத்து வைத்திருந்தேன். இந்நிலையில், வீட்டுக்குள் 10 பேர் (அதிகாரிகள்) திடீரென வந்ததை பார்த்து பயந்து போனதால், வீட்டில் இருந்தவர்கள் பணப்பையை வெளியில் தூக்கி வீசி விட்டதாக அவர் கூறினார்.
இதையடுத்து, ரூ.27 லட்சத்து 74 ஆயிரத்தை பறிமுதல் செய்த வருமான வரித்துறையினர், அதற்கான உரிய ஆவணங்களை ஏழுமலையிடம் கேட்டனர். அதற்கு அவர் மழுப்பலாக பதில் அளித்ததார்.
இதைத்தொடர்ந்து, அவருடைய வங்கிக் கணக்குகள் மற்றும் கைப்பற்றிய பணத்துக்கான ஆவணங்கள் குறித்து தீவிரமாக விசாரித்தனர். ஆனால், பணத்துக்கான ஆவணங்கள் எதுவும் ஏழுமலையிடம் இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து பறிமுதல் செய்த பணத்தை வேலூர் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்ற வருமானவரித்துறையினர், அதை தாசில்தார் ரமேஷிடம் ஒப்படைத்தனர்.அவர், அந்த பணத்தை கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்க உத்தரவிட்டார். உரிய ஆவணங்களை கொண்டுவந்து காண்பித்ததும் ஏழுமலையிடம் பணம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று மதியம் தொடங்கிய சோதனை, இரவு 7 மணிக்கு முடிந்தது. தொடர்ந்து அவரது வீட்டில் அதிகாரிகள் 7 மணிநேரம் சோதனை நடத்தியுள்ளனர்.
ஏற்கனவே பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தான் வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் மீண்டும் தி.மு.க. பிரமுகர் வீட்டில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி:
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் ஓட்டுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி, திருப்பத்தூர் சாலையில் செட்டியப்பனூர் கூட்ரோட்டில் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
அப்போது வாணியம்பாடி ஆம்பூர்பேட்டையை சேர்ந்த நகை கடை அதிபர் சீனிவாசன் என்பவர் காரில் வந்தார். காரை மடக்கி பறக்கும் படை சோதனையிட்டனர். அதில் 3 கிலோ 30 மில்லி கிராம் எடை கொண்ட தங்க நகைகள் இருந்தன. அவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லை.
நகைகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் லூர்துசாமியிடம் நகைகளை ஒப்படைத்தனர். அவர் நகைகள் குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் நகைகள் கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதற்காக அரசு ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை முடுக்கி விட்டது.

50 வேகன்களில் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ஏற்றப்பட்ட முதல் ரெயில் இன்று காலை ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் மகேஷ் கொடியசைத்து குடிநீர் ரெயிலை தொடங்கி வைத்தார்.
இந்த ரெயில் சென்னையில் உள்ள வில்லிவாக்கத்துக்கு மதியம் சுமார் 1 மணியளவில் சென்று சேரும். அப்போது ரெயிலை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் டி.என்.ஹரிஹரன் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்கின்றனர். எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட சில அமைச்சர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தண்ணீர் வில்லிவாக்கம் ரெயில் நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் கீழ்ப்பாக்கம் குடிநீர் ஏற்றும் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.
சென்னைக்கு குடிநீர் அனுப்புவதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 70 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 100 வேகன்கள் ஜோலார்பேட்டைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு 4 முறை மொத்தம் 1 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
வாணியம்பாடி:
வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் 10-வது வார்டில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் வழங்கபடவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று கூறபடுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஆலங்காயம் - ஜமுனாமரத்தூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த ஆலங்காயம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது எங்கள் பகுதிக்கு குடிநீர் முறையாக வழங்கபடுவதில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டு கின்றனர் இதனால் நாங்கள் தண்ணீர் இன்றி பெரிதும் பாதிக்கபட்டுள்ளோம் எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்று ஆவேசமாக பொதுமக்கள் கூறினர்.
சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதி மேம்பாலம் அருகே அடையாளம் தெரியாத (25)வயது மதிக்கதக்க வாலிபர் இறந்து கிடந்தார். அவரது கையில் முருகன், பழனி என பச்சை குத்தி உள்ளார்.
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் உடலை கைபற்றி இவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆற்காடு:
ஆற்காடு வாழபந்தல் அருகே உள்ள மேலப்பழந்தையை சேர்ந்தவர் ஸ்ரீபால் (வயது 52) இவர் வாழபந்தல் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். நேற்று வழக்கம் போல் பள்ளியில் ஸ்ரீபால் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனை கண்ட சக ஆசிரியர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஸ்ரீபால் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து வாழபந்தல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் தொகுதி பாராளுமன்ற தேர்தல் ஆகஸ்டு 5-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி பணப்பட்டு வாடாவை தடுக்க பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேரணாம்பட்டு அடுத்த பத்தலபள்ளி சோதனை சாவடி அருகே தேர்தல் நிலை கண்காணிப்பு அலுவலர் லோகபிரியன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 900 இருந்தது தெரியவந்தது. காரை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் நாகை மாவட்டத்தை சேர்ந்த எழிலரசன் என்பதும், கே.ஜி.எப்.பில் உள்ள உறவினருக்கு கொடுப்பதற்காக பணத்தை கொண்டு செல்வதாக கூறினார். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை.
இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் பேரணாம்பட்டு தாசில்தார் செண்பகவல்லியிடம் பணத்தை ஒப்படைத்தனர்.
சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் வேகன்கள் மூலம் காவிரி கூட்டு குடிநீர் கொண்டு செல்ல தமிழக அரசு ரூ.65 கோடி நிதி ஒதுக்கியது.
இதை தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சென்னை மெட்ரோ மற்றும் தெற்கு ரெயில்வே அதிகாரிகள் ஜோலார்பேட்டையில் 3 கட்டமாக ஆய்வு செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் காவிரி கூட்டு குடிநீர் குழாயிலிருந்து ஜோலார்பேட்டை மேட்டு சக்கரகுப்பத்தில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் 5.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்ப திட்டமிட்டனர். அங்கிருந்து ஆஞ்சநேயர் கோவில், புதூர், சுண்ணாம்புகாளை வழியாக பார்சம்பேட்டை ரெயில்வே உயர்நிலை பள்ளி பின்புறம் வரை 3.5 கிலோ மீட்டர் தூரம் புதிதாக பைப்லைன் அமைக்க தண்ணீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.
இதன் மூலம் தினமும் 10 மில்லியன் லிட்டர் (1 கோடி லிட்டர்) குடிநீர் வேகன்களில் சென்னைக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் முடிவெடுத்தனர். இதற்கான பணிகள் கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கி இரவு பகலாக நடந்தது. நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 55 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 100 ரெயில்வே வேகன்கள் நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை வந்தடைந்தது.

மேட்டு சக்கரகுப்பத்தில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து ஆஞ்சநேயர் கோவில், புதூர், சுண்ணாம்புகாளை, பார்சம்பேட்டை ரெயில்வே கேட் வரை சுமார் 3½ கிலோ மீட்டர் தூரத்துக்கு நேற்று மதியம் சோதனை ஓட்டம் நடந்தது.
அப்போது ஆஞ்சநேயர் கோவில் அருகில் தண்ணீர் கசிவு ஏற்பட்டதால் சோதனை ஓட்டம் உடனே நிறுத்தப்பட்டது. கசிவு ஏற்பட்ட இடத்தில் சுமார் 2 மணிநேரம் போராடி சீர் செய்தனர்.
இதையடுத்து தண்ணீர் ஏற்றி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. அப்போது கசிவு இல்லாமல் தண்ணீர் சென்றது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததால் அதிகாரிகள், பணியாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ரெயில்வே வேகன்களில் தண்ணீர் நிரப்புவதற்கான இரும்பு பைப் அமைக்கும் பணிகள் நேற்று இரவு 11 மணிக்கு முடிவடைந்தது.
இதற்காக யார்டின் அருகே 660 மீட்டருக்கு மெகா சைஸ் இரும்பு பைப் நிலத்தில் இருந்து 2 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
அதிலிருந்து சிறிய அளவில் இரும்பாலான கன்ட்ரோலர் வால்வு 50 பொருத்தியுள்ளனர். அதிலிருந்து 5 இன்ச் பிளக்சிபில் (வளையும் தன்மை) பைப்பை 25 அடி நீளத்துக்கு பொருத்தி ரெயில்வே வேகன்களில் குடிநீர் நிரப்பப்படுகிறது.
நேற்று இரவு 50 வேகன்களில் 2.5 மில்லியன் லிட்டர் குடிநீர் நிரப்பும் பணி விடிய விடிய நடந்தது. இப்பணியில் 100-க்கும் அதிகமான ஊழியர்கள் ஈடுபட்டனர். ஒவ்வொரு வேகன்களிலும் முதலில் 54 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஏற்றினர்.
அதனை ஆய்வு செய்த ரெயில்வே அதிகாரிகள் ஒவ்வொரு வேகனில் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தான் ஏற்றவேண்டும் என்று கூறினர். இதையடுத்து 4 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
50 வேகன்களிலும் மொத்தம் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ஏற்றி சென்னைக்கு புறப்பட தயாராக உள்ளது. பார்சம்பேட்டை 4-வது யார்டில் தண்ணீர் ஏற்றப்பட்ட ரெயில் நிற்கிறது.
ஒருமுறை 50 வேகன்கள் என அடுத்தடுத்து 2 ரெயில்களில் குடிநீர் நிரப்பி சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதிக திறன் கொண்ட நீர் உறிஞ்சும் நீர்மூழ்கி மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளதால் 50 வேகன்களில் 2.5 மில்லியன் லிட்டர் குடிநீரை 3¼ மணி நேரத்துக்குள் நிரப்பி விடும்.
ரெயில் வேகன்களில் குடிநீர் நிரப்பப்படும் நேரத்தில் ரெயில் என்ஜினை இயக்கும் 25 ஆயிரம் மெகாவாட் மின்கம்பியின் இணைப்பு துண்டிக்கப்படும். வேகன்களில் குடிநீர் நிரப்பிய பின்னர் மின் இணைப்பு கொடுக்கப்படும்.
தினமும் 4 முறை ரெயில் வேகன்களில் குடிநீர் நிரப்புவதால் அந்த நேரத்தில் மட்டும் மின் இணைப்பு நிறுத்தப்படும் என்றும், இதனால் மற்ற ரெயில் பாதைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
50 வேகன்களில் 1 முறை 25 லட்சம் லிட்டர் தண்ணீர் என்று மொத்தம் 4 முறை தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
இதற்கு ஒரு தடவைக்கு ரூ.8.6 லட்சம் ரூபாய் ரெயில்வே துறைக்கு தமிழக அரசு கட்டணமாக செலுத்துகிறது. சராசரியாக ஒரு லிட்டருக்கு 34 பைசா செலுத்தப்படுகிறது.
ஜோலார்பேட்டையில் நீர் ஏற்றும் இடமான பார்சம்பேட்டையில் இருந்து வில்லிவாக்கத்தில் உள்ள வடக்கு ஜகநாத் வரை சுமார் 204 கி.மீட்டர் தூரம் செல்ல வேண்டும். இந்த தூரத்தை கடக்க 4 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை ஆகும்.
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
50 ரெயில்வே வேகன்களில் குடிநீர் நிரப்பப்பட்ட ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு புறப்படும். இதற்காக குடிநீர் நிரப்பப்பட்ட ரெயில் 4-வது யார்டில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் இந்த திட்டம் 6 மாதம் வரை நடைமுறைப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் பாராளுமன்ற தேர்தல் ஆகஸ்டு 5-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியது. மனுத்தாக்கல் செய்ய 18-ந்தேதி கடைசி நாளாகும்.
19-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 22-ந்தேதி வரை மனுக்கள் வாபஸ் பெறலாம். இதையடுத்து அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
அ.தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சி வேட்பாளராக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த முறை போட்டியிட்ட அ.ம.மு.க., இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
வேட்பு மனுக்களை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரத்திடம் தாக்கல் செய்யலாம். காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மனுத்தாக்கல் செய்ய நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேட்பு மனுத்தாக்கல் செய்யவரும் வேட்பாளர்களுடன் 3 கார்கள் மட்டுமே கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படும்.
மனுத்தாக்கல் செய்யும் போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
வேட்புமனு தாக்கல் தொடங்கியதையொட்டி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் 3 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள 3 இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த அரசியல் கட்சி பிரமுகர்களிடம் எதற்காக செல்கிறார்கள் என்பது குறித்து விசாரித்து அனுப்பினர்.
அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் இன்று காலை 11.40 மணியளவில் வேட்பு மனுதாக்கல் செய்தார். அமைச்சர் கே.சி.வீரமணி, பா.ம.க., தே.மு.தி.க., த.மாகா. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் வந்திருந்தனர்.
வேட்பு மனுதாக்கல் செய்ய கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்களை கேமராக்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரக்கோணம் அடுத்த கைனூர் ராமசாமி நகரை சேர்ந்தவர் நிர்மலா (வயது 42). அரக்கோணம் நகர பா.ம.க. மகளிர் அணி தலைவியான இவர் அரக்கோணம் தாசில்தார் தெருவில் டெய்லர் கடை நடத்தி வந்தார். இவரது கணவர் இறந்து விட்டார். தாய் படவேட்டம்மாளுடன் வசித்து வந்தார்.
நிர்மலா தனது தாய் படவேட்டம்மாளுடன் வீட்டில் படுத்து தூங்கினார். விடிந்து நீண்ட நேரமாகியும் வீட்டிலிருந்து இருவரும் வெளியே வரவில்லை. அக்கம் பக்கம் வசிப்பவர்கள் சந்தேகமடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.
அப்போது நிர்மலா தலையில் படுகாயத்தோடு படுக்கையில் பிணமாக கிடந்தார். அவரது தலையில் அம்மிக் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். அவரது அருகில் படவேட்டம்மாள் காயத்துடன் மயங்கி கிடந்தார்.
இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
நிர்மலா வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது நிர்மலாவின் செல்போன் மற்றும் மொபட் காணாமல் போனது தெரியவந்தது. தடயவியல் துறையினர் கைரேகைகளை பதிவு செய்தனர்.
கொலை சம்பவம் இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணிக்குள் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலை நடந்த இடத்தில் அம்மிக்கல் ரத்த கறையோடு கிடந்தது. இது தொடர்பாக 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






