என் மலர்
செய்திகள்

அரக்கோணம் அருகே அம்மிக்கல்லால் தாக்கி பெண் கொலை- தாய் உயிருக்கு போராட்டம்
அரக்கோணம்:
அரக்கோணம் சோளிங்கர் சாலையில் உள்ள சின்னகைனூர் கிராமத்தை சேர்ந்த ஜெகதல பிரதாபன் மனைவி நிர்மலா (வயது 45). டெய்லர் கடை வைத்துள்ளார். கணவர் இறந்துவிட்டதால் தாய் படவேட்டம்மாளுடன் வசித்து வந்தார். நேற்றுஇரவு நிர்மலா அவரது தாயாரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் நள்ளிரவு வீடு புகுந்த மர்ம நபர்கள் நிர்மலாவை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனை தடுக்க முயன்ற படவேட்டம்மாளை கைகளால் தாக்கி கீழே தள்ளியதில் அவர் மயக்கம் அடைந்துள்ளார். பின்னர் அம்மிக்கல்லை நிர்மலாவின் தலையில் தூக்கி போட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே நிர்மலா இறந்தார். இதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இன்று காலை வீடு திறந்து கிடந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் நிர்மலா இறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர்.
இது குறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி. விஜயகுமார், இன்ஸ்பெக்டர்கள் முத்து ராமலிங்கம், அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நிர்மலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மயங்கி கிடந்த அவரது தாயாரை அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சிகிச்சை அளித்தனர். சம்பவம் நடந்த வீட்டில் கைரேகைகள் சேகரிக்கபட்டன. மேலும் மோப்பநாய் ஷிம்பா கொண்டு சோதனை செய்யபட்டது.
நிர்மலா வீட்டின் கதவு திறந்து மர்ம நபர் உள்ளே வந்துள்ளார். இதனால் அவருக்கு தெரிந்தவர் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற படவேட்டம்மாள் கண்விழித்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






