search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் குழாயில் இருந்து வேகனுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும் பைப்கள் பொருத்தப்பட்ட காட்சி.
    X
    குடிநீர் குழாயில் இருந்து வேகனுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும் பைப்கள் பொருத்தப்பட்ட காட்சி.

    ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் தண்ணீர் கொண்டு செல்வதில் தாமதம்

    ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் தண்ணீர் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    ஜோலார்பேட்டை:

    சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில்வே வேகன் மூலம் சென்னைக்கு காவிரி கூட்டு குடிநீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

    அந்த பணிகளுக்காக தமிழக அரசு ரூ.65 கோடி நிதி ஒதுக்கியது. அதைத் தொடர்ந்து பணிகள் வேகமாக தொடங்கின.

    ஜோலார்பேட்டை அருகே மேட்டு சக்கரகுப்பம் வழியாக வேலூர் நோக்கி செல்லும் காவிரி கூட்டுக் குடிநீரின் ராட்சத குடிநீர் பைப்லைனில் இருந்து தண்ணீர் பிரித்து மேட்டு சக்கரகுப்பத்தில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் சேமிக்கப்படும்.

    அங்கிருந்து பார்சம்பேட்டை ரெயில்வே உயர் நிலைப்பள்ளி பின்புறம் வரை 3.5 கி.மீட்டருக்கு அமைக்கப்பட்ட புதிய பைப்லைன் மூலம் குடிநீர் அனுப்பப்பட்டு அங்கிருந்து 60-க்கும் மேற்பட்ட சிறிய பைப் பொருத்தப்பட்டு அதிலிருந்து நேரடியாக ரெயில்வே வேகனுக்கு தண்ணீர் நிரப்பப்படுகிறது.

    ரெயில் மூலம் சென்னைக்கு காவிரி கூட்டு குடிநீர் கொண்டு செல்வதற்காக 55 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ரெயில்வே வேகன்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சுத்தம் செய்யப்பட்டு 100 வேகன்கள் நேற்று ஜோலார்பேட்டைக்கு வந்தன.

    அதில் ஒருமுறை 50 வேகன்கள் என அடுத்தடுத்து 2 ரெயில்களில் குடிநீர் நிரப்பி சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும்.

    அதிக திறன் கொண்ட நீர் உறிஞ்சும் நீர்மூழ்கி மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளதால் 50 வேகன்களில் 2.5 மில்லியன் லிட்டர் குடிநீர் 1½ மணி நேரத்துக்குள் நிரப்பி விடும்.

    அதன் அடிப்படையில் காலையில் 2 முறை, மாலையில் 2 முறை என 100 வேகன்களில் 10 மில்லியன் லிட்டர் காவிரி கூட்டு குடிநீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும்.

    2 ரெயில்களில் 100 வேகன்களில் 10 மில்லியன் லிட்டர் குடிநீரை நிரப்புவதற்கு முன்பு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் பேரா மீட்டர் மூலம் தண்ணீரின் தரத்தை தீவிர சோதனை செய்த பின்னரே வேகனில் நிரப்புகின்றனர்.

    அதற்காக ரெயில்வே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் குடிநீரை சோதனை செய்வதற்காக தனி அறை அமைக்கப்பட்டுள்ளது.

    ஜோலார்பேட்டையில் கடந்த 12-ந்தேதி பணிகள் தொடங்கியது. இந்த பணிக்காக 18 என்ஜினீயர்கள் 3 குழுவாக பிரிக்கப்பட்டு 250 ஊழியர்கள் என இரவு பகலாக ஈடுபட்டனர். இதனால் இந்த பணி 15 நாட்களில் நிறைவடைந்தது.

    மேட்டு சக்கரகுப்பம் வழியாக வேலூர் செல்லும் ராட்சத குடிநீர் பைப்லைனில் இருந்து பிரிக்கப்பட்டு அருகே உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் 5.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

    மேட்டு சக்கரகுப்பத்தில் இருந்து பார்சம்பேட்டை ரெயில்வே யார்டு வரை சோதனை ஓட்டம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    அப்போது பார்சம் பேட்டை ரெயில்வே கேட் அருகே உள்ள சுண்ணாம்பு காளை பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தில் பைப் லைன் அமைக்கப்பட்டுள்ளது என இளையராஜா என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் 10 மீட்டர் தூரத்திற்கு பதிக்கப்பட்ட குழாய்கள் தோண்டப்பட்டு மாற்று வழியாக பதிக்கும் பணி நடந்தது.

    இதனால் நேற்று நடைபெற இருந்த சோதனை ஓட்டம் அறிவித்தப்படி நடைபெறவில்லை. இன்று மீண்டும் நடைபெறும் என அறிவித்தனர்.

    இன்று சோதனை ஓட்டம் நடத்துவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தால் இன்று மாலையே தண்ணீர் கொண்டு செல்வதற்கான பணிகள் தொடங்கப்படும்.

    சோதனை ஓட்டத்தில் தொய்வு ஏற்பட்டால் நாளை அல்லது 12-ந்தேதிக்குள் தண்ணீர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    மேட்டு சக்கரகுப்பம், சுண்ணாம்புக்காளை ரெயில்வே யார்டு ஆகிய 3 பகுதியில் இன்னும் பணிகள் முழுமையடையாமல் உள்ளது.

    இந்த பணிகள் இன்று முடிவடையும். அதன் பிறகு மேட்டு சக்கரகுப்பத்தில் இருந்து ரெயில்வே யார்டு வரை முதற்கட்ட சோதனை ஓட்டம் நடைபெறும்.

    அதை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வுக்கு பின்பு யார்டில் இருந்து ரெயில் வேகனுக்கு தண்ணீர் ஏற்றும் பணி நடைபெறும்.

    அதிகாரிகள் அனுமதி கிடைத்ததும் வருகிற 12-ந்தேதி முதல் முறைப்படி சென்னைக்கு ரெயில்வே குடிநீர் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.

    Next Story
    ×