search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    மாம்பழம்
    X
    மாம்பழம்

    வேலூரில் வரத்து குறைவால் மாம்பழம் விலை உயர்வு

    வேலூர் பழ மண்டிக்கு மாம்பழங்களின் வரத்து கடந்தாண்டைவிட வெகுவாக சரிந்துள்ளதால், இந்த ஆண்டில் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.
    வேலூர்:

    வேலூர் பழ மண்டிக்கு குடியாத்தம், பேர்ணாம்பட்டு, லத்தேரி, பனமடங்கி, மாதனூர், ஒடுகத்தூர், திருப்பத்தூர் பகுதியில் இருந்தும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்தும் மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், பிற நகரங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

    கடந்தாண்டு பருவ மழை பொய்த்ததால் வேலூர் மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.

    இதனால், மாமரங்களுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காததால் இந்த ஆண்டு மாம்பூக்கள் பெருமளவில் கருகி உதிர்ந்ததுடன், காய்களும் தரமற்றதாக உருவாகியுள்ளன. பல இடங்களில் வறட்சியைத் தாங்காமல் 30 சதவீத மாமரங்கள் கருகிவிட்டதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    இப்பாதிப்பு காரணமாக வேலூர் பழ மண்டிக்கு ஜூன், ஜூலை சீசனில் மாங்கனி வரத்து கடந்தாண்டைவிட வெகுவாக சரிந்துள்ளது.

    வேலூர் பழ மண்டிக்கு ஜூன், ஜூலை மாத சீசனில் நீலம், பெங்களூரா ரக மாம்பழங்கள் 40 டன் முதல் 50 டன் அளவுக்கு விற்பனைக்கு வரக்கூடும். நடப்பாண்டு 5 டன் முதல் 15 டன் அளவுக்கு வரத்து சரிந்துள்ளது.

    இதனால், மாம்பழங்களின் விலையும் மிகக்கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு கிலோ ரூ. 6 முதல் ரூ. 10 விற்பனை செய்யப்பட்ட நீலம், பெங்களூரா மாம்பழங்கள் இந்தாண்டு கிலோ ரூ. 15 முதல் ரூ. 25 வரை விற்பனையாகிறது என்றனர்.

    கடந்தாண்டு விளைச்சல் அதிகமாக இருந்ததால் கிருஷ்ணகிரி, ஆந்திர மாநில மாம்பழக்கூழ் தொழிற்சாலைகளில் வேலூர் மாவட்ட மாம்பழங்கள் கொள்முதல் செய்யப்படவில்லை.

    இதனால், மாம்பழங்களைப் பறிக்காமல் விவசாயிகள் அப்படியே மரத்தில் விட்டுவிட்டனர். இந்தாண்டு வறட்சியால் மா விளைச்சல் சரிந்துள்ளது. அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளாகவே வேலூர் மாவட்ட மா விவசாயிகள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×