search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vellore fire accident"

    வேலூர் தனியார் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி, டபுள்ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் தோட்டப்பாளையம் கெஜராஜ் நகர் பகுதியில் ஸ்ரீ கிருஷ்ணா ஏஜென்சி மற்றும் குடோன் வைத்துள்ளார்.

    இந்த குடோனில் சமையல் எண்ணை, நெய், பிஸ்கட், பேரீச்சை பழம், சர்க்கரை, சாக்லெட் போன்ற 25 நிறுவனங்களின் மொத்த வியாபார பலசரக்கு வைத்திருந்தார். குடோனில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

    அங்கிருந்த பொருட்களில் பற்றி எரிந்த தீயால் கடும் புகைமூட்டம் எழுந்தது. இதை கண்டு அப்பகுதி பொதுமக்கள் திடுக்கிட்டனர்.

    தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வேலூர், காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு பகுதியில் உள்ள தீயணைப்பு வீரர்கள் 7 தீயணைப்பு வாகனங்களில் வந்தனர். அவர்கள் தண்ணீரை அடித்து சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    மேலும் தீ அதிகமாக இருந்ததால் பொக்லைன் எந்திரம் மூலம் கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர் இடிக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் 30 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

    இந்த தீ வீபத்தில் குடோனில் இருந்த 10 இருசக்கர வாகனம் உட்பட சுமார் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.

    வேலூர் வடக்கு போலீசார் மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் லட்சுமி நாராயணன் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கட்டிடத்தின் உள்ளே ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    தீ விபத்து ஏற்பட்ட குடோனில் போதுமான அளவு தீ தடுப்பான்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லை என்றும் இவற்றை கடை பிடிக்காததே இவ்வளவு பெரிய தீ விபத்திற்கு காரணம் என தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ×