என் மலர்
வேலூர்
அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து பெங்களூரு செல்லும் 'நியூ டின்சுகியா' எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்தது.
முதலாவது நடை மேடையில் வந்து நின்ற ரெயிலில் இருந்து பயணிகள் இறங்கி கொண்டிருந்தனர். அப்போது 3 பேர் ஒரு பெட்டியில் இருந்து டிராவல் பேக்குகளை வேகவேகமாக இறக்கினர்.
இதனை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பார்த்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் சென்று டிராவல் பேக்குகளில் இருப்பது குறித்து கேட்டனர். அதற்கு அவர்கள் சரியாக பதில் அளிக்கவில்லை.
அதையடுத்து போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து 3 பேரிடமும் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் முத்துபாண்டி தீவிர விசாரணை நடத்தினார். அதில் அவர்கள் 3 பேரும் சென்னை ராயபுரம் முல்லை நகரை சேர்ந்த கார்த்திக் (30), பாலமுருகன் (28), சுப்பிரமணி (36) என்பதும், பட்டதாரி இளைஞர்களான 3 பேரும் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் விலை உயர்ந்த சிகரெட்டுகளை தமிழகத்தில் விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.
அசாம் மாநிலத்தில் இருந்து வெளிநாட்டு சிகரெட்டுகளை ரெயில் மூலம் சென்னைக்கு கொண்டுவர திட்டமிட்டிருந்திருந்தனர். ஆனால் சென்னை ரெயில் நிலையத்தில் போலீஸ் சோதனை அதிகமாக காணப்படுவதால், காட்பாடி ரெயில் நிலையத்துக்கு கொண்டு வந்து காரில் சென்னைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். அவ்வாறாக சிகரெட்டுகளை ரெயிலில் காட்பாடிக்கு கொண்டுவந்தபோது போலீசாரிடம் பிடிபட்டதும் தெரியவந்தது.
அதையடுத்து போலீசார் 13 டிராவல் பேக்குகளில் இருந்த ரூ.35 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர். ஒரு சிகரெட் பெட்டியின் (பாக்ஸ்) விலை ரூ.3 ஆயிரம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
வேலூர் வணிகவரி செயலாக்கம் அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் பெட்டிகள் மற்றும் 3 வாலிபர்கள் ஒப்படைக்கபட்டனர்.
அவர்களிடம் வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தபட்டது குறித்து வணிகவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் ஊரிசு கல்லூரியில் தமிழ்மன்ற தொடக்க விழா நடந்தது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் அவர்கள் இந்தி திணிப்பை தான் புகுத்துகிறார்கள். தற்போது இந்தியை திணிப்பது ஒன்றும் புதிதல்ல. இந்தியை எல்லா மாநிலத்தின் மீதும் சட்டம் இயற்றி திணிப்பது என்பது சாத்தியமில்லை. அது பல விளைவுகளை ஏற்படுத்தும். தற்போது மத்தியில் உள்ள அரசு ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே ஆட்சி, ஒரே குடும்ப அட்டை, ஒரே கல்வி என எல்லாவற்றையும் இப்படி புகுத்த நினைக்கிறார்கள். அது முடியாது.
தமிழகத்தில் கல்வித்துறையில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. 5 மற்றும் 8-ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு என்று கூறுவது சாத்தியமில்லை. 5-ம் வகுப்பிலும், 8-ம் வகுப்பிலும் அமைச்சர்கள் பொதுத்தேர்வை எழுதிவிட்டா வந்தார்கள்? இது தேவையில்லாதது.
தமிழக கல்வித்துறை குழப்பத்தில் உள்ளது. அரசு பணத்தில் முதல் அமைச்சர் வெளிநாடு சென்றார். அதனால் நாங்கள் கேள்வி கேட்டோம். அதற்காக சொந்த பணத்தில் வெளிநாடு செல்லும் மு.க.ஸ்டாலினை பார்த்து எப்படி சென்றார்? என கேட்பது எந்த வகையில் நியாயம். நாங்கள் என்ன அரசு பணத்திலா வெளிநாடு சென்றோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆரணி அடுத்த களம்பூரை சேர்ந்தவர் கோதண்டராமன் (வயது 49). அரிசி வியாபாரி. இவர் திருவண்ணாமலை, வேலூரில் உள்ள கடைகளுக்கு அரிசி வினியோகம் செய்து, அதற்கான பணத்தை வசூலித்து செல்வது வழக்கம்.
அதன்படி கடந்த 4-ந் தேதி வேலூர் வந்த கோண்டராமன் வேலப்பாடி பகுதியில் அரிசி வினியோகித்த வியாபாரிகளிடம் வசூலித்த ரூ.2 லட்சத்தை ஒரு கைப்பையில் வைத்துக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின் தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் திடீரென கோதண்டராமனிடம் இருந்து பணப்பையை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
இது குறித்து அவர் வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த சேகர் (30), ஸ்ரீதரன் உள்பட 4 பேர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சேகரை போலீசார் கடந்த 10-ந் தேதி கைது செய்தனர். இந்த நிலையில் வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த ஸ்ரீதரன் (28) கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூரில் இருந்து அமிர்தி, நாகநதி, நஞ்சுகொண்டாபுரம், பென்னாத்தூர் வழித்தடத்தில் 3 அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அதே போன்று கணியம்பாடி, சாத்துமதுரை, அடுக்கம்பாறை, கீழ்அரசம்பட்டு வழித்தடத்திலும் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது.
இந்த வழித்தடங்களில் தனியார் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.
வேலூரில் இருந்து சோழவரத்துக்கு தனியார் பஸ்களில் ரூ.15 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அரசு பஸ்களில் ரூ.16 வசூலிக்கப்படுகிறது. இதேபோல் மற்ற ஊர்களுக்கும் அரசு டவுன் பஸ்களில் கட்டணம் அதிகம் உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு அவர்கள் விழுப்புரத்தில் தான் அலுவலகம் உள்ளது. அங்கு சென்று கேளுங்கள் என்று கூறி உள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று சோழவரம் பஸ்நிறுத்தத்தில் குவிந்தனர். அவர்கள் 11 மணியளவில் வேலூரில் இருந்து சோழவரத்துக்கு வந்த அரசு பஸ்சை சிறைபிடித்தனர்.
பின்னர் பஸ் செல்ல முடியாதபடி பஸ்சின் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வேலூர் தாலுகா போலீசார் பென்னாத்தூர் வருவாய் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதைத் தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் கிரீஸின் நகரை சேர்ந்தவர் வெங்கடகிரி. இவரது மகன் ஹரிஷ் (வயது 13). அரக்கோணம் திருத்தணி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி மாலை ஹரிஷ் திடீரென வீட்டில் இருந்து காணாமல் போனார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உறவினர்கள் மற்றும் ஹரிஷ் நண்பர்களின் வீடுகளில் தேடினார். ஹரிஷ் எங்கும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசில் வெங்கடகிரி புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடி வந்தனர்.
மேலும் அரக்கோணம் முக்கிய வீதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது ஹரிஷ் ரெயில் நிலையம் நோக்கி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து சென்னை சென்ற போலீசார் சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகே ஹரிஷ் நின்று கொண்டிருந்த கண்டனர். இதையடுத்து மாணவனை மீட்ட போலீசார் அரக்கோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
வேலூர்:
வேலூரில் உள்ள தங்கும் விடுதிகளில் விபசாரம் நடந்து வருவதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் அனைத்து தங்கும் விடுதிகளையும் சோதனை செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் போலீசார் நேற்று தங்கும் விடுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் 3 அறைகளில் 3 பெண்கள், 3 ஆண்கள் விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் ஆரணியை சேர்ந்த மோகன் (வயது40), போளூரை சேர்ந்த ஏழுமலை (35), விருதம்பட்டை சேர்ந்த விஜய் (25) என்பதும், விபசாரத்திற்கு தங்கும் விடுதி மேலாளர் ஊசூரை சேர்ந்த பிச்சாண்டி (36) உறுதுணையாக இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் விடுதி மேலாளர் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். விபசாரத்தில் ஈடுபட்ட 3 பெண்களும் வேலூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
திருப்பத்தூர்:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மிட்டூர் அருகே உள்ள மல்லாண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் சென்றாயன் (வயது 25). இவர் வெல்டிங் தொழிலாளி.
இவருக்கும் ஜோலார்பேட்டை அருகே உள்ள மண்டலவாடி கிராமத்தை சேர்ந்த வரலட்சுமி என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
புதுமண தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த வரலட்சுமி அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார்.
இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து கிணற்றில் குதித்து மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி வரலட்சுமியை பிணமாக மீட்டனர்.
குரிசிலாப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கட்டாய ஹெல்மெட் அமல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரு சக்கர வாகனங்கள் ஓட்டும் பெரும்பாலான பெண்கள் லைசென்சு இல்லாமலும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி சாலை விபத்துகளை ஏற்படுத்துவதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் வந்தது.
இதனையடுத்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
மேலும் வாகன தணிக்கை செய்து வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. இதில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் சென்ற பெண்கள் 310 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இதுவரை ஹெல்மெட் அணியாதவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் காட்டன், லாட்டரி விற்பனை மணல் திருட்டை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 95 மணல் திருட்டு வழக்கு,660 சாராய வழக்கு, 2 கஞ்சா வழக்கு, 19 புகையிலை வழக்கு, 12 லாட்டரி விற்பனை, 17 காட்டன் சூதாட்ட வழக்கு உள்பட மொத்தம் 807 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, மகளின் திருமணத்துக்காக, ஒரு மாதம் பரோலில் வெளியே வந்து, வேலூர் சத்துவாச்சாரியில் தங்கி உள்ளார்.
தினமும் அவர், சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.
சிறையில் இருக்கும்போது, 15 நாட்களுக்கு ஒரு முறை, அவரது கணவர் முருகனை சந்தித்து பேசுவது வழக்கம். ஆனால் இப்போது ஜெயிலில் விட்டு வெளியே இருப்பதால், பாதுகாப்பு காரணங்கள் காட்டி நளினி, முருகன் சந்திப்பு நடத்த போலீசார் அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில் மகள் ஹரித்திரா திருமண ஏற்பாடுகள் குறித்து, முருகனுடன் பேச வேண்டியதுள்ளது. அதனால் முருகனை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என நளினி மனு அளித்தார். அந்த மனுவை, சிறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து நளினி, முருகன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று பரோலில் வந்து 3-வது முறையாக முருகன்-நளினி சந்திப்பு நடந்தது.
சத்துவாச்சாரி புலவர் நகரில் தங்கியிருந்த நளினியை சத்துவாச்சாரி போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு கையெழுத்து போட்டதும், நளினியை பாதுகாப்புடன் வேலூர் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்.
நளினி, முருகன் சந்திப்பு காலை 11.20 மணி முதல் 12.20 மணிவரை 1 மணி நேரம் நடந்தது. சந்திப்பு முடிந்ததும், நளினியை சத்துவாச்சாரியில் அவர் தங்கியிருக்கும் வீட்டிற்கு போலீசார் அழைத்து சென்றனர்.
வருகிற 25-ந் தேதியுடன் நளினி பரோல் முடிவடைகிறது. பரோலை நீட்டிக்க ஐகோர்ட்டு மறுத்துவிட்டதால் அன்று மாலை நளினி பெண்கள் ஜெயிலில் அடைக்கபடுவார்.






