என் மலர்
வேலூர்
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த சேர்பாடியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தையொட்டி அகரம் ஆறு ஓடுகிறது. இந்த ஊரில் யாராவது இறந்து விட்டால் ஆற்றை கடந்துதான் மறுகரையில் உள்ள இடுகாட்டிற்கு உடலை எடுத்துச்செல்ல வேண்டும்.
இதனால் அந்த பகுதியில் பாலம் கட்டிதர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை அந்த பகுதியில் பெய்த மழையால் அகரம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில் சேர்பாடியை சேர்ந்த அய்யா பிள்ளை என்பவரது மனைவி கருப்பாயி என்ற பச்சையம்மாள் (வயது 90) இறந்து விட்டார். அவரது உடலை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அகரம் ஆற்றில் இடுப்பளவுக்கு ஓடும் வெள்ள நீரில் இறங்கி சுமந்து மறுகரைக்கு சென்றனர். அதன்பின் இறுதிச்சடங்கு நடந்தது.
இதுபோன்ற நிலையில் திடீரென வெள்ளம் அதிகரித்தால் பிணத்தை தூக்கிச்செல்பவர்கள் அதில் அடித்துச் செல்லப்படும் நிலை உள்ளது. இதனால் பாலத்தை விரைந்து கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம், நந்தகுமார் எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்பாடி மற்றும் குடியாத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஓடும் ரெயிலில் பயணிகளிடம் நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடிப்பதாக ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரனுக்கு புகார் சென்றது.
இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க அவரது உத்தரவின் பேரில் சேலம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு மேற்பார்வையில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் எழில்வேந்தன், ஏட்டு சுப்பிரமணி மற்றும் போலீஸ்காரர்கள் மதன், சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய 3 தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் 4-வது பிளாட்பாரத்தில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் குடியாத்தம் அருகே உள்ள வேப்பூர் ஊராட்சி முல்லைநகர் காலனியை சேர்ந்த வசந்தகுமார் (வயது38) என்பதும், ரெயில் பயணிகளிடம் நகை, பணம் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
வசந்தகுமார் சிக்னலுக்காக நின்று கொண்டிருக்கும் ரெயிலில் ஏறி முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிக்கு சென்று தூங்கி கொண்டிருந்த பயணிகளின் நகைகளை திருடி உள்ளார்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாதவி (40), பிந்து(35), தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த லட்சுமி(32), கோவையை சேர்ந்த விஜயா(53), பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண் ஆகியோரிடம் வெவ்வேறு நாட்களில் நகைகளை திருடி உள்ளார். அவரிடம் இருந்து 11½ பவுன் நகைகளை பறிமுதல் செய்துள்ளோம். அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் ஜெயிலில் அடைத்துள்ளோம் என்றனர்.
வேலூர் மாவட்டம் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதே போல் காட்பாடி பொன்னை சுற்று வட்டாரங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் கலவகுண்டா அணைப்பகுதியில் இருந்து வெளியேறிய வெள்ளநீர் தமிழக எல்லைக்குள் கடந்த 4 ஆண்டுகளாக வறண்டு கிடந்த நீவா நதி என்னும் பொன்னை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியது. பாய்ந்தோடிய வெள்ளம் தமிழகத்திற்குள் புகுந்தது. தொடர்ந்து தமிழக எல்லையான பொன்னை அருகே கீரைசாத்து பகுதியில் பொன்னை ஆற்றில் கட்டுப்பட்டுள்ள தரைமட்ட தடுப்பணையை கடந்து பாய்ந்து செல்கிறது.
பொன்னை ஆற்றின் குறுக்கே மேல்பாடி அருகே 1855 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட தடுப்பணைக்கு வெள்ளநீர் வந்து சேர்ந்தது.
ஏறத்தாழ 4 ஆண்டுக்கு பிறகு தமிழக எல்லையை வந்தடைந்த பொன்னையாற்று வெள்ளத்தால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகளும், பொதுமக்களும் வெள்ளநீரை மலர்த்தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர்.
இளைஞர்கள் தரைமட்ட தடுப்பணை நிரம்பி வழிந்து சென்றதால் அந்த நீரில் நின்று செல்பி எடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
அரக்கோணம் வழியே செல்லும் கல்லாற்றில் 4 ஆண்டுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் பாலாறு மற்றும் பொன்னையாறு ஆகியவற்றில் இருந்து கிளை ஆறாக உருவாகி, காவேரிபாக்கம் ஏரி கடைமடை பகுதிகளின் வழியே வந்து அரக்கோணம் தக்கோலம் பகுதிகள் வழியே கொசஸ்தலை ஆற்றில் கல்லாறு கலக்கிறது. இந்த ஆற்றில் கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் அரக்கோணம் பகுதியில் பெய்த பலத்த மழையால் 4 ஆண்டுகளுக்குப் பின் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் பாய்ந்தோடி செல்கிறது.
இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆம்பூர் அடுத்த பச்சை குப்பம் ரெயில்வே தண்டவாளத்தின் அருகே கடந்த மாதம் 18-ந் தேதி உடலில் காயங்களுடன் இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்தார்.
அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவரை கொலை செய்து தண்டவாளத்தில் அருகே வீசியது தெரியவந்தது. இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் இளம்பெண் புகைப்படம் சமூக வலைதளங்களிலும் பரவியது.
இந்தநிலையில் கொலை செய்து வீசப்பட்ட இளம்பெண் தஞ்சாவூர் மாவட்டம் மேல் மோட்டூர் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மனைவி சிவரத்தினம் (வயது 32) என்பது தெரியவந்தது.
அவரை திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை சேர்ந்த ஏழுமலை (வயது 27) என்பவர் கொலை செய்து வீசியது தெரியவந்தது. போலீசார் ஏழுமலையை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
சிவரத்தினம் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
திருச்சி சமயபுரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். அங்கு ஏழுமலையும் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
கடந்த மாதம் 18-ந் தேதி ஏழுமலை சிவரத்தினத்தை ஆம்பூர் அழைத்து வந்தார். இருவரும் குப்பம் ரெயில்வே தண்டவாளம் அருகே சென்றுள்ளனர்.
அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஏழுமலை சிவரத்தினத்தை அடித்தும் கழுத்தை இறுக்கி கொலை செய்து தண்டவாளத்தின் அருகே பிணத்தை வீசி சென்றுள்ளார்.
இந்த தகவலை அறிந்த போலீசார் ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண் கொலையில் மர்மம் நீடித்து வந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு துப்பு துலங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த முடினாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நித்தியானந்தம். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் நித்தியானந்தம் தாக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து நித்தியானந்தம் கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த நித்தியானந்தம் நேற்று இரவு அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலை நித்தியானந்தம் பிணமாக தொங்கியதை கண்டு அவரது உறவினர்கள் கதறி அழுதனர். அவரது பிணத்தை விரிஞ்சிபுரம், கே.வி.குப்பம் மெயின் ரோட்டில் வைத்து 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் செய்தனர்.
போலீசாரை கண்டித்தும், நித்தியானந்தத்தை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த கே.வி.குப்பம் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி சாலை கெங்கை அம்மன் கோவில் அருகே நேற்று இரவு செல்போனை கையில் வைத்தபடி வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் வந்தனர். அதில் பின்னால் இருந்தவர் சாலையோரம் நின்ற வாலிபரின் செல்போனை பறித்தார்.
அவர் சுதாரிப்பதற்குள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர். இதனைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் திடுக்கிட்டு கூச்சலிட்டனர் . வாலிபர் அவரது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு பின்னால் விரட்டிச் சென்றார். சர்வீஸ் சாலையில் வேகமாக சென்ற வழிப்பறி திருடர்கள் காந்தி நகர் சப்வே வழியாக கோட்டின் அருகே சென்று மாயமாக மறைந்தனர்.
வேலூரில் சாலையோரம் நடந்து செல்பவர்களை குறிவைத்து செல்போன் மற்றும் செயின் பறிப்பில் கும்பல் ஈடுபட்டு வருகின்றனர்.
செல்போன் பறி கொடுப்பவர்கள் பலர் இதுபற்றி போலீசிலும் புகார் செய்வதில்லை. இதனால் கும்பல் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகின்றனர். சாலையோரம் நடந்து செல்லும்போது பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நள்ளிரவு 2 மணியளவில் மாவட்டம் முழுவதும் திடீரென மழை பெய்ய தொடங்கியது. பல இடங்களில் சாரல் மழையாக பெய்தது.
அரக்கோணத்தில் பலத்த மழை கொட்டியது. முதலில் சாரலாக தொடங்கிய மழை நேரம் செல்ல பலத்த மழையாக கொட்டியது. தொடர்ந்து பெய்த மழை விடிய விடிய கொட்டியது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
அரக்கோணம் நகர பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது.
இதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. அந்த பகுதிகள் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.
பொதுமக்கள் வாகனங்கள் ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்று காலையிலும் மழை நீடித்ததால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
இன்று காலை பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள் குடை பிடித்த படியும் சிலர் நனைந்தபடியும் சென்றனர்.
இதேபோல் காவேரிப்பாக்கம், சோளிங்கர், காட்பாடி, ஆற்காடு, வேலூர், பொன்னை ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அரக்கோணத்தில் 166 மில்லி மீட்டர் மழை பதிவானது.
வேலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பொன்னை சுற்று வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் பொண்ணையாற்றில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த வெள்ள நீரை தேக்கி வைக்க தடுப்பணைகளை கட்ட வேண்டும். ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
வேலூர் 25.2, அரக்கோணம் 166, ஆம்பூர் 3.2, வாணியம்பாடி 17, ஆலங்காயம் 4.2, காவேரிப்பாக்கம் 38.4 , வாலாஜா 16.2, சோளிங்கர் 42, ஆற்காடு 38.2, குடியாத்தம் 4.21, காட்பாடி 55.77, அம்முண்டி 38, கேத்தாண்டபட்டி 3.8, வடபுதுபட்டு 6.4 மேல் ஆலத்தூர் 2.6.






