search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்னையாற்று வெள்ளத்தை மலர் தூவி வணங்கி வரவேற்ற விவசாயிகள்
    X
    பொன்னையாற்று வெள்ளத்தை மலர் தூவி வணங்கி வரவேற்ற விவசாயிகள்

    தமிழக-ஆந்திர எல்லை பகுதியில் மழை: பொன்னையாறு-கல்லாற்றில் வெள்ளம்

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழையால் பொன்னை ஆற்றில் வெள்ளம் வந்துள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதே போல் காட்பாடி பொன்னை சுற்று வட்டாரங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் கலவகுண்டா அணைப்பகுதியில் இருந்து வெளியேறிய வெள்ளநீர் தமிழக எல்லைக்குள் கடந்த 4 ஆண்டுகளாக வறண்டு கிடந்த நீவா நதி என்னும் பொன்னை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியது. பாய்ந்தோடிய வெள்ளம் தமிழகத்திற்குள் புகுந்தது. தொடர்ந்து தமிழக எல்லையான பொன்னை அருகே கீரைசாத்து பகுதியில் பொன்னை ஆற்றில் கட்டுப்பட்டுள்ள தரைமட்ட தடுப்பணையை கடந்து பாய்ந்து செல்கிறது.

    பொன்னை ஆற்றின் குறுக்கே மேல்பாடி அருகே 1855 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட தடுப்பணைக்கு வெள்ளநீர் வந்து சேர்ந்தது.

    ஏறத்தாழ 4 ஆண்டுக்கு பிறகு தமிழக எல்லையை வந்தடைந்த பொன்னையாற்று வெள்ளத்தால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகளும், பொதுமக்களும் வெள்ளநீரை மலர்த்தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர்.

    இளைஞர்கள் தரைமட்ட தடுப்பணை நிரம்பி வழிந்து சென்றதால் அந்த நீரில் நின்று செல்பி எடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

    அரக்கோணம் வழியே செல்லும் கல்லாற்றில் 4 ஆண்டுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டம் பாலாறு மற்றும் பொன்னையாறு ஆகியவற்றில் இருந்து கிளை ஆறாக உருவாகி, காவேரிபாக்கம் ஏரி கடைமடை பகுதிகளின் வழியே வந்து அரக்கோணம் தக்கோலம் பகுதிகள் வழியே கொசஸ்தலை ஆற்றில் கல்லாறு கலக்கிறது. இந்த ஆற்றில் கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்நிலையில் அரக்கோணம் பகுதியில் பெய்த பலத்த மழையால் 4 ஆண்டுகளுக்குப் பின் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் பாய்ந்தோடி செல்கிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    Next Story
    ×