என் மலர்
வேலூர்
ஆற்காடு:
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்தவர் ஜம்புலிங்கம் (வயது 38). சென்னையில் உள்ள பார்சல் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு சென்னையில் இருந்து பார்சல் ஏற்றிக்கொண்டு பெங்களூர் நோக்கி புறப்பட்டு வந்தார். வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பூஞ்சோலை என்ற இடத்தில் வந்தபோது அவருக்கு களைப்பு ஏற்பட்டது.
இதனால் சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் பார்சல் லாரியில் பின்பக்க கதவை உடைத்து பொருட்களை மற்றொரு லாரியில் ஏற்றினர். அதில் இருந்த துணி பெயிண்ட் உள்பட சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்களை அவர்கள் ஏற்றி முடித்தனர்.
அப்போது சத்தம் கேட்டு ஜம்புலிங்கம் கண்விழித்தார். இதனால் சுதாரித்துக்கொண்ட கும்பல் லாரியில் தப்பிச்சென்றனர். அவர்களை ஜம்புலிங்கம் அவரது லாரியில் விரட்டிச் சென்றார்.
ரத்தனகிரி கோவில் அருகே உள்ள சப்வே வழியாக திருட்டு கும்பல் புகுந்து சென்னை நோக்கி சென்றனர்.
ஜம்புலிங்கம் அவரை பின் தொடர்ந்து சென்றார். வேப்பூர் என்ற இடத்தில் சென்றபோது கும்பல் லாரியை நிறுத்தினர். ஜம்புலிங்கம் லாரியை நிறுத்திவிட்டு அவர்களை நோக்கி ஓடிவந்தார். கும்பல் அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு பொருட்களுடன் தப்பிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து ஜம்புலிங்கம் ரத்தனகிரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் அரக்கோணம், சோளிங்கர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டியதால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
அரக்கோணம் நகர பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக தெருக்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. தெருக்களில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கனமழையால் அரக்கோணம் தாலுகா மூதூர் கிராமத்தை சேர்ந்த பாஞ்சாலை மற்றும் புளியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த குப்பம்மாள் ஆகியோரது குடிசை வீடுகள் இடிந்து விழுந்தன.
வீட்டிலிருந்தவர்கள் சுதாரித்துக் கொண்டு வெளியேறியதால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை.
முள்வாய்கிராமத்தில் இன்று காலை ரமேஷ் என்பவரது குடிசை வீடு இடிந்து விழுந்தது. மாங்காட்டுசேரி, மதுரா கடம்பநல்லூர் கிராமத்தில் தேவராஜ் என்பவரது ஓட்டு வீடு சுவர் இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்தவர்கள் வெளியேறியதால் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரக்கோணம் தாசில்தார் ஜெயக்குமார் தெரிவித்தார்.
அரக்கோணத்தில் 56 மில்லி மீட்டர் சோளிங்கர் 45 மில்லி மீட்டர் மழை பதிவானது. குடியாத்தம் பகுதிகளில் இரவு லேசான சாரல் மழை பெய்தது. இன்று காலை முதல் மாவட்டம் முழுவதும் மந்தமான தட்பவெப்ப நிலை நிலவியது. பல்வேறு இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு தண்டராம்பட்டு, சேத்துப்பட்டு, கலசபாக்கம், கீழ்பென்னாத்தூர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மற்ற இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.
இன்று காலையில் மேகம் மந்தமாக காணப்பட்டது. லேசான சாரல் மழையும் பெய்தது மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள 2-வது பெரிய அணையான குப்பநத்தம் அணைக்கு 60 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 60 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் தற்போது 40.6 7 அடியாக உள்ளது. சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து இல்லை.
மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
ஆரணி-5.2, செங்கம்-4.6, திருவண்ணாமலை-2, தண்டராம்பட்டு-60, கலசப்பாக்கம்-19, சேத்துப்பட்டு-36, கீழ்பென்னாத்தூர்-20.2, வெம்பாக்கம்-7.
வாணியம்பாடி:
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த இந்திரா நகரை சேர்ந்தவர் சத்யா (வயது26). ஏற்கனவே 2 பேரை திருமணம் செய்த இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த ஆண்டு இவர்களுக்கு ஆதித்யா (வயது1) அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தேவையானவற்றை முருகன் வாங்கிக் கொடுத்தார்.
இருவரும் குழந்தையை அன்போடு வளர்த்து வந்தனர். இந்த நிலையில் முருகன் காசநோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக தர்மபுரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
குழந்தையுடன் இருந்த சத்யா வருமானம் இல்லாமல் இருந்ததாக தெரிகிறது.
அப்போது சத்யாவின் பெரியம்மா கீதா (50) (குழந்தையின் பாட்டி) என்பவரை அதே பகுதியை சேர்ந்த புரோக்கர் கவிதா தொடர்பு கொண்டுள்ளார். பெங்களூரில் ஒருவர் ஆண் குழந்தை வளர்ப்பதற்கு கேட்கிறார். அவரிடம் குழந்தையை விற்றால் ரூ.1 லட்சம் கிடைக்கும் என கூறியுள்ளார்.
இதுபற்றி இருவரும் சத்யாவிடம் தெரிவித்தனர் அவரும் குழந்தையை விற்க முடிவு செய்தார். 3 பேரும் சேர்ந்து பெங்களூர் ஜெய் நகர் பகுதியை சேர்ந்த அகமத், ஷகிலா தம்பதியினருக்கு குழந்தையை விற்பனை செய்தனர். அவர்களிடமிருந்து முன் பணமாக ரூ.65 ஆயிரம் பெற்றனர்.
பணத்தை வாங்கிக் கொண்டு குழந்தையை அவர்களிடம் கொடுத்து விட்டு வந்து விட்டனர்.
இந்த நிலையில் முருகன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். ஆசையோடு குழந்தையை பார்க்க வந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர் சத்யாவிடம் குழந்தை எங்கே என்று கேட்டார். அப்போது குழந்தை காணாமல் போய்விட்டது என முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.
இதனால் சந்தேகம் அடைந்த முருகன் இதுபற்றி வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சத்யாவிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது பெங்களூரில் குழந்தையை ரூ.1 லட்சம் பேரம் பேசி விற்று விட்டதாக சத்யா கூறினார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யா அவரது பெரியம்மா கீதா புரோக்கர் கவிதா ஆகியோரை கைது செய்தனர்.
இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையிலான போலீசார் பெங்களூர் சென்று ரகமத் தம்பதியிடம் இருந்து குழந்தையை மீட்டனர். அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆற்காடு சாய்பாபா நகர் ராஜகோபால் தெருவை சேர்ந்த ஓய்வுபெற்ற இளநிலை பொறியாளர் தனசேகரன் (வயது 61). இவரது மகன் கீர்த்திராஜன் (29) புதுப்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.
நேற்று இரவு டாக்டர் கீர்த்திராஜனின் பெற்றோர் மற்றும் அண்ணன் குடும்பத்தினர் வீட்டு மாடியில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
கீர்த்திராஜன் அவரது மனைவி பவித்ரா லட்சுமி இருவரும் கீழே உள்ள அறையில் தூங்கினர்.
இன்று அதிகாலை 3.45 மணிக்கு அவர் வீட்டின் பின்பக்க அறையில் பலத்த சத்தத்துடன் மர்மப்பொருள் வெடித்தது. இதனால் அந்த அறையில் உள்ள சுவர்களில் விரிசல் ஏற்பட்டு சிமெண்டு பூச்சிகள் இடிந்து விழுந்தன. டாக்டர் கீர்த்திராஜன் இருந்த அறையைத் தவிர மற்ற அறைகளில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின.

சத்தம் கேட்டு கண்விழித்த டாக்டர் குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். வீட்டிலுள்ள பொருட்கள் மற்றும் ஜன்னல் கதவுகள் டி.வி. உடைந்து கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர்.
மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க சமையல் அறையில் இருந்த சிலிண்டர்களை வீட்டுக்கு வெளியே கொண்டு வைத்தனர். பக்கத்து வீட்டில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்து நாசமானது.
இதுபற்றி ஆற்காடு டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி. கீதா இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
வீட்டில் இருந்த சிலிண்டர் ஏ.சி. ஆகியவை எந்த சேதமும் அடையவில்லை. மின் கசிவும் ஏற்படவில்லை. எல்.இ.டி. டி.வி. மட்டுமே வெடித்து சிதறியுள்ளது. வீட்டில் என்ன வெடித்தது என்பது புரியாத புதிராக உள்ளது.
சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வந்து சோதனை நடத்தினர்.
சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 123 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை உள்ளடக்கிய பல்கலைக்கழகம் ஆகும். இந்த மாவட்டங்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பின் தங்கிய மாவட்டங்கள் ஆகும். கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள்.
சமீபத்தில் தேர்வு கட்டணங்களை பல்கலைக்கழகம் உயர்த்தியதால் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தேர்வு கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து கல்லூரிகளில் வகுப்பு புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம் உள்பட போராட்டங்களை நடத்தினர்.
மேலும் நேற்று திருவள்ளுவர் பல்கலைக்கழகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தை நடத்தி, கோரிக்கை மனுவை துணைவேந்தரிடம் வழங்கினர்.
இந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு கட்டணங்கள் குறைக்கப்படுவதாக நேற்று திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பெருவழுதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டணங்களை குறைக்குமாறு மாணவர்களிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றது. இதையடுத்து அரசின் ஒப்புதலுடன் தேர்வு கட்டணங்கள் மட்டும் குறைக்கப்பட்டுள்ளது.

எழுத்து தேர்வுக்கான இளங்கலை பட்டப்படிப்பு தேர்வு கட்டணம் ஒரு தாளுக்கு ரூ.90 (ரூ.100),
எழுத்து தேர்வுக்கான முதுகலை பட்டப்படிப்பு (எம்.ஏ, எம்.எஸ்சி, எம்.எஸ்.டபிள்யு, எம்.காம் ஆகியவை) ஒரு தாளுக்கு ரூ.145 (ரூ.160).
எழுத்து தேர்வுக்கான கட்டணம் (எம்.சி.ஏ, எம்.பி.ஏ, எம்.எஸ்சி.(ஐ.டி), எம்.எஸ்சி.(சி.எஸ்) ஆகியவை) ஒரு தாளுக்கு ரூ.450 (ரூ.500),
இளங்கலை பட்டப்படிப்பு செய்முறை தேர்வு கட்டணம் (3 மணி நேர செய்முறை தேர்வு) பி.எஸ்சி, எச்.சி.எம். நீங்கலாக ஒரு தேர்வுக்கு ரூ.150 (ரூ.175). இளங்கலை பட்டப்படிப்பு செய்முறை தேர்வு கட்டணம் (6 மணி நேர செய்முறை தேர்வு) பி.எஸ்சி, எச்.சி.எம். நீங்கலாக ஒரு தேர்வுக்கு ரூ.300 (ரூ.350). பி.எஸ்.சி., எச்.சி.எம். படிப்பிற்கான செய்முறை தேர்வு கட்டணம் ரூ.300 (ரூ.350),
எம்.ஏ, எம்.எஸ்சி, எம்.பி.ஏ, எம்.எஸ்.டபிள்யு படிப்புகளுக்கான செய்முறை தேர்வு (3 மணி நேர செய்முறை தேர்வு) கட்டணம் ஒரு தேர்வுக்கு ரூ.275 (ரூ.300). எம்.எஸ்சி. (6 மணிநேர செய்முறை தேர்வு) படிப்புகளுக்கான செய்முறை தேர்வு கட்டணம் ஒரு தேர்வுக்கு ரூ.500 (ரூ.600), எம்.சி.ஏ. படிப்புகளுக்கான (3 மணி நேர செய்முறை தேர்வு) செய்முறை தேர்வு கட்டணம் ஒரு தேர்வுக்கு ரூ.350 (ரூ.400),
எம்.எஸ்சி., ஐ.டி., சி.எஸ்., இ.எம். ஆகிய படிப்பிற்கான (3 மணி நேர செய்முறை தேர்வு )செய்முறை தேர்வு கட்டணம் ஒரு தேர்வுக்கு ரூ.275 (ரூ.300),
எம்.எஸ்சி. அப்ளைடு மைக்ரோபயாலஜி செய்முறை தேர்வு கட்டணம் ஒரு தேர்வுக்கு ரூ.1,600 (ரூ.1,800).
இதை தவிர தேர்வு கட்டணங்களில் வேறு மாற்றமில்லை.
நவம்பர், டிசம்பர் 2019-ல் நடைபெற உள்ள தேர்வுகளுக்கு வருகிற 27-ந் தேதிக்குள் அபராதத்தொகை இல்லாமல் மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தலாம். அக்டோபர் 1-ந் தேதி வரை அபராதத்தொகையுடன் தேர்வு கட்டணம் செலுத்தலாம்.
திருத்தியமைக்கப்பட்ட கட்டணங்களை மாணவர்களிடம் பெற்றுக்கொள்ளுமாறு பல்கலைக்கழக ஆளுகைக்குட்பட்ட அனைத்து கல்லூரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தலைமையில் இன்று நடந்தது.
இதனையொட்டி கலெக்டர் அலுவலக வாசலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மனு கொடுக்க வந்த பொதுமக்களை சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.
கே.வி.குப்பம் அடுத்த சீதாராம்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகள் ஷியாமளா (வயது 29). இவர் தனது 4 பெண் குழந்தைகள் மற்றும் அவரது தாய் தங்கையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று மனு கொடுக்க வந்தார்.
கலெக்டர் அலுவலக வாசலில் திடீரென தான் கொண்டு வந்து இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றினார். இதனை கண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவரை மீட்டனர்.
எனது தந்தைக்கு சொந்தமான நிலம் எங்கள் வீட்டின் அருகே உள்ளது. இதனை அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துக் கொண்டு மிரட்டல் விடுக்கிறார்கள் அவர்கள் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் நாங்கள் உயிரோடு இருந்து எந்த பயனும் இல்லை என கருதி தற்கொலைக்கு முயன்றேன் என்றார்.
போலீசார் அவரை சமாதானம் செய்தனர். இதனையடுத்து அவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு திரும்பிச் சென்றார்.
ஆற்காடு அடுத்த விளாபாக்கத்தை சேர்ந்தவர் அஞ்சலி (வயது27). பெண் போலீசான இவர் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட குற்றப்பிரிவில் பணியாற்றி வருகிறார்.
நேற்று மாலை பணி முடிந்து தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு புறப்பட்டார். சத்துவாச்சாரி சாலை கெங்கை அம்மன் கோவில் அருகே சென்றபோது அவரது போனுக்கு அழைப்பு வந்தது இதனையடுத்து ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் வேகமாக வந்து அஞ்சலியின் செல்போனை பறித்துக்கொண்டு சென்று விட்டனர். இதுபற்றி அஞ்சலி சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார். சம்பவம் நடந்த சாலை கெங்கை அம்மன் கோவில் அருகே கடந்த புதன்கிழமை இரவு வாலிபர் ஒருவரிடமும் கும்பல் செல்போனை பறித்து சென்றனர்.
தொடர் சம்பவத்தையடுத்து போலீசார் கும்பலை பிடிக்க முடுக்கி விடப்பட்டனர்.
தனிப்படை போலீசார் சத்துவாச்சாரி பகுதியில் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு பைக்கில் வந்த 3 பேரை மடக்கி விசாரித்தனர். அவர்கள் வேலூர் ஓல்டு டவுனை சேர்ந்த வசந்தகுமார் (22), குட்டி அப்பு (27), ராகுல் (19) என்பது தெரியவந்தது.
அவர்கள் முன்னுக்குபின் பதில் கூறியதால் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது பெண் போலீஸ்காரர் அஞ்சலியிடம் அவர்கள் செல்போன் பறித்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும் திருட்டு சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த சின்னமூக்கனூரை சேர்ந்தவர் தங்கம். வெல்டர். இவருடைய மகள் கவுதமி (வயது16).
புதுப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 18-ந்தேதி கவுதமி சரிவர படிக்கவில்லை வேலை செய்யவில்லை என அவரது தாயார் திட்டியுள்ளார்.
இதனால் மனம் உடைந்த கவுதமி அன்று இரவு வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து சென்று கழிவறையில் குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். மகளை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். பின்னர் கழிவறையில் பார்த்தபோது கவுதமி மயங்கிய நிலையில் கிடந்தார்.
அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவுதமி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பிளஸ்1 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






