என் மலர்
செய்திகள்

சாலை மறியல்
வேலூரில் சிறுவன் உயிரிழப்பை கண்டித்து திடீர் சாலை மறியல்
வேலூரில் சிறுவன் உயிரிழப்பை கண்டித்து உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேலூர்:
பேரணாம்பட்டு அடுத்த பத்திரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பழனி, தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி. இவர்களின் மகன் கபில் (வயது 3). கடந்த சில மாதங்களாக கடும் தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளான்.
இதையடுத்து மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கபிலன் அனுமதிக்கப்பட்டான். அங்கு கபிலன் உடலை பரிசோதித்த டாக்டர்கள், தலையில் நீர் கோர்த்து உள்ளதாகவும், அதனை அகற்றி விட்டால் தலைவலி சரியாகிவிடும் என்று தெரிவித்துள்ளனர். கடந்த 19-ந் தேதி கபிலன் வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் கபிலனுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கான பணத்தை தயார் செய்து அறுவை சிகிச்சைக்கு முன்பாக கவுண்ட்டரில் செலுத்தும்படி பழனியிடம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அந்த தொகையை அவரால் உடனடியாக ஏற்பாடு செய்ய முடியவில்லை. அதனால் கபிலனுக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், பணத்தை கட்டிய பின்னரே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை கபிலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
அதைத்தொடர்ந்து கபிலனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் தனியார் ஆம்புலன்சில் உடலை எடுத்து சென்றனர். அப்போது கபிலனின் பெற்றோர், உறவினர்கள் வேலூர்- காட்பாடி சாலை காமராஜர் சிலை அருகே ஆம்புலன்சை நிறுத்தி கபிலன் உயிரிழப்பை கண்டித்து திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது கபிலன் சாவுக்கு தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களின் அலட்சியமே காரணம் என்று அவனது பெற்றோர் குற்றம் சாட்டினர். மேலும் ஆஸ்பத்திரி நிர்வாகத்தை கண்டித்து கபிலனின் உறவினர்கள், பெற்றோர் கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story






