என் மலர்tooltip icon

    செய்திகள்

    மர்ம பொருள் வெடித்த டாக்டர் வீடு
    X
    மர்ம பொருள் வெடித்த டாக்டர் வீடு

    ஆற்காட்டில் டாக்டர் வீட்டில் மர்ம பொருள் வெடித்து டி.வி, ஜன்னல் சேதம்

    ஆற்காட்டில் டாக்டர் வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் எல்.இ.டி. டி.வி. வெடித்து சிதறியது. வீட்டிலுள்ள பொருட்கள் மற்றும் ஜன்னல் கதவுகள் சேதமடைந்தது.
    ஆற்காடு:

    ஆற்காடு சாய்பாபா நகர் ராஜகோபால் தெருவை சேர்ந்த ஓய்வுபெற்ற இளநிலை பொறியாளர் தனசேகரன் (வயது 61). இவரது மகன் கீர்த்திராஜன் (29) புதுப்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று இரவு டாக்டர் கீர்த்திராஜனின் பெற்றோர் மற்றும் அண்ணன் குடும்பத்தினர் வீட்டு மாடியில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    கீர்த்திராஜன் அவரது மனைவி பவித்ரா லட்சுமி இருவரும் கீழே உள்ள அறையில் தூங்கினர்.

    இன்று அதிகாலை 3.45 மணிக்கு அவர் வீட்டின் பின்பக்க அறையில் பலத்த சத்தத்துடன் மர்மப்பொருள் வெடித்தது. இதனால் அந்த அறையில் உள்ள சுவர்களில் விரிசல் ஏற்பட்டு சிமெண்டு பூச்சிகள் இடிந்து விழுந்தன. டாக்டர் கீர்த்திராஜன் இருந்த அறையைத் தவிர மற்ற அறைகளில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின.

    மேலும் வீட்டில் இருந்த 3 கதவுகள் உடைந்து தூக்கி வீசப்பட்டது. ஹாலில் வைக்கப்பட்டிருந்த எல்.இ.டி. டி.வி. வெடித்து சிதறியது. இவை அனைத்தும் மர்ம பொருள் வெடித்த அடுத்த நொடியிலேயே நடந்து முடிந்துவிட்டது.

    மர்ம பொருள் வெடித்து கதவு, இரும்பு கம்பிகள் உடைந்திருந்த காட்சி

    சத்தம் கேட்டு கண்விழித்த டாக்டர் குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். வீட்டிலுள்ள பொருட்கள் மற்றும் ஜன்னல் கதவுகள் டி.வி. உடைந்து கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர்.

    மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க சமையல் அறையில் இருந்த சிலிண்டர்களை வீட்டுக்கு வெளியே கொண்டு வைத்தனர். பக்கத்து வீட்டில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்து நாசமானது.

    இதுபற்றி ஆற்காடு டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி. கீதா இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    வீட்டில் இருந்த சிலிண்டர் ஏ.சி. ஆகியவை எந்த சேதமும் அடையவில்லை. மின் கசிவும் ஏற்படவில்லை. எல்.இ.டி. டி.வி. மட்டுமே வெடித்து சிதறியுள்ளது. வீட்டில் என்ன வெடித்தது என்பது புரியாத புதிராக உள்ளது.

    சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வந்து சோதனை நடத்தினர்.

    இந்த சம்பவம் ஆற்காட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    டாக்டர் வீட்டில் வெடித்தது என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×