என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் அருகே ஓடும் ஆம்புலன்சிலேயே கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் ஆஸ்பத்திரியில் சிகிக்சை பெற்று வருகிறார்கள்.

    வேலூர்:

    ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார். கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி முனிசித்ரா (வயது 24). இவர் கர்ப்பிணியாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக அவர் ராணிப்பேட்டை அருகே உள்ள லாலாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முனிசித்ராவுக்கு அறிவிக்கப்பட்ட பிரசவ தேதி கடந்தது. இதனால் அவரை மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி அவரை லாலாபேட்டையில் இருந்து நேற்று அதிகாலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அழைத்து சென்றனர். ஆம்புலன்சை டிரைவர் பிரசன்னராஜ் ஓட்டினார். மருத்துவ உதவியாளராக ரீனா இருந்தார்.

    பாகாயம் அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது முனிசித்ராவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவ உதவியாளர் ரீனா பிரசவ சிகிச்சை மேற்கொண்டார். அதிகாலை 2.30 மணி அளவில் முனிசித்ராவுக்கு ஓடும் ஆம்புலன்சிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது.

    இதையடுத்து தாயும், சேயும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பிரிவில் அனுதிக்கப்பட்டனர். அங்கு குழந்தைக்கும், தாய்க்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அரக்கோணம் அருகே ரெயில் பயணிகள் ரெயில் பெட்டியில் வாழை மரம் கட்டி அலங்கரித்து பூஜை செய்து, ஆயுத பூஜை கொண்டாடினர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சோழிங்கபுரம் ரெயில் நிலையத்திலிருந்து பாணாவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் தினமும் சென்னைக்கு சென்று வருகின்றனர்.

    ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இவர்கள் காலையில் செல்வது வழக்கம். பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களது பயணம் சிறப்பாகவும் மற்றும் பாதுகாப்பாக அமைய வேண்டி ரெயிலில் ஆயுத பூஜை செய்ய முடிவு செய்தனர்.

    இன்று காலை ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் சோளிங்கபுரம் ரெயில் நிலையம் வந்தது. ஆயுத பூஜைக்கான பொருட்களுடன் தயார் நிலையில் இருந்த பயணிகள் ரெயில் பெட்டி வாசலில் வாழை மரங்களை கட்டினர்.

    ரெயில் பெட்டிக்குள் வண்ண பேப்பர்களால் அலங்காரம்

    மேலும் ரெயில் பெட்டிக்குள் வண்ண பேப்பர்களால் அலங்காரம் செய்தனர். ரெயில் பெட்டியில் உள்ள இருக்கைகள் உட்பட அனைத்தையும் சுத்தம் செய்து அதில் சாமி படம் வைத்து பொரி, கடலை, இனிப்பு உள்ளிட்டவற்றை படையலாக வைத்தனர்.

    தொடர்ந்து கற்பூரம் ஏற்றி பூஜை செய்தனர். இதில் அந்த பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.

    பூஜை முடிந்ததும் ரெயில் பயணிகளுக்கு பொரி, கடலை, இனிப்பு போன்றவை வழங்கப்பட்டன. இறுதியாக ரெயில் பெட்டியை சுற்றி தேங்காய் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

    காவேரிபாக்கம், பாணாவரம் பகுதியை சேர்ந்த நாங்கள் தினமும் இந்த ரெயிலில் தான் சென்னைக்கு சென்று வருகிறோம். எங்களுடைய பயணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ரெயிலில் ஆயுத பூஜை செய்து வழிபட்டோம் என்றனர்.

    இந்த சம்பவத்தால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    ஆம்பூர் அருகே இன்று காலை சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வேலூர் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் பரிதாபமாக இறந்தார். அவருடன் சென்ற நர்சு படுகாயம் அடைந்தார்.
    ஆம்பூர்:

    நாகர்கோவிலை சேர்ந்த சிங் என்பவருடைய மகன் பெனடிக் (வயது 27). வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வந்தார். இதே ஆஸ்பத்திரியில் பணியாற்றும் நர்ஸ் ஒருவருடன் இன்று காலை மோட்டார் சைக்கிளில் வேலூரிலிருந்து ஆம்பூர் நோக்கி சென்றார்.

    வெங்கிலி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர தடுப்பில் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரையும் மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே டாக்டர் பெனடிக் பரிதாபமாக இறந்தார்.

    நர்சுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். டாக்டர் விபத்தில் பலியான சம்பவம் வேலூர் தனியார் ஆஸ்பத்திரி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டதால் சென்னை செல்லும் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
    அரக்கோணம்:

    வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த மகேந்திரவாடி ரெயில் நிலையம் அருகே ரெயில்வே ஊழியர்கள் இன்று காலை 6. 5 5 மணிக்கு தண்டவாள பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டதை கண்டனர் .

    இதுகுறித்து உடனடியாக ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சோளிங்கபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அந்த நேரத்தில் சென்னை நோக்கி வந்த திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ், லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

    தண்டவாளம் ஒரு மணி நேரத்துக்கு பிறகு சீரமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை செல்லும் ரெயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் இன்று காலையில் சென்னைக்கு பணிக்கு சென்ற ஊழியர்கள், காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.
    நீட் ஆள்மாறாட்ட புகாரில் சிக்கிய மாணவர் இர்பானின் தந்தை முகமது ஷபி டாக்டர் அல்ல என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
    வேலூர்:

    சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த மருத்துவ மாணவர் உதித்சூர்யா இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் மாணவனாக சேர்ந்த புகார் வெளிவந்ததை அடுத்து உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோரை சிபிசிஐடி தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களைத் தொடர்ந்து மேலும் சிலர் சிக்கி உள்ளனர்.

    இதில், வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த முகமது இர்பான் என்ற மாணவரும் ஒருவர். அவரை மருத்துவம் படிக்க வைக்க நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக கூறி அவரது தந்தை டாக்டர் முகமது ஷபியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பின்னர், மொரீசியஸ் நாட்டுக்கு சென்றுவிட்டதாக கூறப்பட்ட இர்பான் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    மாணவர் இர்பான்

    அவரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். விரைவில் சேலம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து அவரை காவலில் எடுத்து தேனி சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான இர்பானின் தந்தை முகமது சபி டாக்டர் அல்ல என சி.பி.சி.ஐ.டி நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவர் மருத்துவ படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு மருத்துவ தொழில் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
    தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பிளாஸ்டிக் இல்லா இந்தியாவை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடத்தப்படுகிறது.
    காட்பாடி:

    தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் தென்னக ரெயில்வே பாரத சாரண- சாரணீயர் இயக்கம் சென்னை கோட்ட மத்திய மாவட்டம் சார்பில் பிளாஸ்டிக் இல்லா இந்தியாவை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடத்தப்படுகிறது.

    காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்ட ஊர்வலத்தை கலெக்டர் சண்முகசுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நந்தகுமார், செந்தமிழரசு ஆகியோர் தலைமையில் 25 மாணவர்கள் சைக்கிளில் காட்பாடியில் இருந்து வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி, பெரம்பூர் வழியாக நாளை (புதன்கிழமை) சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தை அடைகின்றனர்.

    நிகழ்ச்சியில் தென்னக ரெயில்வே உதவி கோட்டப் பொறியாளர் அபிஷேக்மிட்டல், ரெயில் நிலைய கண்காணிப்பாளர் ரவீந்திரநாத், காட்பாடி தாசில்தார் பாலமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை சகாயராஜ், மணிகண்டன், கணேசன், சுந்தரேசன், மகேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
    ஐ.டி.ஐ. மாணவரை கொலை செய்த தொழிலாளிக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், முறையாக விசாரணை நடத்தாத 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் தொரப்பாடி கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 22). இவர் ஐ.டி.ஐ.யில் படிக்க சேர்ந்தார். இதற்காக தனது நண்பர்களான சின்னஅல்லாபுரம் பகுதியை சேர்ந்த நவீன்குமார் (19), தொரப்பாடியை சேர்ந்த வெற்றிவேல் (19), ராஜ்குமார் (19) ஆகியோருக்கு மது விருந்து கொடுக்க முடிவு செய்தார். அதன்படி சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் அப்துல்லாபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு 5.7.2018 அன்று காலை சென்றனர்.

    அங்கு அப்துல்லாபுரத்தை சேர்ந்த தொழிலாளியான சதீஷ் என்ற சதீஷ்குமார் (30) மற்றும் அவரது நண்பர் ஆறுமுகம் (39) ஆகியோர் மது அருந்திக் கொண்டிருந்தனர். டாஸ்மாக் கடையில் சக்திவேல் தரப்புக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் மாலையில் சக்திவேல் தரப்பினர் அதேபகுதியில் உள்ள வேறு டாஸ்மாக் கடைக்கு சென்றனர். அங்கு சதீஷ்குமார் மற்றும் ஆறுமுகம் மது அருந்திக்கொண்டிருந்தனர்.

    அங்கேயும் இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில் சதீஷ்குமார் பீர்பாட்டிலை உடைத்து சக்திவேலை குத்தினார். மேலும் நவீன்குமார், வெற்றிவேலையும் சரமாரியாக தாக்கினார். குத்துப்பட்ட சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து நவீன்குமார் விரிஞ்சிபுரம் போலீசில் புகார் செய்தார். அப்போது பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரையும், ஆறுமுகத்தையும் குற்றவாளியாக சேர்த்து விசாரணை நடத்தினார். இந்த வழக்கு வேலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் (விரைவு) நடந்து வந்தது. வழக்கு நடைபெற்று வந்த காலத்தில் இன்ஸ்பெக்டர் பாண்டி இடமாறுதல் பெற்றார். அவருக்கு பதில் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்ற பார்த்தசாரதி இந்த வழக்கில் குற்றபத்திரிகை தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் அ.கோ.அண்ணாமலை ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.குணசேகர் தீர்ப்பு கூறினார். அதில் சதீஷ்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்தார். ஆறுமுகம் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் அவரை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    மேலும் அவர் தனது தீர்ப்பில், இன்ஸ்பெக்டர்கள் பாண்டி மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் இந்த வழக்கில் முறையாக புலன் விசாரணை செய்யாமல் ஆறுமுகத்தின் மீது குற்றம் சாட்டி, ஒரு குற்றவாளியாக சேர்த்ததால் 2 இன்ஸ்பெக்டர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கும், பாதிக்கப்பட்ட ஆறுமுகத்துக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கும் பரிந்துரை செய்தார்.

    இந்த வழக்கில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதால் இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுத்து, உரிய இழப்பீடு வசூலிக்கவும் தமிழக மனித உரிமைகள் ஆணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளார்.

    இதையடுத்து போலீசார், சதீஷ்குமாரை வேலூர் ஜெயிலுக்கு அழைத்துச் சென்றனர்.
    10 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள சேலம், திருவள்ளூர் மாவட்டத்தை 2-ஆக பிரிக்க வேண்டும் என்று திருப்பத்தூரில் நடைபெற்ற விழாவில் ராமதாஸ் பேசினார்.
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரிக்க கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் செய்து வெற்றி கண்ட பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு திருப்பத்தூரில் பாராட்டு விழா நடந்தது.

    மாவட்ட பிரிப்புக்காக பலமுறை இங்கு வந்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாவுடன் போராடி உள்ளேன். இதற்கு பாராட்டப்பட வேண்டியவர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏனென்றால் கடந்த 10 ஆண்டுகளாக எந்த மாவட்டமும் பிரிக்கப்படவில்லை. இவர் ஆட்சியில் தான் 5 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன.

    அதில் தென்காசி மாவட்டத்திற்கு நாம் போராடவில்லை. மற்ற 4 மாவட்டங்களுக்கும் நாம் போராடி வெற்றி பெற்றுள்ளோம். திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டதற்கு முதல் காரணமாக இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. டி.கே.ராஜா தான். 4 தொகுதிகள் மாவட்டமாகும் போது வணிகம் சிறக்கும். அதனால் வணிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

    மாவட்டம் பிரித்ததால் 62 அரசு துறைகள் இங்கு வரும். அதிகாரிகள் வருவார்கள். சுலபமாக பார்க்க முடியும். இந்த மாவட்டத்தில் ஒருமுனையில் இருந்து இன்னொரு முனைக்கு 225 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும்.

    எந்த பகுதியில் இருந்து வேலூருக்கு செல்ல வேண்டுமென்றாலும் 100 கி.மீ செல்ல வேண்டும். 101 நாடுகளைவிட இந்த மாவட்டம் பெரிய மாவட்டம். இதனை எப்போதோ பிரித்து இருக்க வேண்டும்.

    பா.ம.க. நோக்கமே அனைத்து குழந்தைகளும் கட்டணம் இல்லாமல் படிக்க வேண்டும். அம்பானியின் குழந்தைகள், பேரன்களுக்கு எல்லாம் கிடைக்கும் அதே கல்வி அனைவருக்கும் தரமான, சுகமான, சுமையில்லாமல் கிடைக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் ஒரு மணி நேரமாவது விளையாட்டு இருக்க வேண்டும். மைதானம் இல்லாத பள்ளிகளுக்கு அனுமதி கொடுக்க கூடாது.

    தமிழகத்தில் 10 லட்சம், 15 லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை உள்ள மாவட்டங்களை பிரிக்க வேண்டும். அந்த வகையில் திருவள்ளூர், சேலம் மாவட்டங்கள் அடங்கும். பக்கத்து மாவட்டமான திருவண்ணாமலை மற்றும் கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களை படிப்படியாக பிரிக்க வேண்டும்.

    புதிய மாவட்டத்தின் மக்கள் இனி வரும் காலத்தில் பா.ம.க.வுக்கு ஆதரவு தாருங்கள். வாக்குச்சாவடிக்குள் நுழையும் போது யார் நமக்காக போராடுகிறார்கள் என எண்ணி பாருங்கள். அன்புமணி ராமதாஸ் சோறு போடும் விவசாயி தான் எனது கடவுள் என சொல்கிறார். கோடிக்கணக்கான இளைஞர்கள் அன்புமணியின் பின்னால் வருகிறார்கள். நல்ல வழிகாட்டுவார் என நினைக்கிறார்கள்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும். அதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறேன். அவர்கள் விரைவில் வெளியே வருவார்கள் என உறுதியளிக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருப்பத்தூரில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நர்சிங் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
    திருப்பத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஜே.டி. ரோடு பகுதியை சேர்ந்த மாது மகன் சத்ய குமார் (வயது 19). பர்கூரில் உள்ள அவரது மாமாவின் கறிக்கடையில் வேலை செய்து வந்தார். திருப்பத்தூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி. பர்கூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

    மாணவி தினமும் கல்லூரிக்கு பஸ்சில் சென்று படித்து வந்தார். இந்நிலையில் சத்யகுமாருக்கும், நர்சிங் கல்லூரி மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர்.

    நேற்று முன்தினம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை சத்யகுமார் அழைத்து சென்றார். அப்போது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து மாணவியின் தாய் கந்திலி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு சத்யகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
    பொய் சொல்பவர்களை நம்பி வாக்களிக்காதீர்கள் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியுள்ளார்.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்பட்டதையொட்டி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    தமிழகத்திலேயே மிகப்பெரிய மாவட்டமான வேலூர் மாவட்டத்தை மக்கள் நலனுக்காகவும் நிர்வாக வசதிக்காகவும் மூன்றாக பிரிக்க வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினோம்.

    அப்போதைய முதல் அமைச்சர்கள் செய்யவில்லை. இப்போதைய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்திருக்கிறார். அவருக்கு பா.ம.க. சார்பில் பாராட்டை தெரிவித்துக்கொள்கிறோம்.

    வேலூர் மாவட்டம் கருப்பு மாவட்டமாக முத்திரையிடப்பட்டது.

    விவசாயம் போச்சு, பாலாறு வறண்டு விட்டது. ஆந்திரா மாநிலத்தில் தடுப்பணை கட்டி அவர்கள் நீர் தேக்கி கொண்டனர்.

    பா.ம.க. சார்பில் போராட்டங்கள் செய்தோம். நானும் 7 நாள் போராட்டத்தில் ஈடுபட்டேன். வேறு எந்த கட்சியும் செய்யவில்லை பா.ம.க. தான் அதை செய்துள்ளது. மற்ற கட்சிகள் ஓட்டுக்கும் ஆட்சிக்கும் மட்டும்தான் கவலைப்படுவார்கள் பா.ம.க. தான் மக்களை பற்றிய கவலை எப்போதும் இருக்கிறது.

    மக்கள் இதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல் நகைக்கடன், பயிர்கடன், கல்விக்கடன் என்று பல்வேறு பொய் சொன்னவர்களுக்கு வாக்களித்தனர். நமக்கு வாக்களிக்கவில்லை.

    மக்கள் ஏன் பொய் சொல்பவர்களை நம்புகிறார்கள் என்று தெரியவில்லை. மக்களுக்காக இட ஒதுக்கீடு கல்வி என்று பா.ம.க. சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி மக்களின் நலனை எப்போதும் கனவு காணும் எங்களுக்கு மக்கள் ஓட்டு போடவில்லை.

    இலவசத்திற்காக மக்கள் விலைமதிக்க முடியாத ஓட்டை தேர்தல் நேரத்தில் சரியாக பயன்படுத்தவில்லை. மக்கள் சிந்திக்க வேண்டும்.

    23 லட்சம் இளைஞர்கள் வாக்களித்தார்கள். அவர்கள் குடும்பத்தில் உள்ள அம்மா, அப்பா, தங்கை இவர்களிடம் பா.ம.க. செய்த நல்ல திட்டங்களை வரலாற்றை சொல்லி இருந்தால் மாம்பழத்திற்கு ஓட்டு வந்திருக்கும்.

    நான் நினைத்திருந்தால் எத்தனையோ பதவிக்கு போயிருக்கலாம். ஆனால் இன்றைக்கும் மக்களுக்காக உழைத்து வருகிறேன். முதுமையில் கூட கோல் ஊன்றி உங்களுக்காக போராடுவேன். எங்களை நம்பி வாருங்கள் கல்வி, விவசாயம் பெருகும், சுகாதாரம் இருக்கும் எங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு தாருங்கள்.

    எங்களுக்கு அடுக்கு மொழியில் பேசத் தெரியாது. நாங்கள் கோடம்பாக்கத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல. எங்களுக்கு பொய் பேசத் தெரியாது. நாங்கள் விவசாய குடும்பத்தில் பிறந்தவர்கள். விவசாய பிள்ளைகள். நாங்கள் பொய் சொல்ல மாட்டோம். பசியென்று வந்தவர்களுக்கு சோறு போட்டு நாங்கள் பட்டினியாக இருப்போம். அப்படிப்பட்ட வம்சத்தில் இருந்து வந்தவர்கள் நாங்கள்.

    மக்கள் வாக்குகளை சரியாக பயன்படுத்தவில்லை. வேலூர் மாவட்டத்தை முன்னேற்றம் செய்ய மக்களுக்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தியவன் இந்த ராமதாஸ்.

    எங்கள் கட்சிக்காரர்களுக்கு எப்போதுமே முகத்தில் சோர்வு தெரியாது. ஏனென்றால் எப்போதுமே மக்களோடு மக்களாக இருக்கிறார்கள்.

    மக்கள் யோசித்து அவர்களின் விலை மதிக்க முடியாத வாக்கை சரியாக பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    வாலாஜா அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை எரித்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
    வாலாஜா:

    வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த தேவதானம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 60). வாலாஜாவில் கறிக்கடை நடத்தி வருகிறார். அவருடைய மனைவி ஈஸ்வரி (47). இவர்களுக்கு 4 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.

    முத்துவிற்கு ஈஸ்வரியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 24-ந்தேதி நள்ளிரவு ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த முத்து தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை பாட்டிலில் பிடித்து வந்து ஈஸ்வரி மீது ஊற்றி தீ வைத்தார்.

    இதில் தீக்காயம் அடைந்த ஈஸ்வரி வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதுபோல் தீக்காயம் அடைந்த முத்துவும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வாலாஜா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஈஸ்வரி பரிதாபமாக இறந்தார். இவர் இறக்கும் முன்பு தன் கணவர் முத்து தான் என் இறப்புக்கு காரணம் என்று மரண வாக்குமூலம் கொடுத்திருந்தார். இதனால் கொலை முயற்சி வழக்கானது கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து முத்துவை போலீசார் கைது செய்தனர்.
    காட்பாடியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    வேலூர்:

    காட்பாடியில் வேலூர் சித்தூர் மெயின் ரோட்டில் சில்க் மில் பஸ் நிறுத்தம் அருகில் இருந்து ரெயில்நிலையம் வரையிலும் நடை பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நவீன டைல்ஸ் பதிக்கப்பட்டு இந்த நடைபாதை அமைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்காக சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்தனர். இன்று காலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சில்க் மில் பஸ் நிறுத்தம் அருகிலிருந்து மில்லினியம் பிளாசா வரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

    அப்போது 50க்கும் மேற்பட்ட கடைகள் முன்பு இருந்த சிமெண்டு தடுப்புகள் விளம்பர போர்டுகள் போன்றவற்றை எடுத்தனர்.

    அப்போது வியாபாரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வியாபாரிகளை சமாதானம் செய்தனர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. தொடர்ந்து‌ நடைபாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×