என் மலர்
வேலூர்
சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 25). இவருடைய மனைவி ரேவதி(20). இவரது தாய் வீடு அரக்கோணம் அருகே உள்ள அம்மனூரில் உள்ளது. நேற்று காலை சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரெயிலில் ரேவதி பயணம் செய்தார்.
ரெயில் செஞ்சிபனப்பாக்கம் ரெயில் நிலையத்தில் நின்று விட்டு புறப்படும் போது திடீரென ரெயிலில் இருந்த வாலிபர் ஒருவர் ரேவதியின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றார். சுதாரித்து கொண்ட ரேவதி நகையை இறுக்கமாக பிடித்து கொண்டார்.
இதனால் நகை அறுந்தது. இதில் வாலிபர் கையில் 1½ பவுன் நகையும், ரேவதியிடம் 4 பவுன் நகையும் இருந்தது. இதனையடுத்து வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து ரேவதி அரக்கோணம் ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
அப்போது ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினார். உடனே போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பாடசாலை கிராமத்தை சேர்ந்த சசி என்பவரின் மகன் யாசின் (20) என்பதும், ரேவதியிடம் நகையை பறித்து சென்றவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தொடர்ந்து ரெயில்வே போலீசார் அவரை கைது செய்து 1½ பவுன் நகையை மீட்டனர்.
வேலூர்:
வேலூர் சங்கரன்பாளையம் துரைசிங்கம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 59) சுமை தூக்கும் தொழிலாளி.
இன்று காலை நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து லாரியில் மூட்டைகளை ஏற்றி கொண்டு சத்துவாச்சாரி நோக்கி புறப்பட்டு சென்றனர். லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகள் மீது சுப்பிரமணி அமர்ந்திருந்தார்.
காட்பாடி சாலையில் நேஷனல் தியேட்டர் சிக்னல் அருகே சென்ற போது மூட்டை மீது அமர்ந்திருந்த சுப்பிரமணி திடீரென தவறி கீழே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனைக் கண்டு வாகன ஓட்டிகள் திடுக்கிட்டனர். நடுரோட்டில் இந்த விபத்து நடந்ததால் காட்பாடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுப்பிரமணி உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து போக்குவரத்து சீரானது.
வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த கணியனூர் முப்பதுவெட்டி ரோட்டை சேர்ந்தவர் சேகர் இவரது மகன் பெருமாள் (வயது 18). மாற்றுத்திறனாளி நேற்று பெருமாளின் பெற்றோர் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர். இதனால் பெருமாள் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது அங்குள்ள குளத்தில் பெருமாள் கால் கழுவ சென்றார். அங்கு அவர் திடீரென தவறி கீழே விழுந்தார் அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால் அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். வெளியூர் சென்று இருந்த பெருமாளின் பெற்றோர் மாலை வீட்டிற்கு வந்து பெருமாளை தேடி பார்த்தனர். அவர் எங்கும் இல்லை. பெருமாளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
அப்போது குளத்தின் கரையில் பெருமாளின் கால்தடம் இருந்ததால் பெருமாள் குளத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என சந்தேகித்து திமிரி போலீஸ் மற்றும் ஆற்காடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 2 மணி நேரம் போராடி பெருமாளின் பிணத்தை மீட்டனர்.
இதுகுறித்து திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாள் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பத்தூர் அருகே உள்ள கவுண்டப்பனூர் செவத்தாதான் வட்டம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). இவரது மனைவி ஜெயந்தி. தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். ரமேஷ் துபாயில் கம்பி கட்டும் வேலை செய்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்தார். அதே பகுதியில் உள்ள அவரது உறவினர் பெண் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார்.
கவுண்டப்பனூர் தலைவர் வட்டத்தை சேர்ந்தவர் பூக்கார கிருஷ்ணன் (42). பூ வியாபாரி. இவரும் அதே பெண் வீட்டுக்கு அடிக்கடி சென்றுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. நேற்று இரவு ரமேஷ் இளம்பெண் வீட்டில் இருந்தார். அந்த நேரத்தில் பூக்கார கிருஷ்ணன் அங்கு வந்தார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பூக்கார கிருஷ்ணன் கத்தியால் ரமேசை வெட்டினார். அவரது கை, கால், கழுத்தின் பின்பகுதி ஆகியவற்றில் பலத்த வெட்டு விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
தகவலறிந்து அங்கு வந்த கந்திலி போலீசார் ரமேஷ் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து பூக்கார கிருஷ்ணனை கைது செய்தனர். சம்பவம் நடந்த வீட்டின் உரிமையாளர் இளம்பெண் அவரது கணவருடன் தலைமறைவாகி விட்டார்.
இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் திருவலத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகை வழங்காமல் உள்ளனர்.
இதுபற்றி விவசாயிகள் பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். அங்கேயே உணவு சமைத்து சாப்பிடுவதற்கான அனைத்துப் பொருள்களும் கொண்டு வந்திருந்தனர்.
விவசாயிகள் தரையில் அமர்ந்து நிலுவை தொகையை வழங்க கோரி கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் கிரேஸ்லால் ரிண்டிகிபச்சாவு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ரூ.32 கோடி கரும்பு நிலுவைத் தொகை பாக்கி உள்ளது. இதனை கேட்டு பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம் .ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.
வேலூர் அடுத்த அரியூர் தனியார் ஆஸ்பத்திரி அருகே கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த 5-ந் தேதி முதல் 9-ம் தேதி வரை தசரா பண்டிகை விடுமுறையையொட்டி வங்கி அடைக்கப்பட்டிருந்தது.
இதனைப்பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் வங்கியின் பின்பக்க உள்ள ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே செல்ல முயன்றுள்ளனர். ஜன்னலை முழுவதுமாக உடைக்க முடியாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
நேற்று வங்கிக்கு வந்த ஊழியர்கள் ஜன்னல் கம்பிகள் உடைந்து கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர் .இதுபற்றி தகவலறிந்த வங்கி மேலாளர் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார் .உடனடியாக அரியூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
மேலும் ஜன்னல் கம்பிகளில் இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர் .இந்த ரேகைகள் பழைய குற்றவாளியுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர் .வங்கிக் கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கியில் நடந்த இந்த கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராணிப்பேட்டை காரை காட்டன் பஜாரை சேர்ந்த பழனி மகன் சுரேஷ் (வயது30), பஸ் டிரைவர். இவரது நண்பர்கள் மோகன் (30), நவல்பூர் சாய்கிருஷ்ணா (30), வானாம்பாடியை சேர்ந்த பாண்டியன் (29). நண்பர்களான 4 பேரில் சாய் கிருஷ்ணா, பாண்டியன் 2 பேரும் கார் டிரைவர்களாக உள்ளனர்.
4 பேரும் ஓட்டலில் சாப்பிடுவதற்காக பாண்டியனின் சித்தப்பா மகன் காரை எடுத்து கொண்டு சென்றனர்.
ராணிப்பேட்டை எம்.பி.டி. ரோட்டில் உள்ள பேக்கரியில் திண்பண்டங்களை வாங்கி கொண்டு மீண்டும் காரில் ராணிப்பேட்டைக்கு புறப்பட்டனர். காரை சாய் கிருஷ்ணா ஓட்டினார். ராணிப்பேட்டை அவுசிங் போர்டு அருகே வந்தபோது சாலையின் நடுவில் இருந்த பேரிகார்டு மீது கார் மோதியது.
இதில் நிலை கவிழ்ந்த கார் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். சாய் கிருஷ்ணா படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த சாய்கிருஷ்ணாவை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வாலாஜா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சஜித்சி நாயர். ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி நிஷா நாயர் வயது(35). இவர்கள் ஐதராபாத் விமன்புரியில் வசித்து வருகின்றனர்.
கடந்த 6-ந் தேதி ஐதராபாத்தில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக திருவனந்தபுரம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட எஸ்1 பெட்டியில் பயணம் செய்தனர்.
நள்ளிரவு வேலூர் மாவட்டம், காட்பாடி- லத்தேரி இடையே உள்ள சிக்னலில் ரெயில் நின்றது.
அப்போது 35 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் ரெயிலில் ஏறினார். தூக்கத்தில் இருந்த நிஷா நாயரிடம் இருந்த கைப்பையை பறித்து கொண்டு ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.
இதில் அதிர்ச்சியடைந்த நிஷா நாயர் அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு பயணிகள் கண்விழித்தனர். இந்த சம்பவத்தால் ரெயிலில் பரபரப்பு ஏற்பட்டது.
கொள்ளையடிக்கப்பட்ட கைப்பையில் மோதிரம்,கம்மல் உட்பட 5 பவுன் தங்க நகை , 2 செல்போன், 2 வாட்ச் மற்றும் ரூ.3 ஆயிரம் பணம் இருந்தது.
இதுபற்றி ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
காட்பாடி- லத்தேரி இடையே உள்ள இந்த சிக்னலில் தொடர்ந்து ரெயிலில் பயணிகளிடம் கொள்ளையடித்து வருகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை நகர மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஜோலார்பேட்டையிலிருந்து ரெயில் மூலம் சென்னைக்கு தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்காக ரூ.65 கோடி ஒதுக்கீடு செய்தார்.
வேலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.
மேட்டுசக்கர குப்பத்தில் இருந்து குழாய் மூலம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு குடிநீர் கொண்டு வரப்பட்டு ஜோலார்பேட்டையில் ரெயிலில் குடிநீர் நிரப்பும் வசதி செய்யப்பட்டது.
அதன்படி கடந்த ஜூலை மாதம் 12-ந் தேதி முதல் ஜோலார்பேட்டையில் ரெயில் நிலையத்திலிருந்து 50 வேகன்களைக் கொண்ட ரெயில் 25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் வில்லிவாக்கம் ரெயில் நிலையம் சென்றது. அதனை தொடர்ந்து ஜூலை 25-ந்தேதி 2-வது ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயில்கள் மூலம் சென்னைக்கு தினமும் 50 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு சென்றனர். இந்த தண்ணீர் மத்திய சென்னை பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டது.
தற்போது வீராணம் ஏரி நிரம்பியுள்ளது. மேலும் ஆந்திர மாநிலத்தில் பெய்த மழை காரணமாக கிருஷ்ணா நதியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி வருகின்றன. வீராணம், கிருஷ்ணா குடிநீர் சென்னைக்கு வருவது அதிகரித்துள்ளது.
இதனால் ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் குடிநீர் கொண்டு வருவதை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்தனர். இன்று காலை ஜோலார் பேட்டையில் இருந்து 159-வது குடிநீர் ரெயில் புறப்பட்டது. கடைசி குடிநீர் ரெயில் என்பதால் இதற்கு அதிகாரிகள் பூஜை செய்து வழியனுப்பி வைத்தனர்.
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு இதுவரை 39 கோடியே 75 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ரெயிலில் ஒரு தடவை தண்ணீர் கொண்டுசெல்ல ரூ.8.60 லட்சம் செலவாகியுள்ளது. அதன்படி இதுவரை ரெயிலில் சென்னைக்கு தண்ணீர் கொண்டு சென்றதற்கு ரூ.13.67 கோடி வரை செலவாகியுள்ளது.
சென்னையில் குடிநீர் பற்றாக்குறை தீர்ந்து வருவதால் 2 குடிநீர் ரெயிலும் திருப்பி அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:
காட்பாடி தாராபடவேடு இளங்கோ வீதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது40). காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் மெயின் ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
சுரேஷ்குமார் நேற்று இரவு 10.30 மணியளவில் கடையை அடைத்தார். கடையில் இருந்த வியாபார பணம் ரூ.5 லட்சத்தை ஒரு துணிப்பையில் போட்டு கையில் வைத்துக் கொண்டு சில அடி தூரம் நடந்து சென்றார்.
அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் சுரேஷ்குமார் கையில் வைத்திருந்த பணப்பையை பறித்தனர். சுரேஷ்குமார் பணப்பையை விடாமல் பிடித்துக்கொண்டு கொள்ளையர்களுடன் போராடினார். கொள்ளையர்கள் சுரேஷ்குமாரை கீழே தள்ளிவிட்டு பணப்பையுடன் தப்பி சென்றனர். இதனால் பதறிய சுரேஷ்குமார் கத்தி கூச்சலிட்டபடி கொள்ளையர்களை விரட்டி சென்றார். ஆனால் அவர்களை பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து சுரேஷ்குமார் காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் ஏதேனும் இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
வியாபாரியிடம் 5 லட்சம் வழிப்பறி செய்த சம்பவம் காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே காட்பாடி பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது 5 லட்சம் வழிப்பறி சம்பவம் பொதுமக்களிடையே மேலும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
காட்பாடி கல்புதூர் திருவேங்கட முதலியார் தெருவைசேர்ந்தவர் சீனிவாசன். தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி திவ்யா (வயது 25) தம்பதிக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.
கடந்த வாரம் சீனிவாசன் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் திவ்யா மனமுடைந்து காணப்பட்டார். நேற்று வீட்டில் தனியாக இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்து வீட்டில் இருந்த ஆசிட்டை எடுத்து குடித்து விட்டார்.
இதனால் துடிதுடித்த அவர் வீட்டிலேயே இறந்தார். இதனைகண்டு திடுக்கிட்ட அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்த காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கணவர் இறந்த ஒரு வாரத்தில் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி மணல் கடத்தல்காரர்களை கைது செய்து வருகின்றனர்.
விரிஞ்சிபுரம் போலீசார் நேற்று இரவு மேல்மொணவூர் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வந்த 4 மாட்டு வண்டிகளை மடக்கி பிடித்தனர்.
அதனை ஒட்டி வந்த மேல்மொணவூரைச் சேர்ந்த கோபிநாதன் (வயது 28), மோகன் (28), சத்யன் (25), கார்த்தி (38) ஆகியோரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த நாகராஜன் (42) என்பவரை வாலாஜா போலீசார் கைது செய்தனர்.
உமராபாத் அடுத்த பழைய மின்னூரில் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த குணசேகரன் (41) என்பவரை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்கள் 2 பேரையும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.






