என் மலர்tooltip icon

    வேலூர்

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி மீண்டும் ஒரு மாதம் பரோல் கேட்டு வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதியிடம் மனு அளித்துள்ளார்.
    வேலூர்:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும் அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

    நளினி மகள் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்ய 51 நாட்கள் பரோலில் வந்தார். மேலும் பரோலை நீட்டிக்க மனு செய்திருந்தார். ஆனால் ஐகோர்ட்டு அவரது பரோலை நீட்டிக்கவில்லை. பின்னர் செப்டம்பர் 15-ந்தேதி பரோல் முடிந்து வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் நளினி மீண்டும் ஒரு மாதம் பரோல் கேட்டு வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதியிடம் மனு அளித்துள்ளார்.

    இலங்கையில் உள்ள முருகனின் தந்தை நளினியின் மாமனார் உடல்நலக்குறைவாக உள்ளார். அவர் சிகிச்சை பெறுவதற்காக தமிழகத்திற்கு விரைவில் வர உள்ளார். அவர் சிகிச்சை பெறும் காலத்தில் அவருடன் துணையாக இருக்க ஒரு மாதம் பரோல் கேட்டு உள்ளார் என்றனர்.
    அரக்கோணத்தில் ஓடும் ரெயிலில் கணவர் பிள்ளைகள் கண் முன்பு பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    அரக்கோணம்:

    அரக்கோணம் வந்த மும்பை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நெல்லை வியாபாரி மனைவி திடீரென இறந்தார்.

    திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டை சேர்ந்தவர் ராஜா (வயது 52). கடந்த சில வருடங்களுக்கு முன்பு மும்பைக்குச் சென்று வியாபாரத்தில் ஈடுபட்டார். அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    தீபாவளி பண்டிகைக்காக ராஜா அவரது மனைவி அருணா (வயது 49), மற்றும் அவரது மருமகள் ஆகியோருடன் மும்பையில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு வந்தனர். ஏ.சி. முன்பதிவு பெட்டியில் அவர்கள் பயணம் செய்தனர்.

    நேற்று இரவு வேலூர் மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே வந்த போது அருணாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

    அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார். இதனைக்கண்ட அவரது கணவர் மற்றும் மகன் மகள் ஆகியோர் கதறி அழுதனர்.

    ரெயில் அரக்கோணம் வந்ததும் அங்குள்ள டாக்டர் அருணாவை பரிசோதித்தார். அப்போது அவர் இறந்தது உறுதியானது.இதனையடுத்து ரெயில்வே போலீசார் உடலை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர், பிள்ளைகள் முன்பு பெண் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூரில் டெங்கு காய்ச்சலால் மாணவி பலியான சம்பவம் குறித்து அவர் படித்த பள்ளிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. இதுவரை 792 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானத்தை சேர்ந்த சரண்மோகன்ராஜ் என்பவரது மகள் நட்சத்திரா (வயது4). வெட்டுவானத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தார்.

    கடந்த 11-ந்தேதி நட்சத்திரா கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குறையவில்லை. இதனால் நட்சத்திராவை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் காய்ச்சல் குறையாததால் நட்சத்திராவின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்தனர்.

    அதில் நட்சத்திரா டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து டாக்டர்கள் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.

    வேலூர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் தலைமையில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் திருஞானம், பி.டி.ஓ.க்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் டெங்கு காய்ச்சல் பரவ காரணம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் சிறுமி வசித்த வீடு மற்றும் தெருக்களில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு தூய்மையாக இருந்தது.

    இதையடுத்து அந்த மாணவி படித்த தனியார் மெட்ரிக் பள்ளியில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு ஏடீஸ் கொசுக்களின் உற்பத்தி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பள்ளி நிர்வாகத்தை அழைத்து அதை அகற்றினர்.

    மேலும் பள்ளியில் தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனர். டெங்கு கொசுக்கள் இருந்ததால் அந்த பள்ளி ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

    இனி இது போன்று கண்டறியப்பட்டால் அந்த பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் சுகாதாரத்துறையினர் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    வேலூர் அருகே வங்கி பூட்டு உடைத்து மர்மகும்பல் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வேலூர்:

    வேலூர் அடுத்த அரியூரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை வழக்கம்போல் பணிகள் முடிந்து வங்கியை பூட்டிவிட்டு சென்றனர். இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் வங்கியின் முன்பக்க கேட் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து போலீசாருக்கு தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் வந்த பார்த்தனர். வங்கி கேட்டின் பூட்டு மட்டும் உடைக்கப்பட்டிருந்தது

    இது குறித்து வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஏற்கனவே கடந்த 9-ந் தேதி அதே பகுதியில் உள்ள மற்றொரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது.

    தற்போது மீண்டும் மற்றொரு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது ராஜீவ் காந்தி படுகொலை குறித்து பேசிய சீமானை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    வாலாஜா:

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து ராணிப்பேட்டை முத்துக்கடை காந்திசிலை அருகே நகர காங்கிரஸ் தலைவர் அண்ணாதுரை தலைமையில், சீமான் உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நகர துணைத் தலைவர்கள் மோகன், இப்ராஹிம், மாவட்ட செயலாளர் ராணி வெங்கடேசன், நகர துணைத்தலைவர் மோகனசுப்பிரமணியம், நகர செயலாளர் பிரகாஷ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாலாஜி, எஸ்.சி.எஸ்.டி.பிரிவு காந்தி, புலவர் ரங்கநாதன் உள்பட 20 பேர் கலந்துகொண்டனர். அவர்களை ராணிப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

    சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரசார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர்.

    ஆம்பூர், பேரணாம்பட்டு, குடியாத்தம், ஆற்காடு, உமராபாத் போலீஸ் நிலையத்தில் காங்கிரசார் சீமானை கைது செய்யக்கோரி புகார் அளித்தனர்.

    வேலூர்- திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று மாலை திடீரென மழை பெய்ய தொடங்கியது. கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை பகுதியில் 1 மணி நேரம் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    வெம்பாக்கத்தில் கனமழை பெய்தது. மற்ற இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.

    சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. 2 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து 289 கனஅடியாக குறைந்துள்ளது. நீர்மட்டம் 80.95 அடியாக உள்ளது. 59.04 அடி கொள்ளளவு கொண்ட குப்பநத்தம் அணை 44.61 அடியாக உள்ளது அணைக்கு நீர்வரத்து இல்லை.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    திருவண்ணாமலை-32.3

    ஆரணி-3.2

    செங்கம்-9.6

    சாத்தனூர் அணை-9.2

    வந்தவாசி-2.3

    போளூர்-10.8

    கீழ்பென்னாத்தூர்-46.8

    வேலூர்

    வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர், பொன்னை, சோளிங்கர், அம்முண்டி பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. வேலூரில் லேசான சாரல் மழை பெய்தது.

    வாணியம்பாடி, மேல்ஆலத்தூர், குடியாத்தம் ஆகிய இடங்களில் அரை மணி நேரம் மழை பெய்தது.

    வேலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    வேலூர்-3.8

    வாணியம்பாடி-12.4

    ஆலங்காயம்-5.2

    அரக்கோணம்-11.4

    திருப்பத்தூர்-2.2

    மேல்ஆலத்தூர்-13.2

    வடபுதுப்பட்டு-20.3

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் மர்ம காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி பலியானார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 348 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டு 792 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானத்தை சேர்ந்தவர் சரண்மோகன்ராஜ். இவரது மகள் நட்சத்திரா (வயது4). பள்ளிகொண்டாவில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தார்.

    இந்நிலையில் நட்சத்திராவுக்கு கடந்த 11-ந்தேதி கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குறையவில்லை.

    இதனால் பெற்றோர் நட்சத்திராவை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் காய்ச்சல் குறையவில்லை. நட்சத்திராவின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்தனர்.

    அதில் நட்சத்திரா மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து டாக்டர்கள் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.

    வேலூர் மாவட்டத்தில் டெங்குவால் 792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார துறையினர் மாவட்டம் முழுவதும் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 348 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டு 792 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அரக்கோணம், காவேரிப்பாக்கம் பகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாநகராட்சியில் 123 பேருக்கு டெங்கு உள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 அரசு மருத்துவ மனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சேர்த்து மொத்தம் 1000 படுக்கைகள் மட்டுமே உள்ளது.

    இதில் பிரசவ வார்டு போக மீதம் 700 படுக்கைகளே உள்ள நிலையில் 792 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் டெங்கு பாதிப்பு அதிகரித்தால் அரசு ஆஸ்பத்திரிகளில் இடமில்லாத நிலை ஏற்படும் என்பதால் அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.

    சுகாதார துறையினர் மாவட்டம் முழுவதும் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர். வீடு வீடாக சென்று டெங்கு கொசு உள்ளதா? என ஆய்வு செய்கின்றனர்.

    கொசு ஒழிப்பு பணிகளை மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளை ஈடுபடுத்த வேண்டும். டெங்கு பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் முழு சுகாதார பணி மேற்கொள்ள வேண்டும்.

    முற்றிலும் கொசுவை ஒழித்தால் மட்டுமே டெங்குவை கட்டுப்படுத்த முடியும் இதில் உள்ளாட்சி அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் செயல்படுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    திருவண்ணாமலை மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் 16 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வாணியம்பாடி அருகே தீபாவளி விற்பனைக்காக போலி மது தயாரிக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் பகுதியில் சிலர் போலி மதுபானங்களை தயாரிப்பதாக கலால் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரனுக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அவரது தலைமையில் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் மணிவேல், வாணியம்பாடி கலால் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் உள்ளிட்ட போலீசார் மேல்நிம்மியம்பட்டு பகுதியில் உள்ள வீடுகளில் தீவிர சோதனை நடத்தினர்.

    அப்போது பெருமாள்வட்டம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் (வயது 43) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து தங்கராஜ் வீட்டில் அதிரடியாக நுழைந்தனர்.

    அங்கு தங்கராஜ் மற்றும் பெங்களூருவை சேர்ந்த அவரது நண்பரான ஜெகன் (45) ஆகிய 2 பேரும் வீட்டிற்குள் போலி மதுவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். போலீசாரை பார்த்ததும் இருவரும் தப்பியோட முயன்றனர். இதில் தங்கராஜை போலீசார் மடக்கி பிடித்தனர். ஜெகன் தப்பியோடிவிட்டார்.

    2 பேரும் சேர்ந்து தீபாவளி விடுமுறையில் போலி மதுபானங்களை விற்க திட்டமிட்டு இருந்தனர். இதற்காக கோவாவில் இருந்து ஸ்டிக்கர், ஆல்கஹால் மற்றும் எந்திரம் போன்றவற்றை வாங்கி வீட்டில் வைத்திருந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து தங்கராஜை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் போலி மதுபான தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட மூல பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய ஜெகனை தேடி வருகின்றனர்.
    குடியாத்தத்தில் மர்ம நபர்களால் வெட்டப்பட்ட மரத்துக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து அஞ்சலி செலுத்திய பொதுமக்கள், வெட்டிய மரத்திற்கு அருகே 5 மரக்கன்றுகளை நட்டனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம்-சித்தூர் சாலையின் இருபுறமும் பெரிய அளவிலான மரங்கள் உள்ளன. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மரத்தடியில் ஓய்வு எடுத்து செல்வார்கள். இந்த சாலையில் உள்ள பாக்கம் ஊராட்சியில் செல்வபெருமாள் நகருக்கும், மோர்தனா கால்வாய்க்கும் இடையே சாலையோரம் சுமார் 20 ஆண்டுகள் பழமையான பெரிய அளவிலான தூங்குமூஞ்சி மரம் இருந்தது.

    இந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் இந்த மரத்தை வெட்டி சாய்த்துள்ளனர். நேற்று காலையில் இதனைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனையடுத்து பாக்கம் டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வெட்டிய மரத்திற்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து பூஜை செய்தனர்.

    தொடர்ந்து வெட்டிய மரத்திற்கு அருகே 5 மரக்கன்றுகளை நட்டனர். இதில் அ.தி.மு.க. பிரமுகர் பாக்கம் பாஸ்கர், வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் சுரேஷ்குமார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தனிப்பிரிவு ஏட்டு ஹரிதாஸ், கிராம நிர்வாக அலுவலர் செந்தில் உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மரத்தை வெட்டிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மரத்தை வெட்டியதற்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு நிலுவை தொகை வழங்க கோரி விவசாயிகள் இன்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    வேலூர் திருவலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ரூ.32 கோடி கரும்பு நிலுவைத் தொகை பாக்கி உள்ளது. விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகை வழங்காமல் உள்ளனர். இதுபற்றி விவசாயிகள் பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். விவசாயிகள் தரையில் அமர்ந்து நிலுவை தொகையை வழங்க கோரி கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் கிரேஸ்லால் ரிண்டிகிபச்சாவு  விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

    ஆனால் அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கேயே உணவு சமைத்து சாப்பிடுகின்றனர். இன்று 4-வது நாளாக கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.      
    காட்பாடி அருகே காதலியை கத்தியால் குத்திய காதலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வாலாஜா:

    வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவருக்கும் திருநெல்வேலியை சேர்ந்த விஜய்சங்கருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து 2 பேரும் சந்திக்க திட்டமிட்டனர். இதன்படி, விஜய்சங்கர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் காட்பாடி அருகே உள்ள அம்முண்டி கிராமத்துக்கு வந்தார்.

    பின்னர் விஜய்சங்கர் அதே பகுதியில் தங்கினார். இதனால், இருவரும் அடிக்கடி சந்தித்தனர் நேற்று முன்தினம் இரவு விஜய்சங்கரின் அறையில் இருவரும் தனியாக இருந்தனர்.

    அப்போது திடீரென அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு வரை நீடித்த தகராறில் ஆத்திரமடைந்த விஜய்சங்கர் அதிகாலை 2 மணியளவில் இளம்பெண்ணை கத்தியால் சரமாரியாக வெட்டினார். இதில் அலறித் துடித்த இளம்பெண், அவரிடம் இருந்து தப்பித்து கதவை திறந்து வந்து வெளியில் தாழ்ப்பாள் போட்டார்.

    பின்னர் செல்போனில் தனது அண்ணனுக்கு தகவல் கொடுத்தார். இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த அவர், அம்முண்டி கிராமத்துக்கு காரில் சென்றார். அங்கு படுகாயத்துடன் இருந்த சகோதரியை காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.

    காட்பாடி வரும்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் புகழ், காரை மறித்து விசாரித்தபோது நடந்த சம்பவம் தெரிய வந்தது. உடனே, திருவலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து போலீசாரை அம்முண்டிக்கு அனுப்பிவைத்தார்.

    போலீசாரும் விரைந்து சென்று விஜய்சங்கர் வீட்டுக்கதவை திறந்து பார்த்தனர். அங்கு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    அவரது உடலை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×