என் மலர்
வேலூர்
நாட்டறம்பள்ளி:
வெலக்கல் நத்தத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நாட்டறம் பள்ளி அருகேயுள்ள கிராமப்புற மாணவர்கள் படித்து வருகின்றனர். இன்று காலை வெள்ள நாயக்கனேரி மற்றும் சுற்றுபுற கிராமங்களில் இருந்து பள்ளி பஸ்சில் மாணவர்களை ஏற்றி வந்தனர். அப்போது நாட்டறம்பள்ளியில் இருந்து பர்கூர் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ்சும், பள்ளி பஸ்சும் சொரக்காய் நத்தம் என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதி கொண்டன.
இந்த விபத்தில் 2 பஸ்சின் முன்பகுதியில் சேதம் அடைந்தது. ஆனால் பஸ் பயணிகளுக்கோ, பள்ளி மாணவர்களுக்கோ எவ்வித காயமும் ஏற்படவில்லை.
இதையடுத்து மாற்று பஸ் கொண்டு வரப்பட்டு மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திம்மாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் விருப்பாட்சிபுரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது60). ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரி. இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த 18-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். இன்று காலை வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்ற பார்த்தபோது பீரோவில் இருந்த 20 பவுன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து திருநாவுக்கரசு பாகாயம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
காட்பாடி அடுத்த சேவூர் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 25). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 6வயது சிறுமியை மிட்டாய் வாங்கி தருவதாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுபற்றி சிறுமியின் பெற்றோர் காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கு வேலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. மகளிர் கோர்ட்டு நீதிபதி செல்வம் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கினார். அதில் விஜயகுமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,500 அபராதம் விதித்தார். இதனையடுத்து விஜயகுமார் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மெடிக்கல் உரிமையாளர்கள் விற்பனையாளர்களுக்கானடெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு கூட்டம் இன்று நடந்தது.
சுகாதார துணை இயக்குனர் சுரேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
டெங்கு காய்ச்சல் பகலில் கடிக்ககூடிய கொசுவினால் பரவக்கூடியது. ஒரு மாதம் உயிர் வாழக்கூடிய இந்த கொசு 100 முதல் 200 கொசுக்களை உற்பத்தி செய்துவிடும். டெங்கு காய்ச்சலுக்கு உரிய மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை. கொசுவை ஒழிப்பதன் மூலம் இதனை தடுக்க முடியும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்துக்கடைகளுக்கு வந்தால் அவர்களுக்கு டாக்டர்கள் அறிவுரை இல்லாமல் மருந்து மாத்திரைகள் வழங்கக்கூடாது. அரசால் தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது.
அங்கீகாரம் பெற்ற டாக்டர்கள் அறிவுரையை ஏற்று அதற்கான மருந்துகளை மட்டுமே வழங்க வேண்டும். போலி டாக்டர்களுக்கு உடந்தையாக இருக்கக்கூடாது. போலி டாக்டர்கள் குறித்து சுகாதார இணை இயக்குனர் மற்றும் கலெக்டருக்கு புகார் தெரிவிக்கலாம்.
மருந்து கடைகளுக்கு வரும் பொதுமக்களிடம் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பகலில் கடிக்கக்கூடிய கொசுவினால் மட்டுமே டெங்கு பரவுகிறது. இதனால் பகல் நேரங்களில் வீடுகளில் கொசுவர்த்தி கொசுவலை உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டும். நீர்ச்சத்து உள்ள உணவுகள் பழங்களை அதிகம் சாப்பிட வலியுறுத்தவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட மெடிக்கல் உரிமையாளர்கள் விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் அடுத்த மூதூரை சேர்ந்தவர் ரத்தினம் மனைவி சாவித்திரி (வயது 50). ரத்தினம் இறந்துவிட்டதால் தனது 2 மகள்களுடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்றிரவு 11 மணியளவில் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சாவித்திரி மற்றும் 2 மகள்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து கூச்சலிட்டனர்.
இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் அரக்கோணம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீ மற்ற வீடுகளுக்கு பரவாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ஆனால் தீயணைப்பு துறையினர் வருவதற்குள் சாவித்திரி வீட்டில் இருந்த கட்டில், பீரோ, வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
தீவிபத்து குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, தீ விபத்திற்கு மின்கசிவு காரணமா? அல்லது காஸ் கசிவா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற அரக்கோணம் தாசில்தார் ஜெயக்குமார் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வேட்டி, சேலை, அரிசி உள்ளிட்ட அரசு நிவாரண பொருட்களை வழங்கினார்.
வேலூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கொசு புழுக்கள் கண்டறியபட்டு அபராதம் விதித்து வருகின்றனர்.
மாநகராட்சி 2-வது மண்டல அலுவலர் சிவக்குமார், முதுநிலை பூச்சியியல் வல்லுனர் முனுசாமி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் காந்திரோடு, பாபுராவ்தெரு பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட லாட்ஜிகளில் சோதனை செய்தனர்.
அப்போது கொசு புழுக்கள் இருந்த 6 லாட்ஜிகளுக்கு ரூ.2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. சுகாதாரமற்ற முறையில் இருந்த லாட்ஜிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.
அந்த பகுதியில் உள்ள வீடுகளில் நடந்த சோதனையில் 6 வீடுகளில் கொசு புழு இருந்தது தெரியவந்தது. அந்த வீடுகளுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர். மொத்தம் 18 ஆயிரத்து 300 அபராதம் விதித்தனர்.
அரக்கோணம் சோளிங்கர் சாலையில் உள்ள தனியார் உயர்நிலை பள்ளிக்கு சொந்தமான பஸ் இன்று காலை தண்டலம் பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றி வந்தது. அங்குள்ள மெயின் ரோட்டில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் கவிழ்ந்தது.
பஸ்சில் இருந்த மாணவர்களுக்கு அடிபட்டது. அவர்கள் அலறி கூச்சலிட்டனர். இதனை கண்ட பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
பஸ்சில் வந்த மாணவர்கள் தண்டலம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (14), கிஷோர் (10), இமாலயன் (10), தீபக் (9), புவனா (9), முகேஷ் (14), ரேணுகோபால் (14) ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தாசில்தார் ஜெயக்குமார் ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவிகளை பார்வையிட்டார். இதுபற்றி தகவல் அறிந்த பெற்றோர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஜெயிலில் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருகிறார்.
அவருடைய அறையில் ஏற்கனவே ஒரு முறை 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்த வழக்கு வேலூர் கோர்ட்டில் நடந்தது.
இந்த நிலையில் நேற்று முருகனின் அறையில் சிறைத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஆன்ட்ராய்டு செல்போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் அளித்தனர்.
ஜெயிலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் வைத்திருந்ததாக முருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் முருகனுக்கு ஜெயிலில் சலுகைகளை ரத்து செய்ய சிறைத்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
சலுகைகள் ரத்து செய்யப்பட்டால் முருகனை வக்கீல்களை தவிர பார்வையாளர்கள் சந்திக்க முடியாது. மேலும் 15 நாட்களுக்கு ஒரு முறை பெண்கள் ஜெயிலில் உள்ள அவரது மனைவி நளினியுடன் நடைபெறும் சந்திப்பும் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறைக்குள் இருக்கும் சாதாரண கைதிகளுக்கு உறவினர்கள் கொண்டு செல்லும் பொருட்களையே தீவிர சோதனை செய்த பிறகே உள்ளே கொண்டுசெல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். முருகன் முக்கியமான வழக்கில் தண்டனை பெற்றவர். அவருக்கு கொண்டு செல்லப்படும் பொருட்களை மிகவும் தீவிரமாக சோதனை செய்வது வழக்கம்.
அப்படி இருக்கும்போது சிறைக்காவலர்களுக்கு தெரியாமல் முருகன் அறைக்கு எப்படி செல்போன் கொண்டுசெல்ல முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலை குறித்து பேசப்பட்டு வரும் நிலையில் முருகன் அறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு அடுத்த கிருஷ்ணம் பள்ளி சொக்க ரிஷி குப்பம் மலையடிவாரத்தில் முகம் சிதைந்த நிலையில் சுமார், 35 வயது மதிக்கதக்க வாலிபர் பிணம் கிடந்தது.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் லில்லி சாந்தி மேல்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த மேல்பட்டி போலீஸ் சப்-இஸ்பெக்டர் குமரவேல் மற்றும் போலீசார் விரைந்து வந்து வாலிபர் பிணத்தை பார்வையிட்டனர்.
அப்போது வாலிபர் முகம் முழுவதும் சிதைக்கப்பட்டு அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியது. இறந்து கிடந்தவர் நீலநிற லுங்கியும், டி-சர்ட் அணிந்து உள்ளார். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் யாராவது வாலிபரை கொலை செய்து வீசி சென்றனரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிணம் அழுகிய நிலையில் உள்ளதால் டாக்டர் குழுவினர் சம்பவ இடத்திலேயே இன்று பிரேத பரிசோதனை செய்ய உள்ளனர்.
வேலூர்:
வேலூர் புதிய பஸ்நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, திருப்பதி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை உள்பட பல்வேறு நகரங்களுக்கும்,தென் மாவட்டங்கள்,மற்றும் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்த செல்கிறார்கள். பயணிகளின் வசதிக்காக மாநகராட்சி சார்பில் கட்டண கழிவறைகள் கட்டப்பட்டு பொதுமக்கள், பயணிகள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் இதை மாநகராட்சி சரியாக பராமரிக்கவில்லை. இதனால் கழிவறைகளில் இருந்து வெளியேறிய கழிவுநீர் அங்கேயே தேங்கியது. சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் துர்நாற்றம் வீசி வந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் தேசிய துப்புரவு நல ஆணையஉறுப்பினர் ஜெகதீஷ்கிர்மானி வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது கழிவறைகளின் சீர்கேட்டை பார்த்த அவர் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்தார். மேலும் உடனடியாக கழிவறைகளை சீரமைத்து, சுகாதார சீர்கேட்டை தடுக்க உத்தரவிட்டார்.
ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் கழிவறைகளை சீரமைக்காமல், தற்போது 2 கழிவறைகளை மூடிவிட்டனர். இதனால் வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் பஸ் நிலைய பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. பயணிகள் நிற்க முடியாமல் அவதிபடுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் இதில் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டை விட 2 மடங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பரிதாபமாக இறந்தார். அவர் படித்த பள்ளிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனையடுத்து டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்த கலெக்டர் உத்தரவிட்டார்.
களப்பணியாளர்கள், சுயஉதவி குழுவினர், மாணவர்கள் மூலம் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்கள், வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
கொசு புழுக்கள் இருக்கும் நிறுவனங்களுக்கு முதன் முறையாக ரூ.25 ஆயிரமும், வீடுகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. மீண்டும் இருந்தால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் கொசு இருந்தால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதித்து வருகின்றனர்.
வேலூர் மாநகராட்சி நகர் நல அலுவலர் மணிவண்ணன் தலைமையில் பணியாளர்கள் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் வீடு வீடாக ஆய்வு செய்து டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
அதன்படி கடந்த 1-ந்தேதி முதல் நடத்திய ஆய்வில் 37 இடங்களில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் நிலை இருந்ததை கண்டுபிடித்து வீடு, நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் பிற பகுதிகளில் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.3½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.
கிராம பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






