என் மலர்
வேலூர்
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து அசாம் மாநிலம், கவுகாத்தி அருகே உள்ள சில்சார் பகுதிக்கு அரோனை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. நேற்று காலை 9.30 மணிக்கு ரெயில், அரக்கோணம் ரெயில் நிலையத்தில் 4-வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. அப்போது அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்கு செல்லும் பயணிகள் மற்ற ரெயில்கள் தாமதமாக வந்ததால் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் செல்வதற்காக ரெயில் பெட்டியில் ஏறினார்கள்.
ரெயில் என்ஜினில் இருந்து வரிசையாக முன்பதிவு செய்யப்பட்ட 2 பெட்டிகளில் கதவு பூட்டப்பட்டு இருந்ததால் திறந்து இருந்த மற்றொரு முன்பதிவு பெட்டியில் பயணிகள் ஏறினார்கள். அப்போது ரெயில் மெதுவாக புறப்பட்டது. என்ஜினில் இருந்து 4-வது முன்பதிவு பெட்டியில் 40 வயது மதிக்க தக்க பெண் பயணி ஒருவர் ஏறினார். இதனை பார்த்த பெட்டியில் இருந்த வடமாநில பயணிகள் சிலர் அந்த பெண்ணை ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். இதில் அந்த பெண் ரெயிலில் இருந்து பிளாட்பாரத்தில் விழுந்தார். இதில் அவர் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
இதை பிளாட்பாரத்தில் இருந்த மற்ற பயணிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பெண் கீழே விழுந்ததால் உடனே ரெயில் நிறுத்தப்பட்டது. அப்போது ரெயில் நிலையத்தில் நின்ற 100-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில் பெட்டியில் ஏறி வடமாநில பயணிகளிடம் வாக்குவாதம் செய்தனர். அவர்களை முற்றுகையிட்டும், ரெயிலை நிறுத்தியும் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் ரெயில்வே போலீசார், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனையடுத்து அதிகாரிகள், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். அதன் பின்னர் போராட்டம் நடத்திய பயணிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதன் காரணமாக அரோனை எக்ஸ்பிரஸ் ரெயில் 30 நிமிடம் காலதாமதமாக சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது.
இதன் காரணமாக அரக்கோணம் வழியாக சென்ற மற்ற ரெயில்களும் தாமதமாக சென்றன.
வேலூர் அடுத்த அரியூரில் தேசிய வங்கி இயங்கி வருகிறது. கடந்த 5-ந்தேதி மாலை ஊழியர்கள் வழக்கம்போல் வங்கியை பூட்டிச்சென்றனர். விடுமுறை காரணமாக 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை வங்கி அடைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி காலை ஊழியர்கள் வங்கியை திறந்தனர். அப்போது வங்கியின் பின்பக்க ஜன்னல் கம்பி உடைந்து கிடந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வங்கியில் பணம், நகை வைக்கப்பட்டிருந்த லாக்கர்கள் உடைக்கப்படவில்லை.
இந்த கொள்ளை முயற்சி குறித்து வங்கி மேலாளர் ராஜேந்திரன் அரியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் மற்றொரு தேசிய வங்கியின் பூட்டை உடைத்து கடந்த 17-ந் தேதி நள்ளிரவு மர்மகும்பல் கொள்ளை அடிக்க முயன்றது. அந்த சமயத்தில் ரோந்து போலீசார் வந்ததையடுத்து மர்மகும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் வங்கி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் முகமூடி அணிந்த 2 பேர் வங்கியில் கொள்ளை அடிக்க முயன்றது தெரியவந்தது.
இந்த நிலையில் வங்கிகளில் நடந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை பிடிக்க வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் அரியூர் பகுதியில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் கொள்ளை முயற்சி நடந்த நேரத்தில் வங்கியின் அருகே உள்ள வீட்டின் முன்பாக பைக் ஒன்று நின்று கொண்டிருந்தது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த பைக்கின் உரிமையாளரான அரியூர் ஜீவா நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 21) பிடித்து விசாரித்தனர்.
அவர் அதே பகுதியை சேர்ந்த அன்பு மகன் கிருஷ்ணா (25) அவருடன் சேர்ந்து பணத்துக்கு ஆசைப்பட்டு முகமூடி அணிந்து 2 வங்கிகளிலும் கொள்ளை அடிக்க முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
வேலூர்:
ஓச்சேரியை அடுத்த மாமண்டூர் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 55). இவர் ஓச்சேரியில் உள்ள தனியார் என்ஜனீயரிங் கல்லூரியின் பெண்கள் விடுதியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் விடுதியில் துப்புரவு பணிக்கு சென்ற சரஸ்வதி அன்றிரவு வீட்டுக்கு வரவில்லை. நேற்று காலை அவர், மாமண்டூர் செல்லும் சாலையில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மகள் கலா காவேரிப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை முடிந்து சரஸ்வதியின் உடலை உறவினர்கள் வாலாஜா அரசு மருத்துவ மனையில் இருந்து மாமண்டூர் கிராமத்துக்கு கொண்டு செல்லாமல் நேரடியாக ஓச்சேரியில் உள்ள தனியார் கல்லூரிக்கு இரவு 7 மணியளவில் கொண்டு சென்றனர்.
அங்கு கல்லூரி முன்பு சரஸ்வதியின் உடலை வைத்து அவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு 1 மணி வரை போராட்டம் நடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவேரிப்பாக்கம் போலீசாரும், கல்லூரி நிர்வாகிகளும் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில் சுமுக தீர்வு ஏற்பட்டதால் கலைந்து சென்றனர்.
வேலூர்:
வாணியம்பாடி அருகே உள்ள வளையாம்பட்டை சேர்ந்தவர் சீனிவாசன், ஜெயலட்சுமி. இவர்களுக்கு சொந்தமான 2½ ஏக்கர் நிலத்தை தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக கடந்த 2003-ம் ஆண்டு கையகப்படுத்தினர்.
இந்த நிலத்திற்கு ரூ.42 லட்சம் வழங்குவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த தொகை போதாது என நிலத்தின் உரிமையாளர்கள் வேலூர் மாவட்ட முதன்மை கோர்ட்டு வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த 2017-ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு ரூ.5 கோடி வழங்க உத்தரவிட்டார்.
ஆனால் இந்த தொகையை வழங்காமல் மாவட்ட நிர்வாகம் இழுத்தடித்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இன்று வேலூர் கோர்ட்டு அமீனாக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரின் கார்களை கையகப்படுத்த போவதாக தெரிவித்தனர். ஆனால் அந்த 2 கார்களும் அங்கு இல்லை. இதனால் அவர்கள் திரும்பி சென்றனர்.
இதுபற்றி அவர்கள் கூறுகையில்:- நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக கலெக்டர் அலுவலக பொருட்கள் ஜப்தி செய்ய தற்போது 3-வது முறையாக வந்துள்ளோம். ஆனால் இங்குள்ள ஊழியர்கள் தடுத்து நிறுத்துகிறார்கள். அடுத்த முறை போலீஸ் பாதுகாப்பு கேட்போம். அதற்குப் பிறகு ஜப்தி செய்வோம் என்றனர்.
பனப்பாக்கம்:
நெமிலி அடுத்த வேட்டாங்குளத்தை சேர்ந்தவர் மணிகண்டன் கூலி தொழிலாளி. இவரது மகன் யுவராஜ் (வயது 2) கடந்த 16-ந் தேதி மணிகண்டன் குளிப்பதற்காக வீட்டுக்கு வெளியே உள்ள அடுப்பில் வெந்நீர் காயவைத்துள்ளார். அப்போது அங்கு விளையாடிகொண்டிருந்த யுவராஜ் அடுப்பின் மீது இருந்த பாத்திரத்தை பிடித்துள்ளார்.
இதில் பாத்திரத்தில் இருந்த வெந்நீர் யுவராஜ் உடல் முழுவதும் கொட்டியது. இதனால் யுவராஜ் வலியால் அலறி துடித்தான். குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட பெற்றோர் குழந்தையை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை யுவராஜ் பரிதாபமாக இறந்தான்.
இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் விருப்பாட்சிபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் துண்டிக்கப்பட்டது. கடந்த 3 மாதங்களாக அப்பகுதியில் சீரான குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை விருப்பாட்சிபுரம் பஸ் நிலையம் அருகே சாலை மறியல் செய்தனர்.
வேலூர்- ஆரணி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாகாயம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மகாத்மா காந்தியின் 150ஆம் ஆண்டு விழாவையொட்டி சமூக விழிப்புணர்வு பாத யாத்திரை வேலூர் காங்கேயநல்லூரில் நடந்தது. முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.
தமிழக மக்கள் அனைவரும் இந்த தீபாவளியை கதராடை அணிந்து தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்து தங்களது வீடுகளில் விருந்து படைத்துக் கொண்டாட வேண்டும். அவ்வாறு கொண்டாடும் போது இறைவனே தங்களது வீடுகளுக்கு வந்து உணவு அருந்தியதற்கு சமமாகக் கருதுகிறேன்.
முரசொலி அறக்கட்டளை கட்டடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்பது குறித்து கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே ம.திமு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆதாரத்துடன் உறுதிப்படுத்தியுள்ளார். அவை தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. உடனடியாக வைகோ திமுக தலைவர் ஸ்டாலினிடம் எடுத்துக்கூறி பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்கச் செய்ய வேண்டும். அவ்வாறு ஒப்படைக்க வேண்டியது தி.மு.க.வின் கடமையாகும்.

ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுயிக் தமிழகத்தின் பஞ்சம் போக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே முல்லைப்பெரியாறு அணையை கட்டினார். அதன்படி, முல்லைப்பெரியாறு அணை 999 ஆண்டுகளுக்கு தமிழகத்துக்கு சொந்தமானதாகும். ஏற்கனவே நூறு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், இன்னும் 899 ஆண்டுகளுக்கு அந்த அணை மீது தமிழகத்துக்கு உரிமை உள்ளது.
இந்த அணைக்கு கேரளம் ஒருபோதும் உரிமை கொண்டாட முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வாணியம்பாடி அருகே வெலதிகாமணிபெண்டா, அண்ணாநகர், தும்பேரி ஆகிய பகுதிகளிலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக வந்த தொடர்புகாரின் பேரில், அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலர், பறக்கும் படை தனி தாசில்தார், குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு கடத்தப்பட்ட பொது விநியோக திட்ட அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர்.
கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் முடிய பகுதியில் வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் பறக்கும் படை தாசில்தார் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10 வாகனங்களுடன் 4541 கிலோ ரேசன் அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது. மற்றும் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு காவல்துறையினரால் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 12 வாகனங்களுடன் 3470 கிலோ அரிசி கைப்பற்றப்பட்டும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாணியம்பாடி வெலதிகாமணிபெண்டா, அண்ணாநகர், தும்பேரி ஆகிய பகுதிகளில் அரிசி கடத்தலை முற்றிலும் தடுக்கும் பொருட்டு கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர், அனைத்து அலுவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு தொடர்ந்து இப்பணியினை கண்காணித்திட அறிவுரை வழங்கியுள்ளார்.
மேலும் அனைத்து அலுவலர்களும் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு பகலாக வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலர், பறக்கும் படை தாசில்தார் மேலும், கலெக்டர் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்து குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்திட குடிமை பொருள் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
எனவே சட்ட விரோதமாக பொது விநியோக திட்ட பொருட்களை கடத்துபவர்கள் உதவும் வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர்:
குடியாத்தம் அக்ராவரம் அருகே உள்ள மேல்ரங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் அறிவரசன் இவரது மனைவி சங்கீதா. இவர்களது மகள்கள் புவியரசி (வயது 13), திவ்யா (11).
கடந்த 5 நாட்களுக்கு முன்பு சிறுமி இருவரும் மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்களை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி திவ்யா நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
காட்பாடி விருதம்பட்டு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மனைவி கோமதி. இவர்களுக்கு 1 வயதில் ஜனனி என்ற பெண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது.
நேற்று காலையில் ஜனனியை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜனனியை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
நாட்டறம்பள்ளி அடுத்த வெள்ளநாயக்கனேரியை சேர்ந்தவர் அகிலன். இவரது மகன் கிரண்குமார் (வயது5). கடந்த 3 நாட்களுக்கு முன்பு கிரண்குமாருக்கு காய்ச்சல் அடித்தது.
திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தாலும் காய்ச்சல் குறையவில்லை. மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிரண்குமார் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
அவரது உடல் வெள்ளநாயக்கனேரிக்கு இன்று கொண்டு வரப்பட்டது. சிறுவனின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இதுபற்றி தகவலறிந்த சுகாதார துறையினர் அங்கு முகாமிட்டு டெங்கு கொசு ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஜோலார்பேட்டை நியுஓட்டல் தெருவை சேர்ந்தவர் அருண் (வயது 35). இவர் ஜோலார்பேட்டை பஸ் நிலையம் வாணியம்பாடி, திருப்பத்தூர் மெயின் ரோட்டில் பழைய கார், பைக் வாங்கி விற்பனை செய்யும் ஷோரூம் வைத்துள்ளார்.
இவரது மனைவி சுதா (வயது 35). நேற்று காலை கார் வாங்குவதற்காக அருண் வேலூர் வந்துள்ளார்.
அவரது மனைவி மட்டும் ஷோரூமில் தனியாக இருந்தார். அப்போது டிப்-டாப் உடையணிந்த வாலிபர் ஒருவர் வந்துள்ளார். தனது மனைவிக்கு ஒரு பைக் வாங்க வேண்டுமென கூறி பணத்தை காண்பித்தார்.
இதை நம்பிய சுதா பைக்கை சோதனை செய்வதற்காக ஸ்டாட் செய்தபோது ஸ்டாட் ஆகவில்லை. அப்போது அந்த வாலிபர் சுதாவின் துப்பட்டாவை பிடித்து இழுத்து கீழே தள்ளி அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயின் மற்றும் கல்லாவில் இருந்த ரூ.45 ஆயிரம் பணம் ஆகியவற்றை எடுத்து கொண்டு பைக்கில் தப்பி சென்று விட்டார்.
செயின் அறுத்த போது சுதாவின் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சுதா ஜோலார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா நகராட்சிக்கு உட்பட்ட 24வது வார்டு பல்லி வெங்கடாஜலபதி தெரு, 23வது வார்டு லாலாபேட்டை தெத்து தெரு, கல்லூர்பேட்டை தெரு ஆகிய பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இதில் பல்லி வெங்கடாஜலபதி தெருவில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் செல்போன் டவர் அமைப்பதாக அப்பகுதியில் பொதுமக்களுக்கு தகவல் தெரியவந்தது. இதனையடுத்து இன்று காலை பல்லி வெங்கடாஜலபதி தெரு, லாலாப்பேட்டை தெத்து தெரு, கல்லூரி பேட்டை தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் செல்போன் டவர் அமைக்கும் இடத்தில் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சில பேர் பள்ளத்தில் குச்சிகளையும் கற்களையும் செல்போன் டவர் பள்ளத்தில் போட்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் செல்போன் டவர் அமைத்தால் முதியவர்கள் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையில் உள்ளார்.
ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் அவர்கள் இருவரும் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேசி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 18-ந் தேதி சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் முருகன் அறையில் இருந்து ஆன்ட்ராய்டு செல்போன் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முருகன்-நளினி சந்திப்பு உள்பட சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 3 மாதத்திற்கு அவர் வக்கீல் தவிர வேறு யாரையும் சந்திக்க முடியாது. கடித போக்குவரத்து அனுமதி இல்லை.
இதனையடுத்து முருகன் உயர் பாதுகாப்பு பிரிவில் உள்ள வேறு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முருகன் ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த அறையில் நேற்று சிறைத்துறை தனிக்குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது 2 சிம்கார்டு, 1 சார்ஜர் சிக்கியது.இதுபற்றி பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை குறித்து பேசப்பட்டு வரும் நிலையில் முருகன் அறையில் இருந்து மேலும் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.






