என் மலர்
வேலூர்
வாலாஜா:
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் அண்ணாநகரை சேர்ந்தவர் அமர்நாத் (வயது32). சென்னையில் சினிமா கம்பெனியில் வெல்டராக வேலை செய்து வருகிறார். சிப்காட் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டியன் (22). சினிமா துறையில் உதவியாளராக வேலை செய்து வந்தார்.
நண்பர்களான அமர்நாத், தங்க பாண்டியன் 2 பேரும் தீபாவளி கொண்டாட கடந்த சனிக்கிழமை ஊருக்கு வந்தனர். தீபாவளியையொட்டி நேற்று மாலை அண்ணாநகரில் உள்ள காலியிடத்தில் மது அருந்த முடிவு செய்தனர். அப்போது தங்க பாண்டியன் தன்னிடம் பணம் இல்லை. எனவே மதுவாங்கி தருமாறு அமர்நாத்திடம் கேட்டுள்ளார்.
அமர்நாத்தும் என்னிடம் பணம் இல்லை என கூறினார். இதனால் நண்பர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
அப்போது தங்க பாண்டியன், அமர்நாத்தை தாக்கியுள்ளார். அமர்நாத் தன்னிடம் இருந்த கத்தியால் தங்கபாண்டியனை வெட்டினார்.
இதனால் ஆத்திரமடைந்த தங்கபாண்டியன் தனது அண்ணன் முத்து (25), தம்பி கார்த்திக் (18) ஆகியோருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணன், தம்பிகளுடன் தங்கபாண்டியனும் சேர்ந்து அமர்நாத்தை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அமர்நாத் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். இதையடுத்து 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
தகவல் அறிந்த அமர்நாத் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக விஷாரம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அமர்நாத் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) திருநாவுக்கரசு, சப்-இன்ஸ்பெக்டர் அருண்ராஜ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தங்கபாண்டியன், முத்து, கார்த்திக் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.
7 பேரையும் முன்கூட்டி விடுதலை செய்ய கவர்னருக்கு சட்டப்பிரிவின் கீழ் பரிந்துரைசெய்ய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.
சிறையில் உள்ள 7 பேரையும் கவர்னர் விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர் பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று கவர்னர் தெரிவித்துவிட்டதாக தகவல் பரவியது. ஆனால் இது குறித்து அதிகார பூர்வமாக தகவல் வரவில்லை.
வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நளினி அவரது மகள் திருமண ஏற்பாட்டுக்காக 51 நாட்கள் பரோல் கேட்டார். கோர்ட்டு உத்தரவுப்படி அவருக்கு பரோல் வழங்கப்பட்டது.
ஆனால் திருமண ஏற்பாடுகள் எதுவும் முடிவு செய்யவில்லை இதனையடுத்து பரவலை நீட்டிக்க கோரி நளினி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஐகோர்ட்டு நிராகரித்தது.
கடந்த சிலநாட்களுக்கு முன்பு வேலூர் ஜெயிலில் உள்ள முருகன் அறையில் இருந்து ஆண்ட்ராய்டு செல்போன் 2 சிம்கார்டு, ஒரு ஹெட்செட் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக முருகன் மீது பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதை தொடர்ந்து அவருக்கு ஜெயிலில் வழங்கப்படும் சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெண்கள் ஜெயிலில் உள்ள நளினி முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நேற்று சிறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தார்.
இதனை அடுத்து இன்று காலை உணவை சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தெரிவித்துள்ளார் என சிறை அதிகாரிகள் கூறினர்.
நளினி உண்ணாவிரத போராட்டத்தால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பஸ் நிலையம் அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. தீபாவளி பண்டிகை என்பதால் ஏ.டி.எம்.மில் பணம் அதிகளவில் வைக்கப்பட்டிருந்தது.
ஏ.டி.எம். மையத்திற்கு காவலாளி இல்லை. இதனை நோட்டமிட்ட திருட்டு கும்பல் நள்ளிரவில் ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தின் பணம் இருக்கும் பகுதியில் உடைக்க முயன்றனர்.
அது முடியாததால் அவர்கள் தயாராக கொண்டு வந்த கியாஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம்.மை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்தனர். சி.சி.டி.வி. கேமராவையும் உடைத்தனர்.
இதேபோல் அம்பலூரில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தெக்குபட்டு தேசிய நெடுஞ்சாலையையொட்டி தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது.
இந்த மையத்திற்குள் நுழைந்த கும்பல் கியாஸ் வெல்டிங் மூலம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர். 2 கொள்ளை சம்பவமும் ஒரே மாதிரி நடந்துள்ளது.
ஏ.டி.எம். எந்திரத்தின் உள்புறம், வெளிபுறங்களில் மிளகாய்பொடி தூவி விட்டு சென்றுள்ளனர்.
இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அம்பலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த கொள்ளையில் வடமாநில கும்பல் ஈடுபட்டார்களா? அல்லது உள்ளூரை சேர்ந்தவர்கள் ஈடுபட்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 ஏ.டி.எம். மையங்களில் எவ்வளவு பணம் கொள்ளை போனது என உடனடியாக தெரியவில்லை.
தீபாவளி பண்டிகை என்பதால் பணம் அதிகளவில் வைக்கப்பட்டிருக்கலாம் இதனால் லட்சக்கணக்கில் பணம் கொள்ளை போயிருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. வங்கி அதிகாரிகள் வந்தால்தான் கொள்ளை போன பணம் எவ்வளவு என்பது தெரியவரும்.
கொள்ளை நடந்த 2 ஏ.டி.எம். மையத்திற்கும் காவலாளிகள் கிடையாது. வேலூர் மாவட்டத்தில் அனைத்து ஏ.டி.எம். மையங்களுக்கும் காவலாளிகள் நியமிக்கப்பட வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியிருந்தனர்.
போலீசாரின் அறிவுரையை வங்கிகள் ஏற்காததால் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. காவலாளி நியமிக்கப்பட்டிருந்தால் கொள்ளையை தடுத்திருக்கலாம் என்று போலீசார் கூறினர்.
ஏற்கனவே வாணியம்பாடி, திருப்பத்தூரில் உள்ள வீடுகள், கோவில்களில் 2 மாதமாக தொடர் கொள்ளை சம்பவம் நடந்து வந்தது.
இதனால் போலீசார் இரவில் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். இதில் 5 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடம் மீண்டும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர்:
தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் துணிகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக பஜார் வீதிகளில் குவிகின்றனர் .வேலூர் மார்க்கெட்டில் நேற்று மாலை பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
இதேபோல் காட்பாடி ரோடு அண்ணாசாலை ஆகிய இடங்களில் உள்ள ஜவுளி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
நேற்று மாலை 6 மணி முதல் வாகன நெரிசல் ஏற்பட தொடங்கியது. வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கிரீன் சர்க்கிளில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து போலீசார் மற்றும் போலீஸ் நண்பர்கள் குழுவினர் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் வாகனங்கள் க்ரீன் சர்க்கிள் அருகே வெளியேற முடியாமல் சிக்கின .
தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுவதால் பஸ்நிலையம் நிரம்பி வழிகிறது. மேலும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பஸ்களில் முண்டியடித்து ஏறுகின்றனர்.
பஸ்நிலையத்தில் இருந்து வெளியே மற்றும் உள்ளே வரும் வாகனங்கள் நெரிசலில் சிக்கின. புதிய பஸ் நிலையத்தில் இருந்து லட்சுமி தியேட்டர் வரை வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது .
இன்று தீபாவளி பண்டிகைக்கு வெளியூர் செல்பவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் .மேலும் துணிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குபவர்கள் இருசக்கர வாகனங்களில் அதிக அளவில் வெளியே வருவார்கள்.
இதனால் இன்று மேலும் நெரிசல் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க கூடுதல் போக்குவரத்து போலீசார் நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி கிளை சிறை 2-ம் நிலை காவலர் இளஞ்செழியன். இவர் கடந்த 22-ந் தேதி இரவு குடிபோதையில் தள்ளாடியபடியே பணிக்கு வந்தார்.
தொடர்ந்து அங்கிருந்த கைதிகள், கிளை சிறை பணியாளர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டார். தட்டிக் கேட்ட சிறை காவலர்களிடமும் தகாத வார்தைகளால் பேசியபடி சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக ரகளையில் ஈடுபட்டார்.
இதுகுறித்து வேலூர் மத்திய சிறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் சிறைக்காவலர் இளஞ்செழியன் ரகளையில் ஈடுபட்டதை வீடியோ எடுத்து சிறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வேலூர் ஜெயில் சூப்பிரண்டு ஆண்டாள் விசாரணை நடத்தி சிறைக்காவலர் இளஞ்செழியனை சஸ்பெண்டு செய்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
அரக்கோணம்:
அரக்கோணம் வீட்டு வசதி வாரிய சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. பணிகள் முடிந்து நீண்ட நாட்கள் ஆகியும் சிமெண்ட் சாலை அமைக்காததால் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் அவ்வழியாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். இது குறித்து நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும் தற்போது பெய்த மழையால் சாலை மேலும் சேதமடைந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை அரக்கோணம் நகராட்சி அலுவலகம் அருகே திருத்தணி சாலையில் 100-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் 2 பக்கமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் வேலைக்கு செல்வோர் அவதி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் டி.எஸ்.பி மனோகரன், டவுன் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம். தாலுகா இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர் களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் நகராட்சி அலுவலர்கள் நேரில் வந்து உறுதிமொழி அளித்தால் மட்டுமே மறியலை கைவிட முடியும் என கூறினர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களின் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் மறியலில் ஈடுபட்டவர்கள் சிதறி ஓடினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. மறியல் காரணமாக சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட தனி அலுவலர் சிவனருள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று டெங்கு பாதிப்பு குறித்து மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வகுமாரிடம் கேட்டறிந்தார்.
பின்னர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வார்டுகளுக்கு சென்று நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார் மேலும் மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை செய்யும் இடம் மாத்திரை வழங்கும் இடம் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமிகள் பாதிக்கப்பட்ட வார்டுகளுக்கு சென்று பார்வையிட்டார்.
அரசு மருத்துவ மனையில் டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு செய்தோம் தற்போது மருத்துவமனையில் சிறுவர் சிறுமியர் உள்பட 37 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு டெங்கு அறிகுறி எதுவும் இல்லை.
அனைத்து பகுதிகளில் கொசு ஒழிப்பு புகை மருந்து உட்பட பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது வீட்டில் உள்ள அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள பழைய டயர் பிளாஸ்டிக் பொருட்களில் தண்ணீர் தேங்கி உள்ளதா? என எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் அரசு டெங்கு ஒழிப்பு குறித்து தீவிரம் காட்டி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.22 கோடியில் கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை ஆய்வு செய்து உடனடியாக முடிக்க உத்தரவிட்டார்.
டாக்டர்கள் பிரபாகரன், சிவக்குமார், குமரவேல், பொதுப்பணித்துறை உதவி என்ஜினீயர்கள் விஜயகுமார், சங்கர், ஆறுமுகம் உடனிருந்தனர்
அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்கள் முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் உதவி டாக்டர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதுதவிர மாவட்டத்திலுள்ள 13 அரசு ஆஸ்பத்திரிகள் 90 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்கள் என மொத்தம் 600 பேர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு ஆஸ்பத்திரிகளில் அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் பணியில் உள்ளனர். மேலும் அனைத்து அரசு ஆஸ்பத்திரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவ வார்டு டாக்டர்கள் பணியில் உள்ளனர். ஆனால் இவர்கள் கையெழுத்திடாமல் பணி செய்து வருகின்றனர்.
இதனால் உயிர் காக்கும் மருத்துவத்தில் பிரச்சனைகள் இல்லை. ஆனால் ஆஸ்பத்திரிக்கு வரும் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய தொடங்கியது. காவேரிபாக்கம், வாலாஜா, மேல் ஆலத்தூர், காட்பாடி, வடபுதுப்பட்டு, சோளிங்கர், ஆற்காடு, ஆம்பூர் ஆகிய இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்ததால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வாணியம்பாடி, ஆலங்காயம், அரக்கோணம் ஆகிய பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது .மற்ற இடங்களில் பலத்த மழை பெய்தது. திருப்பத்தூரில் மழை இல்லை. தொடர் மழையால் ஏரிகளிலும் மழைநீர் தேங்கி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
வேலூர்- 37.3
வாணியம்பாடி- 3.4
ஆலங்காயம்- 3.2
அரக்கோணம்-5.2
காவேரிப்பாக்கம்- 66.6
வாலாஜா- 49.4
ஆற்காடு- 44.2
மேல் ஆலத்தூர்- 48.6
காட்பாடி- 53.2
அம்முண்டி- 25.2
கேத்தாண்டபட்டி- 67.2
வடபுதுபட்டு- 65.2
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. போளூர் சேத்துப்பட்டு வந்தவாசி கலசப்பாக்கம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்தது. திருவண்ணாமலை தண்டராம்பட்டு பகுதிகளில் சாரல் மழை மட்டுமே பெய்தது.
சாத்தனூர் அணைக்கு 694 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது அணையின் நீர்மட்டம் இன்று காலை 84.6 கன அடியாக இருந்தது 59.04 அடி கொண்ட குப்பநத்தம் அணையில் இருந்து 250 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லை. இதனால் அணையின் நீர்மட்டம் 38.21 கன அடியாக குறைந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
சாத்தனூர் அணை- 4.2
போளூர்- 40.2
திருவண்ணாமலை- 3.1
சேத்துப்பட்டு- 33.2
கீழ்பென்னாத்தூர்- 3.2
வெம்பாக்கம்- 74
ஜோலார்பேட்டை:
சென்னை வளசரவாக்கம் கெங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 47). டி.வி. நாடகங்களில் கேமரா ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ராகவி தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
சசிகுமார் வேலை பார்த்த ஸ்டுடியோவில் இருந்த கேமராவை ரூ.3 லட்சத்திற்கு அடமானம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அவரால் மீட்டு நிறுவனத்துக்கு திருப்பி தர முடியவில்லை.
இதனையடுத்து ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சசிகுமார் மீது புகார் அளித்தனர்.
இதனால் மனமுடைந்த சசிகுமார் கடந்த 9-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் நேற்று வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பஸ் நிலையம் அருகே உள்ள ஏரிக்கரையில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் சசிகுமார் பிணமாக தொங்கினார். அவர் பிணமாக தொங்குவதை கண்ட பொதுமக்கள் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அவரது சட்டைப் பையிலிருந்த மணிபர்சில் மனைவி குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட போட்டோ இருந்தது.
மேலும் அவரது செல்போன் மூலம் அவர் யார் என்பதை போலீசார் தெரிந்து கொண்டனர். இதுபற்றி வளசரவாக்கத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அவரது மனைவி ராகவி சசிகுமார் சாவில் சந்தேகம் இருப்பதாக ஜோலார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கீழ் மத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 50) விவசாயி. இவருக்கு திருமணமாகி மீனா என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர்.
மூத்த மகளுக்கு இன்னும் 10 நாட்களில் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை சரவணன் வீட்டிலிருந்து சலூன்கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அவர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலை காப்புக்காடு புலியானூர் என்ற பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அதில் இருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றி தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
திருப்பத்தூர் தாலுகா போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






