என் மலர்tooltip icon

    வேலூர்

    ஆம்பூர் அருகே தண்ணீர் பேரலில் தவறி விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே உள்ள வீராங்குப்பத்தை சேர்ந்தவர் வீரமணி என்கிற செல்வபாண்டியன் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர். இவரது மனைவி ரம்யா, வெங்கடசமுத்திரம் தபால் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.

    இத்தம்பதிக்கு 3 மகள்கள். 2-வது மகள் யுவந்திகா (வயது4). இன்று காலை செல்வபாண்டியன் தம்பதியினர் வேலைக்கு சென்று விட்டனர். யுவந்திகா அவரது பாட்டி கண்காணிப்பில் இருந்தார். பாட்டி வீட்டின் அருகே துணி துவைத்துக் கொண்டிருந்தார்.

    அப்போது யுவந்திகா அருகே விளையாடிக் கொண்டிருந்தார். துவைத்த துணிகளை காயப்போடுவதற்காக பாட்டி சென்றார்.

    அந்த நேரத்தில் தண்ணீர் பேரனை எட்டிப்பார்த்த யுவந்திகா அதற்குள் தவறி விழுந்து விட்டார். மூச்சுத் திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    திரும்பி வந்த பாட்டி குழந்தை பேரலுக்குள் கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். அவரை தூக்கிக் கொண்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    உமராபாத் போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேலூர் ஜெயிலில் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் நளினி, முருகனிடம் ஜெயில் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். பெண்கள் ஜெயிலில் முருகனின் மனைவி நளினி அடைக்கப்பட்டுள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகன் அடைக்கப்பட்டிருந்த அறையில் சிறை காவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது அவரது அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு ஆண்ட்ராய்டு செல்போன், 2 சிம்கார்டு, ஹெட்செட் பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து முருகனும், அவரது மனைவி நளினியும் சந்திக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் முருகனுக்கு ஜெயிலில் வழங்கப்படும் சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தனி அறையில் முருகன் அடைக்கப்பட்டுள்ளார். இதனை கண்டித்து முருகன் சாப்பிட மறுத்து வருகிறார்.

    இன்று 15-வது நாளாக முருகன் உண்ணாவிரதம் இருக்கிறார். அவரை நேற்று வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது எங்கள் விடுதலை மற்றும் பரோலை தடுக்க ஜெயிலில் திட்டமிட்டு சதி செய்துள்ளனர். மேலும் தனி அறையில் அடைத்து சித்ரவதை செய்வதாக நிருபர்களிடம் அவர் கூறினார்.

    முருகனை தனி அறையில் அடைக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவரது மனைவி நளினியும் பெண்கள் ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று 7-வது நாளாக அவர் சாப்பிட மறுத்து உண்ணாவிரதம் இருந்தார்.

    உண்ணாவிரதம் இருந்து வரும் நளினி-முருகன் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டு சிறைத்துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 2 பேரும் உடல் நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    நளினியிடம் ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வலியுறுத்தினர்.

    ஆனால் நளினி தனது கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதத்தை கைவிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து 2 பேரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    வேலூர் சிறையில் தனி அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக நீதிமன்றத்தில் ஆஜரான முருகன் தெரிவித்துள்ளார்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். பெண்கள் ஜெயிலில் முருகனின் மனைவி நளினி அடைக்கப்பட்டுள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகன் அடைக்கப்பட்டிருந்த அறையில் சிறை காவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது அவரது அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு ஆண்ட்ராய்டு செல்போன், 2 சிம்கார்டு, ஹெட்செட் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து முருகனும், அவரது மனைவி நளினியும் சந்திக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் முருகனுக்கு ஜெயிலில் வழங்கப்படும் சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தனி அறையில் முருகன் அடைக்கப்பட்டுள்ளார். இதனை கண்டித்து முருகன் சாப்பிட மறுத்து வருகிறார்.

    முருகனை தனி அறையில் அடைக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவரது மனைவி நளினியும் பெண்கள் ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று 6-வது நாளாக அவர் சாப்பிட மறுத்து உண்ணாவிரதம் இருந்தார்.

    இந்த நிலையில் செல்போன் கைப்பற்றப்பட்ட வழக்கு தொடர்பாக வேலூர் கோர்ட்டில் முருகன் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். பலத்த பாதுகாப்புடன் போலீசார் அவரை வேனில் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.

    வேலூர் 1-வது மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் முருகனை ஆஜர்படுத்தினர். நீதிபதி நிஷா வழக்கு விசாரணையை 13-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    இதனையடுத்து முருகனை மீண்டும் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். கோர்ட்டில் முருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சிறை வளாகத்திற்குள் அதிகாரிகள், காவலர்களை மீறி மூச்சுவிட கூட முடியாது அப்படி இருக்கும்போது ஜெயிலுக்குள் செல்போனை எப்படி பயன்படுத்த முடியும். நானும் எனது மனைவி நளினியும் மகள் திருமணத்திற்காக பரோல் கேட்டு வருகிறோம்.

    மேலும் 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டுமென வலியுறுத்தி வருகிறோம். இதனை தடுக்க சிறைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு சதிசெய்துள்ளனர். இதனை எப்படி என்னால் தாங்கிக்கொள்ள முடியும். சிறையில் தனி அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துகிறார்கள்.

    எப்படிப்பட்ட கொடுமை என்பதை இப்போது சொல்ல முடியாது. எங்களுடைய விடுதலையையும் பரோலையும் தடுக்கவே இவ்வளவு சதி அரங்கேற்றப்பட்டுள்ளது. ஜெயிலுக்குள் ஆன்மீகவாதியாக கூட இருக்க விட மறுக்கிறார்கள். புரட்டாசி மாதம் ஒரே ஒரு பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருந்தேன். தற்போது எனக்கு நேர்ந்த சதியால் 14-வது நாளாக சாப்பிட மறுத்து உண்ணாவிரதம் இருந்து வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆம்பூர் அருகே மூதாட்டியை கொன்று நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தத சம்பவம் குறித்து கொள்ளு பேரன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் அர்ஜூனன். இவரது மனைவி ராஜம்மாள் (வயது 75). இவர்களுக்கு முருகன் என்ற மகனும் ஜெயலட்சுமி, சாந்தி என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் ஜெயலட்சுமியின் மகள் இந்திராவின் மகன் மோனிஷ் பெங்களூரில் வேலை பார்த்து வந்தார்.

    அர்ஜூனன் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ராஜம்மாள் தனியாக வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் ராஜம்மாள் இன்று காலை தலை மற்றும் வாயில் ரத்தம் கசிந்தபடி வீட்டில் இறந்து கிடந்தார்.

    இதனை கண்ட அவரது உறவினர்கள் ராஜம்மாள் கீழே விழுந்து விட்டதாக கருதினர். அவரது இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது வீட்டில் இருந்து சத்தம் கேட்டது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டிற்குள் சென்றனர். அப்போது அங்குள்ள பரண்அறையில் ராஜம்மாளின் கொள்ளு பேரன் மோனிஷ் (வயது 21) மற்றும் பெங்களூரை சேர்ந்த பிரஸ்வால் (20), வினய் ஆகிய 2 பேர் இருந்தனர். அவர்களிடம் கத்தி மற்றும் மயக்க ஸ்பிரே இருந்தது.

    இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் 3 பேரையும் பிடிக்க முயன்றனர். இதில் வினய் தப்பி ஓடிவிட்டார். 2 பேரை பிடித்து ஆம்பூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மூதாட்டியை 3 பேரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. மோனிஷ் பெங்களூர் தேசிநகரில் வேலை செய்து வந்தார். அப்போது பிரஸ்வால், வினய் ஆகிய 2 பேரும் அவருக்கு நண்பராகினர்.

    3 பேரும் நேற்று கொல்லமங்கலம் வந்தனர். இரவில் அவர்கள் ராஜம்மாளிடம் சென்று நகை, பணம் கேட்டனர். ராஜம்மாள் நகை, பணம் தர மறுத்தார். இதனால் அவரது முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து ராஜம்மாள் பெட்டியில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் 3½ பவுன் நகையை திருடினர்.

    ஆம்பூர் டி.எஸ்.பி சச்சிதானந்தம் மற்றும் போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய வினய்யை தேடி வருகின்றனர்.

    வேலூர்- திருவண்ணாமலை மார்க்கத்தில் இயக்கப்படும் அரசுபஸ்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் மழைநீர் பஸ்சுக்குள் வருகிறது. இதனால் டிரைவர் குடைபிடித்தபடி பஸ்ஓட்டும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
    வேலூர் :

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழைபெய்து வருகிறது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

    இதனால் நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் மழையில் நனையாமல் சென்றுவர பஸ்களில் பயணம் செய்கிறார்கள். ஆனால் அரசு பஸ்களில் செல்லும் பொதுமக்கள் சில நேரங்களில் பஸ்சுக்குள்ளேயே குடைபிடித்தபடி பயணம் செய்யவேண்டிய அவல நிலை ஏற்படுகிறது.

    தற்போது பெய்துவரும் மழையிலும் அரசு பஸ்களில் அதேநிலைமைதான் உள்ளது. வேலூர்- திருவண்ணாமலை மார்க்கத்தில் விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த அரசு பஸ்கள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் பெரும்பாலானவை மிகவும் பழைய பஸ்கள் என்பதால் அதன் மேற்கூரைகள் சேதமடைந்து மழைபெய்தால் மழைநீர் பஸ்சுக்குள் ஒழுகும்நிலை உள்ளது.

    நேற்றுமுன்தினம் இரவு பலத்த மழைபெய்தது. அப்போது வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்ற அரசுபஸ்சில் (ரூட் நம்பர் 225) பயணிகள் பயணம் செய்தனர். பலத்த மழைபெய்ததால் பஸ்சுக்குள் மழைநீர் ஒழுகியது. வழக்கமாக பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள்தான் இதுவரை குடைபிடித்து பயணம் செய்ததை பார்த்துள்ளோம்.

    ஆனால் நேற்றுமுன்தினம் இரவு திருவண்ணாமலைக்கு சென்ற அரசு பஸ்சில் டிரைவரே குடைபிடித்துக்கொண்டு பஸ் ஓட்டும் அவலநிலை ஏற்பட்டது. பயணிகளை பத்திரமாக கொண்டு சேர்க்கவேண்டிய டிரைவர் ஒரு கையில் குடையை பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் பஸ்சை ஓட்டிச்சென்றார். இந்த அவலநிலையை பஸ்சில் பயணம் செய்த பயணிகள் வேடிக்கை பார்த்தபடி சென்றனர். இந்த காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    வேலூரில் இரவு நேரங்களில் பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யபட்டார்.
    வேலூர்:

    வேலூர் போக்குவரத்து போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம். இவர் வாகன தணிக்கையின்போது ஆவணங்கள் இல்லை என்று கூறி பெண் வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதித்துள்ளார்.

    அப்போது அவர்களின் செல்போன் எண்களையும் ரசீதில் பதிவு செய்துள்ளார். அந்த செல்போன் எண்களை பயன்படுத்தி சில பெண்களுக்கு இரவு நேரங்களில் ஆபாச வீடியோ அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அவர்களது உறவினர்கள் சிலர் கடந்த 25-ந்தேதி போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கத்திடம் தட்டிக் கேட்டனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் மன்னிப்பு கேட்பது போன்ற சம்பவம் இடம் பெற்றிருந்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கத்தை வேலூர் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டார். மேலும் அவரது உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தினார். விசாரணையில் பெண்களுக்கு ஆபாச தகவல் அனுப்பியது உறுதியானது. இதுகுறித்து அவர் எஸ்.பி.க்கு அறிக்கை அளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அளித்தார். இதையடுத்து போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கத்தை எஸ்.பி. சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
    வேலூர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் தொழில் கடனாக ரூ.12,409 கோடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட வங்கியாளர்கள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தில் 2020-21 நிதியாண்டிற்கான வேளாண்மை பயிர்க்கடனாக ரூ.6,313 கோடி, விவசாய உள்கட்டமைப்பு கடனாக ரூ.348 கோடி, துணைத் தொழில் கடனாக ரூ.261 காடி என விவசாயத்திற்காக மட்டும் ரூ.7,852 கோடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சிறு, குறு, நடுத்தர தொழில்கடனாக ரூ.1,781 கோடி, ஏற்றுமதி கடனாக ரூ.86 கோடி, கல்விக் கடனாக ரூ.729 கோடி, வீட்டு வசதி கடனாக ரூ.1,091 கோடி வழங்கவும், சூரியசக்தி பயன்பாட்டுக்கு ரூ.240 கோடி, சுய உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பு குழுக்களுக்கான மற்றும் பிரதம மந்திரியின் ஜன்தன் மற்றும் பல காப்பீட்டு திட்டங்களுக்காக ரூ.615 கோடி, இதர சமூக கட்டமைப்பிற்காக ரூ.15 கோடி என மொத்தம் ரூ.12,409 கோடி கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் முன்னோடி வங்கி மேலாளர் ஜான்தியோடுசியஸ், ரிசர்வ் வங்கி உதவிப்பொது மேலாளர் தாமோதரன், மாவட்ட திட்ட இயக்குனர் மாலதி மற்றும் அனைத்து வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
    வேலூர் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று 2 வது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை லேசான சாரல் மழையாக தொடங்கிய நிலையில் திடீரென வலுப்பெற்று பலத்த மழையாக மாறியது.

    காலை 6 மணி முதல் மதியம் ஒருமணி வரை விட்டு விட்டு பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காணப்பட்டது.

    மேலும் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. இதனால் வேலைக்கு செல்பவர்கள் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதனால் நேற்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவிலும் வேலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. சோளிங்கர், அம்முண்டி பகுதியில் மழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக சோளிங்கரில் 138 மில்லி மீட்டர் மழை, பொன்னையில் 91.8 மில்லிமீட்டர்மழையும், காவேரிப்பாக்கத்தில் 68.2 மில்லி மீட்டர் பதிவானது.

    வேலூர், ஆற்காடு, ராணிப்பேட்டை, காட்பாடி, குடியாத்தம், ஆம்பூர், அணைக்கட்டு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மற்ற இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.

    இன்று காலையிலும் மழை தொடர்ந்தது. இதனையடுத்து இன்று 2-வது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் விடுமுறை அறிவித்தார்.

    தொடர்மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கணியம்பாடி, அணைக்கட்டு, லத்தேரி பகுதிகளில் விவசாய பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    நளினி, முருகன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதையடுத்து முருகனை தனிச்சிறையில் இருந்து வெளியேற்றக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக அவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன், அவரது மனைவி நளினி உள்பட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    வேலூர் ஆண்கள் ஜெயிலில் முருகனும், பெண்கள் ஜெயிலில் நளினியும் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

    முருகனில் அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதால் அவருக்கு சலுகைகள் ரத்து செய்யப்பட்டு தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை கண்டித்து கடந்த 18-ந் தேதி முதல் முருகனும், 27-ந் தேதி முதல் நளினியும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முருகனின் உண்ணாவிரதம் இன்று 13-வது நாளாகவும், நளினியின் உண்ணாவிரதம் இன்று 5-வது நாளாகவும் நீடிக்கிறது.

    2 பேரின் உடல்நிலை குறித்து சிறை மருத்துவர்கள் தினமும் 2-முறை பரிசோதனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், வக்கீல் எழிலரசு ஜெயிலில் முருகனையும், நளினியும் நேரில் சந்தித்துப்பேசினார். இந்த சந்திப்பு குறித்து வக்கீல் புகழேந்தி கூறியதாவது:-

    ஜெயிலில் முருகன் அடைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து செல்போன் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து அவருக்கு சிறை அதிகாரிகள் இடையூறுகள் அளித்து வருகின்றனர்.

    இதனால், மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள முருகன் கடந்த 18-ந் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக அவரது மனைவி நளினியும் பெண்கள் ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    இந்த உண்ணாவிரதத்தால் இருவரது உடல்நிலையும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனினும், விதிமுறை மீறி முருகன் தொடர்ந்து 24 மணி நேரமும் தனி சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

    முருகனை தனிச்சிறையில் இருந்து வெளியேற்றக் கோரி அவரது சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். முருகனை தனி சிறையில் இருந்து வெளியேற்றினால் மட்டுமே உண்ணாவிரதத்தை கைவிட உள்ளதாக நளினி தெரிவித்துள்ளார் என்றார்.
    வேலூர் கோட்டையில் பெண்ணிடம் செல்போன் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூரின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக கோட்டை உள்ளது. வெளி மாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கோட்டையை பார்வையிட வருகின்றனர். உள்ளூர் மக்கள் தினமும் பொழுதுபோக்கிற்காக வந்து செல்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடம் என்பதால், சமூக விரோத கும்பல்களின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. கோட்டை உட்புற வளாகத்தில் நிறுத்தப்படும் பைக் மற்றும் பொதுமக்களின் நகை மற்றும் செல்போன், பொருட்களும் அவ்வப்போது சமூக விரோத கும்பல்களின் கைவரிசையால் திருடப்பட்டு வருகிறது.

    தொரப்பாடியை சேர்ந்த 38 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தீபாவளியை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் கோட்டைக்கு வந்தார். கோட்டை அகழியை சுற்றிப்பார்க்க செல்போன் பேசியபடி அங்குள்ள படிக்கட்டு வழியாக நடந்து சென்றார்.

    இதைப்பார்த்த 3 பேர் கொண்ட சமூக விரோத கும்பல், அந்த பெண்ணிடம் இருந்து விலை உயர்ந்த செல்போனை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். ஸ்மார்ட் போனின் விலை ரூ.18 ஆயிரம் என்று தெரியவந்தது. இதுகுறித்து வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    குற்றங்களை தடுக்க கோட்டைக்குள் போலீசாரால் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்பட்டு காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 10க்கும் மேற்பட்ட பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இருப்பினும், கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் பணம் பறிக்கும் சம்பவம் கோட்டையை சுற்றி உள்ள மதிற் சுவர்களில் இடைப்பட்ட பகுதிகளில் கஞ்சா வியாபாரிகள் நடமாட்டம், காதலர்கள் என்ற பெயரில் பார்வையாளர்கள் முகம் சுளிக்கும் வகையில் அத்துமீறல்கள் என தினமும் தொடர்கதையாகி விட்டது.இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    வேலூர் மாநகராட்சி பகுதியில் இன்று ஒரே நாளில் பயனற்ற நிலையில் இருந்த 15 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளது.
    வேலூர்:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டு பட்டியில் சிறுவன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பரிதாபமாக இறந்தான். அவனது உடல் இன்று காலை மீட்கப்பட்டது. இதை தொடர்ந்து வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பராமரிப்பற்று பயன்பாட்டுக்கு இல்லாத நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    வேலூர் சைதாப்பேட்டை தோப்பாசாமி கோவில் தெருவில் உள்ள ஆழ்துளை கிணறு தண்ணீர் இல்லாமல் அப்படியே விடப்பட்டிருந்தது. இந்த ஆழ்துளை கிணற்றை மாநகராட்சி செயற்பொறியாளர் கண்ணன் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள்இன்று மூடினர்.

    இதேபோல் வேலூர் மெயின் பஜாரில் பயன்படாத நிலையில் இருந்த ஆழ்துளை கிணறும் மூடப்பட்டது. வேலூர் மாநகராட்சி பகுதியில் இன்று ஒரே நாளில் பயனற்ற நிலையில் இருந்த 15 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளது.

    ஜோலார்பேட்டை அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே உள்ள புல்லானேரி பாட்டன் வட்டம் கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தர். கூலித்தொழிலாளி. இவரது மனைவி பவித்ரா. தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அனுஷா (வயது5). அச்சமங்கலத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கி திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தார்.

    அனுஷாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவரை திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். நேற்று முன்தினம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். ஆனால் திடீரென அவருக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் ஆனது.

    இதனையடுத்து மீண்டும் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சிறுமி பரிதாபமாக இறந்தார்.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டத்தில் டெங்கு மற்றும் காய்ச்சலால் குழந்தைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.




    ×