என் மலர்
வேலூர்
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வேலூர் வந்தார். இங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் நிலைப்பாடு குறித்து அறிவிப்போம். தற்போது வரை அ.தி.மு.க. கூட்டணியில் தான் நாங்கள் நீடித்து வருகிறோம். தொடர்ந்து கூட்டணியில் நீடிப்பது குறித்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பேசி முடிவெடுக்கப்படும். தொண்டர்களின் கருத்துகளை கேட்டறிந்து கூட்டணி இறுதி செய்யப்படும்.
தி.மு.க.வில் குடும்ப அரசியல் நடைபெறுகிறது. ஸ்டாலினுக்கு பிறகு அவரது மகன் உதயநிதி வந்துள்ளார். அவர்கள் குடும்பம் மட்டுமே இருக்கும். தி.மு.க. தொண்டர்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காது.
கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய 2 தலைவர்களின் மறைவுக்குப் பிறகு கருணாநிதியுடன் ஒப்பிடும் அளவுக்கு மு.க.ஸ்டாலின் செயல்பாடு சிறப்பானதாக இல்லை. அதே சமயம் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுமை மிக்கவராக திகழ்கிறார்.
அதன் அடிப்படையில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தோம். ஏற்கனவே ஜெயலலிதா இருக்கும்போது கூட்டணியில் இருந்த காரணத்தால் தொடர்ந்து அ.தி.மு.க. வுடன் பயணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. நடிகர் விஜய் உள்பட யார் அரசியலுக்கு வந்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். 7 பேர் விடுதலையில் ஏற்கனவே கவர்னர் முடிவு எடுக்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவர்கள் ஏற்கனவே தண்டனை அனுபவித்து விட்டார்கள் என்று சொல்லி வருகிறோம். அவர்களை விடுதலை செய்யும் நேரத்தில் சீமான் போன்றவர்கள் நாங்கள் தான் கொலை செய்தோம் என்று கூறுவது வேதனையாக உள்ளது.
ரஜினிக்கு சிறப்பு விருது மத்திய அரசு வழங்குவதாக அறிவித்திருப்பது அவரை பா.ஜ.க.வில் இழுப்பதற்கான முயற்சி என சிலர் கருத்து கூறுகின்றனர். அது அவர்களின் கருத்து. ரஜினி, கமல் 2 பேரை ஒப்பிடும்போது ரஜினி சிறப்பான நடிகர் என அவர்கள் முடிவு செய்துள்ளனர். கமலுக்கு ஏன் விருது கொடுக்கவில்லை என்று கூற முடியாது. ஒருவேளை அடுத்த ஆண்டு கமலுக்கு கொடுக்கலாம். சுஜித்தை மீட்க அரசு போராடியது பாராட்டுக்குரியது. குழந்தையின் மரணம் என்னை பாதித்துள்ளது. எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த கொல்லகுப்பத்தை சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது75). கணவரை இழந்த இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது கொள்ளுப்பேரன் மோனிஷ்(21) என்பவர் பெங்களூருவில் வசித்து வருகிறார். ஆட்டோ ஓட்டுனரான இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் கொல்லகுப்பம் வந்துள்ளார்.
அப்போது பாட்டியிடம் இருக்கும் நகை, பணம் கேட்டு மோனிஷ் மிரட்டியுள்ளார். அதற்கு அவர் கொடுக்க முடியாது என்று கூறியதால் ஆத்திரமடைந்த மோனிஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து மயக்க ஸ்பிரேவை ராஜம்மாயின் முகத்தில் அடித்து கொலை செய்தனர்.
இது தொடர்பாக ஆம்பூர் தாலுகா போலீஸ் ஆய்வாளர் கோகுல்ராஜ் வழக்குபதிவு செய்து மோனிஷ் மற்றும் அவரது நண்பர் பிரஜேஸ் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த வினய் (27) பெங்களுரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர் என்று தெரிவித்தனர்.
திருப்பத்தூர் தாலுகா புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி (வயது 33) நேற்று மாலை சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தாசில்தார் அனந்த கிருஷ்ணன் முன்னிலையில் தான் பாட்டிலில் எடுத்து வந்திருந்த பெட்ரோல் பாட்டிலில் இருந்து தன் உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
உடனடியாக சப்-கலெக்டர் அலுவலக பணியாளர்கள் அவரைப் பிடித்து அவர்மீது தண்ணீரை ஊற்றி நகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் பேராம்பட்டு கிராமத்தில் அவருடைய சின்ன மாமியார் கோவிந்தம்மாள் (38) நேற்று பூச்சி மருந்து குடித்து விட்டதாக கூறி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்து பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார்.
கோவிந்தம்மாளை கொலை செய்துவிட்டு தற்கொலை என கூறி நாடகமாடுகிறார்கள். அவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும் என கூறி நான் தீக்குளிக்க முயன்றதாக போலீசாரிடம் கூறியுள்ளார்.
கார்த்தி மீது தற்கொலைக்கு முயன்றதாக கூறி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பேரணாம்பட்டு டவுன் அஷ்ரப்வீதியை சேர்ந்தவர் உசேமா (வத 34). தோல் வியாபாரி இவர் நேற்று முன் தினம் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் பேரணாம்பட்டு டவுனிலுள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றிருந்தார்.
நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் யாரோ மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கதவை உடைத்து கொண்டிருந்தனர். சத்தம் கேட்டு சந்தேகமடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள். உடனடியாக பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக பேரணாம் பட்டு சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையில் போலீஸ் ஏட்டு மகாபிரசாத் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.
மர்ம நபர்கள் 2 பேரும் வீட்டின் கீழ் தளத்தில் திருட முயன்ற போது ஏதும் கிடைக்காததால் வீட்டின் மாடியிலுள்ள பகுதிக்கு சென்று அங்கு கதவை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவிலிருந்த லேப்-டாப்பை திருட முயன்ற போது அறையின் வெளியிலில் போலீசார் நிற்பதை கண்டனர். அதில் ஒருவன் வெளியே குதித்து தப்பியோடினான்.
போலீசார் விடாமல் துரத்தி சென்று மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு தீவிரமாக விசாரணை நடத்தினர். அவர்கள் இருவரும் வாணியம்பாடி டவுன் சென்னாம்பேட்டையிலுள்ள கோட்டை தெருவை சேர்ந்த அஸ்கர்அலி (23), அதே பகுதியை சேர்ந்த அஸ்ஷூ (24) என்பது தெரியவந்தது.
இருவரும் வாணியம்பாடி மற்றும் பல்வேறு ஊர்களில் திருட்டுசம்பவங்களில் தொடர்ந்து ஈடுப்பட்டு வந்ததால் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த 5 தினங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியில் வந்தனர்.
இவர்களிடமிருந்து திருட பயன்படுத்தப்பட்ட இரும்பு ராடு கைப்பற்றப்பட்டது. அஸ்கர்அலி, அஸ்ஷூ இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
பேரணாம்பட்டு நகர் முழுவதும் முக்கிய 12 இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு சமூக விரோத குற்ற செயல்கள் நடக்காதவாறு தினமும் இரவு முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
ஆதலால் பொதுமக்கள் குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு வெளியில் செல்லும் போது போலீஸ் நிலையத்திற்கு அவசியம் தகவல் தெரிவிக்கும்படியும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.
ஆம்பூர் அடுத்த கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் அர்ஜூனன். இவரது மனைவி ராஜம்மாள் (வயது 75). இவர்களுக்கு முருகன் என்ற மகனும் ஜெயலட்சுமி, சாந்தி என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் ஜெயலட்சுமியின் மகள் இந்திராவின் மகன் மோனிஷ் பெங்களூரில் வேலை பார்த்து வந்தார்.
ராஜம்மாளின் கொள்ளு பேரன் மோனிஷ் (வயது 21) மற்றும் பெங்களூரை சேர்ந்த பிரஸ்வால் (20), வினய் ஆகியோர் ராஜம்மாளை மயக்க ஸ்பிரே அடித்து கொலை செய்தனர். மேலும் அவர் வைத்திருந்த ரூ20ஆயிரம் 3½ பவுன் நகையை திருடினர். இது தொடர்பாக மோனிஷ், பிரஸ்வால் ஆகியோரை கைது செய்தனர்.
இதில் வினய் தப்பி ஓடிவிட்டார். 2 பேரை பிடித்து ஆம்பூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
தப்பி ஓடிய வினயை பிடிக்க இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் பெங்களூரில் பதுங்கி இருந்த வினயை கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தை வேலூர் மாவட்ட எஸ்.பி.பிரவேஷ்குமார் நேற்று ஆண்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் காவல் நிலையத்தில் உள்ள கோப்புகளை ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து எஸ்.பி.பிரவேஷ்குமார் கூறியதாவது:-
போலீஸ் நிலையங்களில் போலீசார் பற்றாக்குறையை தடுக்க வேலூர் திருவண்ணாமலை மாவட்டங்களில் அடுத்த ஆண்டு 5,000 போலீசார் நியமிக்கப்படுவார்கள். ராணிப்பேட்டையில் காலை மாலை வேளைகளில் அதிகமாக உள்ள போக்குவரத்தை தடுக்க கூடுதல் போலீசார் நியமிக்கப்படுவார்கள்.
அரசு வேலை வாங்கி தருவதாக அப்பாவி மக்களிடம் பணம் வாங்கியதாக 3 புகார்கள் வந்துள்ளன. அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அரசு வேலை வாங்கி தருகிறேன் என கூறுபவர்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம். ராணிப்பேட்டையில் காட்டன் சூதாட்டம், 3 சீட் ஆட்டம் ஆடுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
வாலாஜாவில் கால்நடைகளை கடத்தியதோடு கொலை செய்த கும்பலை விரைவில் பிடித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ராணிப்பேட்டையில் வாராந்திர வெள்ளிக்கிழமை சந்தையில் பொதுமக்களிடம் குறிப்பாக பெண்களிடம் நகை பறிப்பு, செல்போன் திருடு, பொதுமக்களின் வாகன திருட்டுக்குற்றங்கள் நடப்பதாக தெரியவந்தது அதனை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
நில ஆக்கிரமிப்பு மோசடிகள் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பெல் குடியிருப்புகளில் திருட்டு குற்றங்கள் நடத்திய பவாரியா குழு இன்னும் கிடைக்கவில்லை. விரைவில் பிடிபடுவார்கள்.
ராணிப்பேட்டை சிப்காட் வாலாஜா நகரங்களில் சுற்றிதிரியும் கால்நடைகள் காவல்துறை நகராட்சி இணைந்து ஒரு வாரத்தில் பிடித்து வேலூர் கோசாலையில் விடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரக்கோணம் அடுத்த மின்னல் பகுதியை சேர்ந்தவர் அருள் (வயது 45), இவர் திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி அடுத்த கசவராஜபேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார். நேற்று வழக்கம்போல் டாஸ்மாக் கடையில் விற்பனை முடிந்து கடையை மூடினார்.
பின்னர் வசூலான ரூ.1 லட்சத்து 18 ஆயிரம் பணத்தை எடுத்துகொண்டு பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அரக்கோணம் அடுத்த மிட்டப்பேட்டை என்ற இடத்தில் வந்தபோது பின்னால் பைக்கில் வந்த 2 பேர் திடீரென அருள் பைக்மீது மோதினர். அருள் பைக்கில் இருந்து கீழே விழுந்தார்.
இதையடுத்து 2 பேரும் அருளை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த பணத்தை பறித்துகொண்டு பைக்கில் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து அருள் அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். டி.எஸ்.பி மனோகரன் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சிவிலு மற்றும் போலீசார் வழிப்பறி நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரித்தார்.
கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்த அருள் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முருகன், பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நளினி ஆகிய 2 பேரும் தொடர்ந்து நேற்றும் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் அறையில் செல்போன் சிக்கியதால் அவருக்கான சலுகைளை சிறைத்துறை நிர்வாகம் ரத்து செய்தது.
இந்நிலையில், ஜெயிலில் உள்ள முருகனை சிறை நிர்வாகம் கொடுமைப்படுத்துவதாக கூறி நளினி கடந்த 26-ந் தேதி முதல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இன்று 8-வது நாளாக நளினி தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அதேபோல் தன்னை தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக கூறி முருகனும் 16-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
2 பேரிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், உண்ணாவிரதத்தை கைவிட அவர்கள் மறுத்து விட்டனர். முருகன்- நளினி தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் உடல் நிலை குறித்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:
குடியாத்தம் டி.டி. மோட்டூரை சேர்ந்தவர் இமயவர்மன். இவரது மனைவி ஜான்சிராணி. தம்பதிக்கு கடந்த மாதம் 30-ந் தேதி குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. 3.5 கிலோ எடையில் பிறந்த அந்த குழந்தை அழவே இல்லையாம். மேலும் அசையாமல் இருந்தது.
இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை அனுமதித்தனர். அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 1 மாதமாக குழந்தைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை குழந்தை இறந்தது.
இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். டாக்டர்கள் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை, சரியாக கவனிக்கவில்லை என குற்றம் சாட்டிய பெற்றோர் மற்றும் உறவினர்கள் 30-க்கும் மேற்பட்டோர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவு முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, ஆஸ்பத்திரி டீன் செல்வி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
குழந்தை சாவுக்கான காரணம் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என பெற்றோர்கள் கூறினர். 1 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நீடித்தது.
இந்த சம்பவம் ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
குடியாத்தம் அருகே உள்ள பாக்கம் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் நேற்றிரவு காவலர்கள் செல்வம் சுப்பிரமணி ஆகியோர் பணியில் இருந்தனர் இரவு 2.15 மணிக்கு குடோன் எதிரே உள்ள ஏரிக்கரையில் குழந்தை அழும் சத்தம்கேட்டது.
அங்கு சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை குளிரில் நடுங்கியபடி துடித்து அழுது கொண்டிருந்தது. காவலர்கள் குழந்தையை தூக்கி துணியால் போர்த்தினர்.
மேலும் இதுபற்றி குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அப்போது பணியில் இருந்த ஏட்டு நவீன் மற்றும் ரோந்து பணியில் இருந்த போலீசார் அருண்குமாருக்கு தகவல் தெரிவித்தார்.
அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவலர்கள் உதவியுடன் பைக்கில் குழந்தையை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் .
அங்கு டாக்டர்கள் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். குழந்தையின் தொப்புளில் அரசு ஆஸ்பத்திரிகளில் போடப்படும் கிளிப் மாட்டப்பட்டிருந்தது .
இதனால் குழந்தை பிறந்து சில மணி நேரமே இருக்கும். மேலும் இந்த குழந்தை அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர். 3.8 கிலோ உள்ள இந்த பெண் குழந்தை நல்ல ஆரோக்கியமாக உள்ளது.
உதட்டு பகுதியில் சிறியதாக கிழிந்தது போல உள்ளது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் உள்ள பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவில் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.
அங்கு குழந்தையை பராமரித்து வருகின்றனர். இதுகுறித்து பரதராமி போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியவாணி வழக்குப்பதிவு செய்து ஏரிக்கரையில் குழந்தையை வீசி சென்ற கல்நெஞ்சம் கொண்ட தாய் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம் சுபேதா நகரை சேர்ந்தவர் அலாவுதீன் (வயது 37), மீன் வியாபாரம் செய்து வந்தார். இவரது நண்பர் தரணம்பேட்டையை சேர்ந்த ரிஸ்வான் (வயது 35), ஏலச்சீட்டு நடத்தி வந்த இவர் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். ரிஸ்வானிடம் சீட்டு பணம் கட்டியவர்கள் இதுபற்றி குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த வழக்கு வேலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரிஸ்வானிடம் சீட்டு பணம் கட்டிய சிலர் அலாவுதீனிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் அலாவுதீன் ரிஸ்வானுக்கு பணம் கொடுத்து ஏமாந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அலாவுதீன் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் மோர்தானா அணைக்கு சென்றார். அங்கு தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர்.
இந்தநிலையில் இன்று காலை அணையில்அலாவுதீன் பிணமாக மிதந்தார். குடியாத்தம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டனர்.
போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி அருகே உள்ள குனிச்சியூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மகள் அகல்யா (வயது 15). பர்கூரில் உள்ள விடுதியில் தங்கி அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். பின்னர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டார். இன்று வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அகல்யா இறந்தார். மர்ம காய்ச்சலால் மாணவி பலியான சம்பவத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.






