என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளையடிக்கப்பட்ட ஏடிஎம் மையம்
    X
    கொள்ளையடிக்கப்பட்ட ஏடிஎம் மையம்

    வாணியம்பாடி அருகே 2 ஏ.டி.எம்.மை உடைத்து லட்சக்கணக்கில் கொள்ளை

    வாணியம்பாடி அருகே 2 ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பஸ் நிலையம் அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. தீபாவளி பண்டிகை என்பதால் ஏ.டி.எம்.மில் பணம் அதிகளவில் வைக்கப்பட்டிருந்தது.

    ஏ.டி.எம். மையத்திற்கு காவலாளி இல்லை. இதனை நோட்டமிட்ட திருட்டு கும்பல் நள்ளிரவில் ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தின் பணம் இருக்கும் பகுதியில் உடைக்க முயன்றனர்.

    அது முடியாததால் அவர்கள் தயாராக கொண்டு வந்த கியாஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம்.மை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்தனர். சி.சி.டி.வி. கேமராவையும் உடைத்தனர்.

    இதேபோல் அம்பலூரில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தெக்குபட்டு தேசிய நெடுஞ்சாலையையொட்டி தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது.

    இந்த மையத்திற்குள் நுழைந்த கும்பல் கியாஸ் வெல்டிங் மூலம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர். 2 கொள்ளை சம்பவமும் ஒரே மாதிரி நடந்துள்ளது.

    ஏ.டி.எம். எந்திரத்தின் உள்புறம், வெளிபுறங்களில் மிளகாய்பொடி தூவி விட்டு சென்றுள்ளனர்.

    இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து அம்பலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த கொள்ளையில் வடமாநில கும்பல் ஈடுபட்டார்களா? அல்லது உள்ளூரை சேர்ந்தவர்கள் ஈடுபட்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 ஏ.டி.எம். மையங்களில் எவ்வளவு பணம் கொள்ளை போனது என உடனடியாக தெரியவில்லை.

    தீபாவளி பண்டிகை என்பதால் பணம் அதிகளவில் வைக்கப்பட்டிருக்கலாம் இதனால் லட்சக்கணக்கில் பணம் கொள்ளை போயிருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. வங்கி அதிகாரிகள் வந்தால்தான் கொள்ளை போன பணம் எவ்வளவு என்பது தெரியவரும்.

    கொள்ளை நடந்த 2 ஏ.டி.எம். மையத்திற்கும் காவலாளிகள் கிடையாது. வேலூர் மாவட்டத்தில் அனைத்து ஏ.டி.எம். மையங்களுக்கும் காவலாளிகள் நியமிக்கப்பட வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியிருந்தனர்.

    போலீசாரின் அறிவுரையை வங்கிகள் ஏற்காததால் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. காவலாளி நியமிக்கப்பட்டிருந்தால் கொள்ளையை தடுத்திருக்கலாம் என்று போலீசார் கூறினர்.

    ஏற்கனவே வாணியம்பாடி, திருப்பத்தூரில் உள்ள வீடுகள், கோவில்களில் 2 மாதமாக தொடர் கொள்ளை சம்பவம் நடந்து வந்தது.

    இதனால் போலீசார் இரவில் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். இதில் 5 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடம் மீண்டும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


    Next Story
    ×