search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    டெங்கு கொசு
    X
    டெங்கு கொசு

    வேலூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு 3 பேர் பலி

    வேலூர், குடியாத்தம் மற்றும் நாட்டறம்பள்ளியில் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.

    வேலூர்:

    குடியாத்தம் அக்ராவரம் அருகே உள்ள மேல்ரங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் அறிவரசன் இவரது மனைவி சங்கீதா. இவர்களது மகள்கள் புவியரசி (வயது 13), திவ்யா (11).

    கடந்த 5 நாட்களுக்கு முன்பு சிறுமி இருவரும் மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்களை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி திவ்யா நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    காட்பாடி விருதம்பட்டு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மனைவி கோமதி. இவர்களுக்கு 1 வயதில் ஜனனி என்ற பெண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது.

    நேற்று காலையில் ஜனனியை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜனனியை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    நாட்டறம்பள்ளி அடுத்த வெள்ளநாயக்கனேரியை சேர்ந்தவர் அகிலன். இவரது மகன் கிரண்குமார் (வயது5). கடந்த 3 நாட்களுக்கு முன்பு கிரண்குமாருக்கு காய்ச்சல் அடித்தது.

    திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தாலும் காய்ச்சல் குறையவில்லை. மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிரண்குமார் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    அவரது உடல் வெள்ளநாயக்கனேரிக்கு இன்று கொண்டு வரப்பட்டது. சிறுவனின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இதுபற்றி தகவலறிந்த சுகாதார துறையினர் அங்கு முகாமிட்டு டெங்கு கொசு ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×