search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரக்கோணத்தில் ரெயில் மறியல்"

    மின்சார ரெயில்கள் தொடர்ந்து தாமதமாக வருவதை கண்டித்து அரக்கோணத்தில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 6 பேரை பிடித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் அவர்களை ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் வழியாக செல்லும் புறநகர் மின்சார ரெயில்கள் தொடர்ந்து கால தாமதமாக இயக்கப்படுவதை கண்டித்து பயணிகள் கடந்த சில நாட்களாக மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரெயில் நேற்று இரவு சுமார் 9.10 மணியளவில் 45 நிமிடம் வரை தாமதமாக அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்தது.

    இந்த ரெயிலில் சென்னையில் வேலை பார்த்து வரும் பயணிகள் அதிகமானோர் பயணம் செய்கின்றனர். அவர்கள் அரக்கோணம் வந்ததும் தங்கள் கிராம பகுதிகளுக்கு பஸ்கள் மூலம் செல்வார்கள். நேற்று ரெயில் தாமதமாக வந்ததால் கிராமத்திற்கு செல்ல பஸ்களை பிடிக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் மின்சார ரெயில் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்ததும் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.



    ரெயில் மறியலை கைவிட்டு கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். அதனை ஏற்க மறுத்த பயணிகள் ரெயில் நிலைய அதிகாரிகள் வந்து பதிலளிக்க வேண்டும் என்று கூறி ரெயில் மறியலை தொடர்ந்தனர். அப்போது பயணிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதற்கிடையில் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றொரு பிளாட்பாரத்தில் வந்து கொண்டிருந்தது.

    இதனை பார்த்த மறியலில் ஈடுபட்ட பயணிகள் அந்த பிளாட்பாரத்திற்கு ஓடி சென்று எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

    பதற்றமான சூழல் உருவாவதை அறிந்த அரக்கோணம் டி.எஸ்.பி. குத்தாலிங்கம் மற்றும் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலை கைவிடுமாறு எச்சரித்தனர். அதனை பயணிகள் ஏற்க மறுத்தனர்.

    போராட்டத்தால் சென்னையில் இருந்து அரக்கோணம், திருப்பதி செல்லும் மின்சார ரெயில்கள், கோவையில் இருந்து சென்னை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ், மங்களூர் மெயில், ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன.

    இதனால் ரெயில்களில் வந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து ½ மணி நேரத்திற்கும் மேலாக ரெயில் போக்குவரத்து இரு மார்க்கத்திலும் முடங்கியது. ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது.

    இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.

    இதையடுத்து போலீசார் ரெயில் மறியலில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத பயணிகள் நாலாபுறமும் சிதறியோடினர்.

    அப்போது சிலர் தண்டவாளத்தில் விழுந்து எழுந்து தலைதெறிக்க ஓடினர். இதனால் ரெயில் நிலையம் முழுவதும் போர்க்களமாக மாறியது.

    இதையடுத்து இரவு 9.45 மணிக்கு ரெயில் போக்குவரத்து சீரானது. ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்ட ரெயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக இயக்கப்பட்டன.

    இதற்கிடையில் மறியலில் ஈடுபட்ட 6 பேரை பிடித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் அவர்களை ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர்.

    6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ரெயில் நிலையத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    ×