search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயில் தண்டனை
    X
    ஜெயில் தண்டனை

    ஐ.டி.ஐ. மாணவரை கொலை செய்த தொழிலாளிக்கு 7 ஆண்டு ஜெயில்

    ஐ.டி.ஐ. மாணவரை கொலை செய்த தொழிலாளிக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், முறையாக விசாரணை நடத்தாத 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் தொரப்பாடி கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 22). இவர் ஐ.டி.ஐ.யில் படிக்க சேர்ந்தார். இதற்காக தனது நண்பர்களான சின்னஅல்லாபுரம் பகுதியை சேர்ந்த நவீன்குமார் (19), தொரப்பாடியை சேர்ந்த வெற்றிவேல் (19), ராஜ்குமார் (19) ஆகியோருக்கு மது விருந்து கொடுக்க முடிவு செய்தார். அதன்படி சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் அப்துல்லாபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு 5.7.2018 அன்று காலை சென்றனர்.

    அங்கு அப்துல்லாபுரத்தை சேர்ந்த தொழிலாளியான சதீஷ் என்ற சதீஷ்குமார் (30) மற்றும் அவரது நண்பர் ஆறுமுகம் (39) ஆகியோர் மது அருந்திக் கொண்டிருந்தனர். டாஸ்மாக் கடையில் சக்திவேல் தரப்புக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் மாலையில் சக்திவேல் தரப்பினர் அதேபகுதியில் உள்ள வேறு டாஸ்மாக் கடைக்கு சென்றனர். அங்கு சதீஷ்குமார் மற்றும் ஆறுமுகம் மது அருந்திக்கொண்டிருந்தனர்.

    அங்கேயும் இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில் சதீஷ்குமார் பீர்பாட்டிலை உடைத்து சக்திவேலை குத்தினார். மேலும் நவீன்குமார், வெற்றிவேலையும் சரமாரியாக தாக்கினார். குத்துப்பட்ட சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து நவீன்குமார் விரிஞ்சிபுரம் போலீசில் புகார் செய்தார். அப்போது பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரையும், ஆறுமுகத்தையும் குற்றவாளியாக சேர்த்து விசாரணை நடத்தினார். இந்த வழக்கு வேலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் (விரைவு) நடந்து வந்தது. வழக்கு நடைபெற்று வந்த காலத்தில் இன்ஸ்பெக்டர் பாண்டி இடமாறுதல் பெற்றார். அவருக்கு பதில் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்ற பார்த்தசாரதி இந்த வழக்கில் குற்றபத்திரிகை தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் அ.கோ.அண்ணாமலை ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.குணசேகர் தீர்ப்பு கூறினார். அதில் சதீஷ்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்தார். ஆறுமுகம் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் அவரை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    மேலும் அவர் தனது தீர்ப்பில், இன்ஸ்பெக்டர்கள் பாண்டி மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் இந்த வழக்கில் முறையாக புலன் விசாரணை செய்யாமல் ஆறுமுகத்தின் மீது குற்றம் சாட்டி, ஒரு குற்றவாளியாக சேர்த்ததால் 2 இன்ஸ்பெக்டர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கும், பாதிக்கப்பட்ட ஆறுமுகத்துக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கும் பரிந்துரை செய்தார்.

    இந்த வழக்கில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதால் இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுத்து, உரிய இழப்பீடு வசூலிக்கவும் தமிழக மனித உரிமைகள் ஆணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளார்.

    இதையடுத்து போலீசார், சதீஷ்குமாரை வேலூர் ஜெயிலுக்கு அழைத்துச் சென்றனர்.
    Next Story
    ×