search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புங்கனூரில் நெல் கொள்முதல்  நிலையம் திறக்க கோரி கலெக்டரிடம் மனு
    X

    புங்கனூரில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி கலெக்டரிடம் மனு

    • புங்கனூரில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி கலெக்டரிடம் மனு
    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

    திருச்சி:

    திருச்சி கலெகடர் பிரதீப் குமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு தரப்பினர் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் பிரதீப்குமார், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் திருச்சி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாவட்ட விவசாய அணி தலைவர் புங்கனூர் எஸ்.செல்வம் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு வந்து கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:

    திருச்சி மாவட்ட புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள தங்களது பணி சிறக்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

    கடந்த காலங்களில் பெய்த நல்ல மழை காரணமாக விவசாயம் செழித்துள்ளது. தற்போது நடப்பு பருவம் குறுவை நெல் சாகுபடி செய்த நிலப்பரப்புகள் முழுமையாக நல்ல விளைச்சல் கண்டு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

    ஆதலால் ஒவ்வொரு ஆண்டும் போல் தற்போதும், எங்கள் ஊரான புங்கனூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை தாமதப்படுத்தும் பட்சத்தில் பருவ மழையால் நெல் பாதிப்படைய அதிக வாய்ப்புகள் உள்ளன.

    எனவே விவசாயிகளின் நலன் கருதி காலதாமதமின்றி உடனடியாக புங்கனூரில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வேண்டுகிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் பிரதீப்குமார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியின்போது, த.மா.கா. மாநில விவசாய அணி பொருளாளர் வயலூர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், திரளான விவசாயிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×