என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • செங்கல்பட்டு போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.
    • காரின் உள்ளே வைத்திருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். செங்கல்பட்டு போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று தனது மகளின் பிரசவ செலவிற்காக திருவள்ளூர் ஜே.என்.சாலையில் உள்ள வங்கியில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு காரில் சென்றார்.

    அப்போது காக்களூர் பை பாஸ் சாலையில் மற்றொரு வங்கி எதிரே காரை நிறுத்தி விட்டு வங்கியின் உள்ளே சென்றார். திரும்பி வந்தபோது கார் கண்ணாடி உடைந்து இருந்தது. காரின் உள்ளே வைத்திருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    • பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தகவல் அறிந்ததும் தாசில்தார் செல்வகுமார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பொன்னேரி:

    பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ.76 கோடி மதிப்பீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை பாதாள சாக்கடை பணிகள் முடிவடையவில்லை.

    மேலும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பொன்னேரி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கு மின்விளக்கு அமைப்பது தொடர்பாக ஒப்பந்தம் விடப்பட்டது. ஆனால் இதுவரை மின்விளக்குகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இதனை கண்டித்தும், பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் 9 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு துணை தலைவர் விஜயகுமார் தலைமையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தாசில்தார் செல்வகுமார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் நகராட்சி ஆணையர் கோபிநாத் மற்றும் பாதாள சாக்கடை திட்ட அதிகாரிகளிடம் பணிகள் குறித்து விபரங்களை கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து 45 நாட்களுக்குள் திட்டப் பணிகள் முடிப்பதாகவும் மின் விளக்கு பொருத்தும் பணி உடனடியாக தொடங்கப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் தாசில்தார் செல்வக்குமார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

    • குடிசையில் பற்றிய தீ அருகில் இருந்த உமாபதி என்பவரது வீட் டுக்கும் பரவியது.
    • உமாபதி வீட்டில் இருந்த ரூ.70 ஆயிரம் ரொக்கப்பணம், 6 பவுன் நகை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி சுண்ணாம்புகுளம் அடுத்த நார்சம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது85). இவரது மனைவி ராஜம்மாள் (80). இவர்கள் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். நேற்று இரவு வழக்கம்போல் கணவன்-மனைவி இருவரும் வீட்டில் தூங்கினர்.

    இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென மின் கசிவால் குடிசை வீட்டில் தீப்பற்றியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென வீடு முழுவதும் பற்றி எரிந்தது.

    இதில் சிக்கிய மூதாட்டி ராஜம்மாவால் வெளியே வர முடியவில்லை. அவர் தீயில் கருகி பரிதாபமாக இறந்தார். அவரது கணவர் கோவிந்தராஜ் லேசான காயங்களுடன் உயிர்தப்பி வெளியே வந்தார்.

    மேலும் குடிசையில் பற்றிய தீ அருகில் இருந்த உமாபதி என்பவரது வீட் டுக்கும் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த உமாபதி, மனைவி கற்பகம், அவர்களது 2 பெண் குழந்தைகள் ஆகியோர் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதில் கோவிந்தராஜ், உமாபதி ஆகியோரின் வீடுகள் முழுவதும் எரிந்து சாம்பலானது. மேலும் உமாபதி வீட்டில் இருந்த ரூ.70 ஆயிரம் ரொக்கப்பணம், 6 பவுன் நகை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. ஆரம்பாக்கம் போலீசார் ராஜம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீ விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருவள்ளூர் நோக்கி சென்ற லாரியும் திருத்தணியில் இருந்து திருவள்ளூர் வந்த கூரியர் வேனும் நேருக்கு நேர் மோதின.
    • விபத்து குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    ஆவடியை அடுத்த வீராபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது44) கட்டுமான தொழிலாளி. இவர் தனது மனைவி சுதா, மகன் மனோஜ் ஆகியோருடன் திருத்தணி அடுத்த பந்திக்குப்பம் பகுதியில் நடைபெற்ற திருவிழாவிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

    திருவள்ளூர் அருகே கனகவல்லிபுரம் கிராமத்தில் வந்தபோது, திருத்தணியில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற லாரியும் திருத்தணியில் இருந்து திருவள்ளூர் வந்த கூரியர் வேனும் நேருக்கு நேர் மோதின. அந்த நேரத்தில் பின்னால் சுரேஷ் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கூரியர் வேன் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் மனைவி கண்முன்பே பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி சுதா, மகன் மனோஜ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். மேலும் கூரியர் வேன் டிரைவர் பண்ருட்டி, மாதா கோவில் பகுதியைச் சேர்ந்த ஜான்மரியதாசுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. காயம்அடைந்த 3 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நீண்ட நேரம் மேடைக்கு அருகே நின்று கொண்டு நிர்வாகிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் விவாதித்துக் கொண்டிருந்தார்.
    • பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு மற்றொரு கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றார்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நேற்று இரவு பாகல்மேடு ஊராட்சி மற்றும் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு,எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.சத்தியவேலு தலைமை தாங்கினார். அனைவரையும் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வீரமணிகண்டன் வரவேற்றார்.

    இதில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன், தலைமை கழகப் பேச்சாளர் ஆலந்தூர் ஒப்பிலாமணி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். இதன் பின்னர்,பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிலையில், பாகல்மேடு ஊராட்சியில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் துவங்குவதற்கு முன்பாக மாநில அயலக அணி துணைச்செயலாளர் ஜி.ஸ்டாலின், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பி.ஜே.மூர்த்தி,ஒன்றிய அவைத்தலைவர் முனிவேல், மாவட்ட பிரதிநிதி கே.வி.வெங்கடாசலம், ஒன்றிய துணைச் செயலாளர் அன்பு உதயகுமார் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர். மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளுடன் காரில் வந்து மேடை அருகே இறங்கினார்.

    அப்பொழுது அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனால் நீண்ட நேரம் மேடைக்கு அருகே நின்று கொண்டு நிர்வாகிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் விவாதித்துக் கொண்டிருந்தார். நீண்ட நேரம் மின்சார சப்ளை செய்யாததால் பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவியை வழங்கிவிட்டு மற்றொரு கூட்டத்திற்கு செல்லலாம் என்று கூறியவண்ணம் பரிதவித்துக் கொண்டிருந்தார். இதன் பின்னர், பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவியை வழங்கிவிட்டு புறப்பட்டார். அப்பொழுது மின்சாரம் சப்ளை செய்யப்பட்டது. இதனால் பரிதவித்துக் கொண்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் மேடையில் ஏறி 2 ஆண்டு சாதனைகளை விளக்கி பேசிவிட்டு மீண்டும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு மற்றொரு கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றார். இப்பிரச்சினையால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சூர்யா தனது லாரியில் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து வந்து பிரகாஷை கழுத்தில் சரமாரியாக வெட்டினார்.
    • கொலை சம்பவத்தால் அக்கரைப்பாக்கம் ஏரியில் சவுடு மண் குவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், அக்கரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஏரியில் கடந்த சில நாட்களாக சவுடு மண்குவாரி இயங்கி வருகிறது. இந்நிலையில், இன்று காலை ஆத்துப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர்களான பிரகாஷ் (வயது31), சூர்யா(வயது29) என்ற டிரைவர்கள் சவுடு எடுக்க குவாரிக்கு வந்தனர்.

    அப்பொழுது மண் ஏற்றுக் கொண்டு இரண்டு லாரிகளும் வெளியே வரும்போது இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஒருவரை, ஒருவர் தள்ளிக் கொண்டனர். இதில், ஆத்திரம் அடைந்த சூர்யா தனது லாரியில் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து வந்து பிரகாஷை கழுத்தில் சரமாரியாக வெட்டினார்.

    இதில், துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பிரகாஷ் பலியானார். இவர்களுக்குள் ஏற்பட்ட மோதலை கண்டு அருகில் இருந்த டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். சம்பவ இடத்துக்கு ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் தலைமையில் பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    படுகொலை செய்யப்பட்ட பிரகாஷ் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகொலை செய்யப்பட்ட பிரகாஷ் மீது லாரியை வழி மறித்து கொள்ளையடித்த வழக்கு பெரியபாளையம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனால் பணம் மற்றும் நகைகள் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா? அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் இந்த கொலை சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    இதில், சூர்யாவுக்கும் பிரகாசுக்கும் இடையே பணம் மற்றும் நகைகள் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை கடந்த சில நாட்களாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், குற்றவாளி சூர்யாவின் பூர்வீகம் கிருஷ்ணாபுரம் கண்டிகை என்றும் பிரகாசுடன் ஏற்பட்ட பழக்கத்தால் சூர்யா தனது குடும்பத்துடன் ஆத்துப்பாக்கம் கிராமத்துக்கு குடி பெயர்ந்து தெரியவந்துள்ளது. இந்தக் கொலை சம்பவத்தால் அக்கரைப்பாக்கம் ஏரியில் சவுடு மண் குவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது பிரச்சினையால் இப்பகுதியில் பதட்டமும், பரபரப்பு நிலவுகிறது.

    • பிளம்பிங் வேலை செய்வதற்காக சுவற்றில் ‘டிரில்லிங்’ எந்திரம் வைத்து துளையிடும் பணியில் அய்யப்பன் ஈடுபட்டார்.
    • சுவற்றில் இருந்த மின்சார வயரின் மீது ‘டிரில்லிங்’ எந்திரம் பட்டதில் மின்சாரம் தாக்கி அய்யப்பன் அலறினார்.

    பூந்தமல்லி:

    திருவாரூர் மாவட்டம் பெரம்பொன்னையூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 30). பிளம்பராக வேலை செய்து வந்தார். இவரது அக்காள் ராஜேஸ்வரி குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், முரசொலி மாறன் நகரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் ராஜேஸ்வரி வீட்டில் புதிதாக இரண்டு அறைகள் கட்டப்பட்டு உள்ளது. இதில் பிளம்பிங் வேலை செய்வதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு அய்யப்பன் வந்தார். நேற்று இரவு பிளம்பிங் வேலை செய்வதற்காக சுவற்றில் 'டிரில்லிங்' எந்திரம் வைத்து துளையிடும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது சுவற்றில் இருந்த மின்சார வயரின் மீது 'டிரில்லிங்' எந்திரம் பட்டதில் மின்சாரம் தாக்கி அலறினார். இதனை கண்டதும் அவரது அக்காள் ராஜேஸ்வரி தம்பியை காப்பாற்ற முயன்று தள்ளிவிட்டார். இதில் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. அய்யப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். ராஜேஸ்வரி லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அம்பத்தூர் போலீஸ் நிலையம் எதிரே மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நேற்று இரவு நடைபெற்றது.
    • சுமார் ஒரு மணிநேரத்துக்கு பின்னர் மின்வினியோகம் சீரானது.

    அம்பத்தூர் போலீஸ் நிலையம் எதிரே மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நேற்று இரவு நடைபெற்றது. ஜே.சி.பி. எந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது தரையில் புதைக்கப்பட்டு இருந்த மின்வயர் துண்டானது.

    இதனால் அப்பகுதியில் நள்ளிரவில் மின்தடை ஏற்பட்டது. தகவல் அறிந்ததும், அம்பத்தூர் கோட்ட செயற்பொறியாளர் மலைவேந்தன் மற்றும் உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் உள்ளிட்ட மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து இரவோடு இரவாக மின் வயரை சரிசெய்தனர். இதனால் சுமார் ஒரு மணிநேரத்துக்கு பின்னர் மின்வினியோகம் சீரானது.

    • கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் வடசென்னை பகுதியில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
    • குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    திருவொற்றியூர்:

    கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் வடசென்னை பகுதியில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    எர்ணாவூர் காமராஜ் நகர், பிருந்தாவன்நகர், கன்னிலால் லேஅவுட், காந்திநகர், எர்னீஸ்வரர் நகர், பஜனை கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் சரிவர வினியோகிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை தெரிகிறது. இந்த நிலையில் இன்று காலை சீரான குடிநீர் வழங்க கோரி அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கவுன்சிலர் ஜெயராமன் தலைமையில் எர்ணாவூர் முருகன் கோவில் சாலை அருகில் காலி குடங்களுடன் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் எண்ணூர் போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • நாளை பஞ்ச மூர்த்திகளுடன் ஸ்ரீ ராமலிங்க சாமுண்டேஸ்வரி தேவி திருவீதி உலா நடக்கிறது.
    • நாளை முதல் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேக விழா நடக்கிறது.

    சோழவரம் ஒன்றியம், ஆரணி பஜார் வீதியில் புகழ்மிக்க ஸ்ரீ ராமலிங்க சாமுண்டேஸ்வரி கோவில் உள்ளது. பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலின் கோபுரங்கள் மற்றும் வாகனங்கள் பழுது பார்த்து வர்ணம் பூசி திருப்பணிகள் நடைபெற்றது. இதையடுத்து 18 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று காலை கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதை முன்னிட்டு திங்கட்கிழமை காலை முதல் கணபதி பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கியது.இன்று காலை மகா பூர்ணாகுதி முடிவுற்று புனித நீர் அடங்கிய கலசங்கள் கோவிலின் அர்ச்சகர்கள் சுப்ரமணிய குருக்கள், நடராஜ குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு சென்று ராஜகோபுரம், விமானங்களுக்கும், பரிவார மூர்த்தி கள்,மூலவர் உள்ளிட்டவைகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை மாசர்ல ஹேமபூசனம் தலைமையில் புவனகிரி வெங்கடேஸ்வரலு, கொள்ளி லீலாராம்,மாசர்ல சீனிவாசலு, பி.முனி சந்திரய்யா மற்றும் விழா குழுவினர்களும்,கிராம பொது மக்களும், பக்தர்களும் செய்திருந்தனர். நாளை மாலை பஞ்ச மூர்த்திகளுடன் ஸ்ரீ ராமலிங்க சாமுண்டேஸ்வரி தேவி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை முதல் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேக விழா நடக்கிறது.

    • காக்களூர் சாலை சந்திப்பினை விரிவாக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன் தலைமையில் இன்று காலை ஆக்கிரமிப்ப வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றும்பணி தொடங்கியது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகராட்சி மற்றும் காக்களூர் ஊராட்சியை இணைக்கும் இடத்தில் காக்களூர் ஏரி உள்ளது. இந்த காக்களூர் ஏரிக்கரையை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள், கடைகள் கட்டப்பட்டு உள்ளன.

    இந்தநிலையில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் காக்களூர் சாலை சந்திப்பினை விரிவாக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிக்கு இடையூறாக காக்களூர் ஏரிக்கரையில் ஆக்திரமித்து கட்டப்பட்ட வீடுகள் இருந்தன. இதையடுத்து அந்த  ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன் தலைமையில் இன்று காலை ஆக்கிரமிப்ப வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றும்பணி தொடங்கியது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். திருவள்ளூர் தாலுக்கா இன்ஸ்பெக்டர் கமலஹாசன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் சுமார் 25-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ஊராட்சிகளுக்கு பெரும்பாலும் குடிநீர் வழங்கல் வாரியத்தின் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தி அதன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
    • கடந்த இரண்டு வாரமாக பிரளையம்பக்கம், அவுரிவாக்கம் ஆகிய இரண்டு ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியத்தில் மொத்தம் 55 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு பெரும்பாலும் குடிநீர் வழங்கல் வாரியத்தின் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தி அதன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் பொன்னேரி அடுத்த மெதூர் அருகே ஆழ்துளை கிணறு அமைத்து அங்கிருந்து பிரளையம்பக்கம், அவுரிவாக்கம் ஊராட்சிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் நிரப்பப்படுகிறது. பின்னர் ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் ஒவ்வொரு தெருவிற்கும் குறிப்பிட்ட நேரத்திற்கு வீட்டிற்கு இணைப்புகள் மற்றும் தெருக் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த இரண்டு வாரமாக பிரளையம்பக்கம், அவுரிவாக்கம் ஆகிய இரண்டு ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் கிராமமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். குடிநீர் வழங்கப்படாததால் பொது மக்கள் 5 கிலோமீட்டர் தூரம் திருப்பாலைவனம் மற்றும் பழவேற்காடு பகுதிக்கு சென்று குடத்தில் தண்ணீர் பிடித்து வருகின்றனர். மேலும் கேன் தண்ணீரை 30 ரூபாய் கொடுத்து வாங்கி வருகின்றனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் கடந்த இரண்டு வாரமாக குடிநீர் சரியாக வராததால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். வெயிலின் தாக்கத்தை தீர்க்க தண்ணீர் குடிக்க முடியாமல் கேன் தண்ணீரை ரூ.30 கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. வீட்டு தேவைகளுக்கு சுமார் 5 கிலோமீட்டர் வெளியில் சென்று குடத்தில் தண்ணீர் பிடிக்கிறோம்.

    இதுபற்றி ஊராட்சி நிர்வாகம் மற்றும் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. குடிநீர் பிரச்சினையை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×