என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த இரும்பு தடுப்பில் மோதியது.
    • விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூந்தமல்லி:

    கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது64). இவரது மகன் பிரகாஷ். இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்தவாசியில் நடந்த திருவிழாவில் கலந்து கொள்ள குடும்பத்துடன் சென்று இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை தந்தை-மகன் இருவரும் வந்தவாசியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.

    கோவூர் அருகே தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த இரும்பு தடுப்பில் மோதியது.இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த செல்வராஜிம், அவரது மகன் பிரகாசும் தூக்கி வீசப்பட்டனர். தலையில் பலத்த காயம் அடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே மகன் கண்முன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து போனார்.

    அவரது மகன் பிரகாஷ் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து பலியான செல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான செல்வராஜின் மகள் தீபா என்பவர் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. அவர் விபத்து நடந்த இடத்திற்கு வந்து தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    இந்த விபத்தால் தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் சுமார் ஒரு மணிநேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புள்ளிமானை நாய்கள் துரத்தி வந்த நிலையில் பள்ளி வகுப்பறையில் புகுந்த மானை பத்திரமாக அப்பகுதி மக்கள் மீட்டனர்.
    • மாதவரம் வனத்துறையினர் மானை மீட்டு வனபகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த வேன்பாக்கம் அரசு மேல் நிலைப் பள்ளி அருகே காட்டுப்பள்ளி வனப்பகுதியில் இருந்து தண்ணீருக்காக வந்த புள்ளிமானை நாய்கள் துரத்தி வந்த நிலையில் பள்ளி வகுப்பறையில் புகுந்த மானை பத்திரமாக அப்பகுதி மக்கள் மீட்டனர்.

    கும்முடிப்பூண்டி அடுத்த மாதவரம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் மாதவரம் வனத்துறையினர் மானை மீட்டு வனபகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

    • மாணவனின் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
    • டிராக்டர் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பார்த்திபனை போலீசார் தேடிவருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    பூந்தமல்லி அடுத்த சித்துக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் நித்திஷ் (வயது11). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர் கடந்த 25-ந் தேதி காலை வீட்டின் அருகே உள்ள சிவன்கோவில் பகுதிக்கு சென்றார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் மோதியதில் மாணவன் நித்திசின் உடல் இரண்டு துண்டாகி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுபற்றி போலீசுக்கு தெரிவிக்காமல் மாணவன் நித்தீசின் உடலை பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதைத்துவிட்டனர்.

    இதுகுறித்து வெள்ளவேடு போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாணவனின் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து பூந்தமல்லி தாசில்தார் மாலினி மற்றும் வெள்ளவேடு போலீசார் சித்துக்காடு கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் மோதியதில் சிறுவன் நித்தீஷ் பலியானது தெரிய வந்தது. பின்னர் பூந்தமல்லி தாசில்தார் மாலினி, பூந்தமல்லி உதவி கமிஷனர் ஜவஹர், வெள்ளவேடு காவல் ஆய்வாளர் லில்லி, உதவி ஆய்வாளர் செந்தில் நாதன், வி.ஏ.,ஓ., பிரகாஷ் பாலாஜி மற்றும் வெள்ளவேடு போலீசார் அப்பகுதிக்கு சென்று புதைக்கப்பட்ட சிறுவன் நித்தீசின் உடலை தோண்டி எடுத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து மீண்டும் அதே இடத்தில் உடல் புதைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிராக்டர் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பார்த்திபனை போலீசார் தேடிவருகிறார்கள்.

    • தடுப்பு வேலி இருப்பதை அறியாமல் வளைவில் திரும்பும் போது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த புதுப்பட்டு கூட்டுச்சாலையில் கடந்த 24-ந் தேதி இரவு காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் வாரச்சந்தையை முடித்துக் கொண்டு அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் பகுதிைய சேர்ந்த கூலி தொழிலாளிகள் 5 பெண்கள் உட்பட 7 பேர் ஒரே ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர். புதுப்பட்டு அருகே வந்த போது தடுப்பு வேலி இருப்பதை அறியாமல் வளைவில் திரும்பும் போது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் சிவகாமி, தேவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பலத்த காயம் அடைந்த பூங்கொடி(50) அரசு ஆஸ் பத்திரியிலும் கஜலட்சுமி (55) சென்னை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பூங்கொடி, கஜலட்சுமி ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் கவலைக்கிடமான நிலையில் கலைவாணி, செல்வம், மனோகரன் உட்பட 4 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பஞ்சநாதனை மர்ம கும்பல் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்திருப்பது தெரியவந்தது.
    • போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த வல்லூரைச் சேர்ந்தவர் பஞ்சநாதன் (வயது57). அ.தி.மு.க.வில் 3-வது வார்டு கிளை செயலாளராக இருந்தார். மேலும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

    இவர் வீட்டு முன்பு புதிதாக 2 கடைகள் கட்டி உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு பஞ்சநாதன் தனது கடை முன்பு தூங்கினார். இன்று அதிகாலை அப்பகுதி மக்கள் அவ்வழியே சென்றபோது கடையின் அருகில் ரத்த வெள்ளத்தில் பஞ்சநாதன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பஞ்சநாதனை மர்ம கும்பல் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வேத மந்திரங்களுடன் திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது.
    • வசந்த உற்சவம் விழா 31-ந்தேதி நிறைவு பெறுகிறது.

    திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர் பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

    வைத்திய வீரராகவர் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவம் இன்று மாலை திருக்குளம் அருகே உள்ள பங்களா தோப்பில் தொடங்குகிறது.

    இன்று மாலை 6 மணிக்கு கேடயத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீரராகவ பெருமாள் எழுந்தருளி திருக்குளம் வீதிகள் வழியாக சென்று வசந்த மண்டபத்துக்குள் மேளதா ளம் முழங்க எழுந்தருள்வார்.

    அங்கு வேத மந்திரங்களுடன் திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது. அதன் பின்னர் சாமி புறப்பாடு நடக்கிறது. 4 வீதிகள் வழியாக சாமி உலா வந்து கோவிலுக்குள் சென்றடைவார்.

    வசந்த உற்சவம் விழா வருகிற 31-ந் தேதி மாலை நிறைவு பெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • 6 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தினர்.
    • 6 வழிச்சாலை அமைப்பதை கண்டித்து 6 வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக ஊத்துக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஊத்துக்கோட்டை:

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ரூ.3200 கோடி செலவில் 136 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 வழிச்சாலை அமைக்க மத்திய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது. இந்த சாலை கன்னிகைபேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், சென்னங்காரணி, பருத்தி மேனிகுப்பம், பனப்பாக்கம், பெரண்டூர், போந்தவாக்கம் உட்பட 21 கிராமங்கள் வழியாக சித்தூர் வரை அமைய உள்ளது.

    இந்த சாலை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. இந்த திட்டம் நிறைவேற்றுப்பட்டால் ஊத்துக்கோட்டை தாலுகாவில் சுமார் 276 ஏக்கர் நிலப்பரப்பில் விளைநிலங்கள் கோவில்கள், அரசுப் பள்ளி கட்டிடங்கள், 200-க்கும் மேற்பட்ட வீடுகள், 13 ஏரிகள், 3 குளங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.

    6 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தினர். ஆனாலும் சாலை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் 6 வழிச்சாலை அமைப்பதை கண்டித்து 6 வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக ஊத்துக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    விடுதலை சிறுத்தை கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர் வக்கீல் ஜீவா, எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் அறிவுச் செல்வன், ஊத்துக்கோட்டை நகரப் பொருளாளர் ஜெபா, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் மஸ்தான், கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநிலச் செயலாளர் கரீம், தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த நாகராசன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட செயலாளர் பெரியசாமி, செஞ்சிறுத்தைகள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் கதிரவன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் சலீம் பாய், கிழக்கு மாவட்ட செயலாளர் புகாரி மற்றும் பலர் கலந்து கொண்டு 6 வழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி கண்டன முழுக்கங்கள் எழுப்பினர். தமிழர் விடுதலை இயக்கத்தை சார்ந்த ஆனந்தன் நன்றி கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் 34 திட்டங்கள் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
    • ஜனாதிபதி திறந்து வைத்தால் தான் ஏற்புடையதாக இருக்கும் என்பது முதலமைச்சரின் நிலைப்பாடு.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி அருகே உள்ள கரையான்சாவடியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடத்தை அமைச்சர் சேகர்பாபு இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் 34 திட்டங்கள் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அந்த இடங்களிலும் நேரடியாக கள ஆய்வு மேற் கொண்டு பணிகள் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கலைஞர் ஆட்சி காலத்தில் இருந்து மத்திய அரசுடன் உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற தாரக மந்திரத்தோடு தான் இயங்கி வருகிறோம். சமீபத்தில் கவர்னருடன் ஏற்பட்ட சர்ச்சையின் போது கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவாக விளக்கினார்.

    டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி தான் திறக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தி.மு.க. உறுதியாக உள்ளது. ஜனாதிபதி திறந்து வைத்தால் தான் ஏற்புடையதாக இருக்கும் என்பது முதலமைச்சரின் நிலைப்பாடு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது முன்னாள் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், துறை செயலாளர் அபூர்வா, சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்ஆல்பி ஜான் வர்கீஸ், கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ, நகர்மன்ற தலைவர் காஞ்சனாசுதாகர் உடன் இருந்தனர்.

    இதேபோல் ஆவடி, அன்னனூர், கோணம்பேடு அரசு உயர்நிலைப்பள்ளிகளில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம், ராமாபுரத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த இடங்களையும் அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • முதியவர் குமரகுரு தனது தலையை சுவற்றில் மோதி தற்கொலைக்கு முயன்றார்.
    • படுகாயம் அடைந்த குமரகுரு, மங்கை லட்சுமி, ராணி ஆகிய 3 பேருக்கும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி பிராடிஸ் ரோடு, பகுதியை சேர்ந்தவர் மங்கை லட்சுமி (வயது84). இவரது மகள் ராணி (61). மங்கைலட்சுமியின் தம்பி கூத்து என்ற குமரகுரு (72). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். சொத்து தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த குமரகுரு அருகில் கிடந்த சுத்தியலால் மங்கைலட்சுமி, அவரது மகள் ராணி ஆகியோரை தலையில் பலமாக தாக்கி கொல்ல முயன்றார். இதில் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர் குமரகுரு தனது தலையை சுவற்றில் மோதி தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயம் அடைந்த குமரகுரு, மங்கை லட்சுமி, ராணி ஆகிய 3 பேருக்கும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சோழவரம் அருகே விஜயநல்லூர் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் 40-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர்.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்குன்றம்:

    சோழவரம் அருகே விஜயநல்லூர் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் 40-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். இதற்காக அவர்களுக்கு அங்கு ஓலை கொட்டகை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அந்த ஓலை கொட்டகையில் இன்று காலை திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென குடிசை முழுவதும் பற்றி எரிந்தது.

    தீ விபத்து ஏற்பட்ட போது கொட்டகையில் வடமாநில தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் இந்த தீ அருகே இருந்த பழைய பிளாஸ்டிக் மற்றும் மரக்கட்டைகள் குடோனுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் ஆனது. தகவல் அறிந்ததும் செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் குடோன்களில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமானது.

    தீ விபத்துக்கான காரணம் குறித்து சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்திய ஆடைகள், ஷு, செருப்பு, மற்றும் பொருட்கள் மற்றும் புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வைத்து செல்கிறார்கள்.
    • பொதுமக்களும் முழுவதுமாக பயன்படுத்தாத பொருட்களை மையத்தில் வைத்து செல்வதால் குவிந்து வருகின்றன.

    பொன்னேரி:

    மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏழைகள் பயன்பெறும் வகையில் பொதுமக்கள் பயன்டுத்திய ஆடைகள் மற்றும் பொருட்களை வழங்கும் வகையில் மறுபயன்பாடு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த மையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 4 இடங்களில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்திய ஆடைகள், ஷு, செருப்பு, மற்றும் பொருட்கள் மற்றும் புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வைத்து செல்கிறார்கள். இதனை தேவைப்படும் ஏழை எளியோர்கள் இலவசமாக எடுத்து செல்லாம். இதற்காக ஏற்பாடுகளை மீஞ்சூர் பேரூராட்சி செய்து உள்ளது. பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் வீடு வீடாக சென்றும் பொருட்கள் மற்றும் ஆடைகளை பெற்று மறுசுழற்சி பயன்பாட்டு மையத்தில் சேகரித்து வைக்கின்றனர். பொதுமக்களும் முழுவதுமாக பயன்படுத்தாத பொருட்களை மையத்தில் வைத்து செல்வதால் குவிந்து வருகின்றன. இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு கூறும்போது, பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று பயன்படுத்திய மற்றும் பயன்படுத்தாத பொருட்கள், உடைகளை சேகரித்து இந்த மையத்தில் வைத்து வருகிறார்கள். வறுமையில்வாடும் ஏழை எளியவர்கள் வந்து தேவையானவற்றை எடுத்து செல்லலாம். இதனால் வீடுகளில் பழைய பொருட்கள் குறையும். அது மற்றவர்களுக்கு பயன்படும் அளவிலும் அமைந்து உள்ளது. பேரூராட்சி அலுவலகத்திற்கு போன் செய்தால் தூய்மைப் பணியாளர்கள் வீட்டுக்கு சென்று பொருட்களை வாங்கி செல்வார்கள் என்றார்.

    • வேலைக்கு முறையான ஊதியத்தை வங்கிக் கணக்கில் இருப்பு வைக்காமல் காலதாமதம் செய்கிறார்கள்.
    • வீட்டு வரி மற்றும் தண்ணீர் வரி கூடுதலாக வசூலிக்கப்படுகிறது என்று குற்றம்சாட்டினர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் பூங்குளம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் சம்பளம் நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கக்கோரி 100 நாள் வேலைதிட்ட பணியாளர்கள் வேலையை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், ஊராட்சி துணைத் தலைவர் ரமேஷ் ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களை பணியாளர்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து சம்பளப்பணம் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்தார். இதையடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து 100 நாள் பணியாளர்கள் கூறும்போது, வேலைக்கு முறையான ஊதியத்தை வங்கிக் கணக்கில் இருப்பு வைக்காமல் காலதாமதம் செய்கிறார்கள். இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டு வருகிறோர். இதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டோம். வீட்டு வரி மற்றும் தண்ணீர் வரி கூடுதலாக வசூலிக்கப்படுகிறது என்று குற்றம்சாட்டினர்.

    ×