என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • கோவில் அருகே புற்றீசல் போல் அனுமதியின்றி பக்தர்கள் தங்கும் விடுதி (லாட்ஜ்) கோவிலை சுற்றிலும் ஏராளமாக உருவெடுத்துள்ளது.
    • தலைமறைவான மவுலியை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் புகழ் பெற்ற அருள்மிகு பவானி அம்மன் திருக்கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலுக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் வந்து நேர்த்திக் கடனை செலுத்தி விட்டு செல்கின்றனர்.

    இதனால் இக்கோவில் அருகே புற்றீசல் போல் அனுமதியின்றி பக்தர்கள் தங்கும் விடுதி (லாட்ஜ்) கோவிலை சுற்றிலும் ஏராளமாக உருவெடுத்துள்ளது. இங்கு விபச்சாரம் அதிக அளவு நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னை, கொரட்டூரை சேர்ந்த பிரியதர்ஷினி(வயது23) என்ற இளம் பெண் நேற்று முன்தினம் வேலை தேடி பெரியபாளையம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த சென்னை, கொரட்டூர், அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த குகன்(வயது24) என்பவர் வீட்டு வேலை வாங்கித் தருவதாக கூறி கோவிலின் எதிரே உள்ள கார்த்திக் லாட்ஜுக்கு இளம் பெண்ணை அழைத்து வந்து தங்க வைத்தார்.

    பின்னர், பெரியபாளையம், தண்டுமாநகரை சேர்ந்த லாட்ஜ் உரிமையாளர் கார்த்திக்(வயது35) மற்றும் குகன், பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த மவுலி ஆகியோர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டல் விடுத்து அநாகரீகமாக பேசி திட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து பிரியதர்ஷினி பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    எனவே,போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக் மற்றும் குகனை கைது செய்து ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவான மவுலியை வலை வீசி தேடி வருகின்றனர்.

    சிறையில் அடைக்கப்பட்ட கார்த்திக் என்பவர் திமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் என்றும், முடி வியாபாரி என்றும், தங்கும் விடுதியின் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆரணி கும்மடம் தெருவில் உள்ள பவானி அம்மன் திருக்கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
    • விபத்து குறித்து வரலட்சுமியின் மகள் சுசீலா நேற்று இரவு ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பஜார் வீதியில் வசித்து வந்தவர் கூலித் தொழிலாளி வரலட்சுமி(வயது58) ஆவார். இந்த மூதாட்டி நேற்று முன்தினம் காலை ஆரணி கும்மடம் தெருவில் உள்ள பவானி அம்மன் திருக்கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

    பின்னர், கோவிலில் கற்பூரம் ஏற்றி வழிபட்டார்.அப்பொழுது எதிர்பாராத விதமாக இவரது சேலையில் தீப்பிடித்தது. அப்பொழுது காற்று பலமாக வீசியது. இதனால் சேலையில் தீ மளமளவென பற்றி உடல் கருகி அலறி துடித்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி நேற்று இரவு பரிதாபமாக பலியானார். இந்த விபத்து குறித்து வரலட்சுமியின் மகள் சுசீலா நேற்று இரவு ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். எனவே போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    • எந்த அரசியல் காரணங்களுக்காகவும் கால்நடை ஆம்புலன்சு சேவை தாமதம் ஏற்படவில்லை.
    • செயல்பாட்டுச் செலவுகளுக்கு நிதி தாமதம் மற்றும் ஆம்புலன்சுகளை இயக்க ஊழியர்கள், பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

    பூந்தமல்லி:

    கால்நடை ஆரோக்கியம் மற்றும் நோய் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் கால்நடை ஆம்புலன்சுகள் வாங்க மத்திய அரசு கடந்த 2021-ம் ஆண்டு ரூ.39 கோடி நிதி ஒதுக்கியது. ஒரு லட்சம் கால்நடைகளுக்கு ஒரு ஆம்புலன்சு என்ற வீதத்தில் இதனை செயல்படுத்த திட்டமிடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மாநில கால்நடை பராமரிப்பு துறை கடந்த ஆண்டு 250 கால்நடை ஆம்புலன்சுகளை வாங்கியது. இந்த ஆம்புலன்சுகள் தற்போது பூந்தமல்லியில் உள்ள ஒரு யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் இந்த நடமாடும் கால்நடை மருத்துவ ஆம்புலன்சு இன்னமும் பயன்பாட்டுக்கு வராமல் அங்கேயே உள்ளது.

    இது 100 சதவீதம் மத்திய அரசின் நிதி உதவி பெற்றது என்பதால் ஆம்புலன்சில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஒட்டுவதா? அல்லது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை ஒட்டுவதா என்ற சர்ச்சை எழுந்ததே காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைப்பவர் யார்? என்றும் கேள்வி எழுந்து உள்ளது. இதன் காரணமாக 250 கால்நடை ஆம்புலன்சுகளும் யார்டிலேயே கடந்த 5 மாதமாக பயன்பாட்டுக்கு வராமல் உள்ளன.

    இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    எந்த அரசியல் காரணங்களுக்காகவும் கால்நடை ஆம்புலன்சு சேவை தாமதம் ஏற்படவில்லை. இதன், செயல்பாட்டுச் செலவுகளுக்கு நிதி தாமதம் மற்றும் ஆம்புலன்சுகளை இயக்க ஊழியர்கள், பணியாளர்களை நியமிக்க வேண்டும். இன்னும் 3 மாதங்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளும் முடிக்கப்பட்டு ஆம்புலன்சுகள் பயன்பாட்டுக்கு தயாராகிவிடும். ஊழியர்களை நியமிப்பது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திற்கு கடிதம் எழுதி உள்ளோம்.

    இத்திட்டத்தின்படி மத்திய, மாநில அரசுகள் செயல்பாட்டுச் செலவை பகிர்ந்து கொள்ளும். 1962- என்ற எண்ணிற்கு அழைப்பு வந்தவுடன், கால்நடை மருத்துவ சேர்க்கைக்கு இந்த ஆம்புலன்சுகள் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து செல்லும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்கள் தங்களுக்கு தேவையான சாதி, இருப்பிட சான்று போன்ற சான்றிதழ்கள் பெற கட்டப்பட்டது.
    • திருப்பந்தியூர் கிராமச் சேவை மையம் நெல் கொள்முதல் நிலையமாக மாறி உள்ளது.

    திருவள்ளூர் அருகே உள்ள திருப்பந்தியூர் ஊராட்சிக்குட்பட்டது பண்ணுார் கிராமம். இங்குள்ள கால்நடை மருத்துவமனை அருகே கடந்த 2014-15-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.14.55 லட்சம் மதிப்பீட்டில் கிராம சேவை மையம் கட்டப்பட்டது.

    இதன் மூலம் மக்கள் தங்களுக்கு தேவையான சாதி, இருப்பிட சான்று போன்ற சான்றிதழ்கள் பெற கட்டப்பட்டது. ஆனால் பணிகள் நிறைவடைந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்று வரை இந்த கிராம சேவை மையம் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. இந்நிலையில் தற்போது திருப்பந்தியூர் கிராமச் சேவை மையம் நெல் கொள்முதல் நிலையமாக மாறி உள்ளது. அங்கு முழுவதும் நெல்மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இது அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட நிர்வாகம் கிராம சேவை மையத்தை முறையான மக்கள் சேவை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.
    • செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் போதுமான தண்ணீர் உள்ளதால் எந்த பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.

    இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது கோடை காலம் என்பதால் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் தண்ணீர் தேவை அதிகரித்து வருவதால் குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 60 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து விட்டது. 6908 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 58 சதவீதம் ஆகும்.

    குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்து வந்தாலும் தற்போது கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திரமாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.

    மேலும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் போதுமான தண்ணீர் உள்ளதால் எந்த பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி. இதில் 1135 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா நீர் 135 கனஅடி வந்து கொண்டு இருக்கிறது.

    சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 708 மி.கனஅடியும், புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கன அடியில் 2251 மி.கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 2354 மி.கனஅடியும் தண்ணீர் உள்ளது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளவான 500 மி.கனஅடியில் 460 மி.கன அடி தண்ணீர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • மனவளர்ச்சி குன்றி உடல் ரீதியாக மகள் கஷ்டப்பட்டு வருவதை கண்டு மனம் கலங்கிய சுலோச்சனா மகளை தீவைத்து எரித்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
    • மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூந்தமல்லி:

    மாங்காடு அடுத்த கொளப்பாக்கத்தை சேர்ந்தவர் நடராஜன். கார்பெண்டர். இவரது மனைவி சுலோச்சனா (வயது48). இவரது மகள் மீனாட்சி(18). இவர் பிறந்தது முதல் மனவளர்ச்சி, உடல் வளர்ச்சி குன்றி இருந்தார். மகன் தினேஷ்.

    மனவளர்ச்சி குன்றிய மீனாட்சியை சுலோச்சனா மற்றும் அவரது கணவர் கவனித்து வந்தனர். மகள் மனவளர்ச்சி குன்றி கஷ்டப்பட்டு வந்ததால் பெற்றோர் மிகவும் மனவேதனை அடைந்தனர். இதுபற்றி அவர்கள் அடிக்கடி பேசி வருத்தப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த சுலோச்சனாவின் கணவர் நடராஜன், மகன் தினேஷ் ஆகியோர் வெளியேசென்று இருந்தனர். வீட்டில் சுலோச்சனா, அவரது மகள் மீனாட்சி மட்டும் இருந்தனர்.

    ஏற்கனவே மனவளர்ச்சி குன்றி உடல் ரீதியாக மகள் கஷ்டப்பட்டு வருவதை கண்டு மனம் கலங்கிய சுலோச்சனா மகளை தீவைத்து எரித்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

    இதையடுத்து வீட்டில் இருந்த மண்எண்ணையை நடக்கப்போகும் விபரீதத்தை அறியாமல் இருந்த மகள் மீனாட்சி மீது ஊற்றி சுலோச்சனா தீவைத்தார். மேலும் அவர் தனது உடல் மீதும் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார்.

    இதில் அவர்கள் 2 பேரும் தீயில் கருகி அலறி துடித்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது சுலோச்சனாவும் அவரது மகள் மீனாட்சியும் தீயில் கருகுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீயை அணைத்து அவர்கள் 2 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சுலோச்சனா பரிதாபமாக இறந்தார். அவரது மகள் மீனாட்சிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலைமையும் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

    மகளை சரிவர பராமரிக்க முடியாததால் சுலோச்சனா இந்த விபரீத முடிவை எடுத்து இருப்பது தெரியவந்து உள்ளது.

    மனவளர்ச்சி குன்றிய மகளை பராமரித்து வந்த தாயே மன உளைச்சலில் மகளை தீவைத்து எரித்து விட்டு தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாங்காடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக செந்தாமரைக்கண்ணன் பணியாற்றி வருகிறார்.
    • உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த செந்தாமரைக்கண்ணன் வீட்டில் இருந்தபோது திடீரென இறந்தார்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் செந்தாமரைக்கண்ணன் (வயது59).

    உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவர் வீட்டில் இருந்தபோது திடீரென இறந்தார். அவரது உடலுக்கு போலீஸ் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

    • 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
    • வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அனைவருக்கும் பரவி வருவதாக கூறினார்கள்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட உப்பளம், பரிக்கப்பட்டு ஆகிய கிராமங்களில் கடந்த 3 வாரத்திற்கு மேலாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 5 பேருக்க டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரு வாரத்திற்கு உடல்வலியும், கை, கால் மூட்டு வலியும் அதிகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவித்து உள்ளனர். மேலும் வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அனைவருக்கும் பரவி வருவதாக கூறினார்கள்.

    இதைத்தொடர்ந்து காய்ச்சல் பரவிய உப்பளம், பரிக்கப்பட்டு கிராமங்களில் சுகாதாரப் பணி மாவட்ட துணை இயக்குனர் ஜவகர்லால், மீஞ்சூர் வட்டார மருத்துவர் மகேந்திரவர்மன் தலைமையில், 4 மருத்துவர்கள், 5 செவிலியர்கள் மருத்துவ முகாமிட்டு பரிசோதனை செய்து வருகிறார்கள். அதிக காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. கொசு ஒழிப்பு பணியாளர்கள் கொசு மருந்து அடித்தல், வீடு வீடாக சென்று பிளாஸ்டிக் பொருட்களில் தேங்கி உள்ள தண்ணீரை அகற்றுதல், பிளீச்சிங் பவுடர் தெளித்தல், தெருக்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் இதுவரை எந்த வகையான வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது என்று கண்டறியப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

    இதுகுறித்து சுகாதாரப் பணி மாவட்ட துணை இயக்குனர் ஜவகர்லால் கூறியதாவது:-

    பொதுமக்கள் சேமித்து வைக்கின்ற தண்ணீரை மூடி வைக்க வேண்டும். வாரம் இரு முறை தண்ணீரை மாற்ற வேண்டும். குளிர்சாதன பெட்டியின் பின்பக்கம் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற வேண்டும். இதனை சரியாக செய்யாததே அதிகமான வீடுகளில் காய்ச்சல் பரவுவதற்கு காரணமாக உள்ளது. காய்ச்சல் பாதித்த பொதுமக்கள் அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். தன்னிச்சையாக கடைகளில் மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிடக்கூடாது. பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டாக்டரின் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகள் கொடுத்தால் சம்பந்தப்பட்ட மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனுப்பப்பட்ட ரத்த மாதிரிகளில் அனைத்து வகை பரிசோதனையும் செய்யப்படும். மேலும் மலேரியா நிபுணர் குழுவும் ஆய்வு செய்து வருகிறது. கிராமங்களில் காய்ச்சல் பரவாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோபம் அடைந்த சங்கர் உள்பட 3 பேரும் சேர்ந்து ராமமூர்த்தி வளர்த்து வந்த நாயை கத்தியால் குத்தினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர், பிரபாகரன், ரோகித் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. டிரைவர். இவர் நாய் ஒன்று வளர்த்து வந்தார்.

    இந்த நிலையில் அந்த நாய் அடிக்கடி சாலையில் செல்வோரை குரைத்து மிரட்டி அச்சுறுத்திவந்ததாக தெரிகிறது.மேலும் வாகனங்களில் செல்லும் போது அதன் முன்பு நின்றும் குரைத்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி அதே பகுதியைசேர்ந்த சங்கர், பிரபாகரன், ரோகித்த ஆகியோர் ராமமூர்த்தியிடம் கூறினர். அப்போது அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் கோபம் அடைந்த சங்கர் உள்பட 3 பேரும் சேர்ந்து ராமமூர்த்தி வளர்த்து வந்த நாயை கத்தியால் குத்தினர். மேலும் அதன் கழுத்தையும் அறுத்ததாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த நாய் இறந்து போனது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ராமமூர்த்தி மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர், பிரபாகரன், ரோகித் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பொன்னேரி பாஜாரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.
    • ஆரணி ஆற்றின் அருகில் சுடுகாட்டின் அருகே கொட்டப்படும் குப்பைகளை அகற்ற வேண்டும்.

    பொன்னேரி:

    பொன்னேரி தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி நகர பாஜக சார்பில் சிறப்பு செயற்குழு கூட்டம் நகரத் தலைவர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய அரசின் நலத்திட்ட மாவட்ட பொறுப்பாளர் கஜேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பொன்னேரி பாஜாரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். நகராட்சி சாலை சீரமைக்க வேண்டும். ஆரணி ஆற்றின் அருகில் சுடுகாட்டின் அருகே கொட்டப்படும் குப்பைகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மாவட்ட செயலாளர் மற்றும் பொறுப்பாளர் நந்தன் மாவட்ட செயலாளர் கோட்டி நகரப் பொதுச் செயலாளர் ரமேஷ் கோகுல் பொருளாளர் பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கல்லூரி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஊக்கத்தொகை பெற்றுக்கொண்ட மாணவர்கள் ஜே எஸ் டபிள்யூ நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஜே எஸ் டபிள்யூ ஃபவுண்டேசன் சார்பில் மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள 44 கல்லூரி மாணவர்களுக்கு 9,70,602 ரூபாய் மதிப்பில் 2022 -23 ஆண்டிற்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய சேர்மன் ரவி தலைமையில் நடைபெற்றது.

    இதில் ஜே எஸ் டபிள்யூ பொது மேலாளர் முரளி, மனிதவள மேம்பாட்டு அதிகாரி பழனியப்பன், சிஎஸ்ஆர் பொறுப்பாளர் முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், கவுன்சிலர் கதிரவன், அனுப்பம்பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் சார்லஸ் மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் ஊக்கத்தொகை பெற்றுக்கொண்ட மாணவர்கள் ஜே எஸ் டபிள்யூ நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

    • மணலி புதுநகர் வழியாக வரும் கனரக வாகனங்கள் சர்வீஸ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன.
    • சர்வீஸ் சாலையில் வைக்கப்பட்டு உள்ள தடுப்பு கற்களை அகற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    பொன்னேரி:

    திருெவாற்றியூர்-மீஞ்சூர் இடையே மணலி புதுநகர் வழியாக வரும் கனரக வாகனங்கள் சர்வீஸ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன.

    இதனை தடுக்க சர்வீஸ்சாலை பிரியும் இடங்களான கொண்டக்கரை, நாபாளையம், வல்லூர், மணலி புதுநகர், ஆண்டார் மடம் உள்ளிட்ட இடங்களில் சிமெண்டு தடுப்பு கற்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் கனரக வாகனங்கள் சர்வீஸ் சாலையில் நிறுத்தப்படுவது தடுக்கப்பட்டது.

    எனினும் அந்த தடுப்பு கற்களை சிலர் நகர்த்தி விட்டு கனரக வாகனங்களை தற்போது நிறுத்தி வருகின்றனர். இதையடுத்து செங்குன்றம் போக்குவரத்து உதவி கமிஷனர் மலைச்சாமி போக்குவரத்து ஆய்வாளர் சோபிராஜ் ஆகியோர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். சர்வீஸ் சாலையில் வைக்கப்பட்டு உள்ள தடுப்பு கற்களை அகற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக திருவொற்றியூர் முதல் மீஞ்சூர் வரை நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு பாதிப்பாக விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    ×