search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிரதமர் படமா? முதலமைச்சர் படமா?-  யார் படத்தை போடுவது என்ற சர்ச்சையால் 250 ஆம்புலன்சுகள் சும்மா கிடக்கும் அவலம்
    X

    பிரதமர் படமா? முதலமைச்சர் படமா?- யார் படத்தை போடுவது என்ற சர்ச்சையால் 250 ஆம்புலன்சுகள் சும்மா கிடக்கும் அவலம்

    • எந்த அரசியல் காரணங்களுக்காகவும் கால்நடை ஆம்புலன்சு சேவை தாமதம் ஏற்படவில்லை.
    • செயல்பாட்டுச் செலவுகளுக்கு நிதி தாமதம் மற்றும் ஆம்புலன்சுகளை இயக்க ஊழியர்கள், பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

    பூந்தமல்லி:

    கால்நடை ஆரோக்கியம் மற்றும் நோய் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் கால்நடை ஆம்புலன்சுகள் வாங்க மத்திய அரசு கடந்த 2021-ம் ஆண்டு ரூ.39 கோடி நிதி ஒதுக்கியது. ஒரு லட்சம் கால்நடைகளுக்கு ஒரு ஆம்புலன்சு என்ற வீதத்தில் இதனை செயல்படுத்த திட்டமிடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மாநில கால்நடை பராமரிப்பு துறை கடந்த ஆண்டு 250 கால்நடை ஆம்புலன்சுகளை வாங்கியது. இந்த ஆம்புலன்சுகள் தற்போது பூந்தமல்லியில் உள்ள ஒரு யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் இந்த நடமாடும் கால்நடை மருத்துவ ஆம்புலன்சு இன்னமும் பயன்பாட்டுக்கு வராமல் அங்கேயே உள்ளது.

    இது 100 சதவீதம் மத்திய அரசின் நிதி உதவி பெற்றது என்பதால் ஆம்புலன்சில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஒட்டுவதா? அல்லது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை ஒட்டுவதா என்ற சர்ச்சை எழுந்ததே காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைப்பவர் யார்? என்றும் கேள்வி எழுந்து உள்ளது. இதன் காரணமாக 250 கால்நடை ஆம்புலன்சுகளும் யார்டிலேயே கடந்த 5 மாதமாக பயன்பாட்டுக்கு வராமல் உள்ளன.

    இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    எந்த அரசியல் காரணங்களுக்காகவும் கால்நடை ஆம்புலன்சு சேவை தாமதம் ஏற்படவில்லை. இதன், செயல்பாட்டுச் செலவுகளுக்கு நிதி தாமதம் மற்றும் ஆம்புலன்சுகளை இயக்க ஊழியர்கள், பணியாளர்களை நியமிக்க வேண்டும். இன்னும் 3 மாதங்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளும் முடிக்கப்பட்டு ஆம்புலன்சுகள் பயன்பாட்டுக்கு தயாராகிவிடும். ஊழியர்களை நியமிப்பது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திற்கு கடிதம் எழுதி உள்ளோம்.

    இத்திட்டத்தின்படி மத்திய, மாநில அரசுகள் செயல்பாட்டுச் செலவை பகிர்ந்து கொள்ளும். 1962- என்ற எண்ணிற்கு அழைப்பு வந்தவுடன், கால்நடை மருத்துவ சேர்க்கைக்கு இந்த ஆம்புலன்சுகள் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து செல்லும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×