என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறக்க வேண்டும் என்பதில் தி.மு.க. உறுதியாக உள்ளது- அமைச்சர் பேட்டி
- சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் 34 திட்டங்கள் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
- ஜனாதிபதி திறந்து வைத்தால் தான் ஏற்புடையதாக இருக்கும் என்பது முதலமைச்சரின் நிலைப்பாடு.
பூந்தமல்லி:
பூந்தமல்லி அருகே உள்ள கரையான்சாவடியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடத்தை அமைச்சர் சேகர்பாபு இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் 34 திட்டங்கள் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அந்த இடங்களிலும் நேரடியாக கள ஆய்வு மேற் கொண்டு பணிகள் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கலைஞர் ஆட்சி காலத்தில் இருந்து மத்திய அரசுடன் உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற தாரக மந்திரத்தோடு தான் இயங்கி வருகிறோம். சமீபத்தில் கவர்னருடன் ஏற்பட்ட சர்ச்சையின் போது கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவாக விளக்கினார்.
டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி தான் திறக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தி.மு.க. உறுதியாக உள்ளது. ஜனாதிபதி திறந்து வைத்தால் தான் ஏற்புடையதாக இருக்கும் என்பது முதலமைச்சரின் நிலைப்பாடு.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது முன்னாள் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், துறை செயலாளர் அபூர்வா, சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்ஆல்பி ஜான் வர்கீஸ், கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ, நகர்மன்ற தலைவர் காஞ்சனாசுதாகர் உடன் இருந்தனர்.
இதேபோல் ஆவடி, அன்னனூர், கோணம்பேடு அரசு உயர்நிலைப்பள்ளிகளில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம், ராமாபுரத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த இடங்களையும் அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.






