என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் பேருந்தில் சிக்கி இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
    • விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    திருப்பூர்:

    கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து பல்லடம் வழியாக மதுரை நோக்கி ஆம்னி பஸ் ஒன்று இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. பஸ்ஸில் 46 பயணிகள் பயணம் செய்தனர்.

    பஸ்சை மதுரையைச் சேர்ந்த முருகானந்தம்(36) என்பவர் ஓட்டி வந்தார். பஸ் பல்லடத்தில் அண்ணா நகர் என்ற பகுதியில் திருச்சி- கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை ஓட்டுநர் கவனிக்காததால் அதில் மோதி பஸ் தாறுமாறாக சென்று தலைகீழாக கவிழ்ந்தது.

    விபத்தில் சிக்கிய பயணிகள் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் பல்லடம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் பேருந்தில் சிக்கி இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். இதில் 10 பேருக்கு படுகாயம் ஏற்பட்டிருந்தது. அவர்களை உடனடியாக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் லேசான காயங்கள் ஏற்பட்ட 36 பயணிகளையும் பத்திரமாக மீட்டனர். அதிகாலையில் நடந்த இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அனைத்து பயணிகளும் உயிர் தப்பினர்.

    தொடர்ந்து திருச்சி- கோவை தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து கிடக்கும் பஸ்சை அப்புறப்படுத்தும் பணியில் பல்லடம் போக்குவரத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் திருப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து ஓம் சக்தி, ஓம் காளி கோஷம் விண்ணதிர குண்டம் இறங்கினர்.

     மேலும் சிலர் கைக்குழந்தையுடனும் குண்டம் இறங்கினர். முன்னதாக நேற்று இரவே லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமாநல்லூர் வந்து குவிந்தனர். மாலை 3.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுக்கின்றனர். இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை நிகழ்ச்சி, பட்டிமன்றம் போன்றவை நடக்கிறது.

    • தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரை கண்டா வரச்சொல்லுங்க என போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
    • தொகுதி மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றவே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுப்பராயன் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார்.

    இவர் தொகுதி மக்களை சரிவர சந்திக்க வில்லை என்று வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்பே திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரை கண்டா வரச்சொல்லுங்க என போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தனது தொகுதிக்கு செய்த பணிகளை பட்டியலிட்டு கூறினால் ரூ.1கோடி பரிசு என்ற போஸ்டர் மண்ணின் மைந்தர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் தொகுதியின் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

    இந்நிலையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு வெளியே வந்த வேட்பாளர் சுப்பராயனிடம் , தொகுதி மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றவே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்த அவர், ஒரு கோடி ரூபாய் பரிசு தருவதாக கூறிய நபரும், அவரின் அமைப்பினரும், ஒரு கோடி ரூபாயுடன் என் எம்.பி., அலுவலகத்திற்கு வந்தால், திருப்பூர் தொகுதியில் நிறைவேற்றிய திட்டங்கள் விபரம் முழுவதையும் தெரிவிக்கிறேன். ஒரு கோடி ரூபாய் பணத்தை ஆதரவற்ற அனாதை இல்லங்களுக்கு வழங்கவும் காத்திருக்கிறேன்.எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றார்.

    • பயணிகள் போர்வையில் ரெயில்கள் மூலமாக பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க தனி கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • திருப்பூர் ரெயில் நிலையத்தில் குழுவினர் ரெயில்வே போலீசாருடன் இணைந்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம்- பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் பயணிகள் போர்வையில் ரெயில்கள் மூலமாக பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க தனி கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் அந்த குழுவினர் ரெயில்வே போலீசாருடன் இணைந்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பயணிகளின் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்யும் போலீசார் பணம், பரிசு பொருட்கள் எடுத்து சென்றால் அதனை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    • தேரோட்டம் இன்று விமரி சையாக நடைபெற்றது.
    • நேற்று இரவு, சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வர சாமி மலைக்கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா, இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது..

    விழாவையொட்டி, கடந்த மாதம் 21-ந்தேதி ஓசூர் தேர்பேட்டையில் பால்கம்பம் நட்டு, தேர்கட்டும் பணிகள் தொடங்கியது. தொடர்ந்து, கடந்த 18-ந்தேதி அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து, விழா நிகழ்ச்சிகள், கடந்த 19-ந் தேதி ஓசூர் வீரசைவ லிங்காயத்து மரபினரால் திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து நேற்றுவரை ஓசூர் தேர்பேட்டையில் உள்ள ஸ்ரீ கல்யாண சூடேஸ்வரர் கோவிலில் தினமும் இரவு சிறப்பு பூஜைகளும் சிம்ம வாகனம், மயில் வாகனம், நந்தி வாக னம், நாக வாகனம் உள்ளிட்ட வாகன உற்ச வங்கள், பூ அலங்காரங்கள் நடைபெற்றது. நேற்று இரவு, சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர், யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலை 10.10 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில், சாமியை வைத்து முதலில் விநாயகர் சிறிய தேரையும், அதனை தொடர்ந்து பெரிய தேரையும் பகுதி கோஷம் முழங்க பக்தர்கள் தேரை இழுத்து சென்றனர்.

    விழாவையொட்டி தேர்பேட்டை மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்புகள் மற்றும் பக்தர்கள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தேர்த்திருவிழாவை யொட்டி, ஓசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

    • வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கி திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறு வனங்களில் பணியாற்றுகின்றனர்.
    • ஒருவர் வண்ண பொடிகளை தூவி, சாயங்களை கரைத்து, தெளித்து கொண்டாடினர்.

    திருப்பூர்:

    வட மாநிலத்தவர்களின் கொண்டாட்டங்களில் ஹோலி பண்டிகை முக்கியத்துவம் வாய்ந்தது. பின்னலாடை நகரான திருப்பூரில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பீகார், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கி திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறு வனங்களில் பணி யாற்றுகின்றனர்.

    இதற்கிடையே ஹோலி பண்டிகையை கொண்டாட திருப்பூரில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் ரெயில் மூலம் தங்களது சொந்த ஊருக்கு சென்று ள்ளனர். திருப்பூரில் வசிக்கும் வட மாநில த்தவர்கள், தங்களது குடும்பத்தினரோடு இன்று முதலே ஹோலி பண்டிகையை, உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    திருப்பூர் ராயபுரம், காதர்பேட்டை, ஸ்டேட் பாங்க் காலனி, சித்தப்பா அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வெளி மாநிலத்தவர்கள், நண்பர்கள், உறவினர்களுடன் இணைந்து ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை தூவி, சாயங்களை கரைத்து, தெளித்து கொண்டாடினர். 

    • துர்க்கை ஈஸ்வரனின் உடல் புதைத்த இடத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது.
    • டாக்டர்கள் குழுவினர் அதே இடத்தில் வைத்து பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை அடுத்த வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த அழகுமுத்து என்பவரது மகன் துர்க்கை ஈஸ்வரன் (வயது 32). விவசாயியான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் கைக்குழந்தை உள்ளது.

    இந்தநிலையில் கடந்த 16-ந் தேதி வீட்டிலிருந்து போன துர்க்கை ஈஸ்வரன் 17-ந் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.ஆனால் அதிக மது போதையில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று கருதிய குடும்பத்தினர் அவரது உடலை புதைத்து விட்டனர்.

    இந்தநிலையில் துர்க்கை ஈஸ்வரனின் இறப்பு சான்றிதழ் வழங்குவதற்காக விசாரணை மேற்கொண்ட கிராம நிர்வாக அலுவலர் பிரபுவிடம் சிலர் துர்க்கை ஈஸ்வரனின் மரணம் குறித்து சந்தேகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    உடல் தோண்டியெடுப்பு இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் பிரபு அளித்த புகாரின் பேரில் துர்க்கை ஈஸ்வரன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அதே ஊரை சேர்ந்த ராமேஸ்வரன் (45) என்பவர் முன்விரோதம் காரணமாக துர்க்கை ஈஸ்வரனை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் துர்க்கை ஈஸ்வரனின் உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய முடிவு செய்தனர். அதன்படி துர்க்கை ஈஸ்வரனின் உடல் புதைத்த இடத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது.

    பின்னர் டாக்டர்கள் குழுவினர் அதே இடத்தில் வைத்து பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெற்றதும் அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • தாராபுரம் தொகுதியில் 298 வாக்குச்சாவடிகள் உள்ளன.
    • உடுமலை தொகுதியில் 294 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிக்களுக்குரிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி முடிந்தது. இதையடுத்து திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி மூலமாக அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒதுக்கீடு செய்யும் பணி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்று முடிந்தது.

    இந்தநிலையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இன்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரநிதிகள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திர பாதுகாப்பு கிடங்கு திறக்கப்பட்டு 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது.

    கண்ட்ரோல் யூனிட், இ.வி.எம்., - வி.வி.பேட் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், ஜி.பி.எஸ்., பொருத்திய வாகனத்தில், 8 சட்டசபை தொகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டது.

    தாராபுரம் தொகுதியில் 298 வாக்குச்சாவடிகள் உள்ளன. கட்டுப்பாட்டுக்கருவி, வாக்குப்பதிவு எந்திரம் தலா 360, விவிபேட் 390 அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இவை தாராபுரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்படுகிறது. காங்கயம் தொகுதியில் 295 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு கட்டுப்பாட்டுக்கருவி, வாக்குப்பதிவு எந்திரம் ஆகியவை தலா 356, விவிபேட் 386 அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவை காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் இருப்பு வைக்கப்படுகிறது.

    அவினாசி சட்டமன்ற தொகுதியில் 313 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு கட்டுப்பாட்டுக்கருவி, வாக்குப்பதிவு எந்திரம் ஆகியவை தலா 378, விவிபேட் 410 அனுப்பி வைக்கப்பட்டது. இவை அவினாசி அரசு கலை அறிவியல் கல்லூரியில் இருப்பு வைக்கப்படுகிறது. திருப்பூர் வடக்கு தொகுதியில் 379 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு கட்டுப்பாட்டுக்கருவி, வாக்குப்பதிவு எந்திரம் ஆகியவை தலா 458, விவிபேட் 496 அனுப்பி வைக்கப்பட்டது. இவை திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருப்பு வைக்கப்படுகிறது.

    திருப்பூர் தெற்கு தொகுதியில் 242 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு கட்டுப்பாட்டுக்கருவி, வாக்குப்பதிவு எந்திரம் ஆகியவை தலா 292, விவிபேட் 317 அனுப்பி வைக்கப்பட்டது. இவை திருப்பூர் குமரன் பெண்கள் கல்லூரியில் இருப்பு வைக்கப்படுகிறது. பல்லடம் தொகுதியில் 412 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு கட்டுப்பாட்டுக்கருவி, வாக்குப்பதிவு எந்திரம் ஆகியவை தலா 498, விவிபேட் 539 அனுப்பி வைக்கப்பட்டது. அவை பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டது.

    உடுமலை தொகுதியில் 294 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு கட்டுப்பாட்டுக்கருவி, வாக்குப்பதிவு எந்திரம் ஆகியவை தலா 355, விவிபேட் 385 அனுப்பி வைக்கப்பட்டன. இவை உடுமலை அரசு கலை அறிவியல் கல்லூரியில் இருப்பு வைக்கப்பட்டது. மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் 287 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு கட்டுப்பாட்டுக்கருவி, வாக்குப்பதிவு எந்திரம் ஆகியவை தலா 347, விவிபேட் 375 அனுப்பி வைக்கப்பட்டன. இவை மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருப்பு வைக்கப்படுகிறது. 8 தொகுதியில் கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப்பதிவு எந்திரங்கள் தலா 3 ஆயிரத்து 44-ம், விவிபேட் 3 ஆயிரத்து 298-ம் பயன்படுத்தப்படுகிறது.

    • ஓடையின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று கட்டப்பட்டு உள்ளது.
    • காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உலகுடையார்பாளையம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரின் அருகில் கீழ்பவானி பாசன உபரி நீர் செல்லும் ஓடை உள்ளது. இந்த ஓடையின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று கட்டப்பட்டு உள்ளது.

    நத்தக்காடையூர் - திருப்பூர் சாலையில் சிவசக்திபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து உலகுடையார்பாளையம் செல்லும் கிராம பொதுமக்கள் இந்த தரைப்பாலத்தின் வழியாக கடந்து செல்ல வேண்டும். இந்த தரைப்பாலம் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று கிராம பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்தநிலையில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ள சூழலில் உலகுடையார்பாளையம் கிராம பொதுமக்கள் தரைப்பாலத்தை சீரமைக்காத காரணத்தால் தேர்தலை புறக்கணிப்பதாக காங்கயம் - நத்தக்காடையூர் பிரதான சாலையில் வெள்ளியங்காடு பஸ் நிறுத்தத்தில் அறிவிப்பு பதாகை வைத்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி சதீஸ்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் போலீசார் உதவியுடன் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பதாகையை அப்புறப்படுத்தினர். மேலும் இது குறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.3,25,200 ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
    • சொற்ப அளவிலான பணத்தைக் கொண்டு செல்லும் வியாபாரிகள் சிக்கி தவித்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது.

    திருப்பூர் பூண்டி ரிங்ரோடு பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு வடக்கு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.திருப்பூர் பொல்லி காளி பாளையம் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.3,25,200 ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கணகிரி பகுதியில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.93,200ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, திருப்பூர் பல்லடம் சாலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் தேர்தல் துணை மாநில வரி அலுவலர் பக்கிரி சாமி (பறக்கும் படை குழு) உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வீரபாண்டி, பிரியங்கா நகர் பகுதியை சேர்ந்த கே. சாமிநாதன் என்பவர் ரொக்கப்பணம் ரூ.57 ஆயிரத்து 980ஐ முறையான ஆவணம் இல்லாமல் கொண்டு வந்தது தெரிய வந்தது.

    தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு கொண்டு செல்லலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேர்தல் கூடுதல் பறக்கும் படை குழு பணத்தை பறிமுதல் செய்து உதவி ஆணையாளர் (தேர்தல் கணக்கு) தங்கவேல் ராஜனிடம் ஒப்படைத்து கருவூலத்திற்கு அனுப்பி வைத்தனர். இன்று ஒரே நாளில் ரூ.8 லட்சம் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் பறக்கும் படையினரின் சோதனையில், சொற்ப அளவிலான பணத்தைக் கொண்டு செல்லும் வியாபாரிகள் சிக்கி தவித்து வருகின்றனர்.

    இது குறித்து திருப்பூர் வியாபாரிகள் சிலர் கூறியதாவது:-

    என்னதான் டிஜிட்டல் பண பரிவர்த்தனை இருந்த போதும் சில நேரங்களில் ரொக்க பரிவர்த்தனை மேற்கொண்டு தான் ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. இவ்வாறாக ரொக்க பரிவர்த்தனை வழக்கமாக நடைபெறும் ஒன்று.ஆவணங்களை வைத்து கொண்டு இது போன்ற பரிவர்த்தனைகள் பெரும்பாலும் நடப்பதில்லை. தேர்தல் நேரத்தில் நடக்கும் பண பட்டுவாடாவை தடுக்க இதுவரை தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

    மாறாக சொற்ப அளவிலான பணத்தைக் கொண்டு செல்லும் சிறிய வியாபாரிகளே இது போன்ற சோதனையில் சிக்குகின்றனர். பறிமுதல் செய்த பணத்தை திரும்ப பெறுவதற்காக ஏற்படும் தேவையற்ற அலைச்சல் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • திருட்டு சம்பவங்கள் தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    • கேமராக்களில் மர்ம ஆசாமிகளின் உருவம் பதிவாகி உள்ளதா என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த எஸ்.வி.புரம் பி.வி. லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தாமணி (வயது 52). இவர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் திருடப்பட்டிருந்து.

    இதே போன்று எஸ்.வி.புரம் ஆர்.ஜி.நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சத்யாதேவி (29). இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு புதுக்கோட்டைக்கு சென்று விட்டனர். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 1½ பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் திருட்டு போனது தெரிய வந்தது. இதே போன்று பூட்டியிருந்த கணேசபுரம் நாச்சம்மாள் (75) என்பவரது வீட்டின் கதவையும் உடைத்து ரூ.36 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்று உள்ளனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும்.

    இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் நள்ளிரவு நேரம் அங்கு சென்று வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்ம ஆசாமிகளின் உருவம் பதிவாகி உள்ளதா என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • வாலிநோக்கம்-கீழமுந்தல் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • போலீசார் லாரியை சோதனையிட்ட போது 70 மூடைகளில் 30 கிலோ எடையுள்ள பீடி இலைகள் இருப்பது தெரிய வந்தது.

    சாயல்குடி:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, மாத்திரைகள், பீடி இலைகள், தங்கம் உள்ளிட்டவை அடிக்கடி கடத்தப்பட்டு வருகிறது.

    மேலம் இலங்கையில் இருந்து ராமநாதபுரத்திற்கு சட்ட விரோதமாக கடத்தல்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்க கடலோர காவல்படை போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கத்தில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்த இருப்பதாக கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வாலிநோக்கம்-கீழமுந்தல் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு லாரியை போலீசார் மறித்தனர். உடனே அதில் இருந்த டிரைவர் உள்பட சிலர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பினர். தொடர்ந்து போலீசார் லாரியை சோதனையிட்ட போது 70 மூடைகளில் 30 கிலோ எடையுள்ள பீடி இலைகள் இருப்பது தெரிய வந்தது. அதனையும், கடத்த பயன்படுத்தப்பட்ட சரக்கு லாரியையும் பறிமுதல் செய்த போலீசார் கடத்த முயன்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வாலிநோக்கம் கடலோர காவல்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது யார்? என்பது குறித்து தப்பியோடிய நபர்களையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    ×