என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • அணைக்கட்டும் திட்டம் என்பதால் 750க்கும் மேற்பட்ட விவசாயிகளின் பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.
    • தமிழ்நாட்டில் நிர்வாகம் மிக மோசமாக நடைபெற்று வருவதற்கு முன்னுதாரணமாக உள்ளது.

    தாராபுரம்:

    நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்து 20 ஆண்டுகள் ஆகிய பின்பும் இழப்பீடு வழங்காததை கண்டித்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் பொன்னிவாடி கிராமம், நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் தேர்தல் புறக்கணிப்பு செய்து தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

    இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் கோபால கிருஷ்ணன், அமைப்பு செயலாளர் கோனேரிப்பட்டி.பாலு ஆகியோர் கூறியதாவது:-

    தமிழ்நாடு அரசு கடந்த 1997ம் ஆண்டு திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம் நல்லதங்காள் ஓடைக்கு குறுக்கே நல்ல தங்காள் அணையை கட்டியது. அணைக்கட்டும் திட்டம் என்பதால் 750க்கும் மேற்பட்ட விவசாயிகளின் பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது, விவசாயிகளும் முழு சம்மதத்தோடு நிலத்தை கொடுத்தார்கள்.

    இழப்பீடு மிக குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டதால், உரிமையியல் நீதிமன்றத்தில் இழப்பீட்டு தொகையை அதிகரிக்க கோரி வழக்கு தாக்கல் செய்து அந்த கோரிக்கையும் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் இழப்பீட்டு தொகை இன்று வரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்காமல் நீர்வள ஆதாரத்துறை மிகப்பெரிய துரோகத்தை செய்து வருகிறது.

    20 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தராமல் ஒரு நிர்வாகம் இயங்கி வருவது என்பது, தமிழ்நாட்டில் நிர்வாகம் மிக மோசமாக நடைபெற்று வருவதற்கு முன்னுதாரணமாக உள்ளது.

    எனவே நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் இன்று 1-4-2024 முதல் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பு செய்து தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட முடிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணைய தலைவர் சித்ரா என்பவரின் காரில் சோதனை நடத்தினர்.
    • சோதனையில் காரில் ரொக்க பணம் ரூ.80 ஆயிரத்து 200 இருந்தது. அதற்கு முறையான ஆவணம் இல்லை.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பவன்குமார் கிரியப்பனவர் மேற்பார்வையில் திருப்பூர், காங்கயம் ரோடு புதுப்பாளையம் தனியார் பள்ளி அருகே துணை மாநில வரி அலுவலர் திருமால் செல்வன் தலைமையிலான நிலை கண்காணிப்பு குழு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக காரில் வந்த நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணைய தலைவர் சித்ரா என்பவரின் காரில் சோதனை நடத்தினர்.

    சோதனையில் காரில் ரொக்க பணம் ரூ.80 ஆயிரத்து 200 இருந்தது. அதற்கு முறையான ஆவணம் இல்லை. இதனால் வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு கொண்டு செல்லலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர்கள் பணத்தை பறிமுதல் செய்து உதவி ஆணையாளர் (தேர்தல் கணக்கு) தங்க வேல்ராஜனிடம் ஒப்படைத்தனர். அவர் பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தார்.

    • அனைத்து கொடியையும் இறக்கிவிட்டு உதயநிதி பேச்சை கேட்டனர்.
    • எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோவை எடுத்து காட்டினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் தமிழக அமைச்சர் உதயநிதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்தி லிங்கத்தை ஆதரித்து வில்லியனூர், மரப்பாலம் மற்றும் அண்ணாசிலை சதுக்கம் ஆகிய இடங்களில் பேசினார்.

    உதயநிதி பேச தொடங்கிய போது, எல்லாரும் நல்லா இருக்கீங்களா, நீங்க திரும்ப கேட்க மாட்டீங்களா என கேட்டார். அப்போது தொண்டர்கள் நல்லா இருக்கீங்களா? என கோஷ மிட்டனர். அதற்கு பதிலளித்த உதயநிதி, ஏதோ சுமாரா இருக்கேன். நீங்க இருக்கும்போது எனக்கு என்ன கவலை? என்றார்.

    உதயநிதி பேச தொடங்கிய போது, தி.மு.க.-காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரிய கொடியை ஆட்டிக் கொண்டே இருந்தனர். தான் பேசி முடிக்கும் வரை கட்சி கொடியை கீழே இறக்கும்படி உதயநிதி கேட்டுக் கொண்டார். இதனால் கூட்டணி கட்சியினர் அப்செட் ஆகினர். இருப்பினும் அனைத்து கொடியையும் இறக்கிவிட்டு உதயநிதி பேச்சை கேட்டனர்.

    பிரசாரத்தில் வழக்கம் போல உதயநிதி எய்ம்ஸ் செங்கல்லை எடுத்து காட்டுவார். அதுபோல் புதுச்சேரி பிரசாரத்தில் எய்ம்ஸ் கல்லை காட்டுவார் என்று தொண்டர்கள் எதிர்பார்த்து கேள்வி எழுப்பினர். இதையடுத்து எய்ம்ஸ் செங்கல் புதுச்சேரி வரை பேமஸ் ஆகிவிட்டதா? எனக்கேட்டு செங்கல்லை எடுத்துக்காட்டிய உதயநிதி நீங்கள் காட்ட சொன்னதால்தான் கல்லை காட்டுகிறேன். இந்த கல்லுக்கு அவ்வளவு டிமாண்ட். நான் காட்டினது கல்லு, அவர் காட்டினது என பிரதமர் மோடியுடன் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோவை எடுத்து காட்டினார்.

    மரப்பாலத்தில் பேசும் போது, தொண்டர் ஒருவர் ஆபாசமாக பேசினார். அப்போது உதயநிதி, நீ கெட்ட வார்த்தையில் பேசிட்டு போய்விடுவாய், போலீஸ் என்மீது வழக்கு போடும். ஆனால் அதற்காக நான் பயப்பட மாட்டேன் என்றார்.

    • தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
    • கட்டுமான பணிக்காக ரூ.10 லட்சத்தை முன்பணமாக பெற்று சென்றதாக தெரிவித்தார்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குளத்துப்பாளையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கட்டிட என்ஜினீயர் செந்தமிழ் செல்வன் என்பவரிடம் சோதனை செய்தனர். அப்போது அவர் ரூ.10 லட்சம் பணம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது குறித்து விசாரித்த போது அவர், கட்டுமான பணிக்காக ரூ.10 லட்சத்தை முன்பணமாக பெற்று சென்றதாக தெரிவித்தார். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கோட்டாட்சியர் செந்தில் அரசனிடம் ஒப்படைத்தனர்.

    • மக்கள் முதலில் கச்சத்தீவை எப்படி கொடுத்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளட்டும்.
    • ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யும் அரசியல்வாதி நான் இல்லை.

    இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடல் பகுதியில் உள்ள சிறிய தீவு தான் கச்சத்தீவு. சுமார் 285 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த தீவு ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் தூரத்திலும், இலங்கை யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து 10.5 மைல் தொலைவிலும் இருக்கிறது.

    கடந்த 1974-ம் ஆண்டு இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. தற்போது கச்சத்தீவு இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

    நீண்ட காலமாக மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி சித்ரவதை செய்வதும், சிறைபிடித்து செல்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

    இதையடுத்து கச்சத்தீவை மீண்டும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர.

    ஒவ்வொரு பாாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின் போதும் கச்சத்தீவு விவகாரத்தை தி.மு.க., அ.தி.மு.க போன்ற கட்சிகள் கையில் எடுத்து பிரசாரம் செய்து வருகிறது.

    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திலும் இந்த பிரச்சனை எதிரொலித்து இருக்கிறது.


    இந்த நிலையில் சச்சத்தீவு தொடர்பாக அண்ணாமலை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி கேட்டு இருந்தார். இதற்கு பதில் கொடுக்கப்பட்டு உள்ளது.

    இதற்கான ஆவணங்களை பெற்ற அண்ணாமலை அதில் கூறப்பட்டுள்ள தகவலை பகிர்ந்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    1969-ம் ஆண்டு இலங்கைக்கு கச்சத்தீவை கொடுக்க எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அப்போது இந்திரா காந்தி இலங்கையுடன் நல்ல நட்புணர்வுடன் இருக்க விரும்பினார். 1968-ம் ஆண்டு அப்போதைய இலங்கை பிரதமர் டட்லி சேனா நாயக்கா இந்திரா காந்தியுடன் இது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். 1973-ம் ஆண்டு கொழும்பில் நடந்த வெளியுறவு செயலர் அளவிலான பேச்சுவார்த்தை நடந்தது.

    1974-ம் ஆண்டு வெளியுறவுத்துறை செயலாளர் கேவல் சிங் மூலம் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கச்சத்தீவுக்கு இலங்கை உரிமை கொண்டாடி வருவதை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்கள் எதையும் தரவில்லை என்றும் கேவல் சிங் தெரிவித்தார்.

    அந்த சமயம் கச்சத்தீவை இலங்கை உரிமை கோரிய நிலையில் ராமநாதபுரம் ராஜாவுக்கு சொந்தமானது என்ற ஆவணங்களை தமிழக அரசு காட்டவில்லை.

    இறுதியாக 1974-ம் ஆண்டு கச்சச்தீவை இலங்கைக்கு இந்திரா காந்தி தாரை வார்த்து கொடுத்ததாக தகவல் அறியும் உரிமை சட்ட பதிலில் இடம்பெற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கச்சத்தீவு தொடர்பாக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கச்சத்தீவை பற்றி தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருக்கிறோம். 1968-ல் பிரதமராக இருந்த இந்திராகாந்தியும், இலங்கை பிரதமராக இருந்த செனாயும் போட்ட ரகசிய ஒப்பந்தம்தான் கச்சத்தீவு. 1948ம் ஆண்டு வரை கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1974ம் ஆண்டு கச்சத்தீவு முழுமையாக இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது. எதற்காக கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது என்ற ஆவணங்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றுள்ளோம். இதை படித்தால் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரத்தம் கொதிக்கும். நேரு பிரதமராக இருந்தபோது பைல் நோட்டிங் எழுதுகிறார். இந்த குட்டி தீவுக்கு நான் எந்தவிதமான மரியாதையும் தரப்போவதில்லை. வேறு ஒரு நாட்டிற்கு தர தயாராக இருக்கின்றேன். இது 10-5-1961 ல் நேரு எழுதிய பைல் நோட்டிங்.

    முழுமையாக கச்சத்தீவு நம்மிடம் தான் இருக்க வேண்டும் என பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தும், இலங்கையில் அரசியல் சூழ்நிலை சரியில்லை என்பதால் இந்த பிரச்சனையை தள்ளி போட்டுக்கொண்டே சென்றார்கள். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட முதல் பகுதி இன்று வெளியாகி உள்ளது. நாளை இதன் இரண்டாம் பகுதி வெளியாகும் போது கலைஞர் கருணாநிதி கச்சத்தீவு விவகாரத்தில் செய்த துரோகம் குறித்து பேசுவோம். நாட்டின் எல்லையை சுருக்கியது காங்கிரஸ் கட்சி.

    1960-ல் இருந்து ஒவ்வொரு செங்கல்லாக பிரித்து கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் கட்சி தாரை வார்த்துவிட்டது. இன்று வெளியாகி உள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் முதல் பகுதி மூலம் காங்கிரஸ் எப்படி துரோகம் செய்துள்ளது என்பது தெரிய வருகிறது. நாளை வெளியாகும் இரண்டாவது பகுதியில் கலைஞர் கருணாநிதி செய்த துரோகம் என்ன என்பது தெரியும்.

    ஆர்ட்டிக்கிள் 6 ன் படி கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவாக்கப்பட்டாலும் இந்திய மீனவர்கள் அங்கு மீன்பிடிக்கலாம் என தெரிவிக்கிறது. ஆனால் தற்போது ஆர்ட்டிக்கிள் 6 இல்லாத காரணத்தினால் மீனவர்கள் தற்போது கச்சத்தீவுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. நாளை மக்களின் பார்வைக்காக இரண்டு பகுதியாக வெளியாகி உள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அனைத்து ஆவணங்களையும் தருகிறோம்.

    கச்சத்தீவை இலங்கைக்கு எப்படி தாரை வார்த்து கொடுத்தார்கள் என யாருக்கும் தெரியாது. எனவே மக்கள் முதலில் கச்சத்தீவை எப்படி கொடுத்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளட்டும். இதற்கு நிரந்தர தீர்வு என்பது எல்லையை நம் நாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

    கச்சத்தீவை தாண்டி நெடுந்தீவு வரை நாம் சென்றோம்... ராமநாத சுவாமி கோவில் சிவபெருமானுக்கு நெடுந்தீவிலிருந்து பால் கொண்டுவரப்பட்டது. கச்சத்தீவை மீட்பது எங்கள் கோரிக்கை மட்டுமல்ல. கண்டிப்பாக மீட்போம் என கங்கணம் கட்டியுள்ளோம். 3 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் பட்டித்தொட்டி எல்லாம் சுற்றி இருக்கிறேன். ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யும் அரசியல்வாதி நான் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 35 நாட்களுக்கு மேலாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • விவசாயிகள், பொதுமக்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்து உப்பாறு அணை உள்ளது. இந்த அணையை நம்பி 6500 க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் உப்பாறு அணைக்கு தண்ணீர் வந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து உபரி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கூறி கடந்த ஒரு வருடமாக பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.

    35 நாட்களுக்கு மேலாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயத்திற்கு கூட தண்ணீர் வேண்டாம். குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படாததை கண்டித்து அணை பகுதியை சேர்ந்த விவசாய கிராமங்களான கெத்தல் ரேவ், தாசம்பட்டி, பொன்னாளிபாளையம், வண்ணாம்பட்டி, தேர் பாதை, தொண்டாமுத்தூர், ரங்கம் பாளையம், நடுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.அரசியல்வாதிகள் யாரும் எங்கள் ஊருக்குள் வரக்கூடாது என தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • வாக்களிப்பது நமது கடமை என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி இன்று தொடங்கியது.

    திருப்பூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருப்பூர் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களியுங்கள், வாக்களிப்பது நமது கடமை என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி இன்று தொடங்கியது. மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் பஸ்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி தொடங்கி வைத்தார்.

    • தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
    • போலீசார் மணிமேகலையை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் பறக்கும்படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக ஒரு பெண் மது போதையில் வந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை பிடித்து சோதனை நடத்தியதில் 3 கட்டுகளாக பணம் இருந்தது தெரியவந்தது. பணத்தை எண்ணிப்பார்த்ததில் ரூ.1½ லட்சம் இருந்தது.

    விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த மணி மேகலை (வயது 35) என்பதும், பண்ணாரி அம்மன் கோவிலில் பிச்சை எடுத்த பணத்தை வைத்திருந்ததாக கூறினார். தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    இந்தநிலையில் திருப்பூர் காங்கயம் ரோடு நல்லூர் ஏ.டி.காலனி பகுதியை சேர்ந்த நித்தியா என்பவரது வீட்டில் பீரோவில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் திருட்டு போனது. இது குறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு பெண், நித்தியா வீட்டுக்குள் வந்து சென்றது தெரியவந்தது.

    அந்த பெண் குறித்து விசாரிக்கும் போது பறக்கும் படை சோதனையில் சிக்கிய மணிமேகலை என்பது தெரியவந்தது. அவர்தான் ரூ. 1½ லட்சம் பணத்தை திருடியதுடன், பிச்சை எடுத்து வைத்திருந்ததாக பறக்கும் படையினரிடம் தெரிவித்து தப்பிக்க முயன்றுள்ளார். இதையடுத்து போலீசார் மணிமேகலையை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • போலீசார் 4 பேரையும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
    • விசாரணை நடத்தி 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் வீரபாண்டியைச் சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 44). இவர் வீரபாண்டி பிரிவில் உள்ள நல்லாத்துதோட்டம் பகுதியில் வாஷிங் நிறுவனம் (டையிங்) வைத்து நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் அவருடைய நிறுவனத்திற்குள் 4 பேர் சென்றுள்ளனர். அவர்கள் செல்லமுத்துவிடம் தங்களை பொதுப்பணித்துறை அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டு தங்கள் நிறுவனத்தில் இருந்து சாயகழிவு நீரை சாக்கடையில் திறந்து விடுவதாக புகார்கள் வந்துள்ளது , உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும், நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டியதாக தெரிகிறது.

    இதனால் சந்தேகம் அடைந்த செல்லமுத்து அவர்களை பிடித்து வைத்துக் கொண்டு வீரபாண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வீரபாண்டி இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் 4 பேரையும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருப்பூரைச் சேர்ந்த சிவசாமி (55), ஈரோட்டை சேர்ந்த பழனியப்பன் (51), முத்துவேல் (50), சண்முகசுந்தரம் (63) என்பதும் தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
    • போதையில் இருந்த அந்த பெண்ணை ஆலங்காட்டில் உள்ள ஒரு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திருப்பூர் காங்கயம் ரோடு நல்லூர் சர்ச் அருகே 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடிபோதையில் சுற்றி திரிந்தார். அப்போது அங்கு பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படையை சேர்ந்த துணை மாநில வரி அலுவலர் குணசேகர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர்களிடம் அருகில் இருந்த கடைக்காரர்கள், சுற்றி திரியும் பெண் அதிக பணம் வைத்திருப்பது குறித்து தெரிவித்துள்ளனர்.

    உடனே அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் அவர் சேலையில் சுற்றி வைத்திருந்த பொருள் என்னவென்று பார்த்த போது அதில் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பணத்துக்கு உரிய ஆவணங்களை இல்லாததால் அதனை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் கிரியப்பனவரிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரது மனைவி மணிமேகலை (வயது 36) என்பதும் கடந்த 5 நாட்களுக்கு முன் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்று பிச்சை எடுத்து வைத்திருந்த பணம் என தெரியவந்தது.

    பறிமுதல் செய்த பணத்தை உதவி ஆணையாளர் (கணக்கு) தங்கவேல் ராஜன் கருவூலத்திற்கு அனுப்பி வைத்தார். போதையில் இருந்த அந்த பெண்ணை ஆலங்காட்டில் உள்ள ஒரு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    • உப்பாறு அணைக்கு, பி.ஏ.பி திட்ட பாசன விரிவாக்கம் நடந்த பிறகு, உபரி நீரின் அளவு குறைந்தது.
    • கைகளில் கருப்பு கொடி ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ளது உப்பாறு அணை. திருமூர்த்தி அணையின் உபரி நீரை சேமிக்கும் வகையில், இந்த அணை கட்டப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்னர் உபரி நீரால் பயன்பெற்று வந்த உப்பாறு அணைக்கு, பி.ஏ.பி திட்ட பாசன விரிவாக்கம் நடந்த பிறகு, உபரி நீரின் அளவு குறைந்தது.

    அதோடு, அணைக்கு மழைநீர் வரும் ஓடையில் பல இடங்களில் ஊராட்சி நிர்வாகங்களால் தடுப்பணைகள் கட்டப்பட்டதால், அணைக்கு வரக்கூடிய மழைநீரும் வராமல் போய்விட்டது. அணையின் நீராதாரங்கள் அழிக்கப்பட்டதால், உப்பாறு அணையால் பயனடைந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், உப்பாறு அணையை நம்பியுள்ள விவசாயிகள், திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி பாசன திட்டத்தில் உபரி நீரை திறந்துவிடக்கோரி, தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    விவசாயிகளின் போராட்டத்தால் உப்பாறு அணைக்கு தண்ணீர் தருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் வாய்மொழியாக உறுதி அளித்தனர். ஆனால் கூறியவாறு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த உப்பாறு பாசன விவசாயிகள் மற்றும் நடுமரத்துப்பாளையம் பகுதி பொதுமக்கள் இன்று காலை வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் கைகளில் கருப்பு கொடி ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இது குறித்த தகவல் அறிந்ததும் வருவாய் மற்றும் நீர்வளத்துறையினர், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார் கிரியப்பனவர் தொடங்கி வைத்தார்.

    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக திருப்பூர் காமராஜ் சாலை கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில், 'நான் வாக்களிப்பேன் , நிச்சயம் வாக்களிப்பேன்' என்ற வார்த்தைகள் பொறி க்கப்பட்ட ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார் கிரியப்பனவர் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் கிருத்திகா விஜயன் உள்ளிட்ட அரசு துறை சார்ந்த அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×