என் மலர்
திருப்பூர்
- காங்கேயம் அருகே அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
- இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர்.
வெள்ளகோவில்:
திருப்பூர் காங்கயம் ரோடு, நல்லிகவுண்டர் நகர் புதுநகர் 7-வது வீதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (60). திருப்பூரில் டையிங் நிறுவனம் நடத்திவந்தார். இவரது மனைவி சித்ரா (57). இந்த தம்பதியர் மயிலாடுதுறை திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேசுவரர் கோவிலுக்கு சென்று 60-ம் கல்யாணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி சந்திரசேகரன், தனது குடும்பத்தினருடன், திருக்கடையூர் சென்று 60-வது கல்யாணத்தை முடித்துவிட்டு நேற்று மாலை 4 மணிக்கு அங்கிருந்து மீண்டும் திருப்பூருக்கு காரில் புறப்பட்டனர்.
சந்திரசேகரனின் 2-வது மகன் இளவரசன் (26) காரை ஓட்டி வந்துள்ளார். இன்று அதிகாலை 2 மணியளவில் திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அடுத்துள்ள ஓலப்பாளையம் அருகே கரூர்-கோவை சாலையில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது திருப்பூரில் இருந்து திருச்சியை நோக்கி அரசு பேருந்து சென்றது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக காரும்-பஸ்சும் நேருக்கு நேர் மோதியது. இதில் சந்திரசேகரன், அவரது மனைவி சித்ரா, சந்திரசேகரனின் மருமகள் ஹரிவி வித்ரா (30), பேத்தியான 3 மாத பெண் குழந்தை ஷாக்ஷி, காரை ஓட்டி வந்த 2-வது மகன் இளவரசன் ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர்.
காரில் வந்த சந்திரசேகரனின் மூத்த மகன் சசிதரன் (30) என்பவர் மட்டும் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். அக்கம்பக்கம் உள்ளவர்கள் விரைந்து வந்து பலத்த காயத்துடன் துடிதுடித்துக் கொண்டிருந்த அவரை அங்கிருந்து மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அரசு பஸ்சை ஓட்டி வந்த கரூர் மாவட்டம், கடவூர் பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் (51), கண்டக்டர் கரூர் மாவட்டம், நொய்யல் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (53) மற்றும் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதற்கிடையே பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதனால் இறந்தவர்களின் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. வெள்ளகோவில் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி, காரை உடைத்து இறந்தவர்களின் உடல்களை மீட்டனர்.
காரின் அருகே உறவினர்களுக்கு கொடுப்பதற்காக வாங்கி வந்த சாமி படங்கள், பூஜைப்பொருட்கள் சிதறிக்கிடந்தன. காங்கயம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானப்பிரகாசம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் உயிரிழந்த 5 பேரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக, வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் ஒரே குடும்பத்தில் 5 பேர் பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- முதியவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று தபால் வாக்குப்பதிவினை பெற்றனர்.
- வாழ்நாளின் இறுதிக்கட்டத்திலும் தனது ஜனநாயக கடமையை தாயம்மாள் செய்து முடித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவிநாசி:
பாராளுமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்குப்பதிவு வசதியை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மாற்றுத்திறனாளிகள், முதியவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று தபால் வாக்குப்பதிவினை பெற்றனர்.
அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு கங்கவார் வீதியில் வசித்து வரும் வடிவேல் என்பவரின் மனைவி தாயம்மாள் (வயது 94) என்பவரது வீட்டிற்கும் நேற்று முன்தினம் அதிகாரிகள் சென்றனர். அதிகாரிகள் கொண்டு வந்த தபால் வாக்குப்பதிவு பெட்டியில் தாயம்மாள் தனது வாக்கினை செலுத்தினார். இந்நிலையில் நேற்று தாயம்மாள் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். வாழ்நாளின் இறுதிக்கட்டத்திலும் தனது ஜனநாயக கடமையை தாயம்மாள் செய்து முடித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- வழியில் ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
- டாஸ்மாக் கடைகளை மூடினால்தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
பல்லடம்:
தமிழக பா.ஜ.க. தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை பல்லடம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது செல்லும் வழியில் ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.இதைப்பார்த்த அண்ணாமலை அதிர்ச்சியடைந்ததுடன், ஞாயிற்றுக்கிழமை என்றாலே இப்படித்தான் நடக்கிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்ய வரவே பயமாக உள்ளது. இதற்கெல்லாம் காரணம் டாஸ்மாக் கடைதான். எனவே டாஸ்மாக் கடைகளை மூடினால்தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். அதற்கு நீங்கள் பா.ஜ.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று வாக்காளர்கள் மத்தியில் பேசினார்.
பின்னர் அவர் தனது பிரசாரத்தை தொடர்ந்தார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- காமராஜர் காலத்தில் 14 அணை கட்டப்பட்டது.
- 100 சதவீதம் பணத்தை மத்திய அரசு கொடுத்தும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்காமல் திராவிட அரசு உள்ளது.
பல்லடம்:
தமிழக பா.ஜ.க. தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை தீவிர பிரசாரம் மேற்கொண்டார். வடுகபாளையம்புதூர் பிரிவு பகுதியில் அவர் வாக்காளர்கள் மத்தியில் பேசியதாவது:-
அடுத்த 25 ஆண்டுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க இருக்கிறீர்கள். பெண்கள் பாதுகாப்பை பற்றி சிந்திக்கிறார்கள். தொழில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும் என ஆண்கள் சிந்திக்கிறார்கள். சிலர் கான்கிரீட் வீடு கிடைக்குமா? குடிநீர் கிடைக்குமா ? என சிந்திக்கிறார்கள். எல்லோரும் வெவ்வேறு சிந்தனையோடு இருக்கிறார்கள். அனைவரின் எண்ண ஓட்டத்தையும் சரி செய்வோம். கஞ்சா நம் வீட்டுக்கு வீதிக்கு வரக்கூடாது.
காமராஜர் காலத்தில் 14 அணை கட்டப்பட்டது. அதன் பிறகு யாரும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதன் தாக்கத்தை காண்கிறோம். அணைகள் கட்டுவதற்கு இங்குள்ள அரசு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனைமலை நல்லாறு திட்டத்தை கொண்டு வர வேண்டும். அதனை நாங்கள் செய்து காட்டுவோம் .100 சதவீதம் பணத்தை மத்திய அரசு கொடுத்தும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்காமல் திராவிட அரசு உள்ளது. குடிநீர் திட்டம் 100 சதவீதம் மத்திய அரசு திட்டம்.
பிரதமர் மோடி இலவசமாக கொடுக்கக்கூடிய திட்டத்தை இங்குள்ள கும்பல் சுரண்டுகிறது. ஏழைகளின் ரத்தத்தை சுரண்டி ஏழையாக வைத்திருக்கிறார்கள். அவர்களை ஓடஓட விரட்ட வேண்டும். இதற்கான மாற்றத்தை கொடுக்க உங்கள் வீட்டுப்பிள்ளையாகிய என்னை வெற்றி பெற செய்ய வேண்டும். நம் பணி பூர்த்தியாகவில்லை. இன்னும் 5 ஆண்டுகள் மோடி வர வேண்டும்.
கோவை பாராளுமன்ற தொகுதிக்கு மாநில அரசால் நிலத்தை கொடுக்கவில்லை என்றால் ஊருக்குள் அப்பார்ட்மெண்ட் கட்டி கொடுக்கப்படும். நிலம் இல்லை என்றால் இதுதான் வழி. பிரச்சனைகளை முடித்து கொடுக்கிறோம். அதற்கு வாய்ப்பு கொடுங்கள். இங்கிருந்து எம்.பி.யாக சென்றவர்கள் பாராளுமன்றத்தில் மவுனம் காத்து தற்போது திரும்பி வந்திருக்கிறார்கள். நான் தமிழகம் முழுவதும் நடந்து சென்று வந்து விட்டேன். எல்லா பிரச்சனைகளையும் உற்று பார்த்து விட்டேன். ஒரே ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள். நான் மாற்றி காட்டுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தாக்குதலில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுப்கரன்சிங் (வயது 21) என்ற விவசாயி உயிரிழந்தார்.
- திருப்பூர் குமரன் நினைவிடத்தில் அஸ்தியை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருப்பூர்:
வேளாண் விளை பொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை தொடங்கினார்கள்.
பஞ்சாபில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் பஞ்சாப், அரியானா இடையே ஷம்பு பகுதியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுப்கரன்சிங் (வயது 21) என்ற விவசாயி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரின் அஸ்தி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு விவசாயிகள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அந்த விவசாயியின் அஸ்தி, திருப்பூர் கொண்டு வரப்பட்டது.
பஞ்சாப்பை சேர்ந்த ரவீந்தர்சிங் தரப்பினர் கொண்டு வந்தனர். திருப்பூர் குமரன் நினைவிடத்தில் அஸ்தியை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திருப்பூரை சேர்ந்த விவசாய அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 2 ஆயிரத்து 529 பேர் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களாக உள்ளனர்.
- திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 2 ஆயிரத்து 288 பேர் இருக்கிறார்கள்.
திருப்பூர்:
பாராளுமன்ற தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 12டி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தபால் ஓட்டு அளிக்க விருப்பத்தை தெரிவித்தார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 2 ஆயிரத்து 529 பேர் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களாக உள்ளனர். 781 பேர் மாற்றுத்திறனாளிகள். அவர்கள் தபால் வாக்களிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தபால் வாக்கு பதிவு செய்ய தனியாக 110 குழு அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் இன்று வீடு வீடாக சென்று தபால் வாக்குகளை பதிவு செய்ய தொடங்கி உள்ளனர். வேட்பாளர்களின் முகவரும் இந்த குழுவினருடன் சென்ற னர். இந்த காட்சிகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.
திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 2 ஆயிரத்து 288 பேர் இருக்கிறார்கள். 600 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு தபால் வாக்குப்பதிவு செய்ய 78 குழுவினர் வீடு வீடாக செல்கின்றனர். இந்த குழு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தபால் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். நாளையும் தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட உள்ளது.
- எங்களுக்கு தண்ணீர் வந்து 15 நாட்களுக்கு மேலாகிறது. இன்னும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.
- பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி சின்னக்காம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதிக்குட்பட்ட உடுமலை சாலை, மாருதி நகர் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் குடிநீர் சீராக வழங்க கோரி கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு காலிகுடங்களுடன் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எங்களுக்கு தண்ணீர் வந்து 15 நாட்களுக்கு மேலாகிறது. இன்னும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் சாலை, மின்விளக்கு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். இல்லையென்றால் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றனர்.
தாராபுரம் சின்னக்காம்பாளையத்தில் தனியார் கோழிப்பண்ணை உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு உள்ளது. எனவே கோழிப்பண்ணை இயங்க தடை விதிக்க வேண்டும். இல்லையென்றால் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி சின்னக்காம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
- வருமான வரித்துறையினர் எதற்காக சோதனை நடத்தினார்கள் என்று தெரியவில்லை.
- பாராளுமன்ற தேர்தல் காரணமாக வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் வேலுமணி. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரரான இவரது வீட்டிற்கு இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் வந்தனர்.
அவர்கள் வேலுமணியின் வீடு மற்றும் அலுவலகத்தில் திடீரென சோதனை மேற்கொண்டனர். 2 இடங்களிலும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் வீடு, அலுவலகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த சோதனை மதியத்திற்கு மேலும் நீடித்தது.வருமான வரித்துறையினர் எதற்காக சோதனை நடத்தினார்கள் என்று தெரியவில்லை. பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் 2பேரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராத பல லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. எனவே பாராளுமன்ற தேர்தல் காரணமாக வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
- வேட்பாளர் மற்றும் உடன் செல்பவர்களுக்கான சாப்பாடு தனி வேனில் வேட்பாளருடன் செல்கிறது.
- திருப்பூர் அ.தி.மு.க. வேட்பாளர் அருணாசலம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர்.
திருப்பூர்:
திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற சக்கர வியூகம் வகுத்து வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் கும்பிட்ட கரங்களுடன் பிரசார வேனில் செல்கிறார். அவரது பேச்சு, அவருக்கென அமைந்த தனி பாணி தொடர்கிறது. பிரசார பயணம் காலையில் தொடங்கினாலும் மதிய வெயிலுக்கு ஏதாவது ஓரிடத்தில் முகாமிடுகின்றனர்.
வேட்பாளர் மற்றும் உடன் செல்பவர்களுக்கான சாப்பாடு தனி வேனில் வேட்பாளருடன் செல்கிறது. மத்தியில் அமையும் புதிய அரசின் மூலம் திருப்பூரின் தேவைகளை பூர்த்தி செய்யபாடுபடுவேன் என்றவாறு ஓட்டு சேகரிக்கிறார்.
திருப்பூர் அ.தி.மு.க. வேட்பாளர் அருணாசலம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர். கட்சி நிர்வாகிகளிடம் கோஷ்டி பாகுபாடு பாராமல் அனைவருடன் சென்று வீதி வீதியாக ஆதரவு திரட்டுகிறார். அமைதியான முகத்துடன் கரம் குவித்தபடி செல்கிறார்.
ஆரத்தி தட்டுடன் பெண்கள் நின்றால் மூத்த பெண்களின் காலில் விழுந்து வணங்குகிறார். அ.தி.மு.க.வை பொறுத்தவரை வேட்பாளர்கள் இல்லாமலேயே 4 அடுக்கு தேர்தல் பணி நடக்கிறது. 4 கட்ட பொறுப்பாளர் களத்தில் இறங்கியுள்ளனர். இருப்பினும் பூத் கமிட்டி மற்றும் பொறுப்பாளர்கள்தான் 40 வாக்காளர்களுக்கு ஒருவர் என்ற வகையில் தனித்தனியே சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
பா.ஜ.க., வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மற்ற கட்சிகளை காட்டிலும் வித்தியாசமாக மக்களை சந்திப்பது, வாக்காளர்களை திரும்பி பார்க்க வைக்கிறது. தினமும் கட்சியினர் காலையிலேயே புறப்பட்டு தொழிலாளர்கள் வேலைக்கு செல்லும் முன்பாகவே சென்று பிரசாரம் செய்கின்றனர். தி.மு.க.வினர் சொன்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதை எடுத்து கூறி வாக்கு சேகரிக்கின்றனர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி ஏற்கனவே சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனுபவத்தில் உற்சாகத்துடன் பிரசாரம் செய்து வருகிறார். இயற்கையை காப்பாற்ற வேண்டும் என்ற ஆர்வம் , அரசியலில் மாற்றம் என்ற மாற்று சிந்தனையுடன் புதிய வாக்காளர்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் பலர் உள்ளனர். அவர்களது ஓட்டுகளை அறுவடை செய்ய வியூகம் வகுத்து செயல்படுகிறார்.
- வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, வாக்காளர் உறுதிமொழி கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.
- அனைவருக்கும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக்கூறி தேர்தல் நாள் அன்று தவறாமல் வாக்கினை பதிவு செய்ய வேண்டும்.
திருப்பூர்:
பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநங்கைகள் பங்கேற்ற பேரணி திருப்பூரில் நடைபெற்றது. அதனை கலெக்டரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிறிஸ்து ராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: -
பாராளுமன்ற பொதுத்தேர்தல் தமிழகத்தில் 19.4.2024 அன்று நடைபெறவுள்ளதையொட்டி, திருப்பூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் நாள்தோறும் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதில் திருப்பூர் மாநகராட்சி, எல்.ஆர்.ஜி. மகளிர்அரசு கலைக் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, வாக்காளர் உறுதிமொழி கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.
திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மூத்தக்குடிமக்களுக்கு வீட்டிலிருந்தவாறு தபால் மூலம் வாக்களிப்பதற்கான 12 டி படிவங்கள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 26.3.2024 அன்று தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம்குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100-க்கும் மேற்பட்ட இருசக்கரப் வாகனங்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டது.
தேர்தல் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை பயணிகள் ஆட்டோக்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், செய்தி மக்கள் தொடர்பு த்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து குறுபடம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் நாள்தோறும் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிபடுத்தப்பட்டு வருகிறது.
மேலும், 29.3.2024 அன்று திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது. மேலும் அரசுப்பேருந்துகளில் வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டுவில்லையை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இன்று திருநங்கைகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் உரிமை. வாக்களிக்கும் உரிமை பெற்ற வாக்காளர்கள் வாக்களிப்பது என்பது ஜனநாயகத்தின் கடமையாகும். ஒவ்வொரு வாக்காளர்களின் வாக்குகளும் மிகவும் முக்கியமானது என்பதை மனதில் நிறுத்தி கொள்ள வேண்டும். குறிப்பாக 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள் தங்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதை எண்ணி தவறாமல் வாக்களிக்க வேண்டும். உங்கள் ஊரில் உள்ளவர்கள், குடும்பத்தினர்கள், நண்பர்கள் மற்றுமல்லாமல்
அனைவருக்கும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக்கூறி தேர்தல் நாள் அன்று தவறாமல் வாக்கினை பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கிறிஸ்துராஜ், தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , உதவி கலெக்டர் (பயிற்சி) ஹிறிதியா எஸ்.விஜயன், வாக்காளர் விழிப்புணர்வு பொறுப்பு அலுவலர் குமாரராஜா, மாவட்ட சமூகநல அலுவலர் ரஞ்சி தாதேவி மற்றும் தொடர்புடைய தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
- விசைத்தறி தொழிலின் பிரச்சினைகளை தீர்ப்பதாக வாக்குறுதி அளிக்கவில்லை.
பல்லடம்:
திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் வேலுச்சாமி, செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
விவசாயத்திற்கு அடுத்து அதிகப்படியான மக்களுக்கு வேலை வாய்ப்பு தரக் கூடியதாக விசைத்தறி ஜவுளித்தொழில் உள்ளது. ஜவுளித்தொழிலில் விசைத்தறி துணி உற்பத்தி மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது. விசைத்தறி ஜவுளி துணி உற்பத்தியில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும், தமிழ்நாடு 2-வது இடத்திலும் உள்ளன. தமிழ்நாட்டில் சுமார் 15 மாவட்டங்களில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி நடை பெற்றாலும் அதிக அளவில் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி நடைபெறுகிறது. காடா துணி உற்பத்தியை பொறுத்தவரை திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், அவிநாசி, மங்கலம் உள்ளிட்ட இடங்களிலும், கோவை மாவட்டத்தில் சோமனூர் பகுதியிலும் அதிக அளவில் உற்பத்தி செய்யும் மையங்களாக உள்ளன.
இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக விசைத்தறி ஜவுளித்தொழில் நலிவடைந்துள்ளது. நூல் விலை உயர்வு, பஞ்சு ஏற்றுமதி, ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த துணிக்கு உரிய விலை கிடைக்காதது என பல்வேறு பிரச்சினைகளால் நலிவடைந்து போனது. இதனால் விசைத்தறி ஜவுளி தொழிலை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.
தற்போது பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விசைத்தறி தொழிலுக்கு தேவையான பஞ்சு நூல் விலை உயர்வுக்கு தீர்வு, ரக ஒதுக்கீடு, ஜவுளி சந்தை அமைத்தல், விசைத்தறிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பட்டியல் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளிடமும் ஏற்கனவே வழங்கி உள்ளோம். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியில், விசைத்தறி தொழில் சார்ந்த வாக்குறுதிகளும் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தோம். ஆனால் எந்த கட்சியுமே தேர்தல் வாக்குறுதியில், விசைத்தறி தொழிலின் பிரச்சினைகளை தீர்ப்பதாக வாக்குறுதி அளிக்கவில்லை. இதனால் ஏமாற்ற மடைந்துள்ளோம்.
பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை மட்டும்தான் பல்லடம் செயல்வீரர் கூட்டத்தில், விசைத்தறி தொழிலை பாதுகாப்பதாக பேசியுள்ளார். அவரும் அந்த வாக்குறுதியை நிறைவேற்று வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- வருகிற 19-ந்தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடக்கிறது.
- தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்க தி.மு.க., அ.தி.மு.க. பா.ஜனதா ஆகிய கட்சிகளின் தலைமையிலான கூட்டணிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
பல்லடம்:
தமிழகத்தில் பல்லடம், சுல்தான்பேட்டை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இந்தப் பண்ணைகளில் தினமும் சராசரியாக 15 லட்சம் கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், ஆந்திரா, கேரளா கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கறிக்கோழி பண்ணைக் கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.) சார்பில், தினமும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்த விலையானது கறிக்கோழி நுகர்வு ஏற்றம் மற்றும் இறக்கத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது, ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களுக்கு ரூ.95 வரை செலவாகிறது. வருகிற 19-ந்தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்க தி.மு.க., அ.தி.மு.க. பா.ஜனதா ஆகிய கட்சிகளின் தலைமையிலான கூட்டணிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
பொதுமக்களிடம் வாக்குகளை சேகரிக்க கடந்த 3 நாட்களாக போட்டியிடும் கட்சியின் நிர்வாகிகள் தங்கள் தொண்டர்கள் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் இணைந்து வீடுவீடாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குறுதிகளையும் அள்ளி வீசி வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
இவ்வாறு வாக்கு சேகரிக்கும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கட்சி பொறுப்பாளர்கள் உற்சாகத்துடன் களப்பணியாற்ற ஆங்காங்கே சுடச்சுட, கமகம என சிக்கன் பிரியாணி மற்றும் சிக்கன் 65 ஆகியவற்றை தயாரித்து நேரடியாக வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக கறிக்கோழி பண்ணைக்கொள்முதல் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதன்படி 24 -ந்தேதி ரூ.111 ஆக இருந்த ஒரு கிலோ கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) 27-ந்தேதி ரூ.120, 28-ந்தேதி ரூ.125, 29-ந் தேதி ரூ.130 ஆக உள்ளது. 5 நாட்களில் கிலோவிற்கு ரூ.19 அதிகரித்து உள்ளதால் உற்பத்தியாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இறைச்சி கடைகளில் கடந்த வாரம் ஒரு கிலோ கறிக்கோழி ரூ.210 முதல் ரூ.220 வரை விற்பனை செய்யப்பட்டது.
தற்போது கிலோ ரூ.260 முதல் ரூ.270 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில கடைகளில் இந்த விலை மாறுபடுகிறது. தேர்தல் காரணமாக கறிக்கோழி கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கவலையும், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.






