என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பல்லடம், திருப்பூர், ஊத்துக்குளி, உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர்.
    • மோசடியில் முக்கிய குற்றவாளியான சிவக்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் பணிக்கம்பட்டியை சேர்ந்த சிவக்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் சொத்து பத்திரத்தின் மூலம் கடன் பெற்று டெக்ஸ்டைல் தொழில் செய்யலாம் என பலரிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.

    இதற்கு சம்மதித்த பொதுமக்களிடம் சொத்து பத்திரங்களை வாங்கி வங்கியில் அடமானம் வைத்து சுமார் ரூ.100 கோடி அளவில் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பல்லடம், திருப்பூர், ஊத்துக்குளி, உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர். இதையடுத்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிரவீனா என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த மோசடியில் முக்கிய குற்றவாளியான சிவக்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த நிலையில் நேற்று இரவு பல்லடத்தில் பதுங்கி இருந்த அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    • தனியாா் தூய்மைப்பணியாளா்கள் கழிவுநீா் கால்வாய்களை சுத்தப்படுத்துவதில்லை.
    • தூய்மைப்பணிகள் தனியாா்மயமாக்கப்பட்ட பின் குப்பைகள் மட்டுமே அகற்றப்படுகின்றன.

    அவிநாசி

    திருமுருகன்பூண்டி நகராட்சியின் நகர்மன்றக் கூட்டம் நகர்மன்றத் தலைவா் குமாா் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையா் அப்துல் ஹாரிஸ் முன்னிலை வகித்தாா். இதில் நகராட்சியிலுள்ள 27 வாா்டுகளிலும் உள்ள கழிவுநீா் கால்வாயை சுத்தப்படுத்துவதற்கு தனித்தனியாக ஆள்கள் நியமிக்க வேண்டும் என்று திமுக, அதிமுக., உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினா்களும் வலியுறுத்தினா். இது குறித்து தீா்மானம் நிறைவேற்றக்கோரி ஆணையரிடம் கோரிக்கை வைத்தனா்.

    ஆனால், கழிவுநீா் கால்வாய் தூய்மைப்படுத்துவதற்கு ஆட்கள் நியமிப்பது தொடா்பாக தீா்மானம் நிறைவேற்றப்படவில்லை. இதனால் நகர்மன்ற தலைவா் குமாா் உள்ளிட்ட திமுக.,வினா், அதிமுக., மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினா்களும் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.பிற்பகல் தொடங்கிய உள்ளிருப்பு போராட்டம் மாலை வரை நீடித்தது. இதனால் நகர்மன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    இது தொடா்பாக நகர்மன்றத்தலைவா் குமாா் கூறியதாவது:- நகராட்சியில் தூய்மைப்பணிகள் தனியாா்மயமாக்கப்பட்ட பின் குப்பைகள் மட்டுமே அகற்றப்படுகின்றன. தனியாா் தூய்மைப்பணியாளா்கள் கழிவுநீா் கால்வாய்களை சுத்தப்படுத்துவதில்லை. இதனால், கழிவுநீா் கால்வாய்களில் கழிவுகள் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் நோய் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    கழிவுநீா் கால்வாயை சுத்தப்படுத்த நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளுக்கும் தனித்தனியாக ஆட்களை நியமிக்க வேண்டும் என்பது அனைத்து கட்சி உறுப்பினா்களின் கோரிக்கையாக உள்ளது. எனவே இது தொடா்பாக தீா்மானத்தை நிறைவேற்றி உடனடியாக ஆட்களை நியமிக்க ஆணையா் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, குடிநீா் பற்றாக்குறையை போக்குவதற்கு அம்ரூத் திட்டத்தின் கீழ் திருமுருகன்பூண்டி நகராட்சியை சோ்க்க வேண்டும் என்றாா்.

    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து
    • முதியவர் மரணம்

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சம்பவத்தன்று இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பலத்த காயமடைந்தார். அந்த வழியே சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடம் சென்ற போலீசார் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
    • மதுபானத்தில் எலி மருந்தை கலந்து குடித்துள்ளாா்.

    காங்கயம்:

    காங்கயம் ஆவங்காளிபாளையம் பகுதியை சோ்ந்தவா் பழனிசாமி (வயது 55). லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இவருக்கு கடந்த பல வருடங்களாக குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும் குடிப்பழக்கத்தில் இருந்து மீள முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளாா்.

    இந்நிலையில் மதுபானத்தில் எலி மருந்தை கலந்து குடித்துள்ளாா். இதையறிந்த அவரது குடும்பத்தினா் பழனிசாமியை காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு உயா் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த பழனிசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். 

    • தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளாா்.
    • மதுபோதையில் இருந்த மணிகண்டன் செல்வராஜை மண்வெட்டியால் தலையில் தாக்கியது

    திருப்பூர்,ஜூன்.28-

    பல்லடம் அண்ணா நகா் பகுதியை சோ்ந்தவா் ஜெய் கௌதம்(வயது 31). இவா், கடந்த 2018 ம் ஆண்டு புதிதாக வீடுகட்ட முடிவு செய்து, ஆனந்த் என்ற பொறியாளரிடம் கட்டட வேலையை ஒப்படைத்துள்ளாா். கட்டுமான வேலைக்கு வந்த நீலகிரி மாவட்டம், கூடலூா் தேவா்சோலை பகுதியைச் சோ்ந்த சிவன் மகன் செல்வராஜ் (40), கிருஷ்ணன் மகன் மணிகண்டன் (33) ஆகியோரை தனது அலுவலக தொழிலாளா்கள் குடியிருப்பிலேயே ஜெய் கௌதம் தங்க வைத்துள்ளாா்.

    செல்வராஜ், மணிகண்டன் இருவரும் அடிக்கடி மது போதையில் தகராறில் ஈடுபட்டு வந்ததால் இருவரையும் ஊருக்கு செல்லும்படி ஜெய் கௌதம் தெரிவித்துள்ளாா். இந்நிலையில் மறுநாள் (மாா்ச் 3, 2018) மணிகண்டன் மட்டும் வேலைக்கு சென்றுள்ளாா். அப்போது செல்வராஜ் குறித்து கேட்டபோது தெரியாது என்று மணிகண்டன் தெரிவித்துள்ளாா்.

    சந்தேகமடைந்த ஜெய் கௌதம், அவா்கள் தங்கியிருந்த அறையில் சென்று பாா்த்தபோது செல்வராஜ் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளாா். அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி 2018, மாா்ச் 4-ந்தேதி செல்வராஜ் உயிரிழந்தாா். இது தொடா்பாக பல்லடம் காவல் நிலையத்தில் ஜெய் கௌதம் அளித்த புகாா் அடிப்படையில் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

    விசாரணையில் மதுபோதையில் இருந்த மணிகண்டன் செல்வராஜை மண்வெட்டியால் தலையில் தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து மணிகண்டனை போலீசாா் கைது செய்தனா்.

    இந்த வழக்கின் விசாரணை திருப்பூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சாட்சிகள் மற்றும் விசாரணையின் அடிப்படையில் மணிகண்டன் (33) குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சொா்ணம் நடராஜன் உத்தரவிட்டாா்.

    • காங்கயம் நகரில் சட்ட விரோதமாக சீட்டு விளையாடுவதாக கிடைத்தது.
    • 4 பேரை போலீசார் கைது செய்தனா்.

    காங்கயம்:

    காங்கயம் நகரில் சட்ட விரோதமாக சீட்டு விளையாடுவதாக கிடைத்த தகவலையடுத்து, போலீசாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, காங்கயம் பேருந்து நிலையம் அருகே உள்ள நான்கு சக்கர வாகன நிறுத்தத்தின் பின்புறம் சீட்டு விளையாடிக்கொண்டிருந்த காங்கயம் வாய்க்கால்மேடு பகுதியைச் சோ்ந்த கந்தசாமி, அய்யாசாமி காலனி பகுதியைச் சோ்ந்த மூா்த்தி, ஏ.சி.நகரைச் சோ்ந்த சுரேஷ், அமராவதி நகரைச் சோ்ந்த சிவகுமாா் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனா்.

    • காலாவதியான அரசு பஸ்களை உடனடியாக மாற்றி புதிய பஸ்களை இயக்க வேண்டும்.
    • எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்படும் போது, பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது.

    திருப்பூர்:

    தற்போது பெரும்பாலான அரசு பஸ்கள் உருக்குலைந்து பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இயக்க தகுதியில்லாத பஸ்கள் இயக்கப்படுவதால், பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

    மேலும் அரசு பஸ்களில் முதலுதவிப்பெட்டியும் இல்லை. இதனால் எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்படும் போது, பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது.

    பயணிகள் கூறுகையில், காலாவதியான அரசு பஸ்களை உடனடியாக மாற்றி புதிய பஸ்களை இயக்க வேண்டும். பெரும்பாலான பஸ்களில் முதலுதவி பெட்டி இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இதை கண்டு கொள்வதில்லை. அரசு பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என்றனர்.

    திருப்பூர் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, பழைய பஸ்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலுதவி பெட்டிகள் இல்லாத பஸ்களில் உடனடியாக பெட்டி அமைத்து மருந்து உள்ளிட்டவை வைத்து பராமரிக்கப்படும் என்றனர்.

    • கடையின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு இருந்தது.
    • ரொக்கம் ரூ.49 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரது மகன் வேணுகோபால்( வயது 37). இவர் பல்லடம் - பூமலூர் ரோட்டில் அரிசி கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு, வீடு சென்ற அவர் வழக்கம்போல நேற்று காலை கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு இருந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடையின் ஷட்டரைத் திறந்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த கல்லாப்பெட்டி பூட்டை உடைத்து அதில் வைத்திருந்த ரொக்கம் ரூ.49 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.

    இந்த திருட்டு குறித்து அவர் பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • 3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • 14-வது வார்டு தண்ணீர் தொட்டியில் மெயின் லைனில் இருந்து தண்ணீர் எடுக்கும் வசதி உள்ளது.

    குன்னத்தூர்:

    சாதாரண கூட்டம் தலைவர் கொமாரசாமி தலைமையில் நடந்தது. செயலர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

    வெங்கடாசலம் (தி.மு.க.): 13-வது வார்டு மற்ற பகுதிகளான ராகவேந்திர மண்டப பகுதி, ஆண்டவர் குடியிருப்பு, சத்யா நகர், ஆதியூர் ரோடு ஆகிய பகுதிகளுக்கு சத்யா நகர் 30ஆயிரம் லிட்டர் தண்ணீர் தொட்டியில் இருந்து 3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொட்டியில் தண்ணீர் இல்லாத போது மாதம் 2 முறை மட்டும் மேல்நிலைப்பள்ளிமேடு தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. 14-வது வார்டு தண்ணீர் தொட்டியில் மெயின் லைனில் இருந்து தண்ணீர் எடுக்கும் வசதி உள்ளது. ஆனால் சத்யா நகர் தொட்டியில் அவ்வளவு வசதிகள் இல்லை.ஆனால் 13-வது வார்டு பகுதிக்கு தினமும் தண்ணீர் வருவதாக பொய்யான தகவல்களை பரப்பி தண்ணீர் பற்றாகுறை ஏற்படுகிறது என்று சொல்லி குழாய் இணைப்பை துண்டிக்க பார்க்கிறார்கள். எனவே உரிய நடவடிக்கை எடுத்து வழக்கம் போல் தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும்.

    சரஸ்வதி (அ.தி.மு.க.):ஊத்துக்குளி ரோடு பஸ் நிலையத்தில் இருந்து என்.ஆர்.கே. பள்ளி வரை உள்ள சென்டர் மீடியேட்டர்களில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும். தலைவர் பேசும்போது , அனைத்து விடுபட்ட பகுதிகளுக்கும் தெருவிளக்குகள் அமைத்து தரப்படும். குடிநீர் வினியோகம் முறைப்படுத்தப்படும். அதற்கு அனைத்து மன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.

    • ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்தியாவை காக்க வந்த தெய்வமாக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார்.
    • காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒரு ரூபாய்க்கு திட்டம் போட்டால் அது மக்களிடத்தில் போய் சேர்வது வெறும் 15 பைசா மட்டுமே.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    2014 ம் ஆண்டிற்கு முன் தினமும் ஊழல் ஊழல் என மிகப்பெரிய ஊழல் ஆட்சி நடந்தது. ஆ.ராசா எம்.பி., செய்த ஊழல் நமக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.

    ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்தியாவை காக்க வந்த தெய்வமாக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். அவர் ஆட்சியில் போலி கியாஸ் இணைப்பை ஒழித்ததில் மட்டும் ரூ. 3 லட்சம் கோடி நம் நாட்டுக்கு மீதமானது. அந்தப் பணம் முழுவதும் உள்கட்டமைப்புக்காக செலவு செய்யப்பட்டு வருகிறது.

    ஏழை எளிய மக்களின் நலம், நல்ல அரசாங்கம், சேவை இந்த மூன்றையும் தாரக மந்திரமாக கொண்டு 9 ஆண்டுகளாக சிறந்த ஆட்சி நடந்து வருகிறது.

    ஏழை எளிய மக்கள் 2014 ம் ஆண்டுக்கு முன் வங்கி என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தனர். மிகப்பெரிய தொழில் அதிபர்கள், மிகப்பெரிய படிப்பு படித்தவர்கள் போகும் இடமாக இருந்த நிலையை மாற்றி அனைவருக்கும் இலவச வங்கிக் கணக்கை தொடங்கி கொடுத்தவர் நரேந்திர மோடி.

    அத்துடன் அரசு திட்டம் மானியங்கள், பயன்கள் நேரடியாக வங்கிக் கணக்கில் சேர்ப்பதற்கான ஏற்பாட்டை செய்துள்ளார். கொரோனா சமயத்தில் ஏப்ரல், மே, ஜூன் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.500 வீதம் வங்கி கணக்கில் செலுத்தினார்.

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒரு ரூபாய்க்கு திட்டம் போட்டால் அது மக்களிடத்தில் போய் சேர்வது வெறும் 15 பைசா மட்டுமே. இன்று பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் ஒரு ரூபாய்க்கு திட்டம் போட்டால் அந்த ஒரு ரூபாய் முழுவதுமாக நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு செல்கிறது.

    2 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் காது கொடுத்து கேட்க முடியாத ஊழல் நடந்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார். அவரை இன்னும் அமைச்சரவையில் இருந்து நீக்காமல் இருப்பது தமிழருக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஊழல் அமைச்சரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் பாஜக., அரசு நிறைவேற்றி வருகிறது.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கூடிய சீக்கிரமே நாம் அயோத்தியில் தரிசனம் செய்ய இருக்கிறோம். பாஜக., அமைச்சர்கள் இந்த 9 ஆண்டுகளில் நியாயமான நேர்மையான அமைச்சர்களாக பணியாற்றி வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    காஷ்மீர், அருணாசலப் பிரதேசம், அந்தமான் உள்ளிட்ட அனைத்து கடைகோடி மக்களுக்கும் அரசாங்க திட்டம் நேரடியாக போய் சேர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார். வருகிற ஒரு வருடத்திற்குள் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் மத்திய அரசால் நிரப்பப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 6 கிலோ கஞ்சா சாக்லேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அவினாசி:

    அவினாசி அருகே கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அவினாசி போலீசார் அவினாசியை அடுத்து அணைப்புதூர் அருகே சோதனை மேற்கொண்டனர். அப்போது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த லட்சுமணபட்டேல் (வயது 42) என்பவர் கஞ்சா சாக்லேட் வைத்திருப்பது தெரிய வந்தது.

    எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 6 கிலோ கஞ்சா சாக்லேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • 29-ந் தேதி இந்த ரெயில் கோவையில் இருந்து காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும்.
    • இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர்:

    கோவை-திருப்பதி ரெயில் சேவை பொறியியல் பணி காரணமாக நாளை 29-ந் தேதி மாற்றப்பட்டுள்ளது. இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படுகிறது. நாளை 29-ந் தேதி இந்த ரெயில் கோவையில் இருந்து காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும்.

    காட்பாடியில் இருந்து திருப்பதி வரை இயக்கப்படாது. இதுபோல் திருப்பதி-கோவை ரெயில் நாளை 29-ந் தேதி காட்பாடியில் இருந்து கோவை வரை மட்டுமே இயக்கப்படும். திருப்பதி-காட்பாடி வரை இயக்கப்படாது.இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×