என் மலர்
திருப்பூர்
- பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.
- சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் மழைநீர் மறுசுழற்சி நிலையம் அமைக்கும் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள ப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி காயிதே மில்லத் நகரில் சீர்மிகு நகரதிட்டத்தின் கீழ் மழைநீர் மறுசுழற்சி நிலையம் அமைப்பது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் மாநகராட்சி காயிதே மில்லத் நகரில் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் மழைநீர் மறுசுழற்சி நிலையம் அமைக்கும் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள ப்பட்டது. காயிதே மில்லத் நகரில் மழைநீர் மறுசுழற்சி நிலையம் அமைக்கும் திட்டத்தை பொதுமக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு வேறு இடத்தில் அமைக்கப்படவுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னைய்யா , மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் , திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் , திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் , திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியன், திருப்பூர் மாநகராட்சி மண்டல த்தலைவர்கள் பத்மநாபன் (4-ம்மண்டலம்), கோவிந்தசாமி (3-ம்மண்டலம்) ,கோவிந்தராஜ் (2-ம் மண்டலம்), தலைமைப்பொறியாளர் வெங்கடேஷ் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கவும், நடைபெற்று வரும் பணிகள் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
- நடராஜ் தியேட்டர் அருகில் அமைய உள்ள புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலக வளாக கூட்டரங்கில் நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னைய்யா மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தலைமையில் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் நடைபெற்று வரும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கவும், நடைபெற்று வரும் பணிகள் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சியில் ரூ.54.36கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மாநாட்டு அரங்கம், ரூ.31.18 கோடி மதிப்பீட்டில் புதியபேருந்து நிலையம் மேம்பாடு மற்றும் ரூ.26 கோடி மதிப்பீட்டில் நடராஜ் தியேட்டர் அருகில் அமைய உள்ள புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது தலைமை பொறியாளர் வெங்கடேஷ், துணை ஆணையாளர்கள் பாலசுப்ரமணியன், சுல்தானா, துணை மாநகர பொறியாளர்கள் கண்ணன், வாசுகுமார், செல்வநாயகம், உதவி ஆணையாளர்கள் முருகேசன் வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பாலசுப்பிரமணி பேத்திகள் 2 பேரை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
- விபத்தில் சிக்கிய 3 பேரையும் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்த சின்னச்சாமி என்பவரது மகன் பாலசுப்பிரமணி(வயது 53). இவர் பல்லடம் தினசரி மார்க்கெட் பகுதியில் கலாசு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று பல்லடம் பனப்பாளையம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வந்துள்ளார். பிறகு மாலை சுமார் 6 மணி அளவில், புளியம்பட்டி செல்வதற்காக அவரது பேத்திகள் 2 பேரை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
பல்லடம் - பொள்ளாச்சி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, பாரதி ஸ்கூல் அருகே எதிரே வந்த சரக்கு வேன் எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பாலசுப்பிரமணியன் மயங்கி கிடந்தார். சிறுமிகளுக்கு கை, கால்களில், காயங்கள் ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த வழியே சென்றவர்கள் விபத்தில் சிக்கிய 3 பேரையும் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பாலசுப்பிரமணியனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். சிறுமிகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த விபத்து குறித்து பாலசுப்பிரமணியன் மகன் கார்த்தி கொடுத்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். உறவினர் வீட்டு குடும்ப நிகழ்ச்சிக்கு வந்தவர் விபத்தில் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- காற்றாலை மற்றும் சோலார் எரிசக்தி உற்பத்தி செய்து தங்கள் நிறுவனங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.
- சர்வதேச சந்தைகளில் 'வளம் குன்றா வளர்ச்சி என்ற அடிப்படையில் இயங்கும் நிறுவனங்களுக்கு முன்னுரிமையும், கவுரமும் கிடைக்கிறது.
திருப்பூர்:
தமிழகத்தில் கடந்த 2009-11 காலங்களில் ஏற்பட்ட மின்தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது. காற்றாலை மற்றும் சோலார் எரிசக்தி உற்பத்தி செய்து தங்கள் நிறுவனங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.
மத்திய, மாநில அரசுகளும் மின்சாரத்தை மட்டுமே சார்ந்து இயங்காமல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு மாற விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. திருப்பூர் பனியன் தொழிலை பொறுத்தவரை, ஒட்டுமொத்த மின்தேவைக்கு அதிகமாகவே காற்றாலை மற்றும் சோலார் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மறுசுழற்சி தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. சர்வதேச சந்தைகளில் 'வளம் குன்றா வளர்ச்சி என்ற அடிப்படையில் இயங்கும் நிறுவனங்களுக்கு முன்னுரிமையும், கவுரமும் கிடைக்கிறது.
தமிழகத்தில் உள்ள நூற்பாலைகளும், காற்றாலை மற்றும் சூரியஒளி மின் உற்பத்தி செய்து, தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன. இதனால், மின் கட்டண உயர்வு அவர்களை பாதிப்பதில்லை. மின்சார பயன்பாட்டுக்கான நிலை கட்டணத்தில் மட்டும் சலுகையை எதிர்பார்க்கி ன்றனர்.
கோவையில் நடந்த தமிழக அரசின் தொழில்நுட்ப குழு கூட்டத்தில் புதுப்பித்தக்க எரிசக்தி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, பசுமை சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். அதனால் சர்வதேச சந்தைகளில் இந்திய நிறுவனங்களின் பங்களிப்பு உயரும் என்று தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் உரிமையாளர் சங்க (டாஸ்மா) தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறியதாவது:-
தமிழகத்தில் காற்றாலை மற்றும் சோலார் கட்டமைப்பு வாயிலாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில், நூற்பாலைகளின் பங்களிப்பு மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு உள்ளது. காற்றாலையில் மட்டும் 3,500 மெகாவாட் கொள்திறன் அளவுக்கு மின்சாரம் உற்பத்தியாகிறது. இதேபோல் சோலார் மூலமாகவும், அதிக அளவு மின்சாரம் உற்பத்தியாகிறது.
வெளிநாட்டு சந்தைகளில் பசுமை சான்றிதழ் பெற்ற நிறுவனங்களுக்கு அதிக முன்னுரிமையும், வர்த்தக வாய்ப்புகளும் கிடைக்கிறது. தமிழக அரசு காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, பசுமை சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.
கட்டண அடிப்படையில் வழங்கினால் அரசுக்கும் வருவாய் கிடைக்கும் என தொழில்நுட்ப குழு கூட்டத்தில் வலியுறுத்தினோம். கோரிக்கையை கேட்டறிந்த அமைச்சர் காந்தி மற்றும் அரசு செயலர்கள் விரிவான அறிக்கையாக வழங்கினால் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி செய்து வரும் அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் பசுமை சான்று வழங்குவது மிகுந்த பயனளிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
- புதிய கட்டிடம் கட்டித் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
- மேம்பாட்டு நிதியிலிருந்து எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., ரூ.11.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தந்தார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகரில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் அங்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அங்கன்வாடி மையகட்டடம் பழுதடைந்து இருந்ததால் புதிய கட்டிடம் கட்டித் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., ரூ.11.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தந்தார். அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அந்தக் கட்டடத்தை எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் ஜெயந்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சின்னப்பன்,பிரேமா பழனிச்சாமி, மற்றும் தண்ணீர் பந்தல் நடராஜன், பானு பழனிச்சாமி, கோகுல், கோவிந்தராஜ், சிவப்பிரகாஷ், மற்றும் அங்கன்வாடி ஆசிரியைகள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- வருவாய் மாவட்ட பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு மூன்று வணிக வரி மாவட்டங்களுடன் திருப்பூர் வணிக வரி கோட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
- வணிக வரி வசூல் நிலவரம்,வணிக வரி சார்ந்த பல்வேறு வழக்குகளின் நிலை குறித்து கேட்டறிந்தார்.
திருப்பூர்:
ஈரோடு கோட்டத்தின் கீழ் திருப்பூரில் உள்ள 2 வணிக வரி மாவட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. வருவாய் மாவட்ட பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு மூன்று வணிக வரி மாவட்டங்களுடன் திருப்பூர் வணிக வரி கோட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
கோட்ட அலுவலகம் செயல்பட அவிநாசி அருகே கைகாட்டிப்புதூரிலுள்ள ஏ.இ.பி.சி.,க்கு சொந்தமான கட்டடம் வாடகைக்கு பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு கோட்ட வணிக வரித்துறை இணை கமிஷனர் லட்சுமி பாக்கியா தனீரு, திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள வணிக வரி துணை கமிஷனர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் வணிக வரி மாவட்ட துணை கமிஷனர் முருககுமார் மற்றும் உதவி கமிஷனர்கள், வணிக வரி அலுவலர்கள் பங்கேற்றனர். வணிக வரி வசூல் நிலவரம்,வணிக வரி சார்ந்த பல்வேறு வழக்குகளின் நிலை குறித்து கேட்டறிந்தார். அலுவலக செயல்பாடுகளை பார்வையிட்டு ஆவணங்களை தணிக்கை செய்தார்.
திருப்பூர் வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் ரவி உட்பட நிர்வாக குழு உறுப்பினர்கள், இணை கமிஷனரை சந்தித்து வணிக வரி கோட்ட அலுவலகத்தை விரைவில் திறக்கவேண்டும்.ஆர்டர் குறைவால், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியில் தவிக்கின்றன. இதனால் வரி செலுத்துவதில் காலதாமதம் ஏற்படுகிறது. வரி வசூலில், அதிகாரிகள் கடுமைகாட்டக்கூடாது என வரி பயிற்சியாளர் கூட்டமைப்பினர் இணை கமிஷனரிடம் தெரிவித்தனர்.
ஆய்வு குறித்து இணை கமிஷனரிடம் கேட்டபோது, இது வழக்கமான ஆய்வுதான். திருப்பூரில் வணிக வரி கோட்ட அலுவலகம் செயல்பட உள்ள கட்டடத்தை பார்வையிட்டுள்ளோம். அரசு உத்தரவு வந்தவுடன், விரைவில் கோட்ட அலுவலகம் செயல்பாட்டை தொடங்கும் என்றார்.
- தேசிய நெடுஞ்சாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.
- ப முகூர்த்த நாட்களில் கார், மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை,வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்தது.
பல்லடம்:
பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால் பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது. திருமணம் போன்ற விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.
இந்த நிலையில் சுப முகூர்த்த நாட்களில் கார், மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை,வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்தது. இதனால் கோவை-திருச்சி மெயின் ரோட்டிலும், மங்கலம் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அண்ணா நகர் முதல், பனப்பாளையம் தாராபுரம் ரோடு பிரிவு வரை, ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து செல்கின்றன.
போக்குவரத்து போலீசார் நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள் வைத்தும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும் ரோடுகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல்லடம் நகரமே திக்குமுக்காடிப் போகிறது. முகூர்த்த நாட்களில் போக்குவரத்து மாற்றங்களை செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வீடுகளுக்கே கோவில் பிரசாதம் அனுப்பி வைக்கும் திட்டத்தை, இந்து சமய அறநிலையத் துறை செயல்படுத்தி வருகிறது.
- 49 பிரசித்தி பெற்ற கோவில்களின் பிரசாதத்தை, தபால் வழியாக பக்தர்களுக்கு அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர்,ஜூன்.29-
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு, நேரில் சென்று சுவாமியை தரிசிக்க முடியாத பக்தர்கள் வசதிக்காக, அவர்கள் வீடுகளுக்கே கோவில் பிரசாதம் அனுப்பி வைக்கும் திட்டத்தை, இந்து சமய அறநிலையத் துறை செயல்படுத்தி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள புகழ் பெற்ற ராமநாத சுவாமி கோவிலும் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. கோவிலில் கோடி தீர்த்தம், 100 மி.லி., செம்பில் அடைத்தும், 50 கிராம் கற்கண்டு, ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாள் படம், விபூதி, குங்குமம் அடங்கிய பிரசாதம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
தபால் செலவு தவிர்த்து, இதற்கு கட்டணம், 145 ரூபாய். பிரசாதம் வேண்டுவோர் www.hrce.tn.gov.inஎன்ற இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.இந்து சமய அறநிலையத் துறை - தபால் துறை இணைந்து ஏற்கனவே, 49 பிரசித்தி பெற்ற கோவில்களின் பிரசாதத்தை, தபால் வழியாக பக்தர்களுக்கு அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
- ஒரு மாதம் நடக்கும் இப்போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 38 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
- ஜூலை 1-ந்தேதி முதல் ஒவ்வொரு போட்டிகளிலும் பங்கு பெறுகின்றனர்.
திருப்பூர்:
மாநில முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி வருகிற 30-ந் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் துவங்குகிறது. ஒரு மாதம் நடக்கும் இப்போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 38 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தடகளம் - 56, கூடைப்பந்து - 48, பேட்மின்டன் - 21, கிரிக்கெட் - 75, சதுரங்கம் - 2, கால்பந்து - 72, கபடி - 103, சிலம்பம் - 27, நீச்சல் - 6, டேபிள் டென்னிஸ் - 5, த்ரோபால் - 14, ஆக்கி - 72, வாலிபால் - 96, , பளு தூக்குதல் - 1, டென்னிஸ் - 2 பேர் என மொத்தம் 603 பேர் சென்னை செல்கின்றனர்.
அதிகபட்சமாக பள்ளி மாணவ, மாணவிகள் 220 பேர், கல்லூரிகளை சேர்ந்த 207 பேர், பொதுமக்கள் 85 பேர், அரசு ஊழியர் 62 பேர், மாற்றுத்திறனாளி 29 பேர் பங்கேற்க உள்ளனர். இவர்கள் ஜூலை 1-ந்தேதி முதல் ஒவ்வொரு போட்டிகளிலும் பங்கு பெறுகின்றனர்.
- சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர்.
- கூண்டை சுற்றிலும் உள்ள கால்தடத்தை பார்க்கும் போது, சிறுத்தை கூண்டை சுற்றிலும் வட்டமிட்டபடி வந்துள்ளது.
காங்கயம்,:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊதியூர் வனப்பகுதிக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு வந்த ஒரு சிறுத்தை பதுங்கியிருந்து மலையடிவாரப் பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து அங்கிருந்த ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது. இதையடுத்து காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர்.
மேலும் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள், ட்ரோன்கள் கேமராக்கள் உள்ளிட்டவைகளை வைத்தும் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் சிறுத்தை கூண்டுகளில் சிக்காமல் இதுவரை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது.
இந்தநிலையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சிறுத்தையை பார்த்ததாக தகவல் தெரிவித்தனர். அந்த இடங்களுக்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வந்தனர். கடந்த சில நாட்களாக ஊதியூர் மலையடிவார பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆட்டுக்குட்டிகள் தொடர்ந்து மாயமாகி வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று கால்தடங்களை ஆய்வு செய்து சிறுத்தை வேட்டையாடியதாக உறுதிப்படுத்தினர். இதனால் அச்சம் அடைந்த ஊதியூர் பகுதி மக்கள் சிறுத்தையின் தொடர் வேட்டையை கண்காணிக்க தாங்களாகவே முன்வந்து அவர்களது தோட்டத்தில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் ஊதியூர் மலையடிவார பகுதியில் உள்ள விவசாயி கார்த்தி என்பவரது தோட்டத்தில் புகுந்த சிறுத்தை மெதுவாக நடந்து சென்று இரை தேடிய காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். தினசரி கூண்டு இருக்கும் பகுதிக்கு வரும் சிறுத்தை உள்ளே ஆடுகளை பாதுகாப்பான முறையில் அடைத்து வைத்து இருப்பதை பார்த்து விட்டு செல்கிறது. இதனால் சிறுத்தையை பிடிக்க விடாமுயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் மலையடிவார பகுதியில் வைக்கப்பட்ட கூண்டு ஒன்றை சுற்றிலும் சிறுத்தையின் கால்தடம் பதிந்திருந்தது. இந்த கால்தடம் சிறுத்தை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் கூண்டை சுற்றிலும் உள்ள கால்தடத்தை பார்க்கும் போது, சிறுத்தை கூண்டை சுற்றிலும் வட்டமிட்டபடி வந்துள்ளது. ஆனால் கூண்டுக்குள் சிக்காமல் போக்கு காட்டி சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இது வனத்துறையினருக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
- வெள்ளகோவில் ஒன்றிய ஆணையாளராக இருந்த வேலுச்சாமி திருப்பூர் ஒன்றிய ஆணையாளராக பொறுப்பறே்றார்.
- ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த ஜோதிநாத் திருப்பூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும்,
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் 23 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பூர் மாவட்ட மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த ரமேஷ்குமார் தணிக்கை உதவி இயக்குனர் அலுவலக வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், தணிக்கை உதவி இயக்குனர் அலுவலக வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றி வந்த பியூலா எப்சிபாய் குடிமங்கலம் ஒன்றிய ஆணையாளராகவும், குடிமங்கலம் ஒன்றிய ஆணையாளராக இருந்த சாதிக்பாட்சா, மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உடுமலை ஒன்றிய ஆணையாளராக இருந்த சரவணன் ஊத்துக்குளி ஒன்றிய ஆணையாளராகவும், ஊத்துக்குளி ஒன்றிய ஆணையாளராக இருந்த சுரேஷ்குமார் குண்டடம் ஒன்றிய ஆணையாளராகவும், குண்டடம் ஒன்றிய ஆணையாளராக இருந்த பிரியா பல்லடம் ஒன்றிய ஆணையாளராகவும், பல்லடம் ஒன்றிய ஆணையாளராக இருந்த ரமேஷ் வெள்ளகோவில் ஒன்றிய ஆணையாளராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளகோவில் ஒன்றிய ஆணையாளராக இருந்த வேலுச்சாமி திருப்பூர் ஒன்றிய ஆணையாளராகவும், திருப்பூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளராக இருந்த ஜோதி உடுமலை ஒன்றிய ஆணையாளராகவும், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த ஜோதிநாத் திருப்பூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், திருப்பூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த ஸ்ரீதர் மூலனூர் ஒன்றிய ஆணையாளராகவும், மூலனூர் ஒன்றிய ஆணையாளராக இருந்த பாலசுப்பிரமணியன் மூலனூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மூலனூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த வெங்கடேசன் குண்டடம் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், குண்டடம் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த கந்தசாமி பொங்கலூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், பொங்கலூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த மீனாட்சி ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த சாந்திலட்சுமி ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
காங்கயம் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த ராகவேந்திரன் காங்கயம் ஒன்றிய ஆணையாளராகவும், காங்கயம் ஒன்றிய ஆணையாளராக இருந்த விமலாதேவி அவினாசி ஒன்றிய ஆணையாளராகவும், அவினாசி ஒன்றிய ஆணையாளராக இருந்த மனோகரன் பல்லடம் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், பல்லடம் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த மகேஸ்வரன் வெள்ளக்கோவில் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், வெள்ளகோவில் வட்டாரவளர்ச்சி அதிகாரியாக இருந்த எத்திராஜ் மடத்துக்குளம் ஒன்றிய ஆணையாளராகவும், மடத்துக்குளம் ஒன்றிய ஆணையாளராக இருந்த செந்தில்கணேஷ்மலா குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த சிவகுருநாதன் தாராபுரம் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும் பணியிடமாற்றம் செய்து கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.
- திட்டப்பணிகளையும் மற்றும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.
- முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்ட பணிகளையும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைக்கிறார்.
திருப்பூர்:
பல்லடம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.ெப.சாமிநாதன் வருகிற 1-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.
அன்று காலை 10 மணிக்கு பொங்கலூர் கிழக்கு ஒன்றியத்தில் ரூ.4 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் 6 திட்டப்பணிகளையும், காலை 10.30 மணிக்கு பொங்கலூர் மேற்கு ஒன்றியத்தில் ரூ.4 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் 5 திட்டப்பணிகளையும் மற்றும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.
காலை 11.30 மணிக்கு பல்லடம் மேற்கு ஒன்றியம் மாணிக்காபுரத்தில் ரூ.4 கோடியே 85 லட்சம் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் 9 திட்டப்பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.
மதியம் 12 மணிக்கு பல்லடம் கிழக்கு ஒன்றியம் கரைப்புதூரில் ரூ.3 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் 6 திட்ட பணிகளையும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைக்கிறார்.






