என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
    • ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் மூன்று அடுக்கு கட்டிடத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியாளர் துறை ஆகிய அலுவலகங்கள் ஒன்றிணைந்து செயல்பட உள்ளது.

     தாராபுரம், ஜூன்.30-

    தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட வசந்தம் நகரில் ரூ.2 கோடியே 20 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.இதனை தொடர்ந்து ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் புதிய கட்டிடம் தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவில் நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்கள்.வேளாண்மை உதவி இயக்குநர் கே.லீலாவதி அனைவரையும் வரவேற்றார். திருப்பூர் வேளாண்மை இணை இயக்குனர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் வேளாண்மை விரிவாக்க உதவி அலுவலர்கள், தோட்டகலை உதவி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் மூன்று அடுக்கு கட்டிடத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியாளர் துறை ஆகிய அலுவலகங்கள் ஒன்றிணைந்து செயல்பட உள்ளது.

    • மேற்குத்தொடர்ச்சி மலையில் மழை பெய்யும் போது சிற்றாறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து, பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
    • சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக பல்வேறு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம் என கருதப்பட்டது.

     உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து 900 மீட்டர் உயரத்தில் வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகும் பல்வேறு சிற்றாறுகள், பஞ்சலிங்க அருவியாக கொட்டுகிறது.ஆண்டு முழுவதும் அருவியில் நீர் வரத்து, சராசரி உயரத்திலிருந்து சாரல் போல கொட்டும் தண்ணீர் என பஞ்சலிங்க அருவியின் சிறப்புகளால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்து செல்கின்றனர். மேற்குத்தொடர்ச்சி மலையில் மழை பெய்யும் போது சிற்றாறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து, பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

    அப்போது அருவியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள கம்பிகளை முழுவதுமாக மூடி, பல அடிக்கு தண்ணீர் கொட்டும். திடீர் வெள்ளப்பெருக்கினால் அருவியில் கொட்டும் தண்ணீர் சீரான நிலைக்கு திரும்ப பல மணி நேரம் ஆகும்.

    கடந்த 2008ல் சிற்றாறுகளில் தண்ணீர் வரத்து பல மடங்கு அதிகரித்து பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்து கொண்டிருந்த 13 சுற்றுலா பயணிகள் தண்ணீரில், இழுத்து செல்லப்பட்டனர். பஞ்சலிங்க அருவியின் சீற்றத்துக்கு அதிக உயிர்ப்பலி ஏற்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு பிறகு சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக பல்வேறு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம் என கருதப்பட்டது.

    அப்போதைய தி.மு.க., அரசு, உடனடியாக வனத்துறை, இந்து அறநிலையத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உட்பட அமைச்சர்கள் அடங்கிய ஆலோசனைக்கூட்டம் நடத்தியது.இக்கூட்டத்தில், பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக பல்வேறு வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.பல ஆண்டுகளாகியும் பஞ்சலிங்க அருவி மேம்பாட்டு திட்டங்கள் எதுவும் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.சுற்றுலா பயணிகள் உடை மாற்ற தேவையான அறைகள் இல்லை. கழிப்பிட வசதியும் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இப்பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்து, பஞ்சலிங்க அருவி பாதுகாப்பான அருவி என்ற பெயரை நிலை நிறுத்த அனைத்து துறையினரை ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கலெக்டர் கிறிஸ்துராஜ் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் இருந்து வழியனுப்பி வைத்தார்.
    • திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த  66 விளையாட்டு வீரர் வீராங்கனைகளும்  8பயிற்சியாளர்கள் மற்றும் மேலாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

    திருப்பூர்:

    முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் சென்னையில் நடைபெறுவதையொட்டி திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 66 விளையாட்டு வீரர் வீராங்கனைகள்,  8பயிற்சியாளர்கள் மற்றும் மேலாளர்கள் சென்னை புறப்பட்டு சென்றனர். அவர்களை கலெக்டர் கிறிஸ்துராஜ் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் இருந்து வழியனுப்பி வைத்தார்.

    இது குறித்து கலெக்டர் தெரிவித்தாவது:-

    முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் நாளை 1-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 5 பிரிவுகளில் சென்னையில் பல்வேறு விளையாட்டு அரங்கங்களில் நடைபெற உள்ளது.

    முதற்கட்டமாக பள்ளி மற்றும் கல்லூரி விளையாட்டு வீரர்களுக்கான சிலம்பம், கபடி மற்றும் கைப்பந்து விளையாட்டுப் போட்டிகள் ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட உள்ளது. அதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த  66 விளையாட்டு வீரர் வீராங்கனைகளும்  8பயிற்சியாளர்கள் மற்றும் மேலாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் இப்போட்டிகளில் கலந்து கொண்டுள்ள வீரர், வீராங்கனைகள் விளையாட்டு ப்போட்டிகளில் வெற்றி பெற்று திருப்பூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

    பின்னர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளை அழைத்து செல்லும் பேருந்தினை கொடியசைத்து வழிஅனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜகோபால் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்.
    • அரசின் கவனத்தை ஈர்க்க, கல்குவாரிகளுக்கு சொந்தமான 700க்கும் மேற்பட்ட லாரிகளை ஒரே இடத்தில் நிறுத்தி வைத்துள்ளோம்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட கல்குவாரி மற்றும் கிரஷர்கள் இயங்கி வருகிறது. இந்தநிலையில் கல்குவாரி தொழிலுக்கு உரிய முறையில் அனுமதி வழங்க வேண்டும், லைசென்ஸ் வழிமுறைகளை எளிதாக்க வேண்டும் ,சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் கல்குவாரிகள், கிரஷர்கள், டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் கடந்த 4 நாட்களாக பல்லடம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்குவாரிகள், கிரஷர்கள், டிப்பர் லாரிகள் இயங்கவில்லை. இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் ஒரே இடத்தில் 700க்கு மேற்பட்ட லாரிகளை நிறுத்தி வைத்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் கல்குவாரி உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட குவாரி உரிமை யாளர்கள் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது: -

    15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். சட்டத்திற்கு உட்பட்டு முறையான அனுமதி பெற்றுக்கொண்டு கல்குவாரிகள் நடத்தி வருகிறோம். சட்டவிரோதமாக கல்குவாரிகள் இயங்க வில்லை. கல்குவாரி தொழில் தொடர்ந்து நடத்த முடியாமல் கடுமையான சூழல் இருந்து வருகிறது. கடந்த 4 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

    அரசின் கவனத்தை ஈர்க்க, கல்குவாரிகளுக்கு சொந்தமான 700க்கும் மேற்பட்ட லாரிகளை ஒரே இடத்தில் நிறுத்தி வைத்துள்ளோம். போராட்டத்தால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நேரடியாக சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்களும், மறைமுகமாக சுமார் 2 லட்சம் தொழிலாளர்களும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசு எங்களது கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வடமேற்கு திசையில் ஒரு கிலோ மீட்டா் தொலைவில் 10க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் காணப்படுகின்றன.
    • கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட மட்கலங்களும், தடித்த ஓடுகள் உடைய முதுமக்கள் தாழிகளும் ஏராளமாக கிடைக்கின்றன.

    திருப்பூர்:

    திருப்பூரை அடுத்த காவுத்தம்பாளையம் அருகில் உள்ள குமரிக்கல்பாளையத்தில் உயா்மின் கோபுரத்துக்கான துணை மின் நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் கடந்த 47 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், இப்பகுதியில் நடுகல் உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்கள் இருப்பதால் அகழாய்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனா்.

    இந்நிலையில் திருவாரூா் மத்திய பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல் மற்றும் மரபு மேலாண்மை பட்டயப் படிப்பின் பொறுப்பாசிரியா் ரவி தலைமையில் தொல்லியல் ஆய்வாளா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

    இது தொடா்பாக பேராசிரியா் ரவி கூறியதாவது:- குமரிக்கல்பாளையத்தில் இருந்து வடமேற்குப் பகுதியில் 2 கிலோ மீட்டா் சுற்றளவில் சங்க கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. இங்குள்ள 45 அடி உயரமான நடுகல் வீரக்கல் என்று அழைக்கப்படுகிறது.

    இந்தக்கல்லில் இருந்து வடமேற்கு திசையில் ஒரு கிலோ மீட்டா் தொலைவில் 10க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் காணப்படுகின்றன. இந்த கல்வட்டங்கள் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட மனிதா்கள் இறந்த பிறகு அவா்களுக்காக எடுக்கப்பட்ட நினைவுச்சின்னங்களாகும்.

    இங்கு கிடைத்துள்ள பொருட்களை பாா்க்கும் போது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கருப்பு, சிவப்பு மட்கல பண்பாட்டை கொண்ட மக்கள் வாழ்ந்து இருப்பதை அறிய முடிகிறது.

    இங்கு பெரிய இரும்புக் கசடுகள் கிடைத்ததன் மூலம் இங்கிருந்த மக்கள் இரும்புக் கருவிகள், போா்க்கருவிகள், உழவுக்கருவிகள் ஆகியவற்றை செய்து பயன்படுத்தியதாக தெரிகிறது.

    மேலும் கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட மட்கலங்களும், தடித்த ஓடுகள் உடைய முதுமக்கள் தாழிகளும் ஏராளமாக கிடைக்கின்றன. இவை சங்க காலத்திற்கு முற்பட்ட மக்கள் வாழ்ந்ததற்கான உறுதியான சான்றுகளாகும்.

    சில மட்கல ஓடுகளில் குறியீடுகளும் கிடைத்திருக்கின்றன. இறந்தவா்களை அடக்கம் செய்கின்ற முதுமக்கள் தாழிகளும், சிதைந்த பகுதிகளும் ஏராளமாகக் கிடைத்திருக்கின்றன. இதன் மூலம் இறந்தவா்களை அடக்கம் செய்கின்ற உன்னத கலையை கற்றிருந்ததையும் உணர முடிகிறது.

    எனவே இந்தப்பகுதியை அகழாய்வு செய்வதன் மூலம் தமிழகத்தின் பண்டைய வரலாற்றையும், கொங்கு நாட்டின் உன்னதப்பண்பாட்டு சிறப்பு மிக்க வரலாற்றையும் மீட்டெடுக்க முடியும் என்றாா்.

    • ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
    • விழாவிற்கு காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார் தலைமை தாங்கி கொடி ஏற்றி வைத்து வரவேற்புரையாற்றினார்.

    காங்கயம்:

    காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே அலுவலகத்திற்கு என ரூ.3 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    விழாவிற்கு காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார் தலைமை தாங்கி கொடி ஏற்றி வைத்து வரவேற்புரையாற்றினார்.பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு எம்.பி., அ.கணேசமூர்த்தி, திருப்பூர் மாநகராட்சி 4 -ம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அ.லட்சுமணன், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் ஜீவிதா ஜவஹர், காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலாதேவி, பா.ராகவேந்திரன், வெள்ளகோவில் ஒன்றியக்குழு தலைவர் வெங்கடேச சுதர்சன், காங்கயம் நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

    • பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் குமாா் என்பவருக்கும் இடப்பிரச்னை தொடா்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது
    • இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது

    காங்கயம்:

    காங்கயம், காமராஜா் நகரைச் சோ்ந்தவா் லோகநாதன் (55). இவா் சிற்றுந்து (மினி பேருந்து) ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். இவருக்கும், பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் குமாா் என்பவருக்கும் இடப்பிரச்னை தொடா்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் குமாரின் மகன் மணிகண்டன் (24) லோகநாதனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, லோகநாதன் அளித்த புகாரின் பேரில் காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனா்.

    • குடிபோதையில் வந்த 2 பேர் மேலும் குடிக்க மதுபானம் கேட்டுள்ளனர்.
    • உணவகத்தின் உரிமையாளர் கோகுல் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகர் பல்லடம் - திருப்பூர் மெயின் ரோட்டில் தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அங்கு குடிபோதையில் வந்த 2 பேர் மேலும் குடிக்க மதுபானம் கேட்டுள்ளனர். உணவகத்தார் மதுபானம் இங்கு இல்லை என சொல்லியுள்ளனர். இதனை கேட்காமல் தொடர்ந்து மது கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து உணவகத்தின் உரிமையாளர் கோகுல் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் உணவகத்தில் தகராறு செய்த பல்லடம் அருகே உள்ள உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர்(வயது 29) ,செந்தூரன் காலனியை சேர்ந்த பிரகாஷ் குமார்(30) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தாராபுரம் தளவாய்பட்டி னத்தை சேர்ந்த பார்த்தீபன் என்பவர் வந்தார்.
    • தன்னை பார்த்தீபன் ஆபாசமாக பேசியதாகவும், பாலியல் தொந்தரவு செய்ததாகவும் கூறியுள்ளார்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தேவேந்திரர் தெருவை சேர்ந்த 22 வயதான இளம்பெண், தாராபுரம் சர்ச் சாலையில் உள்ள மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார்.

    பாலியல் தொல்லை

    சம்பவத்தன்று கடையின் உரிமையாளர் முருகன் வெளியே சென்றிருந்த நிலையில், கடைக்கு முருகனின் நண்பரான தாராபுரம் தளவாய்பட்டி னத்தை சேர்ந்த பார்த்தீபன் என்பவர் வந்தார். அப்போது பார்த்தீபனுக்கும், இளம்பெண்ணுக்கும் தகராறு ஏற்பட்டது.

    இது குறித்து அந்த இளம்பெண் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் , தன்னை பார்த்தீபன் ஆபாசமாக பேசியதாகவும், பாலியல் தொந்தரவு செய்ததாகவும் கூறியுள்ளார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பத்மபிரியா, பார்த்தீபன் மீது பெண் வன் கொடுமை சட்டம் மற்றும் ஆபாசமாக பேசியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    வலைவீச்சு

    இதனிடையே பார்த்தீபன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகி ன்றனர். தலைமறை வான பார்த்தீபன் தாரா புரம் பூளவாடி சாலையில் உள்ள தேர்பாதை டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

    • போட்டித் தேர்வுக்கு படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு கிளை நூலகம் பயனுள்ளதாக இருக்கும்..
    • கிளை நூலகம் முழு நேரம் செயல்படுத்தப்பட்டால் பொதுமக்கள் பயனடைவர்.

    வெள்ளகோவில்:

    முத்தூர் பஸ் நிலையம் அருகில் கிளை நூலகம் செயல்படுகிறது. இதை விரிவாக்கம் செய்து முழு நேர நூலகமாக செயல்படுத்தினால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் ,பொதுமக்கள் ,முதியவர்கள் பயனடைவார்கள்.

    இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மூலமாக மாணவ மாணவிகள் மாலை நேரத்தில் நூலகத்திற்கு சென்று தங்களுக்கு தேவையான பாடநூல்கள், வரலாறு, கவிதை, கதை, நாவல் மற்றும் இலக்கியங்கள் உள்ளிட்ட பொது அறிவு நூல்களைப் படிப்பதற்கு வசதியாக இருக்கும். போட்டித் தேர்வுக்கு படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு பயன்படும். ஆகவே நூலகத்தை விரிவாக்கம் செய்து முழு நேர நூலகமாக மாற்ற வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருப்பூர் டேக்வாண்டோ சங்கம் நடத்திய 8-வது மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் எம்.என்.சி. பள்ளியில் நடைபெற்றது.
    • தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் டேக்வாண்டோ போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் டேக்வாண்டோ சங்கம் நடத்திய 8-வது மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் எம்.என்.சி. பள்ளியில் நடைபெற்றது. இதில் திருப்பூர் அங்கேரிப்பாளையம் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைபள்ளி மாணவர்கள் கவின், சங்கரன், ஹரிணி ஆகியோர் தங்க பதக்கம் பெற்றனர். மாணவர்கள் ஹரீஸ், சந்தோஷ், ஹரிஸ், தமீம் ஹமீது அன்சாரி ஆகியோர் வெள்ளி பதக்கம் பெற்றனர். மாணவர்கள் கார்த்திக்கேயன், அர்பித், பூமேஷ் ஆகியோர் வெண்கல பதக்கம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் டேக்வாண்டோ போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை அறக்கட்டளை தலைவர் பெஸ்ட் ராமசாமி, உப தலைவர்க்ள முருகசாமி, டிக்சன், குப்புசாமி, செயலாளர் கீதாஞ்சலி, கோவிந்தப்பன், பொருளாளர் கந்தசாமி, இணை செயலாளர் துரைசாமி, பள்ளி முதல்வர் சுமதி, துணை முதல்வர் விஜயா ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.   

    • பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.
    • நீதிமன்றம் அவரது ஜாமீனை ரத்து செய்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம், திருப்பூர்,ஊத்துக்குளி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பலரிடம் தொழிலில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி வங்கியில் கடன் பெற்று சொந்தத் தொழில் செய்யலாம் என கூறியும், அவர்களிடமிருந்து சொத்து பத்திரங்களை பெற்று வங்கியில் அவர்கள் பெயரிலேயே கடன் பெற்று சுமார் 100 கோடி அளவில் மோசடி செய்ததாக, பல்லடம் வேலப்ப கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார்( வயது 51) ,அவரது அண்ணன் விஜயகுமார்(53) , மகன் ராகுல் பாலாஜி(27) மற்றும் பிரவீனா(41) உள்ளிட்டவர்கள் மீது பல்லடம், திருப்பூர், ஊத்துக்குளி,உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் மோசடி வழக்கு உள்ளது.

    ஆனால் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீசார் திணறி வந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பல்லடம் காவல் நிலையத்தில்,கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த குமரேசன்(48) என்பவர் புகார் செய்தார்.

    கடந்த 2018 ம் ஆண்டு சிவக்குமார், பிரவீனா, திருப்பூரைச் சேர்ந்த தமிழரசன் ஆகிய3 பேரும், சொத்து பத்திரத்தின் மூலம் கடன் பெற்று டெக்ஸ்டைல் தொழில் செய்யலாம் என குமரேசனிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். இதனை நம்பி சொத்து பத்திரங்களை கொடுத்துள்ளார். அதனை ஈரோடு பகுதியிலுள்ள அரசு வங்கியில் வைத்து ரூபாய் 2 கோடி கடன் பெற்றுள்ளனர்.

    ஆனால் டெக்ஸ்டைல்ஸ் தொழில் எதுவும் செய்யாமல், தாமதம் செய்துள்ளனர். இதனால் பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி குமரேசன் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2022 மார்ச் மாதம் வங்கியில் இருந்து கடன் பெற்ற தொகைக்கு அசலும், வட்டியும் கட்டச் சொல்லி குமரேசனுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வந்துள்ளது. இதையடுத்து மீண்டும் சிவக்குமார், பிரவீனா ஆகியோரை தொடர்பு கொண்ட போது முறையாக பதிலளிக்கவில்லை, எனவே மோசடியில் ஈடுபட்ட அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்லடம் காவல் நிலையத்தில் குமரேசன் புகார் அளித்தார்.

    இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், வழக்கில் சம்பந்தப்பட்ட பல்லடம் வேலப்ப கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார்,பல்லடம் வடுகபாளையத்தைச் சேர்ந்த பிரவீனா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர்கள் ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்து தலைமறைவாக இருந்து வந்தனர். இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரவினா கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். சிவக்குமார் மீது பல்வேறு காவல் நிலையங்களில் மோசடி புகார்கள் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து நீதிமன்றம் அவரது ஜாமீனை ரத்து செய்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தெரிந்து கொண்ட சிவக்குமார் தலைமறைவானார். பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தேனி அருகே அவர் பதுங்கி இருப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அவரது அண்ணன் விஜயகுமார் , அவரது மகன் ராகுல் பாலாஜி முன் ஜாமீன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×