search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் காது கொடுத்து கேட்க முடியாத ஊழல்- எல்.முருகன்
    X

    2 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் காது கொடுத்து கேட்க முடியாத ஊழல்- எல்.முருகன்

    • ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்தியாவை காக்க வந்த தெய்வமாக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார்.
    • காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒரு ரூபாய்க்கு திட்டம் போட்டால் அது மக்களிடத்தில் போய் சேர்வது வெறும் 15 பைசா மட்டுமே.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    2014 ம் ஆண்டிற்கு முன் தினமும் ஊழல் ஊழல் என மிகப்பெரிய ஊழல் ஆட்சி நடந்தது. ஆ.ராசா எம்.பி., செய்த ஊழல் நமக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.

    ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்தியாவை காக்க வந்த தெய்வமாக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். அவர் ஆட்சியில் போலி கியாஸ் இணைப்பை ஒழித்ததில் மட்டும் ரூ. 3 லட்சம் கோடி நம் நாட்டுக்கு மீதமானது. அந்தப் பணம் முழுவதும் உள்கட்டமைப்புக்காக செலவு செய்யப்பட்டு வருகிறது.

    ஏழை எளிய மக்களின் நலம், நல்ல அரசாங்கம், சேவை இந்த மூன்றையும் தாரக மந்திரமாக கொண்டு 9 ஆண்டுகளாக சிறந்த ஆட்சி நடந்து வருகிறது.

    ஏழை எளிய மக்கள் 2014 ம் ஆண்டுக்கு முன் வங்கி என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தனர். மிகப்பெரிய தொழில் அதிபர்கள், மிகப்பெரிய படிப்பு படித்தவர்கள் போகும் இடமாக இருந்த நிலையை மாற்றி அனைவருக்கும் இலவச வங்கிக் கணக்கை தொடங்கி கொடுத்தவர் நரேந்திர மோடி.

    அத்துடன் அரசு திட்டம் மானியங்கள், பயன்கள் நேரடியாக வங்கிக் கணக்கில் சேர்ப்பதற்கான ஏற்பாட்டை செய்துள்ளார். கொரோனா சமயத்தில் ஏப்ரல், மே, ஜூன் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.500 வீதம் வங்கி கணக்கில் செலுத்தினார்.

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒரு ரூபாய்க்கு திட்டம் போட்டால் அது மக்களிடத்தில் போய் சேர்வது வெறும் 15 பைசா மட்டுமே. இன்று பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் ஒரு ரூபாய்க்கு திட்டம் போட்டால் அந்த ஒரு ரூபாய் முழுவதுமாக நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு செல்கிறது.

    2 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் காது கொடுத்து கேட்க முடியாத ஊழல் நடந்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார். அவரை இன்னும் அமைச்சரவையில் இருந்து நீக்காமல் இருப்பது தமிழருக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஊழல் அமைச்சரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் பாஜக., அரசு நிறைவேற்றி வருகிறது.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கூடிய சீக்கிரமே நாம் அயோத்தியில் தரிசனம் செய்ய இருக்கிறோம். பாஜக., அமைச்சர்கள் இந்த 9 ஆண்டுகளில் நியாயமான நேர்மையான அமைச்சர்களாக பணியாற்றி வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    காஷ்மீர், அருணாசலப் பிரதேசம், அந்தமான் உள்ளிட்ட அனைத்து கடைகோடி மக்களுக்கும் அரசாங்க திட்டம் நேரடியாக போய் சேர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார். வருகிற ஒரு வருடத்திற்குள் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் மத்திய அரசால் நிரப்பப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×