search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேரளா போல் தமிழகத்திலும் முழு தேங்காயை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் - விவசாயிகள் எதிா்பார்ப்பு
    X
    கோப்புபடம். 

    கேரளா போல் தமிழகத்திலும் முழு தேங்காயை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் - விவசாயிகள் எதிா்பார்ப்பு

    • திருப்பூா் மாவட்டத்தில் தென்னை சாகுபடி பரப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
    • தமிழகத்திலும் உரிக்காத தேங்காயை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

    உடுமலை:

    கோவை, திருப்பூா் மாவட்ட பகுதிகளில் பாசன வசதி குறைந்த பகுதிகளிலும், பி.ஏ.பி. வாய்க்கால் பாசன வசதியுள்ள பகுதியிலும் தென்னை சாகுபடி அதிக அளவில் உள்ளது. விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை, கூலி உயா்வு போன்றவை முக்கிய பிரச்சினைகளாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. பயிா் சாகுபடி செய்து அறுவடைக்குப் பிறகு, போட்ட முதலீடு நிச்சயம் கிடைக்குமா என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனா்.

    இந்த நிலையில் அதிக உழைப்பின்றி குறைந்த பராமரிப்பில் தென்னை சாகுபடியில் நல்ல வருமானம் கிடைப்பதால் பலரும் தென்னை சாகுபடிக்கு மாறிவிட்டனா். இதனால் திருப்பூா் மாவட்டத்தில் தென்னை சாகுபடி பரப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

    தமிழகத்தில் அரசு கொப்பரை கொள்முதல் மையங்களில் கொப்பரை கிலோ ரூ. 105.90-க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. தென்னை சாகுபடி பரப்பு அதிகம் உள்ள கேரளத்தில் விவசாய தொழிலாளா் பற்றாக்குறை காரணமாகவும், உற்பத்தி செலவு அதிகரிப்பாலும், மட்டையுடன் தேங்காயை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல, தமிழகத்திலும் உரிக்காத தேங்காயை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

    இது குறித்து சின்னகாளிபாளையம் தென்னை விவசாயி ஈஸ்வரன் கூறுகையில், தேங்காய் விலை உயா்ந்திருந்தாலும்கூட நியாயமான விலை இல்லை. தென்னை விவசாயிகள் பயன்பெற வேண்டுமெனில், ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் மானிய விலையில் மக்களுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும். அங்கன்வாடி மையங்களில் சமையலுக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்த வேண்டும். தேங்காயை கொப்பரையாக மாற்றி விற்பனை செய்வதில் சிரமம் உள்ளது. கேரளத்தைப் போல, முழு தேங்காயை அரசே நேரடியாக கொள்முதல் செய்து கொப்பரையாக மாற்றவேண்டும் என்றாா்.

    இதுகுறித்து வேளாண்மை விற்பனை துறை வட்டாரத்தில் கூறுகையில், கேரளத்தில் விவசாயிகளிடம் நேரடியாக முழு தேங்காயை கொள்முதல் செய்து, கொப்பரையாக மாற்றி கூட்டுறவுத் துறை மூலம் நாபெட் நிறுவனத்துக்கு விற்க முடிவு செய்துள்ளனா். கேரள அரசு உத்தரவுப்படி கொப்பரையை கிலோ ரூ. 105.90-க்கு கொள்முதல் செய்யப்படும்.

    தேங்காயில் இருந்து கொப்பரையாக மாற்றுவதற்கு, கூடுதலாக கிலோவுக்கு ரூ. 3.40 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனா். அதேபோல, தமிழகத்திலும் கொப்பரை கொள்முதல் நிலையங்களில் மட்டையுடன் கூடிய தேங்காயை, கொப்பரையாக மாற்றி கொள்முதல் செய்ய அரசுக்கு அனுமதி கோரி கருத்துரு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றனா்.

    Next Story
    ×