என் மலர்tooltip icon

    தூத்துக்குடி

    • அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும் ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    கோவிலில் இன்று, சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்ட 370-வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்,10 மணிக்கு சண்முகர் அபிஷேகம் நடைபெற்றது.

    மாலை 3 மணிக்கு பிரதோஷ அபிஷேகம், 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    நாளை (செவ்வாய் கிழமை) தைப்பூச திருவிழா நடக்கிறது. தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாரா தனை, 4மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 6 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது.

    காலை 10 மணிக்கு சண்முகர் அபிஷேகம், பகல் 1 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் தைப்பூச மண்டபத்துக்கு புறப்படுதல், மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    தைப்பூச விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் கோவிலில் குவிந்து வருகிறார்கள். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட சண்முகர் படங்களை வைத்த வாகனங்கள் முன் செல்ல பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்தே வந்து கோவிலில் குவிந்தனர்.

    காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    • ஆலையில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகிறார்கள்.
    • விபத்தில் எட்டயபுரத்தை சேர்ந்த தொழிலாளர் முனியசாமி என்பவர் காயமடைந்தார்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளம் சிட்கோ தொழிற்பேட்டையில் விஜயகாந்த் என்பவருக்கான தீப்பெட்டி ஆலை உள்ளது. இதனை கோவில்பட்டி லாயல் மில் காலனியை சேர்ந்த செண்பக விநாயக மூர்த்தி, சிராக் ஆகியோர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகின்றனர்.

    இந்த ஆலையில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலை திடீரென அங்கு தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். சிறிது நேரத்தில் தீ மளமளவென அப்பகுதி முழுவதும் பரவியது.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் தீ கட்டுக்கடங்காமல் எரிந்ததால் டிராக்டர் டேங்கர்கள் மூலமாகவும் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் எட்டயபுரத்தை சேர்ந்த தொழிலாளர் முனியசாமி (வயது 55) என்பவர் காயமடைந்தார். அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தில் ஆலையில் இருந்த ரூ.2 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள், மூலப்பொருட்கள், எந்திரங்கள் ஆகியவை முற்றிலும் எரிந்து சேதமானது. விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொட்டல்காட்டை சேர்ந்த வினித் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    • சிகரெட் 1 லட்சத்து 20 ஆயிரம் எண்ணிக்கையில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கடற்கரை வழியாக இலங்கைக்கு மஞ்சள், பீடி இலை, டீசல், புளி உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் படகு மூலம் கடத்தப்படும் சம்பவங்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைப்பற்றும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் தூத்துக்குடி-குளத்தூர் கடற்கரை வழியாக பீடி இலை உள்ளிட்ட சில பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர் இருதயராஜ் குமார், இசக்கி முத்து, முதல் நிலை காவலர் பழனி, பாலமுருகன் ஆகியோர் நேற்று இரவு முதல் தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் தொடர்ந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    இன்று அதிகாலை குளத்தூர் அருகே கல்லூரணி கிராம கடற்கரை பகுதியில் லோடு ஏற்றி வந்த மினி லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட சுமார் 40 கிலோ எடை கொண்ட 30 மூட்டை பீடி இலைகளும் (மொத்தம் 1200 கிலோ), இங்கிலாந்து நாட்டின் சிகரெட் 1 லட்சத்து 20 ஆயிரம் எண்ணிக்கையில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    அவற்றை கைப்பற்றிய போலீசார் லோடு ஏற்றி வந்த வாகனத்தில் இருந்த ஓட்டப்பிடாரம் மேலசுப்பிர மணியபுரம் கீழத்தெருவைச் சேர்ந்த சித்திரைவேல் (வயது 25), ஒசநூத்து சிவன்கோவில் தெருவை சேர்ந்த சிவபெருமாள் (28 ) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    கைப்பற்றபட்ட சிகரெட் மற்றும் பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.1 கோடி ஆகும்.

    மேலும் கடத்தலுக்கு உடந்தையாக அவர்களுடன் வந்து தப்பி ஓடிய தூத்துக்குடி முள்ளக்காடு அருகே உள்ள பொட்டல்காட்டை சேர்ந்த வினித் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் ஏராளமான திருமணங்கள் கோவில் வளாகத்தில் நடந்தது.
    • வழக்கம்போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆன்மீக சுற்றுலா தலமாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் மற்றும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் இருந்து ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரண்டனர். அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் ஏராளமான திருமணங்கள் கோவில் வளாகத்தில் நடந்தது. கோவில் சார்பில் பதிவு செய்யப்பட்ட மணமக்களுக்கு அரசு சார்பில் சீர்வரிசையுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதனால் கூட்டம் அலைமோதியது.

    வழக்கம்போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30-க்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. 

    • சண்முகர் ஆண்டு விழா வருகிற 10-ந்தேதி நடக்கிறது.
    • சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்டு 370 வருடங்கள் ஆகிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திருச்செந்தூர் கோவில் உற்சவரான சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்டு 370 வருடங்கள் ஆகிறது. அதை கொண்டாடும் வகையில் சண்முகர் ஆண்டு விழா வருகிற 10-ந்தேதி நடக்கிறது. அதை முன்னிட்டு அன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்,10 மணிக்கு சண்முகர் அபிஷேகம்,மாலை 3 மணிக்கு பிரதோஷ அபிஷேகம், 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா வந்து கோவில் சேர்தல், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    வருகிற 11-ந் தேதி (செவ்வாய் கிழமை) தைப்பூச திருவிழா நடக்கிறது. தைப்பூசத்தை முன்னிட்டு அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்,காலை 6 மணியில் இருந்து 6.30 மணிக்குள் தீர்த்தவாரி நடக்கிறது.

    10 மணிக்கு சண்முகர் அபிஷேகம், பகல் 1 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் தைப்பூச மண்டபத்துக்கு புறப்படுதல், மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் செல்போன் உபயோகிக்க மற்றும் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ் சினிமா துணை நடிகரான செல்வா என்பவர் திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வது போல உள்ளே சென்று செல்போனில் அத்துமீறி வீடியோ எடுத்துள்ளார்.

    அந்த வீடியோவில் கருவறையில் உள்ள மூலவரையும் வீடியோ எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் ஆன்லைன் மூலம் துணை நடிகர் செல்வா மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருவரும் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்து வருகின்றனர்.
    • துண்டால் கழுத்தை நெரித்து கொலை.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் என்ற சிவா (வயது41). பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரும் முத்துக்கிருஷ்ணா புரத்தை சேர்ந்த மோகன் என்ற மோகன்ராஜ் (43) என்பவரும் நண்பர்கள்.

    இந்நிலையில் நண்பர் கேட்டுக்கொண்டதால் பரமசிவம் மோகன்ராஜுக்கு தள்ளு வண்டியில் பிரியாணி கடை வைத்துக் கொடுத்துள்ளார். இவர்கள் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிப்காட் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று பரமசிவன் வீட்டில் அனை வரும் வெளியூர் சென்றிருந்த தால் மாலை வரை இருவரும் மது குடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மோகன்ராஜ், துண்டால் பரமசிவத்தின் கழுத்தை நெரித்து கீழே தள்ளிவிட்டு சென்றுவிட்டார்.

    இரவில் வீடு திரும்பிய பரமசிவத்தின் மனைவி மற்றும் குழந்தைகள் பரமசிவம் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அவரை தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பரமசிவம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி. சுதிர், சிப்காட் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் அவரது உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி மோகன்ராஜை கைது செய்தனர்.

    • கோவில் கடற்கரையில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கடலின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.
    • கடல் அரிப்பை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

    கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் தொடர்ந்து கோவில் கடற்கரையில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கடலின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.

    கடல் சீற்றத்தின் காரணமாக கோவில் முன்புள்ள கடற்கரையில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு சுமார் 50 அடி நீளத்திற்கு 9அடி ஆழத்திற்கு இந்த கடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கடற்கரையில் கோவில் முன்புள்ள படிக்கட்டு பகுதியில் இருந்து கடலுக்குள் இறங்க முடியாத நிலை இருந்து வருகிறது.

    எனவே கடல் அரிப்பை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் இளம் பகவத் மற்றும் அதிகாரிகள் கடற்கரையில் நேரில் ஆய்வு செய்தனர்.

    இந்நிலையில், திருச்செந்தூரில் கடற்கரையில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பு காரணமாக 2வது நாளாக மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

    தேசிய கடலோர ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ராமநாதன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து வருகிறது.

    • வ.உ.சி. துறைமுகம் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • போதைப்பொருள் கடத்தலுக்கு துறைமுகத்தில் பணிபுரிந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர் மாரிமுத்து உதவியது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள பழைய வ.உ.சி. துறைமுகம் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து பழைய துறைமுகத்திற்கு வரும் நபர்கள் குறித்து தீவிர கண்காணிப்பில் மத்திய வருவாய் புலனாய்வு துறை உதவி இயக்குனர் முரளி தலைமையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    இதில் நேற்று இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் தோணி மூலம் மாலத்தீவு நாட்டிற்கு 12 கிலோ செறிவூட்டப்பட்ட கஞ்சா ஆயில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதனுடைய சர்வதேச மதிப்பு ரூ. 30 கோடி என்றும் தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் பணிபுரிந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர் மாரிமுத்து உதவியதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து கடத்தலில் தொடர்புடைய தூத்துக்குடி பாத்திமா நகரை சேர்ந்த சுதாகர் (வயது36), ஜேசுராஜ் (34), தோணியின் மாலுமியான கிங்சிலி (56), மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் மாரிமுத்து ஆகிய 4 பேரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி பழைய துறைமுக பகுதியில் இருந்து மத்திய தொழிற் பாதுகாப்படை வீரர் துணையுடன் தோணி மூலம் போதைப்பொருள் கடத்த இருந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல் துறைமுகத்தில் இருந்து வெளியேற்றப்படும் பல கோடிக்கணக்கான ரூபாய் பொருட்கள் அதிகாரிகள் உடந்தையுடன் வெளி ஆட்கள் உதவிகள் மூலம் கண்டெய்னர் மற்றும் டாரஸ் லாரிகள் மூலம் வெளியே கொண்டு சென்று தூத்துக்குடியை சுற்றியுள்ள பல்வேறு குடோன்களில் கடத்தி பதுக்கி வைக்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

    இதுகுறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பல நாட்களுக்கு பிறகு யானை வெளியே அழைத்து வரப்பட்டது.
    • 2 மாத காலத்திற்கு பிறகு பக்தர்களுக்கு தெய்வானை யானை ஆசி வழங்கியது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கிவரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெய்வானை என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த யானை தங்குவதற்காக கோவிலின் பின்புறம் குடில் அமைக்கப்பட்டுள்ளது. யானையை குளிப்பாட்டுவதற்காக கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரூ.30 லட்சம் மதிப்பில் குளியல் தொட்டியும் கட்டப்பட்டுள்ளது. இந்த குளியல் தொட்டியில் தினமும் இந்த தெய்வானை யானை குளித்து மகிழும்.

    இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 18-ந்தேதி தெய்வானை யானை தாக்கியதில் பாகன் உதயகுமார், அவரது உறவினர் சிசுபாலன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு தெய்வானை யானை கோவில் நிர்வாகத்தினர், வனத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

    தொடர்ந்து பல நாட்களுக்கு பிறகு யானை வெளியே அழைத்து வரப்பட்டது. மேலும் காலை நடைபயிற்சி அழைத்து வரப்பட்டது. ஆனால் பக்தர்களுக்கு ஆசி வழங்க அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று தெய்வானை யானை கோவிலை சுற்றி நடைபயிற்சி மேற்கொண்டது. அப்போது அங்கு நின்ற பக்தர்கள் தெய்வானையை கண்டு அருகே சென்று பார்த்தனர்.

    அந்த சமயத்தில் 2 மாத காலத்திற்கு பிறகு பக்தர்களுக்கு தெய்வானை யானை ஆசி வழங்கியது. இதை அங்கிருந்த பக்தர்கள் கண்டு ரசித்ததுடன் தங்களுடன் வந்தவர்களையும், உடன் வந்த குழந்தைகளையும் அழைத்து தெய்வானை யானையிடம் ஆசி பெற்றனர்.

    • கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் பாறைகள் மற்றும் பெரிய அளவிலான கற்கள் வெளியே தெரிகின்றன.
    • கடல் அரிப்பை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

    திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வார்கள். மேலும் பவுர்ணமி நாட்களில் கோவில் கடற்கரையில் இரவில் குடும்பத்தோடு தங்கி வழிபாடு செய்வார்கள். இந்த நிலையில் தொடர்ந்து கோவில் கடற்கரையில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கடலின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.

    கடல் சீற்றத்தின் காரணமாக கோவில் முன்புள்ள கடற்கரையில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு சுமார் 50 அடி நீளத்திற்கு 9அடி ஆழத்திற்கு இந்த கடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கடற்கரையில் கோவில் முன்புள்ள படிக்கட்டு பகுதியில் இருந்து கடலுக்குள் இறங்க முடியாத நிலை இருந்து வருகிறது.

    இதனால் படிக்கட்டுகள் பகுதியில் தகரம் மற்றும் தடுப்புவேலிகள் கொண்டு பக்தர்கள் இறங்காதவாறு அடைக்கப்பட்டுள்ளது. கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் பாறைகள் மற்றும் பெரிய அளவிலான கற்கள் வெளியே தெரிகின்றன. இதனால் கடலில் நீராடும் பக்தர்களுக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே கடல் அரிப்பை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

    இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் இளம் பகவத் மற்றும் அதிகாரிகள் கடற்கரையில் நேரில் ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி. குழுவினர் கடற்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிப்பார்கள் என்றும், அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கனிமொழி தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடற்கரையில் சென்னை ஐ.ஐ.டி. குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வானது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் இருந்து அமலிநகர் வரை கடல் அரிப்பு குறித்து ஆய்வு செய்தனர்.

    டி.ஜி.பி.எஸ். என்ற நவீன கருவி மூலம் திருச்செந்தூர் கடற்கரையில் கடலின் ஆழம் எவ்வளவு என்பது பற்றி ஆய்வு செய்தனர். மேலும் கடல் நீரால் ஏற்பட்டுள்ள மணல் அரிப்பு எவ்வளவு தூரம் என்பதையும், தரை மட்டத்தை எவ்வளவு தொலைவுக்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கடல் மணல்சரிவு எவ்வளவு என்பது பற்றியும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த ஆய்வானது சென்னை இந்திய தொழிற் நுட்ப வல்லுநர்களால் ஆய்வு முழுமையாக மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. அதைத் தொடர்ந்து இன்று வல்லுநர்கள் திருச்செந்தூர் கடற்கரையில் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    • இன்று முகூர்த்த நாள் என்பதால் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 14-ந் தேதி தைப்பொங்கல் தொடர் விடுமுறையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி பல மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தும், காவடி, பால்குடம் எடுத்து வந்தும் சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று முகூர்த்த நாள் என்பதால் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றது. சுப முகூர்த்தம் மற்றும் விடுமுறை நாள் என்பதால் கோவில் வளாகம் மற்றும் கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    வழக்கம் போல் அதிகாலை 5மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. இன்று நடைபெற்ற தை உத்திர வருஷாபிசேகத்தை முன்னிட்டு காலை 7மணியில் இருந்து காலை 9 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை. இதனால் ஏராளமான பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

    ×