என் மலர்
திருநெல்வேலி
- சக மாணவர்கள் இதனை பார்த்து கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே உள்ள தெற்கு செவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் எட்டு ராஜன். இவரது மகன் சீனு (வயது 19).
இவர் நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள மேல திடியூரில் செயல்பட்டு வரும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு ஏரோநாட்டிக்கல் படித்து வந்தார். இதற்காக அங்கு உள்ள கல்லூரி விடுதியில் தங்கி உள்ளார்.
இந்நிலையில் இன்று காலை அவரது அறையில் விஷம் குடித்து சீனு மயங்கி கிடந்தார். சக மாணவர்கள் இதனை பார்த்து கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக கல்லூரி நிர்வாகம் சார்பில் ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று மாணவனை மீட்டு பாளை முருகன் குறிச்சி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சீனு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து முன்னீர் பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தங்கத்தாய் காதலித்து வந்ததாகவும், இதற்கு தங்கத்தாய் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
- இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முத்துவை கைது செய்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆசீர் பாண்டியன். கூலி தொழிலாளி. இவருக்கு தங்கத்தாய்(வயது 20) என்ற மகளும், முத்து(18) என்ற மகனும் உள்ளனர். முத்து படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கூலி வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் தங்கத்தாய்க்கு திருமணம் செய்வதற்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்த நிலையில், நேற்று இரவு அவரது வீட்டில் இது தொடர்பாக அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படவே, ஆத்திரம் அடைந்த முத்து அரிவாளால் சகோதரி என்று கூட பாராமல் தங்கத்தாயை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார்.
இதுகுறித்து அறிந்த தாழையூத்து போலீசார் அங்கு விரைந்து சென்று தங்கத்தாய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முத்துவை கைது செய்தார்.
விசாரணையில் காதல் விவகாரத்தில் தங்கத்தாய் கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். பிளஸ்-2 வரை படித்திருந்த தங்கத்தாய், கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அங்கு அவருடன் வேலை பார்க்கும் ஒரு வாலிபரை தங்கத்தாய் காதலித்து வந்ததாகவும், இதற்கு தங்கத்தாய் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தங்கத்தாய்க்கு திருமணம் செய்ய பல்வேறு இடங்களில் மாப்பிள்ளை பார்த்தும், அதனை தங்கத்தாய் தவிர்த்து வந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் ஆத்திரத்தில் இருந்தனர். நேற்றும் மாப்பிள்ளை பார்ப்பது சம்பந்தமாக காலை முதல் வீட்டில் இருந்தவர்கள் சண்டையிட்டு வந்த சூழலில், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த முத்து வீட்டின் முன்பகுதியில் வைத்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
- பா.ஜ.க. அல்லாத மாநிலங்களில் தொழிலதிபர்களை குறி வைத்து அமலாக்கத்துறையினர் மிரட்டுகின்றனர்.
- ஒரு மசோதாவை நிறைவேற்றினால் 6 வாரங்களுக்குள் அனுமதி தர வேண்டும் என அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது.
நெல்லை:
சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் இடைத்தரகர்கள் மூலம் என்னை மிரட்டின.
* ஊரை விட்டு எல்லாம் போக சொன்னார்கள், செல்போன் நம்பரை மாற்ற சொன்னார்கள்.
* 3 மாதமாக இடைத்தரகர்கள் பலர் என்னிடம் பேசினார்கள்.
* பா.ஜ.க. அல்லாத மாநிலங்களில் தொழிலதிபர்களை குறி வைத்து அமலாக்கத்துறையினர் மிரட்டுகின்றனர்.
* என்னைப்போன்று எல்லோருக்கும் மத்திய அரசின் புலனாய்வு நிறுவனங்கள் இடைத்தரகர்கள் மூலமாக மிரட்டல் விடுக்கின்றன.
* பண பேரம் பேசி படியவில்லை என்றால் நோட்டீஸ் அனுப்பி அமலாக்கத்துறை எச்சரிக்கிறது.
* நான் சரியாக இருக்கிறேன் என்ன வந்தாலும் மேலே இருப்பவர் பார்த்துக்கொள்வார் என்றேன்.
* ஒரு மசோதாவை நிறைவேற்றினால் 6 வாரங்களுக்குள் அனுமதி தர வேண்டும் என அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது.
* ஆனால் எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் மசோதாக்களை கவர்னர் கிடப்பில் போடுகிறார்.
* கவர்னர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
* அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி மதசார்புடைய நாடு இந்தியா என கவர்னர் பேசி வருகிறார் என்று அவர் கூறினார்.
- கடந்த ஆகஸ்ட் மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் இந்த ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார்.
- டாக்டர்களோ, நர்சுகளோ இரவு நேர பணியில் இருப்பதில்லை.
நெல்லை:
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியாற்றும் வகையில் பல்வேறு வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் ராதாபுரம் அருகே உள்ள பாப்பாங்குளத்தை சேர்ந்த ராஜ் என்பவரது மனைவி சுபத்ரா தேவி (வயது24) என்பவர் நேற்று முன்தினம் இரவில் பிரசவ வலி ஏற்பட்டு பிரசவத்திற்காக திசையன்விளை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார்.
அப்போது அங்கு டாக்டர்கள், நர்சுகள் இரவு பணியில் இல்லை. இதனால் குடும்பத்தினர் செய்வதறியாமல் திகைத்த நிலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பிரசவ வலியால் துடித்த சுபத்ரா தேவிக்கு தானாகவே அழகான பெண் குழந்தை பிறந்தது.
அதன் பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சுபத்ரா தேவி மற்றும் குழந்தை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
சுமார் 1 மணி நேரமாக பிரசவ வலியால் கர்ப்பிணி பெண் துடித்த நிலையில் டாக்டர்கள் இல்லாததால் உறவினர்கள் மிகுந்த ஆத்திரம் அடைந்தனர்.
இந்நிலையில் இன்று காலை அப்பகுதி மக்கள் திசையன்விளை அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அவர்கள் நுழைவு வாயில் கதவை இழுத்து பூட்டினர். டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட யாரையும் ஆஸ்பத்திரிக்குள் அவர்கள் அனுமதிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த போராட்டம் நீடித்த நிலையில் தகவல் அறிந்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜூ, சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரிய ராஜ்குமார், உதய லட்சுமி ஆகியோர் வந்து பொது மக்களை சமாதானம் செய்தனர்.
ஆனாலும் அவர்கள் சமாதானம் ஆகவில்லை. தொடர்ந்து வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன் தலைமையில் குழுவினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்களிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் இந்த ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இல்லாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். அதன் பின்னர் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும் என்று பெயர் பலகை மட்டும் பெரிதாக வைத்துள்ளீர்கள். ஆனால் டாக்டர்களோ, நர்சுகளோ இரவு நேர பணியில் இருப்பதில்லை.
மேலும் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற வந்தாலும் கூட, அருகில் உள்ள சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கோ அல்லது நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கோ தான் சிகிச்சை பெறுவதற்கு அனுப்பி வைக்கிறீர்கள். எனவே 24 மணி நேரமும் டாக்டர்கள், நர்சுகள் பணியில் இருக்க வேண்டும் என்று அவர்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.
இதையடுத்து ஜனவரி மாதத்திற்குள் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருப்பார்கள். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன் உறுதி அளித்தார்.
இதையடுத்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- இரவில் பெய்த கனமழையால் ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
- அணைகளை பொறுத்தவரை அதிகபட்சமாக குண்டாறில் 48 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 28 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மாலை முதல் இரவு வரையிலும் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் பலத்த இடி-மின்னலுடன் கனமழை கொட்டியது.
நெல்லை மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான களக்காடு, அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக கன்னடியன் கால்வாய் பகுதிகளில் கனமழை கொட்டியது. அந்த பகுதியில் அதிகபட்சமாக 8.4 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. அம்பை, வி.கே.புரம், ஊர்காடு, கல்லிடைக்குறிச்சி, சிவந்திபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.
அம்பையில் அதிகபட்சமாக 52 மில்லிமீட்டர் மழை கொட்டியது. ராதாபுரம், சேரன்மகாதேவி பகுதியில் விட்டு விட்டு மழை பெய்தது. முக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்றிரவில் கனமழை பெய்தது. ஒரு சில இடங்களில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது.
அணைகளை பொறுத்தவரை பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மணிமுத்தாறு அணை பகுதியில் 49.4 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. சேர்வலாறில் 27 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 16 மில்லிமீட்டரும் மழை பெய்தது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 991 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. நேற்றிரவு பெய்த மழையால் நீர்வரத்து 1433 கனஅடியாக அதிகரித்தது.
இதனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் 1 அடி அதிகரித்து 110.80 அடியாக உயர்ந்துள்ளது. 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 121 அடியாக இருந்த நிலையில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரித்து இன்று ஒரே நாளில் 3 அடி அதிகரித்து 124.87 அடியானது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 3/4 அடி உயர்ந்து 77.80 அடியாக உயர்ந்துள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 593 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு அணை பகுதிகளில் மழை இல்லை.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. அதேபோல் செங்கோட்டை, தென்காசி, ஆய்குடி ஆகிய இடங்களிலும் இரவில் பலத்த மழை பதிவாகியது. இரவில் பெய்த கனமழையால் ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இன்று அதிகாலை வரையிலும் லேசான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. சங்கரன்கோவில், சிவகிரி ஆகிய இடங்களில் தலா 1 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
அணைகளை பொறுத்தவரை அதிகபட்சமாக குண்டாறில் 48 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 28 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. அடவிநயினார் அணை பகுதியில் 23 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடனா மற்றும் ராமநதியில் தலா 12 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கடனா நதி நீர்மட்டம் 77.30 அடியாக உள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் நேற்று 78 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 79 அடியாக உயர்ந்துள்ளது. அந்த அணை நிரம்ப இன்னும் 5 அடி நீரே தேவை.
- பிரசவ வலி அதிகமாகி அலறித்துடித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவம் பார்க்காமலேயே பெண் குழந்தை பிறந்தது.
- இரவு நேரங்களில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணியில் இல்லாதது வேதனையாக உள்ளது.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள பாப்பான்குளத்தை சேர்ந்தவர் ராஜ் (வயது 32).
இவரது மனைவி சுபத்ரா தேவி (24). இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் 2-வது பிரசவத்திற்கு சுபத்ரா தேவி திசையன்விளை அருகே உள்ள நாலந்துலாவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
இரவு பிரசவத்திற்கான வலி வந்ததால் திசையன்விளையில் உள்ள 33 படுக்கைகள் கொண்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தனது கணவர் ராஜ் மற்றும் சித்தியுடன் பிரசவம் பார்க்க சென்றுள்ளார்.
ஆனால் அங்கு இரவு நேரம் பணியில் உள்ள டாக்டர்களோ, நர்சுகளோ இல்லாததால் 1 மணி நேரமாக மருந்து, மாத்திரை, ஊசி என எந்த மருத்துவம் கொடுக்காமல் பிரசவ வலியில் சுபத்ரா ஜோதி அலறி துடித்துள்ளார். அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு பணியில் ஒரு பயிற்சி செவிலியரும், துப்புரவு பணியாளர் ஒருவரும் இருந்துள்ளனர்.
அவர்களிடம் 108 ஆம்புலன்சை வர சொல்லுங்கள், நாங்கள் நெல்லை அரசு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுகிறோம் என்று கூறியும் ஒன்றரை மணி நேரமாக எந்த ஆம்புலன்சும் வரவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரசவ வலி அதிகமாகி அலறித்துடித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவம் பார்க்காமலேயே பெண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் வெகுநேரம் கழித்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கர்ப்பிணி பெண்ணை தையல் போடுவதற்கான பிரசவ வார்டுக்கு ஸ்ட்ரெச்சர் மூலம் அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 33 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என்ற பெயர்தான் உள்ளதே தவிர இன்னும் சரியான மருத்துவ பணியாளர்கள் இல்லாமல் தான் இயங்கி வருகிறது. இதனால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் விபத்து போன்றவைகளில் சிக்கிய நோயாளிகள் கடும் அவதிக்கும், வேதனைக்கும் உள்ளாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 27-ந் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு செய்து பணியில் இல்லாத ஊழியர்களுக்கு மெமோ கொடுத்து சென்றார்.
ஆனால் இங்கு 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும் என விளம்பர பலகையில் வைக்கப்பட்ட நிலையில் இரவு நேரங்களில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணியில் இல்லாதது வேதனையாக உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து முழுநேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- அனைத்து நாட்களிலும் முன்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- பயண கட்டண தொகை நபர் ஒன்றுக்கு ரூ.600 ஆகும்.
நெல்லை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் நெல்லை மண்டல பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நவ கைலாய கோவில்களுக்கு சிறப்பு பஸ் சேவை இயக்கப்பட உள்ளது. அதன்படி வருகிற 17-ந் தேதி, 24-ந் தேதி, 31-ந் தேதி, ஜனவரி 7-ந் தேதி, 14-ந் தேதி ஆகிய 5 நாட்களில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நவ கைலாய கோவில்களுக்கு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு சேவை பஸ்கள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நெல்லை மண்டலம் மூலம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு நவ கைலாய பஸ்கள் மேற்கண்ட 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 6.30 மணிக்கு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் (புன்னக்காயல்) ஆகிய இடங்களில் உள்ள நவ கைலாய கோவில்களுக்கு சென்று இரவுக்குள் நெல்லை வந்து சேரும்.
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இச்சேவை சிறப்பு பஸ்களுக்கு வருகிற 4-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் ஜனவரி 13-ந் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து நாட்களிலும் முன்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பயண கட்டண தொகை நபர் ஒன்றுக்கு ரூ.600 ஆகும். இந்த சிறப்பு நவகைலாய பஸ் சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காட்டாற்று வெள்ளம் கரை புரண்டதால் கடந்த 17-ந் தேதி முதல் தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
- இன்று காலை நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
களக்காடு:
களக்காடு பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதுபோல களக்காடு தலையணையிலும் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டதால் கடந்த 17-ந் தேதி முதல் தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் தடை நீடிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே நீர்வரத்து குறைந்ததால் 8 நாட்களுக்கு பின் கடந்த 25-ந் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையினால் தலையணையில் நேற்று காலை மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது.
இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர்.
அதே நேரத்தில் தலையணையை சுற்றிப்பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இன்று காலை நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
- களக்காடு, திருக்குறுங்குடி, நாங்குநேரி, அம்பை, மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
- மாவட்டம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக வடகிழக்கு பருவமழை சற்று குறைந்திருந்த நிலையில் நேற்று மாலை முதல் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள பாபநாசம் மற்றும் சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரையிலும் பரவலாக மழை பெய்தது.
குறிப்பாக மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 23.4 மில்லிமீட்டர் மழை கொட்டியது. இதனால் மணிமுத்தாறு அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது. சுமார் 1 மாதமாக அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது.
118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 76.40 அடியாக உயர்ந்துள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 488 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் 109.10 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 121 அடியாகவும் இருக்கிறது. இந்த அணைகள் நீர்மட்டங்கள் தலா 1/2 அடி உயர்ந்துள்ளது.
இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 920 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து வினாடிக்கு 504 கனஅடி நீர் பாசனத்திற்காக திறந்து விடப்படுகிறது. பாபநாசத்தில் 12 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 11 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
மாவட்டத்தை பொறுத்தவரை களக்காடு, திருக்குறுங்குடி, நாங்குநேரி, அம்பை, மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இன்றும் காலையில் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் சுமார் 700 குளங்கள் நிரம்பி உள்ளதால், விவசாய பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதியில் தொடர்ந்து மழை பெய்து நீர் வரத்து அதிகரித்ததினால் இன்று தலையணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தலையணை சூழல் சுற்றுலா பகுதிகளை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என வனத்துறை தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, பாவூர்சத்திரம், திரவியம் நகர் உள்ளிட்ட இடங்களில் இரவில் பரவலாக மழை பெய்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக ராமநதியில் 6 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 0.5 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 78 அடியாகவும், கடனா அணை நீர்மட்டம் 77.20 அடியாகவும் உள்ளது. கருப்பாநதி, குண்டாறு அணைகள் நிரம்பி வழிகிறது. மாவட்டம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
குற்றாலத்தை பொறுத்தவரை மலைப்பகுதியில் மழை பெய்தது. இதனால் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இன்றும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு குளிர்ந்த காற்றும் வீசுகிறது. மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் ஆனந்தமாக குளித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 37 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் நேற்று இரவில் விட்டு விட்டு மழை பெய்தது.
- நீர்வழிப் பாதையை தடுக்கும் விதமாக கட்டிடம் கட்டப்படுவதும் தெரிய வந்தது.
- பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளிக்க சென்றனர்.
நெல்லை:
நெல்லை-தென்காசி நெடுஞ்சாலையில் பழைய பேட்டையை அடுத்த கண்டியப்பேரி பகுதியில் ஊய்காட்டு சுடலை மாடசாமி கோவில் இருக்கிறது.
கோடகன் கால்வாய் கரையில் அமைந்துள்ள இந்த கோவிலின் பின்புறமாக தற்போது அந்த பகுதி மக்கள் கோவிலுக்கு சுற்றுச்சுவர் எழுப்ப முடிவு செய்து அதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக கான்கிரீட் போடப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கால்வாயை ஆக்கிரமித்து கட்டுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது. இந்த இடத்தில் பொதுப்பணி துறையினரும், வருவாய்த்துறையினரும் இணைந்து அப்பகுதியில் சென்று ஆய்வு நடத்திய நிலையில் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த இடத்தை அளவீடு செய்ய முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்த நிலையில் அளவீடு செய்ததில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதும், நீர்வழிப் பாதையை தடுக்கும் விதமாக கட்டிடம் கட்டப்படுவதும் தெரிய வந்தது.
இதையடுத்து இன்று டவுன் தாசில்தார் விஜய லட்சுமி முன்னிலையில் கட்டப்பட்டிருந்த கான்கிரீட்டுகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் இருந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்ததால் சுமார் 150-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளிக்க சென்றனர். அங்கு அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
- கடலோர பாதுகாப்பு படையினர் 50 நாட்டு படகுகளில் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
- மீன் வலையில் சிக்கியவாறு சிலுவை தஸ் நேவிஸ் பிணமாக கிடந்தார்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சிலுவை தஸ் நேவிஸ் (வயது 55). மீனவர். இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை சிலுவை தஸ் நேவிஸ் உள்பட 7 பேர் அதே பகுதியை சேர்ந்த வெலிங்டன் (45) என்பவரது நாட்டுப்படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கரையில் இருந்து சுமார் 5 நாட்டிக்கல் தொலைவில் படகில் இருந்தபடி மீனவர்கள் கடலில் மீனுக்கு வீசிய வலையை இழுத்தபோது எதிர்பாராத விதமாக சிலுவை தஸ் நேவிஸ் தவறி கடலுக்குள் விழுந்தார்.
அவரை உடனடியாக சக மீனவர்கள் மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் கடலில் மூழ்கி விட்டார். அவரை சக மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர், மீன்வளத் துறையினர் கடலுக்கு சென்று தீவிரமாக தேடிய நிலையில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் இன்று 2-வது நாளாக மீனவர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் 50 நாட்டு படகுகளில் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவர் தவறிவிழுந்த அதே இடத்தில் ஒரு மீன் வலையில் சிக்கியவாறு சிலுவை தஸ் நேவிஸ் பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கிடையே, நெல்லை மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி, பெருமணல், கூத்தங்குழி, உவரி, இடிந்தகரை உள்ளிட்ட 9 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 8 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
- மாடுகளை பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- பொதுமக்கள் பூங்கா முன்பு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் கடந்த சில நாட்களாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது என பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.
இதனை தடுக்கும் விதமாக மாநகர பகுதியில் சுற்றித்தெரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் உத்தரவிட்டார். அதன் பேரில் 4 மண்டலங்களிலும் மாடுகளை பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தச்சநல்லூர் மண்டலத்துக்கு உட்பட்ட சிந்து பூந்துறை செல்வி அம்மன் கோவில் தெருவில் சுற்றி திரிந்த மாடுகளை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையிலான குழுவினர் பிடித்து மேகலிங்கபுரம் ரேஷன் கடை எதிரே அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் அடைத்தனர்.
இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் பூங்கா முன்பு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்காமல் வீடுகளில் நின்ற மாடுகளை பிடித்து வந்து அடைத்து உள்ளதாகவும், உடனடியாக அனைத்து மாடுகளையும் விடுவிக்கும்படியும் கூறினர்.
அப்போது சுகாதார ஆய்வாளர் முருகன் சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை மட்டுமே பிடித்துள்ளோம். உரிய அபராதமாக ஆயிரம் ரூபாய் செலுத்திவிட்டு மாடுகளை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறும், இனிமேல் சாலைகளில் மாடுகளை சுற்றி திரிய விடமாட்டோம் என எழுதி தரும்படியும் அறிவுறுத்தினார்.
எனினும் அந்த பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.






