என் மலர்
திருநெல்வேலி
- திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
- கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது
திருநெல்வேலி:
தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கனமழையால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மிச்சாங் புயலால் சென்னை நகரில் கடும் பாதிப்பு ஏற்பட்டதை கருத்தில் கொண்டு, திருநெல்வேலி ஆட்சி நிர்வாகம் விரைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#WATCH | Commuters face trouble as few roads remain waterlogged in parts of Tirunelveli, after heavy rainfall in the region#TamilNadu pic.twitter.com/CZFvvuwUlN
— ANI (@ANI) December 9, 2023
- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஏற்கனவே பள்ளிகளுக்கு விடுமுறை.
- தனியார் பள்ளிகள் எக்காரணம் கொண்டும் திறக்கக் கூடாது என வலியுறுத்தல்.
திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்திலும் மழைக் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் எக்காரணம் கொண்டும் திறக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஏற்கனவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
விடுமுறை அளிக்கப்பட்ட போதிலும், சிறப்பு வகுப்பு என்ற பெயரில் தனியார் பள்ளிகள் இயங்கி வருவதாக வந்த புகார் அடிப்படையில் தனியார் பள்ளிகள் எக்காரணம் கொண்டும் திறக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல், மதுரை, திருச்சி, கள்ளக்குறிச்சி, தேனி, தென்காசி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- உள்ளூர் மற்றும் வெளியூர் பணியாளர்கள் தீவிரமாக பணி செய்து வருகின்றனர்.
- ரூ.4 ஆயிரம் கோடி பணத்தினை செலவு செய்ததால் தான் மழையால் சேர்ந்த நீர் உடனடியாக வடிந்துள்ளது.
நெல்லை:
நெல்லையில் சபாநாயகர் அப்பாவு இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை சகஜ நிலைக்கு திரும்ப இன்னும் ஓரிரு வாரங்கள் தேவைப்படும். உள்ளூர் மற்றும் வெளியூர் பணியாளர்கள் தீவிரமாக பணி செய்து வருகின்றனர். முதலமைச்சர் ஒரு மாத சம்பளத்தை கொடுப்பதாக சொன்னால் அனைத்து எம்.எல்.ஏக்களும் கொடுத்து விடுவார்கள்.
நானும் எனது ஒரு மாத சம்பளத்தை கொடுக்கிறேன். பொத்தாம் பொதுவாக ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்ததாக சொல்லக்கூடாது. மக்களையும் வெள்ள நிவாரண பணிகளுக்கு உதவிக்கு அழைத்ததில் தவறில்லை.
அரசை வெள்ள தடுப்பு பணிகளில் செய்த செயலை விமர்சனம் செய்தால் அங்கு பணி செய்யும் அதிகாரிகளின் பணிகளை கொச்சைப்படுத்துவதைபோல் உள்ளது. ரூ.4 ஆயிரம் கோடி பணத்தினை செலவு செய்ததால் தான் மழையால் சேர்ந்த நீர் உடனடியாக வடிந்துள்ளதை பார்க்க முடிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்
- காரின் உரிமையாளர் தச்சநல்லூர் அருகே உள்ள மேலக்கரை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் என்பது தெரிய வந்துள்ளது.
- மேலக்கரை, மேலப்பாளையம், பாளை ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 வாலிபர்கள் மீது போலீசார் சந்தேகம் அடைந்து அவர்களை தேடி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள கீழ முன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் விக்கிரமாதித்தன். இவரது மகன் வீரபுத்திரன்(வயது 28). லோடு ஆட்டோ டிரைவர்.
இவர் நேற்று இரவு அங்குள்ள பயணிகள் நிழற்குடையில் நண்பர்களுடன் பேசிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அங்கு காரில் வந்த 4 பேர் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் வீரபுத்திரனை சரமாரியாக வெட்டிவிட்டு காரில் தப்பிச்சென்றது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் செயல்படும் தனிப்படை உள்பட மொத்தம் 5 தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீரபுத்திரனை கொன்ற கும்பல் காரில் வந்து சென்றுள்ளதால் நெல்லை-அம்பை நெடுஞ்சாலையில் முன்னீர்பள்ளம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் அந்த கும்பல் வெள்ளை நிற காரில் வந்துள்ளது தெரிய வந்துள்ளது. அந்த காரின் பதிவெண் கேமராவில் பதிவாகி உள்ளதால் அந்த எண்ணை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
அந்த காரின் உரிமையாளர் தச்சநல்லூர் அருகே உள்ள மேலக்கரை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் என்பது தெரிய வந்துள்ளது. அந்த வாலிபரை வீட்டுக்கு தேடி சென்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார்.
இதனால் அவர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
அதே நேரத்தில் மேலக்கரை, மேலப்பாளையம், பாளை ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 வாலிபர்கள் மீது போலீசார் சந்தேகம் அடைந்து அவர்களை தேடி வருகின்றனர்.
அவர்களை பிடித்து விசாரணை நடத்திய பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- மர்ம காய்ச்சலுக்கு குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சுகாதாரத்துறையினர் தீவிர காய்ச்சல் முகாம்கள் நடத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி கிராமத்தை சேர்ந்தவர் பெர்னட். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 4 வயதில் அக்சரன் என்ற மகன் உள்ளார். அக்சரன் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி பள்ளிக்கு சென்று வந்தான்.
இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அக்சரனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனே அவனை பெர்னட் கூடங்குளத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், தொடர்ந்து அக்சரனுக்கு காய்ச்சல் குணமாகாமல் இருந்துள்ளது.
நேற்று காலை சிறுவன் அக்சரனின் உடல்நிலை மிகவும் மோசம் அடையவே கூடங்குளம் மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக அவனை நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர் அக்சரனை ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அக்சரன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து கூடங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம காய்ச்சலுக்கு குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு ஏற்கனவே 10 மாத குழந்தை இறந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் நாங்குநேரி பரப்பாடி பகுதியில் 6 வயது சிறுமி இறந்துவிட்டார். இந்நிலையில் நேற்று சிறுவன் அக்சரன் இறந்துள்ளான். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். எனவே மாவட்டம் முழுவதும் சுகாதராத்துறையினர் தீவிர காய்ச்சல் முகாம்கள் நடத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சுருளிராஜனுக்கு 2 மனைவிகள் உள்ளனர்.
- குடும்ப பிரச்சனையில் கொலை நடந்ததா? என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை மணப்படை வீடு கிராமத்தை சேர்ந்தவர் சுருளிராஜன்(வயது 45). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் நேற்று மாலை தனது காரில் கே.டி.சி. நகரில் இருந்து பாளை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது பாளை-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் வருமானவரி துறை அலுவலகம் கடந்து வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கும்பல் கார் மீது தங்களது மோட்டார் சைக்கிளால் இடித்துள்ளனர். உடனே சுருளிராஜன் இடித்தது யார் என பார்க்க காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி பார்த்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது.
இந்த சம்பவம் குறித்து பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ஹரிகரன் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்.
மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்வரி உத்தரவின்பேரில் துணை கமிஷனர் ஆதர்ஷ் பசேரா மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சுருளிராஜனுக்கு 2 மனைவிகள் உள்ளனர். இவர்களுக்குள் குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த பிரச்சனையில் கொலை நடந்ததா? என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் சமீபத்தில் சுருளிராஜனின் மகளை திருமணம் செய்து கொடுக்குமாறு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு குடும்பத்தினர் கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்துவிட்டதால் இந்த கொலை நடந்திருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்களில் ஒரு சிலர் ஊரின் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் குடிநீரை பரிசோதனை செய்தனர்.
- கடந்த இரு நாட்களாக அப்பகுதியில் உள்ள யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் ஆனைகுளம் ஊராட்சி துலுக்கர் பட்டியில் இன்று காலை குடிநீரில் அதிகமான மருந்து வாசனை வீசியதாக பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்தது.
இதையடுத்து பொதுமக்களில் ஒரு சிலர் ஊரின் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் குடிநீரை பரிசோதனை செய்தனர். அப்போது அதிகமான மருந்து வாசனை வீசி உள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன் தலைமையிலான சுகாதாரத்துறையினர் விரைந்து சென்ற குடிநீரை பரிசோதனை செய்தனர்.
மேலும் கடந்த இரு நாட்களாக அப்பகுதியில் உள்ள யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது.
எனினும் அதில் பூச்சி மருந்தை விஷமிகள் யாரேனும் கலந்தனரா? அல்லது கிருமி நாசினி பவுடர் அதிகம் கலந்ததால் வாசனை உள்ளதா? என்ற நோக்கத்தில் சுகாதாரத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
- தற்போது 80 சதவீதம் கவுன்சிலர்கள் அதாவது 38 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
- ஒரு மாதத்திற்குள் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.
நெல்லை:
நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் தச்சை கணேசராஜா இன்று மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருமாறு மனு அளித்துள்ளனர்.
தற்போது 80 சதவீதம் கவுன்சிலர்கள் அதாவது 38 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இவ்வாறு கொண்டு வரும்போது மாநகராட்சி கமிஷனர் அடுத்த 15 நாட்களுக்குள் அனைத்து கவுன்சிலர்களுக்கும் நோட்டீஸ் வழங்க வேண்டும். ஒரு மாதத்திற்குள் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.
தற்போது உள்ள கமிஷனர் மிகவும் நேர்மையான நபராக இருப்பதால் கண்டிப்பாக இதை செய்வார் என்று நம்புகிறோம்.
தற்போது கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு மக்கள் நலனை கருத்தில் கொண்டு அ.தி.மு.க கவுன்சிலர்கள் நிச்சயமாக ஆதரவு அளிப்பார்கள்.
மாநகராட்சி கமிஷனர் உடனடியாக இந்த மனு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியை முடக்கி வைத்து உடனடி தீர்வு காண வேண்டும்.
சுமார் 6 லட்சம் மக்கள் வசிக்கும் இந்த மாநகராட்சியில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு தற்போதுள்ள தி.மு.க அரசின் மாநகராட்சியை கலைக்க வேண்டும். தற்போது அளிக்கப்பட்டுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான மனுவில் அ.தி.மு.க. கவுன்சிலர்களின் கையெழுத்தும் இருக்கலாம்.
சந்திப்பு பஸ் நிலையம் எப்போது திறக்கும் என்று தெரியவில்லை. பேட்டை பகுதியில் அமைக்கப்பட்ட சரக்கு முனையத்தை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை அது பயன்பாட்டுக்கு வரவில்லை. ரூ.2.85 கோடி மதிப்பில் நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் சீரமைக்கப்பட்டது என்று கூறினர். ஆனால் வெறுமனே பெயிண்டிங் மட்டும் அடித்து முடித்து விட்டனர். தற்போது அதில் தூண் பகுதி இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்து விட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின்போது பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி, பகுதி செயலாளர் காந்தி வெங்கடாசலம், பகுதி மாணவர் அணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன்,தச்சை மாதவன், மாவட்ட இளைஞர் பாசறை முத்துப்பாண்டி, சம்சு சுல்தான் உள்பட பலர் இருந்தனர்.
- தி.மு.க. கவுன்சிலர்கள் சென்னையில் நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து புகார் தெரிவித்தனர்.
- கடந்த மாதம் 21-ந்தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வந்த நிலையில் மேயர் வரவில்லை என கூறி தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வார்டுகளில் 51 வார்டுகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் உள்ளனர்.
மேயர் சரவணனுக்கும், பெரும்பான்மையான தி.மு.க. கவுன்சிலர்களுக்கும் இடையே ஆரம்பம் முதலே கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து தி.மு.க. கவுன்சிலர்கள் சென்னையில் நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து புகார் தெரிவித்தனர். அவர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தார்.
மேலும் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசுவும் இரு தரப்பினரிடமும் பேசி மாநகராட்சி கூட்டத்தை சுமூகமாக நடத்த வலியுறுத்தினார்.
கடந்த மாதம் 21-ந்தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வந்த நிலையில் மேயர் வரவில்லை என கூறி தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தி.மு.க.வை சேர்ந்த 38 கவுன்சிலர்கள் நேற்று மாநகராட்சி கமிஷனர் சுபம் ஞானதேவ் ராவை சந்தித்து மேயர் சரவணன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் கடிதத்தை வழங்கினர். ஆனால் அதனை வாங்க கமிஷனர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் கடிதத்தை வாங்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாக தி.மு.க. கவுன்சிலர்கள் கூறியதால் அந்த கடிதத்தை பெற்றுக் கொண்டு கமிஷனர் ஒப்புகை சீட்டு வழங்கினார்.
இத்தகவல் பரவியதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கமிஷனர் சுபம் ஞானதேவ் ராவ் கூறும்போது, தி.மு.க. கவுன்சிலர்கள், மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக விரைவில் மாமன்ற கூட்டத்தை கூட்டி விவாதம் நடத்தி முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
- சிறுமியின் உடல்நிலை சற்று தேறிய நிலையில், கடந்த 29-ந்தேதி மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
- கிளீனிக் கொண்டு செல்லப்பட்ட சிறுமி மேல் சிகிச்சைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடியை அடுத்த தன்மணியன் குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்.
இவரது மனைவி உஷா. இவர்களுக்கு சிவா(வயது 8) என்ற மகனும், சிவானி(6) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 24-ந்தேதி சிறுமி சிவானிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள ஒரு கிளினிக்கில் சிறுமிக்கு ஊசி போட்டுள்ளார்.
பின்னர் சிறுமியின் உடல்நிலை சற்று தேறிய நிலையில், கடந்த 29-ந்தேதி மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து கிளீனிக் கொண்டு செல்லப்பட்ட சிறுமி மேல் சிகிச்சைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிவானி திடீரென மயக்கம் போட்டு விழுந்து இறந்துவிட்டார்.
இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊசி போட்டதில் பக்க விளைவு ஏற்பட்டு சிறுமி இறந்தாரா? அல்லது காய்ச்சல் பாதிப்பால் இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நெல்லை மாநகரில் மட்டும் சுமார் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
- மேலப்பாளையத்தில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையொட்டி கடந்த 3 நாட்களாகவே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை மாநகரில் இன்று பாதுகாப்பு வந்த போலீசார், ஊர்க்காவல் படையினர் ஆகியோர் வண்ணார்பேட்டை ரவுண்டானாவில் அதிகாலையில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து தேவைக்கேற்ப பிரித்து அனுப்பப்பட்டனர். மேலப்பாளையம் பகுதியில் கூடுதலாக போலீசார் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டிருந்தனர்.
நெல்லை புதிய பஸ் நிலையம், ரெயில் நிலையம், நெல்லையப்பர் கோவில், டவுன் ரதவீதிகள், முக்கிய வழிப்பாட்டு தலங்கள், மேலப்பாளையம் ரவுண்டானா என முக்கிய இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். நெல்லை மாநகரில் மட்டும் சுமார் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலப்பாளையத்தில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதன் காரணமாக மேலப்பாளையம் சந்தை பகுதிகள், பஜார்வீதி, அண்ணா வீதி, அம்பை சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் கடைகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் எஸ்.டி.பி.ஐ., தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம், ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகம் ஆகியவை சார்பில் பாபர் மசூதி இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா பகுதியில் இன்று காலை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது, மாநில பேச்சாளர் பேட்டை முஸ்தபா ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, பொதுச்செயலாளர் கனி மற்றும் நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர். இதேபோல் பாளை அரசு சித்த மருத்துவக்கல்லூரி முன்பு த.மு.மு.க. சார்பில் வழிபாட்டு தலங்களை பாதுகாக்க கோரி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களிலும் போலீசார், ஆயுதப்படை போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் என மொத்தம் 4 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நெல்லை மாநகரில் போலீஸ் கமிஷனர் மகேஷ்வரி தலைமையிலும், நெல்லை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் ஏர்வாடி, களக்காடு, பத்தமடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- அனைத்து தூய்மை தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்து வந்தனர்.
- தொழிற்சங்க தலைவர்களும், சுய உதவிக்குழு தலைவர்களும் கலந்து கொண்டனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் கடந்த 20 ஆண்டு காலமாக 47 சுய உதவி குழுக்கள் மூலமாக 753 தூய்மை தொழிலாளர்கள் பணி செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த 2 மாத காலமாக அனைத்து சுய உதவிக்குழு தூய்மைத் தொழிலாளர்களையும் தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் ஒப்படைப்பதாகவும், தொழிலாளர்களுக்கு சுய உதவிக்குழு மூலம் பணி வழங்க மாட்டோம் என்றும் அறிவித்தது. மாநகராட்சியின் இந்த அறிவிப்பை எதிர்த்து கடந்த அக்டோபர் 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை அனைத்து தூய்மை தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்து வந்தனர்.
இதன் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் தொழிலாளர் துறை துணை ஆணையாளர் அலுவலகத்தில் டவுன் தாசில்தார் விஜயலெட்சுமி, மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, தொழிலாளர் துறை துணை ஆணையாளர் ஆகியோர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் தொழிற்சங்க தலைவர்களும், சுய உதவிக்குழு தலைவர்களும் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் தொடர்ந்து தொழிலாளர்களுக்கு சுய உதவிக்குழு மூலம் வேலை வழங்கப்படும், ஒப்பந்த பத்திரத்தில் யாரிடத்திலும் கையெழுத்து வாங்கப்படமாட்டாது என்றும், இதன் அடிப்படையில் அனைத்து தொழிலாளர்களும் வேலை நிறத்தத்தை கைவிட்டு பணிக்கு செல்வது என்றும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது மாநகராட்சியில் அனைத்து சுய உதவிக்குழு தொழிலாளர்களும் மீண்டும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் பணி செய்ய முடியும். அப்போது தான் வேலை வழங்க முடியும் என்று கூறி இன்று முதல் அனைத்து சுய உதவிக்குழு தூய்மை பணியாளர்களுக்கும் வேலை வழங்க மாநகராட்சி நிர்வாகம் மறுத்துவிட்டதாக கூறி இன்று தூய்மை பணியாளர்கள் அனைவரும் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்கள் நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யூ. செயலாளர் முருகன், மோகன் ஆகியோர் தலைமையில் வேலை வழங்க கோரி இன்று காலை முதல் மாநகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்துள்ளனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.






